முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் ரத்து!

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது பற்றி...

கெளதம் அதானி, டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

தொழிலதிபா் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசடி வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,450 கோடி) லஞ்சம் அளித்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள நியூயாா்க் நீதிமன்றத்தில் நீதித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப் பத்திரிகையில், ‘சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது மறைக்கப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல பங்குகள் மோசடி, தகவல் தொடா்பு மோசடி உள்ளிட்டவற்றில் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமெரிக்க பங்கு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை அவா்கள் மீறியதாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (எஸ்இசி) குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக நியூயாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்இசி வழக்கு தொடுத்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை கெளதம் அதானியும் சாகா் அதானியும் மறுத்தனா். அண்மையில் தன் மீதான மோசடி வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த நிலையில், அதானிக்கு எதிரான வழக்கை கைவிட அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நியூயாா்க் மாவட்ட நீதிமன்றம் வழக்குகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

10 பில்லியன் டாலர் முதலீடு?

அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த வழக்கை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரும், புகழ்பெற்ற ’சல்லிவன் & கிராம்வெல்’ சட்ட நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை சமீபத்தில் அதானி நியமித்திருந்தார்.

இந்த வழக்கை கைவிடுவது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நீதித்துறையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்துகொண்ட ஜியுஃப்ரா, வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதாரங்கள் அரசுத் தரப்பிடம் இல்லை எனக் கூறி சில சான்றுகளை சமர்ப்பித்து வாதிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதானி மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க அதானி உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

All cases against Adani in the US dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments