பொன்னான பூமி புண்ணாகலாமா?
என்னுடைய கல்லூரி நாள்களில் கிராமத்தையும் விவசாயத்தையும் போற்றும் மிக அருமையான சினிமாவாக வெளிவந்த "மக்களைப் பெற்ற மகராசி'யில் பாடப்பட்ட ஒரு பாட்டு மருதகாசியின் காணிக்கை. ""பொன்னு விளையற பூமியடா, விவசாய


என்னுடைய கல்லூரி நாள்களில் கிராமத்தையும் விவசாயத்தையும் போற்றும் மிக அருமையான சினிமாவாக வெளிவந்த "மக்களைப் பெற்ற மகராசி'யில் பாடப்பட்ட ஒரு பாட்டு மருதகாசியின் காணிக்கை. ""பொன்னு விளையற பூமியடா, விவசாயத்தைப் பொறுப்பாச் செய்யிறமடா... மணப்பாறை மாடுகட்டி'' தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது டி.எம்.எஸ். பாடிய சூப்பர்ஹிட் பாடல். பொன்னாக நெல்விளைந்த காலம், ஒரு மூட்டை நெல் விற்றால், ஒரு பவுன் வாங்கலாம். பொன்விளைந்தது என்றால் பூமியில் விளைந்த நெல், கோதுமை, பருப்பு, கடலை, தேங்காய் ஆகியவை பெற்ற உயர்வான பணமதிப்பு. நூறு தேங்காய் விற்றால் 2 பவுன் வாங்கலாம். நிஜமாகவே அந்தப் பாடல் வெளிவந்த காலகட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. விளைவதை விற்று லாபத்தைத் தங்கமாக வாங்கி உயர்ந்தார்கள்.
இன்று விவசாயம் செய்து வாழ்பவர்களால் ஒரு பொட்டுத் தங்கம் கூட வாங்க முடியாது. விளைச்சலை விற்றாலும்கூட சாகுபடிக்குச் செய்த செலவை மீட்க முடியவில்லை. அன்று வாங்கிய தங்கமெல்லாம் இன்று அடகுக்கடைகளில் ஏலம் போய்க்கொண்டிருக்கின்றன.
அதைக் கவிஞர் பின்னர், ""கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி... ஒழுங்கா பாடுபடு வயல்காட்டில், உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்'' என்று எம்.ஜி.ஆருக்குப் பாட்டு எழுதிக் கொடுத்தார்.
உண்மையில் கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுவதால் பொன்விளைந்த பூமியில், இன்று பித்தளைக்குக்கூட வழியில்லை. ஆகவேதான், உள்ளூரில் நிலத்தைத் தரிசாக்கிவிட்டு நைஜீரியாவில் நிலத்தை வாங்கி துவரை சாகுபடி செய்ய வேண்டும் என்று சரத்பவார் புத்தி புகட்டுகிறார். ஏனென்றால், இங்குள்ள விளைநிலங்களை டாடாவுக்கும், அம்பானிக்கும் குறைந்த விலைக்கு விற்றுத் தொழில் வளர்க்க வேண்டும். அதற்காகவே பொன்விளைந்த பூமி தரிசாகி வருகிறது. என்ன தொழில்? ஊழல் தொழில்தான். உலகளாவிய அளவில் ஊழல் தொழிலில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதலாளித்துவப் பொருளாதார அகராதியில் வளர்ச்சியின் அளவு கோலே ஜி.டி.பி. என்று சொல்லப்படும் தேசிய வருமான மதிப்பு. அந்தத் தேசிய வருமான மதிப்பில் ஊழல் தொழில் வருமானம் 70 சதவீதம் உள்ளது.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் நேருவுக்குப் பின் யாரைப் பிரதமராக்கலாம் என்ற கேள்விக்குப் பெருந்தலைவர் காமராஜ் பதிலாயிருந்தார். அவரால் பிரதமராக முடியவில்லை என்றாலும், பிரதமர்களை அமர்த்தும் அளவுக்கு அதிகாரம் இருந்த காரணத்தால் அவருக்குக் "கிங் மேக்கர்' பட்டம் கிடைத்தது.
இன்று யாரைப் பிரதமராக்கலாம் என்ற கேள்விக்கு அம்பானி-டாடா ஏஜெண்ட், ராசாவை மட்டுமல்ல, ராணிகளையும், மந்திரிகளையும் நியமிக்கும் உரிமைகளையும் டெண்டர் இல்லாமல், ஏலம் இல்லாமல் வாங்கிவிட்டார்கள் என்பதைத்தான் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளர் நீரா ராடியாவின் ஒலிநாடா நிரூபிக்கிறது.
இந்த நாட்டுக்குப் பல்லில்லாத ஒரு பிரதமர், தில்லியில் நடந்த 125வது காங்கிரஸ் மாநாட்டில், பிரதமருக்கு இடதுபுறம் சற்றுத் தூக்குதலாய் வீற்றிருந்த கட்சித்தலைவர் சோனியாவுக்கு ஊழலைப் பார்த்து ஆவேசம் வந்துவிட்டது.
""ஊழல்கள் அதிகம் பெருகுவது நிலக் கைப்பற்று, நில ஒதுக்கீடு போன்றவை என்பதால், அதிகாரிகளுக்குள்ள சிறப்பு அதிகாரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும். இயற்கை வளங்களைக் கொள்ளை போகாமல் முறைப்படுத்துவதில் ஒரு தெளிவான செயல்திட்டம் வேண்டும்...'' இப்படியான ஆவேசப் பேச்சுகள் எடியூரப்பாவுக்கும் சிங்கூர்-நந்திகிராம் புகழ் புத்ததேவுக்கும் இதர மாநில முதலமைச்சர்களுக்கும் குறிவைத்துள்ளது புரிகிறது.
இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பது - அதாவது விளை நிலங்கள் உள்பட கனிமம் நிறைந்த பகுதிகளைக் கொள்ளை போகாமல் முறைப்படுத்துவது என்றால் என்ன? நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முடங்கியதால், சோனியா காந்தி கூறும் நிலக் கைப்பற்றை முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்படவில்லை. அதாவது, மத்திய, மாநில அரசுகள் பிரிட்டிஷார் காலத்தில் இயற்றப்பட்ட 1894 நிலக் கைப்பற்றுச் சட்டப்படி, ""பொது நலத்துக்காக'' நிலக் கைப்பற்று ஒப்புதல் தரப்படுகிறது. "தரிசு நிலம்' கைப்பற்றாகிறது.
1894 சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி நில மாஃபியாக்கள் (அமைச்சர்களின் பினாமிகள்) கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான புறம்போக்கு ஆக்கிரமிப்புக்கு மேல் பட்டா நிலங்களையும் மலிவாக வாங்கி, நல்ல விலைக்கு விற்பதாகவும் ஒரு கருத்துண்டு. பொருளாதார மண்டலமே பொது நலந்தான் என்று பேசுமளவில் - பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனையாவதுடன் தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் என்று பல பொதுநல ஒதுக்கீடுகள் உண்டு. சுற்றுச்சூழலுக்கு எமனும், இயற்கை வளத்தை அழிப்பதுமான தனியார் சுரங்கத் தொழில், "பொதுநலமே'.
மேல்தட்டு மக்கள் குடியிருப்புகளுக்காகப் பல அடுக்கு மாளிகைகள், கடற்கரையை ஒட்டி ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், கோல்ஃப் விளையாட்டு மைதானம், குதிரைப் பந்தய மைதானம் எல்லாமே "பொது நலந்தான்'.
பல்வேறு ஆங்கில நாளிதழ்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சிப்பணி என்பது நிலத்தரகு. அதை மாஃபியாக்கள் செய்கின்றனர். விளை நிலங்களைத் தரிசாகப்போட்டுப் போலிச்சான்று பெற்று, குறைந்த விலைக்கு வாங்கி, கருப்பில் யாதி வெளுப்பில் பாதி என்று தக்க கமிஷனையும் பெற்றுக்கொண்டு தொழில் முதலைகளுக்கு விற்பது வளர்ச்சியின் சான்றாயுள்ளது.
நிலத்தை வாங்கும் தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தின் நிஜமான சொந்தக்காரர் யார் என்று தெரியாதபட்சத்தில் அரசு மூலமோ-மாஃபியாக்கள் மூலமோ நிலம் பெறப்படுகிறது. நத்தம், புறம்போக்கு, வனப்பகுதி எல்லாம் அரசு மூலம் விலை கொடுத்து விலையில்லாமல் சுருட்டிவிடலாம். பட்டா நிலத்தை அப்படிச் சுருட்ட முடியாது. மாஃபியாக்கள் உதவி வேண்டும். குறிப்பாக வனப்பகுதிகளில் உரிமை எழுத்தறிவில்லாத பழங்குடிகளுக்கு இருக்கும். பட்டா இருக்காது. அப்படிப்பட்ட இடங்களைக் கைப்பற்ற அம்மக்களை பயமுறுத்த தொழில் முனைவோர்களுக்கு மாஃபியாக்களின் துணை வேண்டும். பட்டா நிலங்கள் என்றால் பெரிய தொழில் முதலாளிகளுக்கு லாட்டாகக் கிடைக்கிறது. நூற்றுக்கணக்கானவர்களில் சிலருக்கு விற்க மனம் இருக்காது. தகாத விலை கொடுத்துத் தக்கவிலை பெறவும் நில மாஃபியாக்கள் உதவுவார்கள்.
இப்படிப்பட்ட பின்னணியில் 1894-நிலக்கைப்பற்றுச் சட்டம் திருத்தி முறைப்படுத்தப்படுகிறது என்றால் என்ன பொருள்? "இதுவரை முறையில்லாமல் வாங்கப்பட்ட நிலங்களுக்கு வாங்கியபின் புதியபட்டா வழங்கப்படும்' என்றுதான் பொருள்.
இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு வேளாண்துறை அமைச்சர், சோனியா காந்தியை முந்திக்கொண்டுவிட்டார். ""விளைநிலங்களை வாங்கி அதை வீட்டு மனைகளாகவோ தொழில் மனைகளாகவோ மாற்றுவதைத் தடை செய்யும் சட்டம் கடுமையாக்கப்படும்...'' என்று அவர் பேசியுள்ளதை வரவேற்கலாம். இயற்றப்படாத ஒரு சட்டத்தை எப்படிக் கடுமையாக்குவது? யார் தவறு செய்கிறார்கள்? அப்படித் தவறு செய்யும் மாஃபியாக்கள் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களாக இருந்தால் எவ்வாறு தண்டிக்க முடியும்?
விஷம்போல் விலைவாசி ஏறுவதுபோல் நிலத்தின் விலையும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் ஏறுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் மூன்று முதல் பத்து மடங்கு ஏற்றத்தைக் கவனிக்கலாம்.
உதாரணமாக, நான் இயற்கை விவசாய மாதிரிப் பண்ணை-பயிற்சி நடத்த 2 ஏக்கர் 5 லட்ச ரூபாய்க்கு 2007-ல் வாங்கினேன். மிகவும் மோசமான களர் நிலம் இன்று திருத்தப்பட்டுள்ளது. இன்று 30 லட்ச ரூபாய்க்கு அதே நிலம் மதிப்பிடப்படுகிறது. எனது சுயநலம் மகிழ்ந்தாலும் பொதுநலம் வருந்துகிறது. இப்படிப்பட்ட விலை ஏற்றத்தைத் தவிர்த்தால்தான் நாடு நலம்பெறும். சட்டத்தைக் கடுமையாக்குவது என்றால் நில மாஃபியாக்களையும், ரியல் எஸ்டேட்டுகளையும் தடை செய்யவேண்டும்.
விளைநிலங்கள் தரிசாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்டிக்கும் விவசாய அமைச்சர், தரிசின் இலக்கணம் என்ன? அதன் வரையறை எது என்பதையும் யோசித்தல் நலம். விவசாயத்துக்கே தகுதியில்லாத பாறைநிலம், சரளை, சேற்றுநிலம், உவர்-சுண்ணாம்பு நிலம் பலநூறு ஆண்டுகளாகவே புல்கூட முளைக்காத நிலம் என்பதுவே "நிரந்தரத்தரிசு'. ஓராண்டு சாகுபடி செய்துவிட்டு மறுஆண்டு சும்மாவிட்டால் அது நஞ்சைத் தரிசாகவோ, புஞ்சைத் தரிசாகவோ உள்ள சாகுபடி நிலமேதவிர, நிரந்தரத் தரிசு இல்லை.
விவசாயிகளின் இயலாமையைப் பயன்படுத்தி, விளைநிலங்களைத் தரிசாக்கி, பொன்னான பூமியை - நஞ்சை - புஞ்சைத் தரிசுகளில் குத்துக்கல் குத்தியும் முள்வேலியிட்டும் புண்படுத்துவது நியாயந்தானா?
இன்றுள்ள ஊழல் சமுதாயத்தின் ஆணிவேர்களாகத் திகழும் அக்கிரமக்காரர்கள் ஒவ்வொரு ஊரிலும் பெருகிவிட்டார்கள். மீண்டும் ஓர் ஏசுவோ, காந்தியோ விவேகானந்தரோ பிறந்து இவர்களைத் திருத்த முடியாது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு கிருஷ்ணபரமாத்மா தோன்றி துஷ்ட நிக்ரஹ பரிபாலனம் செய்ய வேண்டும். அப்போதுதான் பூமியில் பொன் விளையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...