/

மாடு வளர்ப்போர் மகிழட்டுமே!

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாட்டுக்கார வேலர்களும் ஆட்டுக்கார அலமேலுக்களும் மகிழ்ச்சியுறும்படி இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளதை வரவேற்க வேண்டும்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:55 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாட்டுக்கார வேலர்களும் ஆட்டுக்கார அலமேலுக்களும் மகிழ்ச்சியுறும்படி இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளதை வரவேற்க வேண்டும்.

இந்த அறிவிப்பால் நலிந்து கொண்டிருக்கும் பால் உற்பத்தித் தொழில் புத்தொளி பெறவேண்டும். கால்நடைகள் மிகுந்துள்ள குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆடு, மாடுகளை வரவழைத்து வழங்க வாய்ப்பு உண்டு. மத்திய அரசு பட்ஜெட்டிலும், மாநில அரசு பட்ஜெட்டிலும் கால்நடைத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவே. இந்த விஷயத்தில் குஜராத் முதலமைச்சருக்கு நல்ல பெயர் உண்டு.

இந்தியாவிலேயே மாட்டுக்காரர்களை மகிழ்விக்கும் அரசு குஜராத் என்றால் மிகையல்ல. குஜராத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (அமுலின் அங்கம்) தினமும் 10 மில்லியன் அல்லது 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதனால் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. மொத்த விவசாயக் குடும்பங்களில் சுமார் 50 சதவீதம் பால் உற்பத்தியால் பயனுறுவதால் குஜராத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று முதல்வர் நரேந்திர மோடி பெருமிதம் கொள்வதுண்டு. ஏனெனில் பால் விவசாயிகளுக்கு தினமும் ரூ. 100 வருமானம் கிடைத்துவிடுகிறதாம்.

பால் கொள்முதல் விலை, பாலில் உள்ள கொழுப்பை வைத்து நிர்ணயமாகிறது. பால் விவசாயிகளுக்கு 1 கிலோ கொழுப்புக்கு ரூ. 380 ஆகும். எருமைப் பாலிலும், தார்ப்பார்க்கர், சாகிவால், காங்கிரஜ், கிர் போன்ற நாட்டுப்பசுக்களின் பாலிலும் சராசரியாக 7 சதவீதம் கொழுப்பு உண்டு. 1 கிலோ பால் ரூ. 27 வரை அடக்கமானால் ஒரு பால் விவசாயி 4 லிட்டர் பால் ஊற்றினால் ரூ. 100 வருமானம் பெறலாம். அதேசமயம், ஜெர்சி, பிரீசியன் போன்ற சீமைக்கலப்பின மாடுகளில் கொழுப்பு விகிதம் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே தேறும் என்பதால் 1 கிலோ பாலில் ரூ. 12 முதல் ரூ. 15 வரைதான் கிடைக்கும்.

குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் உள்ள நாட்டுரகப் பசுக்களைத் தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்து மாட்டுக்கார வேலர்களுக்கு இலவசமாக வழங்கினால் நிர்வாகச் செலவும் மிச்சப்படும். சீமைக் கலப்பின மாடுகளுக்கு நிறையத் தீனிபோட்டு வளர்க்க வேண்டும். ஆனால், நாட்டுரக மாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் இருந்தால் குறைந்த தீனி போதும். அப்படி மேய்ச்சல் இல்லாவிட்டாலும்கூட, அதிக அளவு தீனி உண்ணாது. மருத்துவச்செலவும் குறைவு. சீமைக்கலப்பின மாடுகள் மூலம் தினம் 10 லிட்டர் கறவையும், கராச்சி இனங்களான குஜராத் - ராஜஸ்தான் நாட்டுப் பசுக்களின் 5 லிட்டர் கறவையும் ஒன்றுதான். நாட்டுப்பசுக்களின் மூலம் கூடுதல் லாபம் உண்டு.

தவிரவும், எதிர்காலத்தில் பாலின் தேவை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. 2020-ஐ நெருங்கும்போது நமது பால் தேவை 2.20 கோடி டன்களாக உயரும். இன்று நமது பால் உற்பத்தி 1.25 கோடி டன்களே.

குஜராத்தைப் பின்பற்றிக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் பால் உற்பத்தியில் கர்நாடகம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாவது இடத்திலும் தமிழ்நாடு நான்காவது இடத்திலும் உள்ளன. முயன்றால் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அமுல் நிறுவனத்துடன் சமபலத்தில் உயர முடியும். ஏனெனில், குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியில் கூட்டுறவுத் துறையின் பங்கு 90.54 சதவீதம். தமிழ்நாட்டில் இதுவே 22.7 சதவீதம். இந்திய அளவில் பால் உற்பத்தியில் தனியார் ஆதிக்கமே 90 சதவீதம். கூட்டுறவுத்துறை ஆதிக்கம் வெறும் 10 சதவீதமே.

இவ்வளவு இருந்தும்கூட பால் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்க விவசாயிகளுக்குக் கறவைமாடுகளை வழங்குவதற்கு மேல், கறவை மாடுகளைப் பட்டினி போட்டுக் கொன்றுவிடாமலோ, இனாமாக வருவதுதானே என்று இறைச்சிக்கடைக்கு விற்றுவிடாமலோ கண்காணிக்க வேண்டும். மாட்டுத்தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

கறவை மாடுகளின் தீவனப் பிரச்னைகள் எவை என்பது எனக்குத் தெரியும். குஜராத்திலிருந்து வந்த காங்கிரஜ் கறவை மாடு என்னிடம் உள்ளது. நல்லவேளையாக எனக்கு மருத்துவச்செலவு இல்லை. ஒரு கட்டு வைக்கோல் ரூ. 60. ஒரு கிலோ கடலைப்பிண்ணாக்கு ரூ. 34. கலப்படப் பிண்ணாக்கு ரூ. 28. 1 கிலோ தவிடு ரூ. 7. பி.ட்டி விதைகளுக்குப் பயந்து பருத்திக் கொட்டைத் தீனியைக் கொடுப்பது இல்லை.

பல ஊர்களில் கால்நடை அரசு மருந்தகங்கள் இருப்பினும் மருத்துவர்கள்-மருத்துவ உதவியாளர்கள் நல்ல மருந்து ஊசிபோட நாமிருக்கும் இடத்துக்கே வந்துபோக ரூ. 200 வரை வாங்குகிறார்கள். மேய்ச்சல் நிலமே அரிதாகிவிட்டது.

சராசரியாக ஐந்து லிட்டர் பால் கறக்கும் பசுமாட்டுக்கு வழங்க வேண்டிய தீவன அளவுக்கும், ஒரு கிராமத்தில் பாலுக்குக் கிடைக்கக்கூடிய விலைக்கும் கணக்குப் பார்த்தால் மிஞ்சுவது சாணியும் கோமயமும்தான். கறவைப்பசு திடகாத்திரமாய் இயங்கப் போதிய அளவில் புரதச்சத்து வழங்க வேண்டும். ஆனால், இந்தியாவிலிருந்து பிண்ணாக்கு ஏற்றுமதியாகி சீனா, வியத்நாம், தென்கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மாடுகளுக்கு வழங்கப்படுகிறது.

2009-10-ம் ஆண்டில் 3.3 லட்சம் டன்களாக இருந்த பிண்ணாக்கு ஏற்றுமதி 2010-11-ல் 7.04 லட்சம் டன்களாக உயர்ந்துவிட்டதாம். பிண்ணாக்கு ஏற்றுமதிக்குத் தடைவிதித்தால் நம் நாட்டில் தீவன விலை குறைந்து நமது கறவை மாடுகள் கூடுதல் பால் தரும். மாட்டில் பால் கறவை குறையும் காரணமே புரதச்சத்துப் பற்றாக்குறை.

உணவு விலை அதிகரித்தால் உணவு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க மனிதர்கள் குரல் எழுப்புவதைப்போல் "பிண்ணாக்கு ஏற்றுமதியைத் தடைசெய்' என்று வாயில்லா ஜீவன்களால் குரல் கொடுக்க முடியாது.

கறவை மாடுகள் இலவசமாக வாங்கிக் கொடுப்பது சரி. அதேசமயம் தீவனங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது மாட்டுத் தீவனங்களுக்கு மானியம் வழங்கினால்தான் மாட்டுக்கார வேலன் மகிழ்ந்து தொடர்ந்து பால்விற்றுப் பிழைத்துக் கொள்வான்.

கால்நடை நிர்வாகத்தில் கறவை மாடுகளைவிட ஆடு வளர்ப்பு லாபமான தொழில்தான். ஆட்டுக்கார அலமேலுக்களுக்கு அ.தி.மு.க. வழங்கப்போவது வெள்ளாடா? செம்மறி ஆடா? வெள்ளாடு நிறையக் குட்டி போடும். நாட்டு ஆடுகள் நல்ல லாபம் தரும்.

இந்தியாவில் சுமார் ஒரு கோடி கிராமக் குடும்பங்களுக்கு "ஆடு மேய்த்தல்' ஜீவாதாரமான தொழில். குறிப்பாக, மலைப்பகுதி ஆதிவாசிகளுக்கு இலவசமாக ஆடு வழங்குவது அவர்களின் வாங்கும் சக்தியையும் வறுமையையும் விரட்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பல லட்சக்கணக்கான குடும்பங்களை ஆடுகள் வாழ வைக்கின்றன.

2007 கால்நடை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. அதிகமான ஆடுகள் ராஜஸ்தானில் (2.15 கோடி) உண்டு. இது மொத்தத்தொகையில் 14 சதவீதம். தமிழ்நாட்டில் 7 சதவீதமே. அதாவது 1.07 கோடி ஆடுகள். ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம் 10 சதவீதம்.

மூன்றாவது நிலையில் பிகார், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் நான்கும் சமநிலை. அதாவது 1.07 கோடி ஆடுகள் உண்டு. இன்று கிராமத்தில் பலர் விவசாயத்தை விட்டுவிட்டு முழுமூச்சாக ஆடு வளர்ப்பில் இறங்கியுள்ளனர். ஏனெனில், ஆட்டிறைச்சி ஏற்றுமதி தேவைதான். இரண்டாவதாக, ஆட்டுக்குரிய தீவனம் மேய்ச்சலும், மரத்தழைகளுமே. ஆடு வளர்ப்பதால்கூடவே மரம் வளர்ப்பும் விரிவாகும். ஏராளமாக மரங்களை வளர்ப்பதால் சுற்றுச்சூழல் மேம்படும். பூமியில் உஷ்ணமும் குறையும்.

இறைச்சி ஏற்றுமதியில் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் மாட்டு இறைச்சியை விரும்புவதுபோல் மேற்கு ஆசிய நாடுகளில் ஆட்டிறைச்சி விரும்பப்படுகிறது.

குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி கிலோ ரூ. 300. செம்மறி ஆட்டிறைச்சி கிலோ ரூ. 200 என்றும் உள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் 100 சதவீத விலை உயர்வுக்கு உரிய காரணம் ஏற்றுமதி.

ஆட்டிறைச்சி ஏற்றுமதியால் பலனடைந்தவர்கள் ஏழை எளியவர்களே. ஆட்டின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஆட்டின் தொகையும் இறைச்சி உற்பத்தியும் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ரூ. 700, ரூ. 800 விற்ற ஆடு, இன்று ரூ. 1,500 முதல் ரூ. 1,600. கறவை மாடு ரூ. 20,000 என்றால் பெரிய ஆடு ரூ. 2,000.

இலவசப் பொருள்களில் மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவை உயிரற்றவை. ஆடும் மாடும் உயிருள்ளவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கம் தருபவை. வளர்ச்சி என்றால் சாலை போடுவது, கப்பல் கட்டுவது, தொழிற்சாலை கட்டுவதுதான். வளர்ச்சி என்றாலும் அதனால் பயன் பெறக்கூடியவர்கள் பணக்கார முதலாளிகளே. ஆனால் "ஆடு தருகிறேன்', "மாடு தருகிறேன்' என்று கூறுவது கிராம வளர்ச்சியில் உள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. தினம் தினம் கார்ப்பரேட்டுகளுக்கு வருமான வரி, எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி ஆகியவற்றில் வரிச்சலுகை ரூ. 250 கோடி வழங்கி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தைப் பல லட்சம் கோடிக்கு உயர்த்தும் மத்திய கூட்டணி அரசின், வளர்ச்சி அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது, நிஜமாகவே கிராமங்களில் வாழும் ஏழை எளியவர்களான மாட்டுக்கார வேலர்களையும், ஆட்டுக்கார அலமேலுக்களையும் முன்னேற்றி, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பாராட்டலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.