

மெய்யழகன் திரைப்படத்தில் வரும் லதா கதாபாத்திரம் உருவாக காரணமாக இருந்தவர் பற்றி இயக்குநர் பிரேம் குமார் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் அளித்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கார்த்தி, அர்விந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்திருந்தனர்.
இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பல மொழிகளிலும் உள்ள நடிகர்களும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
இந்தப் படத்தில் அருள்மொழியின் திருமணத்திற்குச் செல்லும்போது தனது மாமன் மகள் லதா எனும் கதாபாத்திரத்தைச் சந்திப்பார்.
கணவனுடன் கஷ்டப்படும் அந்தக் கதாபாத்திரம் மிகுந்த வாஞ்சையுடன் அரவிந்த் சாமியுடன் பேசும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரேம் குமார் தன் சிறுவயதில் பழகிய பக்கத்து வீட்டு அக்காவின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில், “30 ஆண்டுகளுக்குப் பிறகு எனது பக்கத்து வீட்டு அன்புக்குரிய லதா அக்காவைச் சந்தித்தேன். எதுவுமே மாறாத, அதே நிபந்தனையற்ற அன்பைப் பெற்றதற்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். இப்போதும் என்னை குழந்தையாகவேப் பாவிக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், “இவர்களை உத்வேகமாக எடுத்துதான் மெய்யழகன் படத்தில் லதா கதாபாத்திரத்தை உருவாக்கினீர்களா?” எனக் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த இயக்குநர், “ஆமாம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.