உலகம் யார் பக்கம்?
மற்ற நாடுகளின் வளங்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதும், தன் கண்ணசைவுக்குக் கட்டுப்படாத நாடுகளைத் தனிமைப்படுத்த துடிக்கும் அமெரிக்காவைப் பற்றி...
- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
'அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்' இயக்கத்தின் தலைவரான டொனால்ட் டிரம்ப், தான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாளிலிருந்து உலக நாடுகளின் கவனம் தன்பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிக வரி விதித்தார். இப்போது, அமெரிக்காவுக்கு மக்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வருபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளையும் அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. இதனால், அமெரிக்காவுக்குச் சென்று கல்வி கற்று, தன் தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்போம் என்ற உலக மாணவர்களின் கனவு வெறும் பகல் கனவாகியுள்ளது.
Advertisement
Advertisement
உயர் கல்விக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் கனவு. அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் உலகளாவிய மாணவர்களில் 31% இந்தியர்கள். இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அங்கு உயர் கல்வி பயின்று வரும் மற்றும் பயில திட்டமிட்டுள்ள உலக மாணவர்களின் எதிர்கால கனவிலும், வேலைவாய்ப்பு திட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் விரைந்து தங்கள் தாய்நாடு திரும்ப ஏதுவாக நுழைவு இசைவு மாற்றங்களை அறிவித்துள்ளது.
1978-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்களின் படிப்பு காலம் முழுதும் முறையான அரசு கண்காணிப்பு இல்லாமல், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அமெரிக்காவின் புதிய கொள்கையின்படி, மாணவர்களும், அமெரிக்காவுக்கு மக்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வருபவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், படிப்பை முடித்த பிறகு, வேறு கல்லூரிக்கு மாற அல்லது நாட்டை விட்டு வெளியேற, 60 நாள்கள் அவகாசம் இருந்தது. அது இனி, 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு 240 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீனர்களுக்கு இந்தக் கெடு மேலும் குறைக்கப்பட்டு, 90 நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இலவச மருத்துவக் காப்பீடான 'மெடிகேட்', குறைந்த அல்லது வருமானம் இல்லாத ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்க அரசு வழங்கும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் - 'ஃபுட் ஸ்டாம்ப்' மற்றும் வீட்டுவசதி மானியங்களை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு, இனி 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை மறுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், தாய்நாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க 'நுழைவு இசைவு' மாணவர்கள், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அமெரிக்கா திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும்.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் பொருளாதாரத் திறன்மிக்கவர்களாக இருக்க வேண்டும். உழைக்கும் அமெரிக்க மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசின் நலத் திட்டங்களை நம்பி, அவர்கள் அமெரிக்காவுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்ற இந்த அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டவே இந்த விதி மீண்டும் கொண்டு வரப்படுகிறது.
17.07.2026 அன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய டிரம்ப், 'ரஷியா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் எதிரிகளும், அரசு சாரா குழுக்களும் அமெரிக்கத் தேர்தல் உள்கட்டமைப்பை சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளன. 2020-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் முடிவையே மாற்றும் வகையில், 22 கோடி வாக்காளர்களின் தரவுகளை சீனா திருடியது. ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியான முறையில் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும்.
வாக்காளர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் என்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேர்தலில் மோசடி மற்றும் தலையீடுகள் இல்லாத ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த திடீர் குற்றச்சாட்டு உலக நாட்டுத் தலைவர்களை திடுக்கிட வைத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சு ஜனநாயகக் கட்சியினரை எரிச்சலடைய வைத்துள்ளது.
அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் 'உலக செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பை' கடந்த 17.07.2026 அன்று ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அறிவித்தார்.
இந்த அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா, பாகிஸ்தான் உள்பட 29 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இதுவும், சீனாவின் மீதான அமெரிக்காவின் பார்வையை எரிச்சலடைய வைத்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உலகளாவிய நிர்வாகத்தில், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்துக்கு சீனா விடுக்கும் நேரடி சவாலாக இது கருதப்படுகிறது. இந்தியாவைத் தவிர, 'பிரிக்ஸ்' அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பில் இணைந்துள்ளன. தன் சொந்த திறனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதனால், சீனா தலைமையிலான அமைப்பில் இடம் பெறாமல் இந்தியா தவிர்த்துள்ளது.
எனினும், 'பாக்ஸ் சிலிகா' என்ற அமெரிக்க தலைமையிலான கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இந்தியா உள்ளது. இந்தச் சூழ்நிலையில், உலகம் பல ஆண்டுகளாக, சீனாவை விட அமெரிக்காவையே தனக்கு சாதகமான நாடாக பார்த்து வந்திருந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இயங்கி வரும் 'பியூ ஆராய்ச்சி மையம்' 15.07.2026 அன்று வெளியிட்ட புதிய கருத்து கணிப்பு, பெய்ஜிங்குக்கு சாதகமாக அமைந்துள்ளது உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கனடா மற்றும் மெக்ஸிகோ உள்பட கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 36 நாடுகளில் 25 நாடுகளில் வாழும் மக்கள் அமெரிக்காவை விட சீனாவையே அதிகம் விரும்புகிறார்கள். போலந்து, பிலிப்பின்ஸ், தென் கொரியா, இந்தியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய ஆறு நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. ஐந்து நாடுகள் நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 36 நாடுகளில், 22 நாடுகளில் வாழும் மக்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விட, சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கிற்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கனடா, மெக்ஸிகோ மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய வல்லரசுகளும் இதில் அடங்கும். ஹங்கேரி, பிரேஸில், கொலம்பியா, போலந்து, இந்தியா, பிலிப்பின்ஸ், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய எட்டு நாட்டு மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர். தென் கொரியா, கானா, பெரு, ஆர்ஜென்டீனா, நைஜீரியா, சிலி ஆகிய நாட்டு மக்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
கிரீன்லாந்தைக் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்ற டிரம்ப்பின் எதிர்பார்ப்பு, வெனிசுலாவின் அப்போதைய தலைவர் நிக்கோலஸ் மதுராவைக் கைது செய்த அமெரிக்க ராணுவத் தாக்குதல், காசாவில் நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போரை அமெரிக்கா கையாண்ட விதம் ஆகியவையும் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு மக்களின் ஆதரவு குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகள் அனைத்தும் உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரங்கள் மீதான தங்கள் கருத்துகளை மாற்றியுள்ளன.
கனடா போன்ற சில அமெரிக்க நட்பு நாடுகள், அண்மைக் காலமாக அமெரிக்காவின் மீதான தங்களின் இலகுவான பார்வையை மாற்றி வந்துள்ளன. புதிய கணக்கெடுப்பில், 2023-இல் 57 சதவீதமாக இருந்த கனடா நாட்டு மக்களின் அமெரிக்கா மீதான நேர்மறையான பார்வை, தற்போது 33 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனா மீதான அவர்களின் சாதகமான கருத்துகள் 14 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு கனடா நாட்டுப் பொருள்கள் மீது தொடர்ச்சியாக வரி விதித்தார். மேலும், கனடா அமெரிக்காவின் '51-ஆவது மாநிலமாக மாறக்கூடும்' என அறிவித்தது அந்நாட்டு மக்களை பீதியடைய செய்தது.
பிரிட்டன் மக்கள், இப்போது சீனாவையும் அமெரிக்காவையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார்கள். அமெரிக்கா மீது அதிக சாதகமான எண்ணங்களை கொண்ட ஆறு நாடுகளில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. இஸ்ரேலியர்களில் சுமார் பத்தில் எட்டு பேர் அமெரிக்காவை சாதகமாகப் பார்க்கின்றனர். சீனாவைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை 19 சதவீதமாகும்.
எனினும், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் அமெரிக்கா மீதான அவர்களின் பார்வை மங்கி வருகிறது. எது எப்படியாயினும், அமெரிக்கா மற்ற நாடுகளின் வளங்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதும், தன் கண்ணசைவுக்குக் கட்டுப்படாத நாடுகளைத் தனிமைப்படுத்த துடிப்பதும், அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிக வரி விதிப்பதும் வாடிக்கையாகக் கொண்டுள்ள அமெரிக்காவை இனி உலக நாடுகள் எள்ளி நகையாடவே செய்யும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.