முகப்பு
தலையங்கம்

அமெரிக்காவின் இரட்டை வேடம்!

ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது குறித்த தலையங்கம்...

Updated On : 18 ஜூன் 2026, 6:00 am IST
பிரதமர் மோடி / அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பகிர்:

பிரான்ஸ் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததும், நட்புறவுடன் இருவரும் பிரச்னைகள் குறித்துப் பேசிக் கொண்டதும் மிகப் பெரிய ஆறுதல். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுபோல அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து அளவளாவியதில்லை. சமரசத்துக்கும், தீர்வுக்கும் இந்தச் சந்திப்பு வழிகோலும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது எந்தவிதத் தொழிலாளர் சட்டமும் இல்லாத உழைப்புச் சுரண்டல் மூலமாக முன்னெடுக்கப்படும் உற்பத்திகளைத் தடுக்கவில்லை என்று டொனால்ட் டிரம்ப் அரசு 60-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதில் இந்தியாவும் அடங்கும். அந்த 60 நாடுகள் மீதும் இப்போது அமெரிக்கா புதிதாக 12.5% இறக்குமதி வரி விதித்திருக்கிறது.

அமெரிக்காவில் 1974 வர்த்தகச் சட்டம் மிகவும் கடுமையானது. அதன் 301-ஆவது பிரிவின்படி, அமெரிக்காவையும், பொதுவாக உலக நன்மையையும் பாதிக்கும் நியாயமற்ற, மனிதாபிமானமற்ற, சுரண்டும் தன்மையுள்ள அந்நியச் சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை அமெரிக்க ஆட்சியாளர்கள் அவ்வப்போது தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது புதிதொன்றுமல்ல.

Advertisement

Advertisement

அமெரிக்கா இறக்குமதி செய்யும் இந்தியப் பொருள்களுக்கு 0% முதல் 35% வரை வரி விதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், பொதுவான கூட்டு வரி என்று இந்தியப் பொருள்களுக்கு 10% விதிக்கப்படுகிறது. இப்போதைய புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது கூடுதலாக மேலும் 12.5% வரி விதிக்கப்படும். அது நமது பொருள்களின் இறக்குமதியையும், அமெரிக்கச் சந்தையில் விற்பனையையும் கடுமையாகப் பாதிக்கும்.

அதிபர் டிரம்ப் தனது அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் இறக்குமதிகளுக்கான வரிகளைக் கடுமையாக அதிகரித்தார். அந்த அதிகாரத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், உச்சநீதிமன்றத்துடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப்.

தனது அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்தான இறக்குமதிகளுக்கு 25% வரியும், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தண்டனையாக மேலும் 25% வரியும் விதித்து உத்தரவிட்டார் அதிபர் டிரம்ப். நான்கு மாதங்களுக்குப் பிறகு 25% வரியை 18% என்று குறைத்தும், ரஷியாவின் கச்சா எண்ணெய்க் கொள்முதல் காரணமாக விதித்த 25% வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டார். அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், இந்திய ஏற்றுமதிகளின் மீதான வரி 10% ஆகக் குறைந்தது.

இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதுபோல 18% வரியை நிர்ப்பந்திக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் வரி விதிப்பில் எந்தவித மாற்றமும் நிகழாது என்கிற உத்தரவாதம் வழங்கினால் மட்டும் ஒப்புக் கொள்வது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அப்படியொரு உத்தரவாதம் டிரம்ப் நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை என்பதால், இருதரப்பு ஒப்பந்தம் முடிவை எட்டாமல் தொடர்கிறது.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகான 10% என்பது புதிய 12.5% வரி விதிப்பைத் தொடர்ந்து 22.5%-ஆக உயர்ந்திருக்கிறது. அண்டை நாடுகளான, அமெரிக்காவின் கருணைப் பார்வையைப் பெற்ற பாகிஸ்தானும், வங்கதேசமும் வெறும் 10% இறக்குமதி வரி விதிப்பைப் பெறும் நிலையில், இந்தியா மீதான 22.5% வரிவிதிப்பு என்பது, நமது பொருள்கள் மீதான அமெரிக்க விற்பனை விலையை அதிகரித்து, ஏற்றுமதிகளைக் கடுமையாக பாதிக்கும். இந்தியப் பொருளாதாரத்தில் 20% பங்களிப்பு ஏற்றுமதிகளால் பெறப்படுகிறது.

மேற்காசியப் போரால் ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை, ஓரளவுக்குச் சமாளித்துப் பரவலான விநியோகத்தை நாம் உறுதிப்படுத்தியிருப்பது அசாதாரணமான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இதே நிலைமை தொடர்ந்தால் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது கேள்விக்குறியாகத் தொடர்கிறது.

ஒருபுறம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் அமெரிக்காவுக்கு இந்தியாவின் நெருக்கமும், நட்புறவும் இன்றியமையாதவை என்று பேசுவதும், இன்னொருபுறம் அதிகமாக இறக்குமதி வரிகள் மூலம் இந்திய ஏற்றுமதிகளைத் தவிர்க்க நினைப்பதும் டிரம்ப் நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போடுகின்றன. ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரதமருடனான அமெரிக்க அதிபரின் சந்திப்பையும்கூட உதட்டளவு உறவாடலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாட்டுக்கு அமெரிக்கா தயாராக இல்லை என்றால், இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் அவசரம் காட்டத் தேவையில்லை.

இந்தியாவின் மிக முக்கியமான , ஏன் முதன்மையான வர்த்தகக் கூட்டாளி அமெரிக்கா என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, அமெரிக்காவின் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்துக்கு

இந்தியாவும் இன்றியமையாதது என்பதை அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மறந்துவிடக் கூடாது.

மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.

மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.

திருக்குறள் (எண் 825) அதிகாரம்: கூடா நட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.