உழவுத்தொழிலில் உயிர்ப்பலி ஏன்?
மிகவும் பின்தங்கியுள்ள அவுரங்காபாதில் (மகாராஷ்டிர மாநிலம்) கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாளில் ஸ்டேட் வங்கி நடத்திய "கடன் திருவிழா'வில் (லோன் மேளா) 150 டாடா மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்கப்பட்டன. கூட்டத


மிகவும் பின்தங்கியுள்ள அவுரங்காபாதில் (மகாராஷ்டிர மாநிலம்) கடந்த அக்டோபர் மாதம் ஒரே நாளில் ஸ்டேட் வங்கி நடத்திய "கடன் திருவிழா'வில் (லோன் மேளா) 150 டாடா மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்கப்பட்டன. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றிய அரசியல்வாதிகளும், ஸ்டேட் வங்கி அதிகாரிகளும், ""இந்தியக் கிராமங்கள் எழுச்சி பெற்றுவிட்டன'' என்று கூறினார்கள். 7 சதவீத வட்டியில் காருக்குக் கடன் உண்டு. 12 சதவீத வட்டியில் டிராக்டர் எடுத்துச் செல்லலாம்.
ஒரு விவசாயி ஸ்டேட் வங்கியை அணுகி, ""நான் 5 ஏக்கரில் கரும்புப் பயிர் வைத்துள்ளேன் அல்லது துவரை போட்டுள்ளேன். 1 லட்ச ரூபாய் கடன் கொடுங்கள்'' என்று கேட்டால், ""இதற்கெல்லாம் வேளாண்மைத் துறையில் திட்டங்கள் உண்டு. இங்கு பயிர்க்கடன் வழங்க நிறைய சட்டதிட்ட நடைமுறை உண்டு'' என்று தட்டிக்கழித்துவிட்டு, ""செக்யூரிட்டி அடமானம் இல்லாமல், டிராக்டர் வழங்கக் கடன் தருகிறேன். ரூ. 1 லட்சம் என்ன 10 லட்சம் தருகிறேன்'' என்பார். 10 லட்ச ரூபாய்க்கு அந்த விவசாயி டிராக்டர் வாங்கி, 5 லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுவார். 12 சதவீத வட்டி கட்ட முடியாமல் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி, வங்கிக்கடனை அடைப்பார்.
கந்து வட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் பஞ்சாபின் கதை, இனி மகாராஷ்டிரத்திலும் இதர மாநிலங்களிலும் தொடங்கலாம். ரூ. 10 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை 5 லட்சத்துக்கு விற்கவேண்டிய நெருக்கடி பழைய கடன். ஒரு கடனை அடைக்க மறுகடன். மறுகடனை அடைக்க மறுகடன் அல்லது தற்கொலை.
மாநிலத்துக்கு மாநிலம் ஒரு விவசாயி கடன்படக்கூடிய சூழ்நிலை மாறுபடலாம். தற்கொலைக் காரணமும் வேறுபடலாம். 1991-க்குப்பின் கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் விவசாயிகள் மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றன.
1991-லிருந்து 2001-க்கு வரும்போது 26 சதவீதம் விவசாயிகள் கடனாளிகளாய் இருந்த நிலை, இன்று 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காகக் கடனாளி விவசாயிகள் பெருகியுள்ளனர். அரசு வழங்கும் இப்புள்ளி விவரம் குறைவான மதிப்பீடுதான். விவசாயிகள் கடன்காரராவதற்குக் காரணம், அரசின் விவசாயக் கொள்கையே. பணவீக்கம் காரணமாக இடுபொருள் செலவு கூடுகிறது. நிர்ணயமாகும் அங்காடி விலை குறைவாயுள்ளது. வணிகப் பயிர்களை எடுத்துக்கொண்டால் அறுவடை சமயம் விலைகளை விழச்செய்யும் தந்திரங்களை வணிகர்கள், பெருமுதலாளிகள் கையாள்கின்றனர்.
குறைந்த வட்டியில் கடன் பெறமுடியாத விவசாயிகள், கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கித் திருப்பித்தர வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மகளிர் சுயஉதவிக்குழு, "மைக்ரோ ஃபைனான்ஸ்' என்ற பெயரில் கந்துவட்டிக்காரர்களைப் பெருக்கியுள்ளோம். முன்பெல்லாம் கந்துவட்டித் தொழிலில் பெண்கள் பங்கேற்பு இல்லை. இன்று பெண்கள் இத்தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
எனது விவசாய நண்பர் ஒரு குத்தகை விவசாயி. அவருக்கு மிக அவசரமாக ரூ. 20 ஆயிரம் தேவைப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழுத் தலைவி ஒருவரை அணுகினார். ""ஐயா எங்கிட்ட பணம் இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவரிடம் பேசி வாங்கித் தருகிறேன். அவரு என்ன மாதிரி நல்லவங்க இல்லை. ரொம்பப் பொல்லாதவரு. வட்டி கரெக்டா வரலைன்னா அடிச்சு உதைப்பாங்க'' என்று அத்தலைவி கூறி, 4 வட்டிக்கு ரூ.20 ஆயிரம் நண்பருக்கு வழங்கினார். அதாவது வட்டி 48 சதவீதம்.
ஓராண்டுக்குப் பிறகு நண்பரைச் சந்தித்து, ""கடனை அடைத்து விட்டீர்களா?'' என்று கேட்டேன். ""ரூ.30 ஆயிரம் வரை வட்டி அசல் கொடுத்துவிட்டாலும், பத்திரத்தைத் திருப்பித்தர மாட்டேங்கராங்க. மேலும், ரூ. 10 ஆயிரம் கட்டணுமாம். ரூ.5 ஆயிரத்துக்குப் பேசி முடிக்கலாம்'' என்று கட்டைப் பஞ்சாயத்து செய்யும் கட்சிக்காரர் சொல்வதாகக் கூறுகிறார். அந்த அம்மாவுக்கு சாதகமாகக் கட்டைப் பஞ்சாயத்து செய்ய உள்ளூர் பிரபலங்கள் அலைகின்றனர். தமிழ்நாட்டு கிராமங்களின் நிஜமான நடப்பு இதுதான். வங்கிப் பணத்தால் விவசாயம் எழுச்சி பெறவில்லை. கந்துவட்டி எழுச்சிபெற்றுள்ளது.
விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளிவிவரங்களை யார் தருகிறார்கள்? மத்திய உள்துறை அமைச்சகத்தில் என்.சி.ஆர்.பி. அதாவது, "நேஷனல் கிரைம் ரெகார்டு பீரோ' என்று ஒரு பிரிவு உள்ளது. தேசியக் குற்றப்பிரிவு அரங்கம் என்று தமிழில் சொல்வோம்.
1995-லிருந்து இந்த அரங்கம் விவசாயிகளின் தற்கொலைகளைப் பதிவு செய்து வந்தாலும், 1997-லிருந்து தகவல்கள் வழங்கப்படுகின்றன. இந்த அரங்கம் வழங்கும் தகவல்கள் குறைந்த மதிப்பீடு என்றாலும், 2009-ல் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிராமங்களின் புது எழுச்சி என்று "கடன்விழா' கொண்டாடும் இந்தியாவுக்குப் பரிசு "விவசாயிகளின் தற்கொலைகள்'.
தமிழ்நாட்டு சமாசாரம் எதுவெனில், 2008 வரை விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிவரங்களைத் தேசியக் குற்றப்பிரிவு அரங்கத்துக்கு அனுப்பவில்லையாம். இவ்வாறே ராஜஸ்தானும் அனுப்பவில்லை. 2009-ல் இந்த இரண்டு மாநிலங்களிலும் 1,900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவல், குறைவான மதிப்பீடு. ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகள் பதிவாகவில்லை என்பதும் உண்மை. அரசுத் தரப்பு புள்ளிவிவரங்களின்படி விவசாயிகளின் தற்கொலை 1997-லிருந்து இன்றுவரை 2,16,500 என்பதாக உள்ளது.
2004-க்குப்பின் இன்றுவரை ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 1994-க்குப் பின் விட்டுப்போன விவரங்கள் பலவற்றைச் சேர்த்துக் கூட்டிப்பார்த்தால், 1995 லிருந்து 2010 வரை கடந்த 15 ஆண்டுகளில் 2,56,949 என்பது அரசுப் புள்ளிவிவரம்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் ஆண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது மேற்படி புள்ளிவிவரத்தில் உள்ள குறைபாடு. இதே அளவு பெண்களின் தற்கொலைகளும் இருக்கலாம்.
கந்துவட்டித் தொழிலில் பெண்களும் வங்கிப்பணத்தை விளையாடத் தொடங்கிவிட்டதால், பெண்களிடம் பெண்களே விவசாயத்துக்குக் கடன் வாங்கி வட்டியில் மூழ்கிவிட்ட கதைகள் வெளிவரவில்லை. சுமார் 2.5 லட்சம் தற்கொலை என்றால், அதனால் பாதிக்கப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் சோகம் தொடர்கிறது.
அப்பா கடன் வாங்கி அடைக்க முடியாமல் இறந்துவிட்ட சூழ்நிலையில், அப்பொறுப்பு மகனுக்கோ, மனைவிக்கோ மாற்றப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் எந்த ரத்தப் புரட்சியும் இல்லாமல், தன்னைத்தானே ஒருவன் மாய்த்துக் கொள்ளும் துயரங்கள் இந்திய தேசத்துக்கு மாறாத களங்கம் அல்லவா? இந்த நிலை சுதந்திர இந்தியாவுக்கு மாறாத அவமானம் அன்றோ!
மாநில வாரியாக விவசாயிகளின் தற்கொலைப் புள்ளி விவரங்களை அலசிப்பார்த்தால், இன்னமும் மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா விவசாயிகளே முதலிடத்தில் உள்ளனர். மொத்தத் தற்கொலைகளில் 3-ல் 2 பங்கு மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகும்.
தமிழ்நாட்டில் 2008-ல் 512 விவசாயிகளின் தற்கொலை 2009-ல் 1060 ஆக உயர்ந்துள்ளது. தற்கொலைகளின் விகிதாசார வளர்ச்சி மேற்கண்ட 5 மாநிலங்களில் ஒரே சீராக உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளின் தற்கொலைகள் குறைந்து வருகிறதாம். தமிழ்நாட்டில் உயர்ந்து வருகிறதாம். எனினும், 2009-ல் தமிழ்நாடு 7-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்நாட்டில் கந்துவட்டித் தொழிலின் பிரம்மாண்ட வளர்ச்சியும் ஒரு காரணம்.
உழவுத்தொழில் உயிர்ப்பலிகளுக்கு நிபுணர்களால் கூறப்படும் மற்றொரு காரணம் குத்தகை விவசாயிகளின் துயரம். குத்தகை விவசாயிகளைப் பற்றிய ஆய்வு ருசிகரமான விஷயமும்கூட. குத்தகை விவசாயிகள் யார்? இன்றைய நிலை நேற்றைய நிலையைவிட மோசம். நேற்றைய நிலையை நினைக்கும்போது மூப்பனார், மூப்பனாரின் தோப்பனார், பூண்டி வாண்டையார், குன்னியூர் அய்யர், கோட்டூர் அய்யங்கார், வலிவலம் தேசிகர், மன்னார்குடி மைனர், திருவாரூர் முதலியார் போன்றவர்களிடம் முன்பு இருந்த சொத்துகள் இப்போது இல்லை. நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது, சொத்துகளை முடிந்தவரை பிரித்து எழுதினார்கள். குத்தகையாளர், குடிக்காணிகளுக்கு விற்றுவிட்டார்கள்.
பூண்டி வாண்டையார் புஷ்பம் கல்லூரியை மாபெரும் நிலப்பரப்பில் நிறுவி, இன்று அது பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டது. திருவாரூர் முதலியார் தொழிலதிபரானார். குன்னியூர், கோட்டூர், மன்னார்குடி வாரிசுகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். என்று உயர்ந்த படிப்புக்குப்போய் நகரவாசிகளாக இடம் பெயர்ந்துவிட்டனர்.
மேற்படி நிலப்பிரபுக்களிடம் பணிபுரிந்தவர்கள், குடிக்காணிகள் இன்று குட்டி நிலப்பிரபுக்களாகி விட்டனர். பழைய நிலப்பிரபுக்களுக்கு மணலி கந்தசாமியும், பி.ராமமூர்த்தியும் சிம்ம சொப்பனமாயிருந்தனர். இன்றுள்ள குட்டி நிலப்பிரபுக்களுக்கு கம்யூனிஸ்டுகளைக் கண்டு பயமே இல்லை. குத்தகை நிலங்களை இவர்கள் பதிவு செய்வதே இல்லை. குத்தகையே வாய்ப்பேச்சுதான். செக்யூரிட்டி அடிப்படையில் குத்தகை விவசாயிகளுக்குக் கடன், குறைந்த வட்டியில் வங்கிக்கடன் கிடைப்பது இல்லை. எப்படிப்பட்ட வாய்ப்பேச்சு என்றால், இது இரண்டு விதமாக உள்ளது.
குத்தகைக்கு நிலம் வாங்கிப் பயிரிடுவோர், மொத்தமாக ஒரு விலை பேசி நிலச் சொந்தக்காரர்களுக்கு முன்பணம் வழங்கிவிட்டு ஓராண்டு, இரண்டு ஆண்டு அனுபவித்தல். லாப-நஷ்டம் குத்தகைதாரர்களையே சாரும். தமிழ்நாட்டில் இப்படித்தான் அதிகம் நிகழ்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் விளைச்சலில் 50 சதம் செலவு குத்தகையாளர்களுடையது.
தேசிய மாதிரி ஆய்வு கணித்த புள்ளிவிவர அடிப்படையில், பதிவு இல்லாமல் குத்தகைதாரர்கள் செய்யும் சாகுபடி நிலங்கள் மாநிலத்துக்கு மாநிலம் 10 முதல் 30 சதவீதம் என்று வேறுபடுவதாகவும், குத்தகைக்கு நிலம் வாங்கி சாகுபடி செய்வோரில் 36 சதவீதம் நிலமற்ற ஏழைகள்.
சுமார் 48 சதவீதம் ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழிகள். தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளில் குத்தகை விவசாயிகளும் கணிசமாக இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. இந்தப் பிரிவினர்-இந்த ஒண்ணேகால் ஏக்கர் விவசாயிகளில் கணிசமானவர், கந்து வட்டிக்குக் கடன்வாங்கி விவசாயம் செய்கிறார்கள்.
இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் - உழைக்கும் உழவர் வர்க்கம் விரும்பும் விடுதலை கந்துவட்டிக்கடன். கடனே வாங்காமல் சொந்தமாக விவசாயம் செய்பவர்களே நஷ்டப்படும்போது, உழைப்பைப் பணயம் வைத்துக் கந்துவட்டிக்குக் கடன்வாங்கி அவன் எப்போது தலை நிமிர்வான்? அப்படி நிமிரமுடியாமல் தொங்கிப்போன விவசாயிகளின் தலைகள் இரண்டரை லட்சம். இதுதான் இந்தியாவா? பாரதமாதா வெட்கித் தலை குனிந்துவிட்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...