ஜோதிட ரீதியாக சனி பகவானின் தாக்கம் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள், இவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், சனியில் பிடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக சனியின் ஆசிர்வாதத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது மாநிறத் தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் பிறக்கும்போது சுருட்டை முடியுடன், சிலர் கருநீல கண்ணுடன் இருப்பார்கள். சிலருக்குப் பிறக்கும் குழந்தைகளின் இடுப்பு கீழ்ப் பகுதியில் தழும்பு அல்லது பெரிய மச்சமும் காணப்படலாம். இவர்கள் பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்துடனும், ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை முறையுடனும் வாழ்பவர்கள். சனி மெதுவாகச் செல்லும் கிரகம் என்பதால், அதன் தாக்கம் உள்ளவர்கள் செயல்களிலும் மெதுவாக முன்னேறுவார்கள். ஆனால், தங்கள் இலக்கை அடைய அதிக உழைப்பும் விடாமுயற்சியும் காட்டுவார்கள்.
சனியின் சுப தாக்கம் அதிகமாகக் காணப்படும் முக்கிய ராசிகள் கும்பம், துலாம், மகரம் ஆகியவை. மேலும், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களிலும் சனியின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ரேவதி நட்சத்திரம் சனீஸ்வரரின் பிறந்த நட்சத்திரமாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் தங்களை மேம்படுத்திக் காட்டக் கருப்பு நிற ஆடைகள், கைப்பைகள், காலணிகள் மற்றும் கருப்பு நிற வாகனங்களை விரும்புவார்கள். அடர் நீலம் மற்றும் கருப்பு ஆகியவை சனியின் நிறங்களாகக் கருதப்படுகின்றன.
சிலருக்கு கருப்பு ஆடை அணிவது சரியில்லை என்று சொல்வார்கள். ஆனால் சனி ஆட்சி அல்லது உச்ச நிலை பெற்று, 3, 6, 10, 11 ஆகிய பாவங்களில் பலமாக இருந்தால், கருப்பு இவர்களுக்கு மிகவும் பிடித்த நிறமாக மாறும். முக்கியமான நிகழ்ச்சிகளில் கருப்பு உடை அணிந்து தங்களை தனித்துவமாக உயர்த்திக் காட்டுவார்கள்.
சனி தாக்கம் உள்ளவர்களுக்கு கருப்பு நிறம் எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்கி, பாதுகாக்கும் சக்திவாய்ந்த நிறமாகக் கருதப்படுகிறது. இது நிலைத்த ஆற்றலையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் தனித்துவமான நிறமாக இவர்களுக்கு அமையும்.
சனியின் மந்த நிலை ஜாதகத்திலும் வெளிப்படும் மாணவர்கள் ஆரம்பக் கல்வியில் சிறிது மந்தமாகத் தோன்றலாம். ஆனால், பின்னர் நன்றாகப் படித்து முன்னேறுவார்கள். அதேபோல், சனியின் தாக்கம் உள்ளவர்கள் தொழிலில் அதிக உழைப்பும் தொடர்ந்த முயற்சியும் கொண்டிருப்பார்கள். இவர்களின் லட்சியம் நிறைவேறும் வரை ஓய்வெடுக்காமல் உழைப்பார்கள். லக்னத்தில் சனி அசுப நிலையில் இருந்தால், சோம்பேறித்தனம் சிலருக்கு ஏற்படுத்தும்.
எந்த வைட்டமின் சத்துகளும் உடலில் சீராக இருக்க வேண்டும். அவை கூடவோ குறையவோ இருந்தாலும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். அதைப் போலவே, சனியின் தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கடின உழைப்பால் உடல் சோர்வு, மனஅழுத்தம், கால் வலி, அஜீரணம், மலச்சிக்கல், இடுப்பு பகுதி பிரச்னைகள், அடிவயிற்று உபாதைகள் போன்றவை ஏற்படலாம். மேலும், சுத்தமின்மை அல்லது அழுக்கு போன்ற சனி தொடர்பான தன்மைகள் உடலில் தேங்கியிருந்தால், அந்த உடல் பகுதியில் சீழ் உருவாகும் வாய்ப்பு உள்ளது. அது நீண்டகால நோயாகவும் மாறக்கூடும்.
ஜோதிடத்தில், சனி கிரகம் ஒருவரின் உடலில் உள்ள வாதம், மந்த வாயு தொடர்பான தன்மைகளைக் குறிக்கும். ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி அசுப தொடர்பு கொள்ளும்போது, உடல் பாகங்களில் ஏதேனும் நோய் வலுத்து அது ஊனமாக்கச் செய்யும்.
"நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என திருக்குறள் வாசகம் வழியில் செல்ல வேண்டும். எனவே, இவர்கள் எப்போதும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்து, அவ்வப்போது நல்லெண்ணெய் குளியல் மற்றும் உடற்பயிற்சியும் மேற்கொள்வது நல்லது. தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வமும் இவர்களுக்கு உண்டு.
சனியின் தாக்கம் குறைய எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்..
சனியின் தாக்கம் குறைவாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் பலவீனம், ரத்த ஓட்டம் சீராக இல்லாமை மற்றும் எதிர்ப்பு சக்தி குறைபாடு தோன்றலாம். ரத்த சோகையால் பல்வேறு பிரச்னைகள் இவர்கள் எதிர்கொள்வார்கள்.
இவர்கள் கருப்பு மற்றும் பழுப்பு நிற உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக எள் சாதம், கருப்பு உளுந்து, கருப்பு கொண்டைக்கடலை, கருப்பு கவுனி அரிசி, கருப்பட்டி, பீட்ரூட், பேரீச்சம்பழம் மற்றும் கருகுவளை டீ எடுத்துக்கொள்ளலாம். இரும்பு பாத்திரத்தில் சமைத்த உணவும் நல்ல பலன் தரும்.
மேலும், சனியின் நட்பு கிரகமான புதனை குறிக்கும் பச்சை நிற உணவுகள், முருங்கைக் கீரை, முருங்கைக் காய், பச்சை சுண்டைக்காய், காய்கறி வகைகள, கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் முலைக்கட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.
அவ்வப்போது உடல் சூட்டை குறைக்க இளநீர், பழசாறு மற்றும் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் சூட்டை சமநிலைப்படுத்த சனிக்குரிய நல்லெண்ணெயை உடலில் தேய்த்து குளிப்பதும் நன்மை தரும்.
சனியின் தாக்கம் குறைய பரிகாரம்
சனியின் தாக்கம் உள்ளவர்களுக்கு வீட்டில் கருப்பு பெரிய எறும்புகள் அதிகமாக நடமாடுதல், அடிக்கடி காலில் அடிபடுதல், உடலில் ஒருசில பகுதிகளில் சீழ் ஏற்படுதல், குடும்பத்தில் பரம்பரை தீரா நோய்கள் காணப்படுதல், அழுக்கான இடங்களில் வசிக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
சனியின் தாக்கம் குறைய, பழமையான சிவன் கோயில்களில் சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி தானமாக வழங்குவது நன்று. ஆதரவற்றவர்கள், ஏழை எளியோர் - குறிப்பாக தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதும் நல்ல பலனை தரும்.
சனியின் பிடியிலிருந்து விடுபட, பஞ்சமுக ஆஞ்சநேயர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடும் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. மேலும், யானை, காகங்கள் மற்றும் எறும்புகளுக்கு உணவு அளித்தல், அவற்றிற்கு உதவுதல் போன்ற தர்ம செயல்களும் சிறந்த பரிகாரங்களாகும்.
தொலைபேசி: 8939115647
vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி!
எல் நினோ காலநிலை தாக்கம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கல்வியில் சிறந்து விளங்க! தீர்வுகளும் பரிகாரங்களும்!!

இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




