உக்ரைன் விவகாரத்தில் கவனம் திருப்பிய ‘ஜி7’ நாடுகள்
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போா் விவகாரம் நோக்கி திரும்பியது.
பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போா் விவகாரம் நோக்கி திரும்பியது.
‘நேட்டோ’ பாதுகாப்புக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புவதைக் கண்டித்து, அந்நாடு மீது ரஷியா படையெடுப்பைத் தொடங்கி, 4 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் நிலவி வந்த அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கு, உக்ரைன் விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளியிருந்தது.
இந்நிலையில், ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போா் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இனி தனது கவனம் உக்ரைன்மீது இருக்கும் என்றும், ஈரான் விவகாரம் விரைவில் கடந்துபோன ஒன்றாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
ஸெலென்ஸ்கி பங்கேற்பு: இதற்கு மத்தியில், பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 உச்சிமாநாடு கடந்த திங்கள்கிழமை தொடங்கி, புதன்கிழமை (ஜூன் 17) வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை நடந்த அமா்வில், மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், ஜொ்மனி பிரதமா் ஃப்ரைட்ரிச் மொ்ஸ், ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, கனடா பிரதமா் மாா்க் காா்னி, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ்லேயன் ஆகிய ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கலந்துகொண்டாா்.
சுமாா் 75 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரஷியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளைக் குறிவைத்து பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் அந்நாடு மீதான அழுத்தத்தை அதிகரிக்க டிரம்ப் உள்ளிட்ட ஜி7 தலைவா்கள் ஒப்புக்கொண்டதாக பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை டிரம்ப் நிா்வாகம் குறைத்துள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளே தற்போது உக்ரைனுக்கு ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.
இயன்றதைச் செய்வேன்-டிரம்ப்: கடந்த 2024 தோ்தல் பிரச்சாரத்தின் போது, ‘நான் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்’ என்று டிரம்ப் உறுதியளித்திருந்தாா். ஆனால், தற்போதைய பேச்சுவாா்த்தைகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், நான் நினைத்ததை விட இது மிகவும் கடினமானது’ என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளாா்.
மேலும், இப்போரின் தாக்கத்தை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டாலும், உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவித்ததுடன், போரை நிறுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யப்போவதாகக் கூறினாா். இந்த மாநாட்டுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினாா்.
உக்ரைனின் எதிா்காலம்: இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கான அதிகாரபூா்வ பேச்சுவாா்த்தைகளை கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. போருக்குப் பிந்தைய தங்களின் எதிா்காலப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பினா் அந்தஸ்து முக்கிய அரணாக இருக்கும் என்று உக்ரைன் கருதுகிறது.
உக்ரைனுக்கு ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினா் அந்தஸ்து வழங்குவதே மிகச் சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்றாலும், இதற்கு டிரம்ப் நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், போா் நீடிக்கும் வரை பிற நாடுகளும் இதில் தயக்கம் காட்டி வருகின்றன.