தேசம் விலைபேசப்படுகிறதா?

உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடு
Updated on
3 min read

உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள்தொகை மிகுந்த நாட்டை வணிக உலகம் சந்தையாகப் பார்க்கிறது. அமெரிக்கா முதலிய ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், இந்தியாவைத் தங்கள் சொந்த சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தேசத்தைப் பற்றியோ, மக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாத இந்திய அரசு தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயலாற்றுகிறது. "இது எங்குபோய் முடியுமோ?' என்று தேசப்பற்றுடைய அறிவாளிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.

இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், விரைவில் 9 புள்ளியை எட்டிவிடும் என்றும் பேசுகிறார்கள். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வந்துவிட்டால் கொடியேற்றி வைத்துவிட்டு, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தவர்கள் எல்லோரும் உலகச் செல்வந்தர்களாக உயர்ந்துவிட்டது போலவும், நாடு வல்லரசாக மாறி வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போகிறார்கள். நமக்கும் கேட்பதற்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலை "இது பகல்கனவு' என்று உணர்த்தி விடுகிறதே!

÷இந்நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது இதற்கு இன்னொரு கூடுதல் சிறப்பாகும். ஆனால் இந்த மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே! இங்கே உயர்கல்வி என்பது அமெரிக்கா முதலிய அன்னிய நாட்டுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டது. இவர்களுக்குத் தாய்நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

இந்நாட்டில் மண்ணும், மக்களும் பிரிக்க முடியாதவர்கள்; கல்வியும் அப்படித்தான். ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவில் ஏற்பட்ட ஓர் அவசர காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வித்துறை மத்தியப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசு இதைக் கையில் வைத்துக்கொண்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இளைய தலைமுறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது புதிய அச்சுறுத்தல் மசோதா வடிவில் வந்திருக்கிறது.

"வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுச் சட்ட மசோதா - 2010' என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதோடு நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் இம்மசோதாவைத் தாக்கல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது முன்பே முற்றிலும் வணிகமயமாகவே மாற்றப்பட்டு விட்டது. இதில் அன்னியக் கல்வி நிறுவனங்களும் போட்டியிடுமானால் கல்விப் பந்தயத்தின் முடிவு எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இப்போதே ஆங்கில மோகத்தில் பண்பாட்டுப் பழக்கவழக்கச் சீரழிவிலே மிதக்கும் இளைய தலைமுறையால் இந்தியாவின் எதிர்காலத்தைப் பாழாக்கலாமா? இந்திய நாட்டின் எந்தச் சட்டத்தையும் அன்னியப் பல்கலைக்கழகங்கள் மதிக்கப் போவதில்லை. அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படப் போவதுமில்லை.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் மற்றும் பத்மவிபூஷண் விருது பெற்ற வெங்கடராமன், இந்தியாவில் அன்னிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்கு வணிக நோக்கமே காரணம் என்று கூறியுள்ளார். இவைகளில் கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்பதில்லை என்றும், ஆனால் வேறு சில பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வணிக நோக்கத்தில்தான் என்றும் கூறியுள்ளார். இந்தச் சாட்சி போதாதா?

இந்தியக் குடிமக்களை அன்னியர்கள் போலவும், அடிமைகளைப் போலவும் நடத்துவதும், அதேசமயம் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து விடுவதும்தான் உலகமயக் கொள்கையாக இருக்கிறது. கடல்சார் மேலாண்மைச் சட்டத்தின்மூலம் மீனவ மக்கள் அவர்களது பாரம்பரிய கடற்பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அன்றாடம் அவர்கள் தொழில் செய்ய முடியாமல் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனரே, இதுபற்றித் தமிழக அரசு பலமுறை கூறியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே, இது ஏன்?

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திமிங்கிலங்களின் பசியைப் போக்க கனிம வளங்களை வாரி இறைத்திட காட்டுப் பகுதியிலிருந்தும், மலைப்பகுதியிலிருந்தும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதும், "சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற பெயரால் இந்தியாவின் உயிர்நாடியான விவசாயப் பெருங்குடி மக்களை அவர்கள் பாரம்பரிய பூமியிலிருந்து பறித்துக் கொள்வதும், "இந்தியா ஏழை இந்திய மக்களுக்கல்ல' என்ற எண்ணத்தை இந்நாட்டுக் குடிமக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

"இந்தியா பாரம்பரிய விவசாய நாடு' என்ற எண்ணத்தைத் தகர்ப்பதற்கான திட்டங்களும், சட்டங்களும் அவசர கதியில் கொண்டு வரப்படுகின்றன. விவசாயத்தில் தனியார்மயத்தைப் புகுத்தவும், இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலும் இந்தியாவும், அமெரிக்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தால் நமது வாழ்வாதாரமான விவசாயம் வணிகமாக ஆக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயம் காத்திருக்கிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மரபணு மாற்றுப் பயிர்களைப் பற்றி யாரும் கேள்விகூட எழுப்ப முடியாது.

÷"இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றிய விதைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கும் பிரிவும் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள்கூட இதிலிருந்து கருத்து மாறுபடவோ, எதிர்க்கருத்துக் கூறவே முடியாதென்றால் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்துக்கும் வேறுபாடுதான் என்ன?

மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்க முயற்சி நடப்பதாகக் கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா கூறியுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் உணவுப் பயிரான கத்தரிக்காயை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. மக்களின் கடுமையான எதிர்ப்பால் அதுவும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தநேரத்திலும் இது "விஸ்வரூபம்' எடுத்து வரலாம்.

÷இதையெல்லாம் மிஞ்சுவது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம். கடந்த முறை மத்திய அரசைத் தாங்கிப் பிடித்திருந்த இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சியான பாஜகவும் எதிர்த்தபோதும் ஆட்சியே கவிழும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் துடித்தது ஏன்? "தேச நலனுக்காகவா இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது?' என்ற கேள்வி எழுந்தது.

÷இதன் தொடர்ச்சியாக அணுசக்தி ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமையும் அணுமின் நிலையங்களில் விபத்து நேரிட்டால் அந்த நிலையத்துடன் இணைந்து செயல்படும் அயல்நாட்டு நிறுவனம் அதிகப்படியாக 300 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு தரவேண்டியது இல்லை என்று நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 15 அன்று தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தாக்கல் செய்யப்படவில்லை.

விபத்து எப்படி ஏற்பட்டாலும், யார் பொறுப்பாக இருந்தாலும் இந்தியர்களுக்குத் தரவேண்டிய இழப்பீடு இதற்குமேல் தரவேண்டாம் என்று அயல்நாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், இந்தியர் நலனுக்குப் பாதகமாகவும் இவ்வளவு பகிரங்கமாகக் கொண்டுவரும் மசோதாவை இந்த வடிவில் அனுமதிக்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

அன்னிய நிறுவனங்கள் இங்கு அணு உலைகளை அமைக்க அனுமதி அளிக்கத்தான் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்று கூறுவது தவறானது என்றும், இப்போதைய நிலையில் அணுசக்தித் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையமைச்சர் பிருதிவிராஜ் சவாண் கூறியுள்ளார். அப்படியானால், "இந்த மசோதாவுக்கான தேவை என்ன?' என்ற வினா எழுகிறது.

÷இந்த மசோதாவின்படி அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்து எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் வெறும் 300 மில்லியன் டாலர் இழப்பீடு என்று வரையறை செய்திருப்பதை அனைவருமே எதிர்க்கின்றனர். இந்த இழப்பீடு தொகையில் அந்த அயல்நாட்டு நிறுவனம் 18 விழுக்காடு மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் போதுமானது; மீதம் 82 விழுக்காடு இந்திய அரசே பொறுப்பேற்கும் என்பது என்ன நியாயம்? இந்திய அரசின் நிலை இப்படித்தான் தொடர்கிறது.

""உலகத்திலுள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளை நாம் இந்தியக் கண்கொண்டே பார்க்க வேண்டும். வல்லரசு நாடுகளுடன் நாம் கூட்டுச் சேர்வது சில நன்மைகளைப் பயக்கலாம். ஆனால், முடிவில் அதனால் கேடுதான் விளையும். இந்தியாவுக்கும், உலக அமைதிக்கும் அதனால் தீமையே உண்டாகும்...'' - இதுதான் முதல் பிரதமர் நேருவின் எச்சரிக்கை. இதனைக் காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

அன்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி செய்தது. இன்று அதே காங்கிரஸ் கூட்டணியாக ஆட்சி செய்கிறது; காலப்போக்கில் அரசியலில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பலி கொடுக்கலாமா? "உலகமயம்' என்ற பெயரால் தேசம் விலை பேசப்படுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com