வாழு, வாழவிடு! ஆர்த்தி குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன்!

தன் விவாகரத்து குறித்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
ரவி மோகன்
ரவி மோகன்
Published on
Updated on
3 min read

நடிகர் ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளார். ஆனால், ஆர்த்தி சமரசத்திற்காகக் காத்திருப்பதுபோல் தெரிகிறது.

இந்தச் சூழலில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் திருமண நிகழ்வில் ஒன்றாகக் கலந்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மனமுடைந்த ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு நானும் என் குழந்தைகளும் பாதிப்படைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டு ரவி மோகனின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாகச் சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், ரவி மோகன் 4 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையை வதந்திகளாகவும், உண்மைகளை மாற்றி அல்லது இரக்கத்துடன் பார்க்கப்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனது பயணத்தையோ, காயங்களையோ அறியாதவர்களால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, நான் பேச வேண்டும். விவாகரத்து செய்வதற்கு முன் என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உண்மையான அக்கறைகொண்ட அன்பான ரசிகர்களிடம் ஏற்கனவே மனம்திறந்து பேசியுள்ளேன்.

அவர்கள் அனைவரும் எனது முன்னாள் மனைவியின் தனியுரிமையை மதிக்கவும், ஊகங்களைத் தவிர்க்க விருப்பத்துடன் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். (‘முன்னாள்’ என்ற சொல் நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த தருணத்தில் எடுக்கப்பட்டது. அது எனது கடைசி மூச்சு வரை அப்படியே இருக்கும்)

ஆனால், மௌனம் புரிந்து கொள்ளப்படுவதற்கு பதிலாக குற்றவுணர்வாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நான் இப்போது பொய்யான குற்றச்சாட்டுகளால் பொது மக்களால் அவதூறு செய்யப்படுகிறேன். நான் எனது முன்னாள் மனைவியைத்தான் பிரிந்தேன். என் குழந்தைகளைவிட்டு அல்ல. என் மகிழ்ச்சியும் பெருமையும் அவர்கள்தான். என் இரண்டு மகன்களுக்காகவும் சிறப்பானதைச் செய்வேன்.

எனது குரல், கண்ணியம், சொந்த வருமானம் மற்றும் நிதி, எனது சொத்துக்களில் பங்கு, எனது சமூக ஊடகக் கணக்குகள், தொழில் முடிவுகள், பெரிய நிதிக் கடன்களில் உத்தரவாதமாக சிக்கியது, எனது தந்தை - மகன் பிணைப்பு, எனது பெற்றோருடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவை, அவளையும் அவளது பெற்றோரையும் ஆடம்பரத்தில் மூழ்கடிக்கும் ஒரே நோக்கத்துடன் சுயநலமாக பயன்படுத்தப்பட்டு, எனது வருமானத்தில் ஒரு பைசா கூட எனது பெற்றோருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுப்பப்படவில்லை. இன்று நான் யாராக இருக்கிறேனோ அதற்கு காரணமானவர்கள் அவர்களே.

இருந்தும், நான் மௌனமாக பொறுத்துக்கொண்டேன், சாதாரணமாக நடித்தேன், தொடர்ந்து பணம் செலுத்தினேன். ஆனால், நான் ஒரு பொன் முட்டையிடும் வாத்துபோல நடத்தப்பட்டேன், கணவனாக அல்ல. எனது நிதி, முடிவுகள், சொத்துக்கள், எனது பெற்றோருடனும் குழந்தைகளுடனும் உள்ள பிணைப்பு கூட அன்பின் முகமூடியில் பறிக்கப்பட்டு தனிப்பட்ட செல்வத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

திரைத்துறையில் உள்ளவர்களுக்கு உண்மை தெரியும். பல ஆண்டுகளாக, மறைமுகமான போராட்டங்களையும் இரக்கமற்ற கையாளுதலையும் சந்தித்தேன். ஆர்த்தியின் அம்மா பல கோடி கடனுக்கு உத்தரவாதமாக கையெழுத்திட வற்புறுத்தப்பட்டது உள்பட. இப்போது நான் எதிர்கொள்ளும் அனைத்திலும், நிதி ரீதியாக அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், 10 நாள்களுக்கு முன்பு அவளது தாய் என்னை அந்தக் கடனுக்கு உத்தரவாதமாக இருந்ததற்கு ஈடு செய்ய நடிக்க வற்புறுத்தினார். இதுதான் அவளும் அவளது குடும்பமும். பணம் / உத்தரவாதம் / கையெழுத்து தேவைப்படும்போது அவர்களுக்கு ரவி மோகன் என்ற பெயர் தேவை. இதுதான் கடந்த 16 ஆண்டுகளாக நான் போராடி வாழ்ந்த வாழ்க்கை. இருந்தாலும், நான் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுவேன் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நான் மிகவும் தெளிவாக சொல்கிறேன். உங்கள் விளையாட்டை இப்போதே நிறுத்துங்கள். மிக முக்கியமாக, எனது குழந்தைகளை இதில் மீண்டும் ஒருபோதும் ஈடுபடுத்த வேண்டாம். நான் ஒரு சிறந்த தந்தையாகவும், அவர்களுக்கு எல்லா உறவாகவும் இருப்பேன். உங்களின் நடவடிக்கைகளுக்கு உங்களை நீதிமன்றத்தில் மட்டுமே பார்ப்பேன்.

எனது முன்னாள் மனைவியும் அவரின் புனிதமான குடும்பமும் (எனது வாழ்க்கையை வடிகட்டி செல்வம் சேர்த்தவர்கள்) வலியை உணவாக உட்கொள்கிறார்கள். சக மைத்துனரின் வாழ்க்கையை பார்த்திருப்பதால் இதை நான் நன்கு அறிவேன். அவர் அதே கடுமையை எதிர்கொண்டார்.

கெனீஷா பிரான்சிஸ் என்னை எல்லாத் துயரங்களிலிருந்தும் மீட்டவர். நள்ளிரவில் செருப்புகூட அணியாமல் வீட்டைவிட்டு வெளியேறிபோது எனக்கு ஆறுதல் அளித்தவர். நான்படும் பாடுகளைக் கண்டு ஒளியாக இருக்கிறார். அவர் ஒரு அழகிய துணை. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை ரீதியாக நீங்கள் எனது இதயத்தை மதிக்கிறீர்கள் என்றால், கெனீஷாவையும் அதே மரியாதையுடன் பார்ப்பீர்கள்.

எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் முன்கூட்டிய தீர்ப்புகளைத் தவிர்த்த ஊடகங்களுக்கு, என்னுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவும் புரிதலும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு முக்கியம். ஒவ்வொருவருக்கும் நான் முடிவில்லா நன்றியைத் தெரிவிக்கிறேன்.

கெனிஷாவுடன் ரவி மோகன்!
கெனிஷாவுடன் ரவி மோகன்!

இப்போது பயமின்றி சொல்கிறேன். புகழ், வெற்றி அல்லது தொழிலைப் பொருட்படுத்தாமல், பெண்கள் பொதுவாக தங்கள் துணைகளிடமிருந்து அனுபவிப்பது போலவே, ஆண்களும் துஷ்பிரயோகம், வற்புறுத்தல், மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்குதல்களால் பாதிக்கப்படுகிறார்கள். நான் அதை வாழ்ந்திருக்கிறேன். எனவே, எந்த விலை கொடுத்தும் அத்தகைய வாழ்க்கைக்கு திரும்ப மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் இதுவரை இந்த அளவு அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவித்ததில்லை. இதுவே இதுகுறித்து என் இறுதி அறிக்கை.

வாழு, வாழவிடு!

ரவி மோகன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com