முன்னோர் வழிபாடு என்பது நம் முன்னோர்களை நன்றியுடன் நினைத்துச் செய்யப்படும் புனிதமான வழிபாடாகும். குடும்ப அமைதி, சந்ததி வளர்ச்சி, சுப நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுதல் மற்றும் மனநிம்மதி கிடைக்க முன்னோர் ஆசிர்வாதம் அவசியம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக, சுமங்கலியாக மறைந்த பெண்களை நினைத்து வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்வது, குடும்ப மரபிலும் ஆன்மிகக் கடமையிலும் முக்கிய இடம் பெறுகிறது. முன்னோர் காலங்களில், குடும்பத்தில் எந்த சுப நிகழ்வையும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து உறவினர்களும் ஒன்றுகூடி, குலதெய்வத்திற்குப் பொங்கல் வைத்து, மூதாதையர்களுக்குப் படையல் சமர்ப்பித்து, மறைந்த சுமங்கலிகளுக்குப் பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. இந்த வழிபாட்டில் அனைத்து சொந்த பந்தங்களும் ஒன்றுகூடிப் பங்கேற்று, முன்னோர்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தையும் அருளையும் பெற்று, சுப நிகழ்வுகளைச் சிறப்பாக ஆரம்பிப்பார்கள். இவ்வழக்கம் இன்றும் சில கிராமப்புறங்களிலும், ஒரு சில குடும்பங்களிலும் தொடர்கிறது. ஆனால் இன்று பல குடும்பங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வாழ்வதால், இவ்வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறாமல் காலதாமதமாகின்றன. இதனால் முன்னோர் ஆசிர்வாதம் குறைந்து, குடும்பங்களில் சுப நிகழ்வுகள் தடைப்படுகின்றன என்பது ஆன்மிக நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாகப் பார்க்கும்போது, ஒரு ஜாதகரின் லக்கினம் அல்லது ராசி பாவகிரகங்களின் தீய தொடர்பைப் பெறும் காலங்களில் திருமணத் தடை, குடும்ப அமைதி குறைவு, குழந்தைப் பிறப்பில் தடை, வீடு கட்டுவதில் தாமதம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குடும்பத்தைக் குறிக்கும் 2ம் பாவம், திருமணம் மற்றும் மாங்கல்யத்தை குறிக்கும் 7ம், 8ம் பாவங்கள் பாதிக்கப்படுதல், ராகு–கேது 1–7 அல்லது 2–8 இடங்களில் அசுபத்தன்மையுடன் இருப்பது, மேலும் சுக்கிரன், சந்திரன், குரு போன்ற சுப கிரகங்கள் பலம் இழந்து இருப்பது போன்ற நிலைகள் சுப நிகழ்வுகளில் தடைகள் ஏற்படும் காலமாகக் கருதப்படுகின்றன.
அதேபோல் திரிகோண அதிபதிகள் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருப்பதும் நல்லதல்ல என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ராகுவால் ஏற்படும் தடைகள் தந்தை வழி முன்னோர்களின் ஆசீர்வாத குறைவையும், கேதுவால் ஏற்படும் தடைகள் தாய் வழி முன்னோர்களின் ஆசீர்வாத குறைவையும் குறிக்கின்றன. இத்தகைய குடும்ப வளர்ச்சிக்கான தடைகள் ஆருடம், பிரசன்னம் மற்றும் ஜாதக ஆய்வு மூலம் ஜோதிடர்களால் ஆராய்ந்து சொல்லுவார்கள். ஒவ்வொரு ஜாதகத்திலும் கோச்சாரம், தசா–புத்தி ஆகியவற்றின் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படுகின்றன.
இந்துக்கள் அவரவர் குடும்ப மரபுப்படி திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், குழந்தைக்கு மொட்டை அடித்தல், சதாபிஷேகம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகளுக்கு முன்பு "சுமங்கலி பிரார்த்தனை" நடத்தும் வழக்கம் உள்ளது. இது தவிர இறந்த சுமங்கலி வருஷ திதிக்கு அடுத்து வரும் நல்ல நாள்களில் இந்த பூஜை செய்வது மிகவும் சிறப்பு. சில குடும்பங்களில் கன்னிப் பெண்களை நினைத்து "கன்னி பூஜையும்" செய்கிறார்கள். குடும்பத்தில் நீண்டநாள் சுப நிகழ்வுகள் நடைபெறாமல் தடைகள் இருந்தாலும் இந்த சுமங்கலி பிரார்த்தனையை செய்வதால் நல்லதே நடக்கும். மேலும், நவராத்திரி காலத்தில் செய்யப்படும் சுமங்கலி பூஜை மற்றும் குடும்ப மரபின்படி செய்யப்படும் சுமங்கலி பிரார்த்தனை இரண்டும் வேறுபட்டவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
சுமங்கலி பிரார்த்தனை செய்வதற்கு ஒருசில வரைமுறைகள் உள்ளன. இதில் சில சமயத்தாரின் வழிபாட்டு முறையைப் பார்ப்போம்.
1. சுமங்கலிகளை அழைக்கும் முறை
சுக்கிரன் என்பது வெள்ளிக் கிழமையையும் திருமணமான பெண்களையும் குறிக்கும் சுப கிரகமாக கருதப்படுகிறார். ஆகவே, நம் முன்னோர்களில் மறைந்த சுமங்கலிகளை நினைத்து ஒரு வெள்ளிக்கிழமை நாளில் சுமங்கலி பிரார்த்தனை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அவரவருக்கு நேரம் கிடைக்காததால் ஒருசில சுப நாள்களிலும் செய்யலாம். அன்றைய சுப தினத்தில் வீட்டுப் பெண்களையும், தெரிந்த மற்ற சுமங்கலிகளையும் வீட்டிற்கு ஆரத்தி காட்டி அன்புடன் அழைத்து, பலவகை பலகாரங்களுடன் மனமகிழ்ச்சியுடன் உணவளித்து, தாம்பூலம் வழங்க வேண்டும். அவர்கள் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக, 4 சுமங்கலிகளுடன் 1 கன்னிப் பெண்ணை சேர்த்து மொத்தம் 5 நபர்களாக அழைக்கலாம். மேலும், அமாவாசை, பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற திதிகளை தவிர்ப்பது நல்லது.
2. பூஜை ஏற்பாடுகள் மற்றும் அலங்காரம்
சுமங்கலி பிரார்த்தனை நடைபெறும் நாளில் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலம் போட்டு மகிழ்ச்சியுடன் பூஜையை நடத்த வேண்டும். கோலம் போட்ட மணைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி, கொசுவிய -9 கஜப் புடவை மற்றும் பாவாடை தாவணி வஸ்திரங்களை அவரவர் குடும்ப மரபுப்படி வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி, சீயக்காய் வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, மற்றும் தங்க நகைகள், வாசனை மலர்களால் அலங்கரிப்பார்கள். இந்த அலங்காரம் பார்ப்பதற்கு ஒரு சுமங்கலி அமர்ந்திருப்பது போல அழகாக அமைந்திருக்க வேண்டும். அந்தப் புடவையில் முன்னோர் சுமங்கலிகள் வாசம் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. கடைசியாக இந்த புடவை வீட்டுப் பெண்ணிற்கு கொடுப்பார்கள். சுமங்கலிகள் வருவதற்கு முன்பு அட்சதை, வெற்றிலை பாக்கு, சந்தனம், மஞ்சள் குங்குமம், பழ வகைகள், தாம்பூல பைகள், உணவு வகைகள், அமருவதற்காக கோலம் போட்ட மணைப்பலகைகள் தயாராக வைத்திருக்க வேண்டும். மறைந்த சுமங்கலிக்காக இரண்டு இலைகளும், மற்ற சுமங்கலிகளுக்காக நுனி இலைகளும் போடுவது சில குடும்ப மரபுகளில் வழக்கமாக உள்ளது.
தாம்பூலத்தில் பொதுவாக வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப் பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், அரைத்த மருதாணி, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, தட்சணை, புடவை அல்லது பிளவுஸ் துணி போன்றவை வைக்க வேண்டும். இவை அனைத்தும் சுமங்கலிகள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே தயாராக வைத்திருக்க வேண்டும். தாம்பூலத்தில் புடவை, ஜாக்கெட் துணி, தட்சணை போன்றவை அவரவர் வசதிக்கேற்ப வழங்கப்படலாம்.
3. சுமங்கலிகளை வரவேற்கும் முறை
முதல் நாளிலேயே அவர்களின் வீட்டிற்குச் சென்று எண்ணெய் மற்றும் சீயக்காய் கொடுத்து அழைப்பது வழக்கமாகும். அடுத்த நாள் அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து வீட்டிற்கு வரும்போது, மறைந்த சுமங்கலிகளின் பெயர்களைச் சொல்லி ஆரத்தி காட்டி மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். பெயர்கள் தெரியாவிட்டால் "மீனாட்சி, காமாட்சி விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி" போன்ற தெய்வ திருநாமங்களைச் சொல்லியும் அழைக்கலாம். வீட்டிற்கு வந்தபோது கால் அலம்ப மஞ்சள் நீர் கொடுத்து, நெற்றியில் வைக்க சந்தனம், மஞ்சள் குங்குமம் மற்றும் வாசனை பூக்கள் கொடுத்து அழைக்க வேண்டும்.
பின்பு உங்கள் வீட்டு வந்த சுமங்கலிகளை மாக்கோலம் போட்ட மனையில் உணவருந்த அமர வைக்க வேண்டும். பின்னர் அவரவர் குடும்ப வழக்கப்படி சுத்தமாகச் சமைக்கப்பட்ட உணவுகளை இலையில் முறையாக வரிசையாகப் பரிமாற வேண்டும். முதலில் சுவாமி இலையில் நிவேதனம் ஆரம்பிக்க வேண்டும், அதன் பிறகு மற்ற சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்ணிற்கும் பரிமாற வேண்டும். பின்னர் ஒவ்வொரு இலைக்கும் தீர்த்தம் வழங்கி, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள்: "எங்கள் குடும்ப சுமங்கலி முன்னோர்களின் அருள் எப்போதும் எங்கள் வீட்டில் நிலைத்து, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், சந்தோஷம் பெருக எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்" என்று நமஸ்காரம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும்.
சுமங்கலிகளை நீர் கொடுத்து மனநிறைவுடன் உணவருந்துமாறு அன்பாக உபசரிக்க வேண்டும். உணவு முடிந்த பின்பு வெற்றிலை, பாக்கு, பானகம், சுக்கு வெல்லம், நீர் மோர் போன்றவற்றை வரிசையாக அமரவைத்து வழங்க வேண்டும். வந்தவர்களுக்கு நலங்கு இட்டு, தாம்பூலம் மற்றும் வஸ்திரங்களை வழங்குவது முக்கியமான மரபாகும். பிறகு அவர்களை அமர வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மூன்று முறை சுற்றி வந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். வந்திருக்கும் பெண்கள் முன்னோர்களின் அம்சமாகும். அவர்களை நாம் கவனிக்கும் முறை, முன்னோர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்து செல்ல வேண்டும். சுப செயல்களின் தடைகள் அகல, வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடும், குடும்ப மரபுப்படி சுமங்கலி பிரார்த்தனையைப் பக்தியுடன் செய்வது சிறந்தது.
4. குடும்ப மரபின்படி மாறுபடும் வழிமுறைகள்
இங்குக் கூறப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட வழிமுறைகள் மட்டுமே. முன்னோர்களை அழைக்கும் முறை, மணைப்பலகையில் சுமங்கலிக்கான புடவை அலங்காரம், சமைக்கும் உணவு வகைகள், பரிமாறும் விதம் போன்ற அனைத்தும் அவரவர் குடும்ப மரபின்படி மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. எத்தனை கன்னிப் பெண்கள், எத்தனை சுமங்கலிகள் அமர வேண்டும், பெரிய இலையில் படைக்கும் முறை மற்றும் வஸ்திரம் யாருக்கு வழங்க வேண்டும் என்பதையும் குடும்ப பெரியவர்களிடம் கேட்டறிந்து செய்வது நல்லது. சில குடும்பங்களில், வீட்டில் ஆண் குழந்தைக்குத் திருமணம் ஆன பின்பு மருமகள் வீட்டிற்கு வந்த பிறகே சுமங்கலி பிரார்த்தனை நடத்தும் மரபும் உள்ளது. இது மறைந்த சுமங்கலிப் பெண்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தடையின்றி நடைபெற உதவும் என நம்பப்படுகிறது.
தொடர்புக்கு - 8939115647
vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேராசிரியா்கள் பதவி உயா்வில் தடைகள்: யுஜிசி விதிகளை முழுமையாக அமல்படுத்த என்டிடிஎஃப் கோரிக்கை

வார பலன்கள் (ஜூன் 5 - 11) - ரிஷபம்

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

வார பலன்கள் (மே 15 - 21) - தனுசு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




