
சண்டைக்காட்சிகளால் நிரம்பிய தி பாரடைஸ் எப்படி இருக்கிறது? - திரைவிமர்சனம்
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நடிகர்கள் நானி, கயடூ லோகர் நடிப்பில் வெளிவந்துள்ள தி பாரடைஸ் திரைப்படத்தைக் குறித்த விமர்சனம்...
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நடிகர்கள் நானி, கயடூ லோகர் நடிப்பில் வெளிவந்துள்ள தி பாரடைஸ்
The Paradise
தி பாரடைஸ் திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்ளார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் குற்றப் பரம்பரையாகத் தொடரும் சவாரி இனக்குழுவை உள்ளூர் பண்ணையாளரான வில்லன் மாலிக் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். தனது சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்திக்கு அவர்களைப் பயன்படுத்தும் வில்லன் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய அடையாளத்தை கிடைக்கவிடாமல் தடுத்து தனது ராஜ்ஜியத்தைத் தொடர்கிறான். தங்களுக்கான அடையாளத்தை மீட்கத் துணியும் சவாரி மக்கள் அதை எப்படி சாதித்தனர் என்பதை பேசியிருக்கிறது பாரடைஸ் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக வரும் நடிகர் நானி சடையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தங்களுக்கான அடையாளத்திற்காகப் போராடும் அடிமை சம்மக்காவின் மகனாக வரும் அவருக்கு இணையாக கயடூ லோகர் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பும், முரளி கொண்டேட்டி கலை இயக்கமும் செய்துள்ளனர். சிச் சாய் கேமரா பணி செய்துள்ளார்.
மாலிக்கின் ராஜ்ஜியத்தில் அடிமைகளாக வாழும் சவாரி இனக்குழுவைச் சேர்ந்த நானி சிறுவயதில் வில்லன் மோகன் பாபுவால் அவமானப்படுத்தப்பட்டு கையில் தாய் குறித்து ஆபாசமாக பச்சைக் குத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறான். அதன்பிறகு வில்லனின் கூட்டாளியை நானி கொன்று விட 14 ஆண்டுகள் அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் (நானி) சடையன் வில்லன் மாலிக்கை பழிவாங்கத் துடிக்கிறான். தனது சவாரி இனக்குழுவிற்கு அடையாளம் கிடைக்கவிடாமல் செய்து வரும் மாலிக்கை தீர்த்துக்கட்ட நானி என்னவெல்லாம் செய்தார் என்பதே பாரடைஸ் திரைப்படத்தின் எஞ்சிய திரைக்கதை.
நடிப்பு என்பதைத் தாண்டி ஆக்ஷனில் அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் நானி. ஆக்ரோசமான ஹீரோவாக அவர் கோபம் கொண்டு வில்லக்கூட்டத்தைத் தாக்கும் இடங்களில் மிதமிஞ்சிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தாய் மீது கோபம் கொள்வதும், உண்மை தெரிந்த பிறகு அவருக்கான உருகுவதும் சிறப்பாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல், வருகிற அத்தனை வில்லன்களையும் வெட்டிக் கொண்டே இருப்பது என்ன நடக்கிறது எனும் கேள்வியை உள்ளூர எழுப்புகின்றது. ரத்த ஆறு ஓடும் படத்தில் கொஞ்சம் ரசனைக்கும் இடம் கொடுக்க கயடூ லோகரை அழைத்து வந்த இயக்குநர் அவருக்குண்டான கதாபாத்திர வடிவமைப்புக்கு மெனக்கெடாமல் விட்டது ஏனோ தெரியவில்லை. தந்தையின் கடனை அடைப்பதற்காக ஆபாசப் படங்களில் அவர் நடிக்க அதை அவரது தாயே கேமரா பிடித்து கமெண்ட் அடிப்பதெல்லாம் டூ மச். தற்*கொலை என முடிவெடுத்துவிட்ட பிறகு கடனை அடைத்துவிட்டு எதற்கு தூக்கில் தொங்க வேண்டும் என்பது புரியவில்லை. கவர்ச்சியில் புயலடிக்க மட்டும் அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
வில்லனாக நடித்துள்ள மோகன் பாபு (தந்தை மாலிக்) மீது ஒருவித பயம் ஏற்படுவதற்கு முன்பாகவே அவர் ஓய்வு பெற்றுவிட அந்த இடத்திற்கு அவரது மகன் ராகவ் ஜுயல் (விக்ரம் மாலிக்) வந்துவிடுகிறார். அவரும் உருட்டி மிரட்டி வில்லத்தனம் காட்ட முயன்றாலும் அதுவும் எடுபடவில்லை. இவர்களுடன் சோனாலி குல்கர்னி, ஈஸ்வரி ராவ், தனிகெல்லா பரணி, சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். சம்மக்கா கதாபாத்திரம் போராடுவதற்கான வலுவுடன் ஆரம்பித்தாலும் கதாநாயகன் வருகைக்குப் பிறகு பரிதாபப்படும் இடத்திற்கு நகர்ந்து விடுவது திரைக்கதை ஓட்டைகளுக்கு சான்று.

தி பாரடைஸ் திரைவிமர்சனம்
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுடன் இணைந்தாலும் எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் அடையாளமற்று கிடப்பதற்கு எதிராக போராடும் மக்கள் எனும் வலிமையான கதையாக இருந்தாலும் அதீத பில்டப்புகள், முகம் சுழிக்கும் வன்முறைகள், திசைமாறும் காட்சிகள் என கிடைத்த இடத்தை வீண் செய்திருக்கிறது படக்குழு. இதற்கிடையில் இரண்டாம் பாதியில் ரெபரென்ஸ் வரும் தெலங்கானா அரசியல் தலைவர்கள், வசனங்களில் விழுந்த சென்சார் கத்தரி ஆகியவை படத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டத் தவறியிருக்கின்றன.
பின்னணி இசை தொடக்கத்தில் கதை உலகத்திற்குள் செல்வதற்கு உதவியிருந்தாலும், நிற்காமல் தொடரும் சண்டைக்காட்சிகளால் ஒருகட்டத்தில் இரைச்சலாகிறது. 6 பகுதிகளாக விரியும் திரைக்கதைக்குள் அம்மா சென்டிமெண்ட், டீ பன் கதை என கேஜிஎஃப் வாடை அடிக்காமல் இல்லை. நானி வில்லன்களை வேட்டையாடுவதைப் போலவே படத்தொகுப்பாளரும் காட்சிகளுக்கு கருணை காட்டாமல் செயல்பட்டிருக்கலாம்.
பாரடைஸ் தலைப்புகேற்ற வகையில் படைக்கப்பட்டிருந்தால் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கும்.
Summary
How is The Paradise a film packed with action sequences A movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





