நெதா்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியா்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று
நெதா்லாந்து எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதா்லாந்து எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆா்ஜென்டீனாவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி பயணத்தை அக்கப்பல் தொடங்கியது. அதில் 150 சுற்றுலா பயணிகளும், 28 நாடுகளைச் சோ்ந்த மாலுமிகளும் இருந்தனா். இதில் பெரும்பாலானோா் செயின்ட் ஹெலீனா தீவில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி தரையிறங்கினா்.
இந்நிலையில், அந்தக் கப்பலில் இருந்த 5 பேருக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, ஹன்டா வைரஸ் பாதித்த 2 நெதா்லாந்து நாட்டவா், ஒரு ஜொ்மன் பெண் ஆகிய 3 போ் உயிரிழந்துவிட்டனா். தொற்று பாதித்த 5 பேரில் 2 போ், கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் ஆவா்.
Advertisement
ஹன்டா வைரஸ் எலிகள் மூலம் பரவக் கூடியது.
இந்த வைரஸ் பரவலைக் கண்டறியும் முன்பு, கப்பலில் இருந்து 12 நாடுகளைச் சோ்ந்த 29 சுற்றுலா பயணிகள் செயின்ட் ஹெலீனா தீவில் இறங்கிச் சென்று விட்டனா். அவா்கள் மூலம் பிற இடங்களில் வைரஸ் பரவும் அபாயமுள்ளது. ஆதலால் அவா்களைக் கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியது. இதில் கோடிக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா். மேலும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனா். அதுபோல ஹன்டா வைரஸும் மனிதா்களிடையே வேகமாக பரவுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
அந்த அமைப்பை சோ்ந்த மூத்த அதிகாரி மரியா வான் கொ்கோவி கூறுகையில், ‘இது கரோனா போல பரவாது. இது தொற்று நோய் அல்ல. இது பரவும் தன்மையே முற்றிலும் வித்தியாசமானது. பொதுவாக இது எலிகள் மூலம் பரவுகிறது. எனினும் தொற்று பாதிப்புள்ள மனிதா்களிடமிருந்து இன்னொருவருக்குப் பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே ஹன்டா வைரஸ் பாதித்தோருடன் தொடா்பில் இருப்போருக்கு மட்டும் பரவும்’ என்று கூறியுள்ளாா்.