சுய சாரம் உன்னத பலம்! 

என் மகளின் திருமணம் எப்பொழுது நடக்கும்? ஜாதகத்தில் குரு, சனி பகவான்கள் இணைந்திருப்பதால் மணவாழ்க்கையில் ஏதும் பாதிப்பு ஏற்படுமா?
Published on
Updated on
2 min read

என் மகளின் திருமணம் எப்பொழுது நடக்கும்? ஜாதகத்தில் குரு, சனி பகவான்கள் இணைந்திருப்பதால் மணவாழ்க்கையில் ஏதும் பாதிப்பு ஏற்படுமா? வேலை, எதிர்காலம் எவ்வாறு அமையும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

-வாசகர், சென்னை - 600 117. 

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னம், பத்தாமதிபதி புத பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
எந்தக் கிரகமும் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அந்த கிரகத்திற்கு வலு சேர்க்கும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். லக்னாதிபதி வலுத்திருப்பதால் வாழ்க்கையில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் ஏற்படாது. செய்தொழில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சீராக நடக்கும். எந்தக் காரியத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தும் திறன் உண்டாகும். 
தனித்து முப்பது பாகையில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவான் சிறப்பான சிந்தனா சக்தியைத் தூண்டுவார். புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் நீச்சம் பெற்று சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
நீச்சனேறிய ராசிநாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகமுண்டாகும் என்கிற ஜோதிட விதியின் அடிப்படையில், மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் உச்சம் பெற்றிருப்பதால் சனி பகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. 
அதனால் சனி பகவானின் ஆதிபத்யங்கள் சிறப்பாகப் பரிமளிக்கும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். 
இதனால் நல்ல செல்வமும், செல்வாக்கும் தேடிவரும். தெய்வ பலமும், தெய்வீக நம்பிக்கையும், தரும குணமும் இயல்பாகவே ஏற்படும். சுக போகத்துடன் வாழ்வது உறுதி.  தளராத உழைப்பினால் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில், சுய சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்து, ஐந்தாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக நான்காம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜ யோகம்) பகவானையும் பார்வை செய்கிறார். 
லாபாதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். லாபாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் சிறப்பான பலம் பெற்றிருப்பது மேன்மையைக் கூட்டும்.
அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கதிபதி சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 
கேது பகவான் ஐந்தாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதாலும், நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனி பகவானுடன் இணைந்திருப்பதாலும் மண வாழ்க்கை சிறப்பாகவே அமையும். குரு, சனி பகவான்களின் சேர்க்கை குறையல்ல! 
மாங்கல்ய ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் "தீர்க்க மாங்கல்யம்' என்றே கூறவேண்டும். 2026 -ஆம் ஆண்டு தொடங்கியவுடன், அந்நியத்திலிருந்து படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். தனியார் துறையிலேயே நல்ல வருமானம் வரக்கூடிய வேலை கிடைக்கும். 3, 6, 11-ஆம் வீடுகளில் ராகு பகவான் அமர்ந்து தசையை நடத்துவது ராஜயோகமாகும். 
ராகு பகவானின் தசை இன்னும் நான்காண்டுகள் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகி, உயர்வுண்டாகும். எதிர்காலம் சிறப்பாகவே அமையும். பிரதி தினமும் விநாயகப்பெருமானை குறிப்பாக, திங்கள்கிழமைகளில் வழிபட்டு வரவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com