பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ஈரான் நல்ல முடிவை எடுக்கவேண்டும்: ஜேடி வான்ஸ்
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசியவை.
ஈரானுடன் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்றும் அடுத்தக்கட்ட முடிவுகளை ஈரான் தான் எடுக்கவேண்டும் என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சில நாள்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து 21 மணி நேரம் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி இன்று அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “பேச்சுவார்த்தை தவறாக மட்டுமே முடிந்ததாக நான் சொல்லமாட்டேன். சில விஷயங்கள் சரியாக நடந்ததாக நான் நினைக்கிறேன். நாங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்தோம்.
Advertisement
அவர்கள் எங்கள் பேச்சை கேட்கும் நிலைக்கு வந்தனர். அதனால்தான் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது என்று சொல்கிறேன். ஆனால் அவர்கள் போதுமான அளவு பேச்சுவார்த்தையை நகர்த்தவில்லை.
அணுசக்தி செறிவூட்டுவதை ஈரான் நிறுத்திக்கொண்டால் இந்த பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிந்திருக்கும். அது இரு நாடுகளுக்கும் சாதகமான முடிவை எட்ட உதவியிருக்கும்.
மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுமா, இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வருவோமா என்பது ஈரானின் கையில்தான் உள்ளது. நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால் அங்கிருந்த குழுவுக்கு ஒப்பந்தத்தை இறுதிசெய்ய முடியவில்லை.
அவர்கள் ஈரானுக்குத் திரும்பிச் சென்று, அவர்களின் உச்ச தலைவரிடமோ, மற்றவர்களிடமோ எங்களின் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்புதல் பெற வேண்டியிருந்தது.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்க அதிபருடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஈரானில் ஒரு அணு குண்டு இருந்து அவர்கள் உலக நாடுகள் மீது பொருளாதார பயங்கரவாதத்தில் ஈடுபடத் தயாராக இருந்தால் அவர்களின் அதிகார செல்வாக்கு எப்படியிருக்கும்?
ஆகவே, அதில் ஒரு முடிவை எட்டுவது சாதகமான விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும், பேச்சுவார்த்தையில் அதுதொடர்பாக சில முன்னேற்றம் காணப்பட்டது.
எரிசக்தி விலை உயர்வால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக நாங்கள் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.