வீட்டிலேயே ஜாக்கிரதையாக இருங்கள்: தேவயானி நடித்துள்ள கரோனா விழிப்புணர்வு விளம்பரம்!

அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துச் சென்றிருக்கிறேன்.
வீட்டிலேயே ஜாக்கிரதையாக இருங்கள்: தேவயானி நடித்துள்ள கரோனா விழிப்புணர்வு விளம்பரம்!

தேவயானி நடித்துள்ள கரோனா விழிப்புணர்வு விளம்பரப் படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமூகவலைத்தளங்களிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரப் படத்தில் நடித்தது பற்றி தேவயானி கூறியதாவது:

இந்த நெருக்கடியான கரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்துள்ளது. 

பல வருடங்களுக்கு முன்பு "பாரதி" படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது "கட்டில்" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு, நான் பங்கேற்ற "கவசம் இது முகக்கவசம்" பாடலையும் இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார்.

இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாள்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துச் சென்றிருக்கிறேன்.

கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது, கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடும் கணவனோடும் விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத் கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி என வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாகச் செயல்படுத்தி வருகிறோம். மகாபாரதம், ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதைக் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

கரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக தமிழக மக்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com