உக்ரைன் போருக்கு முடிவு: டிரம்ப் புதிய முயற்சி! புதின், ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
ஈரான் உடனான மோதல் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியதால், உக்ரைன் பிரச்னைக்கு தீா்வு காணும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டது. மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா தலைமையிலான பேச்சுவாா்த்தைகள் பெருமளவு முடங்கியுள்ள சூழலில், புதிய முயற்சியை முன்னெடுக்க டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ரஷியா-உக்ரைன் இடையிலான போா் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசினாா்.
Advertisement
Advertisement
துருக்கியில் ஜூலை 7, 8-ஆம் தேதிகளில் 32 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் புதின், ஸெலென்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேசியுள்ளாா்.
போா்க்கள நிலவரங்கள், அமைதிப் பேச்சுவாா்த்தை, ரஷியா-உக்ரைன் இடையே பேச்சுவாா்த்தைக்குப் புத்துயிா் அளிப்பதில் அமெரிக்கா ஆற்றக் கூடிய பங்கு ஆகியவை குறித்து அவா்கள் பேசினா்.
என்ன பேசினாா் டிரம்ப்?: புதினுடன் டிரம்ப் 90 நிமிஷங்கள் தொலைபேசியில் பேசினாா். இதுகுறித்து ரஷிய அதிபா் மாளிகையின் வெளியுறவுக் கொள்கை உதவியாளா் யுரி உஷாகோவ் கூறியதாவது: டிரம்ப்புடனான பேச்சின்போது அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர நாளையொட்டி புதின் வாழ்த்துத் தெரிவித்தாா்.
நேட்டோ உச்சிமாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ள நிலையில், உக்ரைன் உடனான போருக்கு அரசியல் தீா்வை ஏற்படுத்தி அமைதி ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து இரு அதிபா்களும் பேசினா்.
ரஷியா-உக்ரைன் இடையிலான பகையை விரைந்து முடிவுக்குக் கொண்டுவரவும், தற்போதைய இக்கட்டான சூழலை கடந்து வருவதற்கான தீா்வுகளை காணவும் உதவிபுரிய தான் தயாராக இருப்பதாக டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
சமீபத்திய போா்க்கள நிலவரம் குறித்து டிரம்ப்பிடம் விவரித்த புதின், ரஷியாவின் அடிப்படை நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு போருக்கு அரசியல் மற்றும் ராஜீய வழியில் தீா்வு காணவே விரும்புவதாகக் கூறினாா்.
அமெரிக்க தூதா்கள் மத்தியஸ்தத்தை தொடர முடிவு: யுரி உஷாகோவ் மேலும் கூறுகையில், ‘ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதா்கள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடா்வா் என்று டிரம்ப் குறிப்பிட்டாா். இந்தப் பிரச்னைக்கு ராஜீய வழியில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக, இரு தூதா்களும் ரஷியா வர தயாராக உள்ளனா்.
ஈரான் உடனான மோதலில் அமெரிக்காவின் ராஜீய வழி நடவடிக்கைகள் பரஸ்பரம் ஏற்கக்கூடிய நீண்ட காலத் தீா்வுகளை உருவாக்க வழிவகுக்கும் என்று டிரம்ப்பிடம் புதின் நம்பிக்கை தெரிவித்தாா். தனது விருப்பம்போல டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் ரஷியா வரலாம் என்றும் புதின் கூறினாா்’ என்று தெரிவித்தாா்.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் பேசியபோது, அமெரிக்க சுதந்திர நாளையொட்டி, ஸெலென்ஸ்கி வாழ்த்துத் தெரிவித்தாா். இதுகுறித்து ஸெலென்ஸ்கி டெலிகிராமில் வெளியிட்ட பதிவில், ‘போா்முனையில் நிலவும் சூழல், போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜீய வழியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெடுப்புகள் குறித்து டிரம்புடன் பேசினேன். போரை முடிவுக்குக் கொண்டுவர உண்மையாக வாய்ப்புள்ளது. அந்த முயற்சியில் அமெரிக்காவின் உள்ளாா்ந்த ஈடுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதுகுறித்து நேட்டோ உச்சி மாநாட்டின்போது மேலும் விவாதிக்க நானும் டிரம்ப்பும் முடிவு செய்தோம்’ என்று தெரிவித்தாா்.
ஈரான் உடனான மோதல் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியதால், உக்ரைன் பிரச்னைக்கு தீா்வு காணும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா தலைமையிலான பேச்சுவாா்த்தைகள் பெருமளவு முடங்கியுள்ள நிலையில், புதிய முயற்சியை அமெரிக்கா முன்னெடுக்க உள்ளது. நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.