/

நீரில் வரைந்த நீர்க் கொள்கை

ஐந்தாண்டுகளுக்கு முன்பே சூழலியல் நிபுணர்களும் வானவியல் விஞ்ஞானிகளும் பூமி உஷ்ணமாதலினால் அதாவது தொழில் வளர்ச்சி தோற்றுவித்த குளோரோ புளுரோகார்பன் - நச்சுப்புகையால் தட்பவெப்பம் ஒரே சீராக இராமல் தடுமாறும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:53 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

ஐந்தாண்டுகளுக்கு முன்பே சூழலியல் நிபுணர்களும் வானவியல் விஞ்ஞானிகளும் பூமி உஷ்ணமாதலினால் அதாவது தொழில் வளர்ச்சி தோற்றுவித்த குளோரோ புளுரோகார்பன் - நச்சுப்புகையால் தட்பவெப்பம் ஒரே சீராக இராமல் தடுமாறும் என்றனர். திசைமாறித் தீவிரமழை பொழியும் என்றனர்.

 இன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம், பாகிஸ்தான் வெள்ளம், பரவலாக இந்திய வெள்ளம், மழையில் முழுகிய தில்லி, மும்பை, சென்னை நகரங்கள் எல்லாம் தடுமாறும் தட்பவெப்பத்தை எடுத்துக்காட்டுவதுடன் நிபுணர்களின் எச்சரிக்கைகள் எதுவுமே பொய்யல்ல என்றும் தெளிவுபடுத்துகிறது.

 தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தீபாவளிக்கு முன்பே தொடங்கிய மழை, பொங்கல் கடந்தும் விடுவதாகத் தோன்றவில்லை. வளிமண்டலத்தில் கருமேகம், என்று விலகும் என்று புரியவில்லை. போதிய சூரிய ஒளி இல்லாமல் பயிர்களுக்குப் பனிப்பற்றும் வேர் அழுகலும் ஏற்பட்டுள்ளன. கால்நடைகளுக்குப் பலவித நோய்கள். மனிதர்களைப் பற்றிக்கேட்கவே வேண்டாம். மூக்கடைப்பு, காய்ச்சல், வெள்ளப்பகுதிகளில் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு. மகிழ்ச்சியடையக்கூடியவர்கள் மருத்துவர்களே.

 வடஇந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் மழைகொட்டித் தீர்த்துவிட்டது. சராசரி அளவைவிட 10 முதல் 100 சதவீதம் அதிகம்.

 உதாரணமாக, ஹரியாணா - 9 லட்சம் கியூசக் வெள்ளநீர் யமுனையில் வடிக்கப்பட்டு அபாய உயரத்தைத் தாண்டியதால் யமுனை நிறைந்து தில்லி மிதந்தது. யமுனை மட்டுமல்ல, சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, கோசி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி எல்லாமே அபாய அளவுக்கு மேல் ஆங்காங்கே கரை உடைந்து ஊரும் பயிரும் வெள்ளம். மழையே பெய்யாத ராஜஸ்தான், குஜராத்திலும் நர்மதை, தபதி பொங்கியது. ஊரை அழிக்கும் ஊழிவெள்ளம் இதுவரை கண்டிராத புதுமை.

 இப்படி ஒரு பேய் மழையா? இதன் காரணம் என்ன? என்று யோசிப்பதைவிட இவ்வாறு வானம் வழங்கிய மழையை உகந்தவாறு நாம் ஏன் வரவேற்கத் தவறினோம் என்று யோசிப்பது நன்று. பேய் மழையே என்றாலும், பெரும் வெள்ளம் என்றாலும் அவை எல்லாமே வானம் வழங்கிய கொடைதான். நதிவெள்ளத்தை உகந்தவாறு தக்க வைத்துக்கொள்வதில் உள்ள இடர்கள் எவை?

 நாம் கட்டியுள்ள அணைகளிலும், மாபெரும் ஏரி, நீர்த்தேக்கங்களிலும் தூர்படிந்து, கொள்ளும் அளவு குறைகிறது.

 வனப்பகுதிகளிலும் நதிகளின் உற்பத்தி இடங்களிலும் மரங்கள் வெட்டப்படுவதாலும், மேய்ச்சல் நிலம் குறைவதாலும், புற்கள் இல்லாததாலும் மண்அரிப்பு ஏற்படுவதாலும் நதிகள் கொண்டுவரும் தூர் மண், நீர்த்தேக்கங்களின் கொள்ளளவைக் குறைக்கிறது.

 சுற்றுச்சூழல் அமைச்சரக ஒப்புதல் அதாவது "கிளியரன்ஸ்' இல்லாமல் அரசுத்துறையும் தனியார் துறை - தனி நபர்கள் ஏரி, குளம், நதி வடிகால் பகுதிகளில் புதிய புதிய கட்டடங்கள் கட்டுவது.

 ஒவ்வோர் ஊரிலும் ஏரி, குளங்கள் உள்ளன. கிராமப்பகுதிகளில் ஏரிகளை ஆக்கிரமித்துப் பயிர்கள் எழுப்பப்படுகின்றன. நகரப்பகுதிகளில் குளங்கள் குப்பைத்தொட்டிகளாகவும், ஏரிக்கரை ஏரிப்படுகைகளைப் புதிய நகர்களாகப் பெயர் சூட்டி ஒரு பிள்ளையார் கோயில், மசூதி, மாதா கோயில் கட்டி ஆக்கிரமிக்கப்படுகின்றன. நல்ல செயல்களுக்குத்தான் தெய்வம் துணை செய்யும் என்ற உண்மையை உணர வேண்டும்.

 தேவைப்படும் இடங்களில் புதிய குளங்களை வெட்டியும், பழைய குளங்களில் உள்ள குப்பைகளை அகற்றியும் தூய்மைப்படுத்தும் பணி புறக்கணிக்கப்படுகிறது. வடிகால் கால்வாய்கள் தடைப்படாமல் அடுத்தடுத்த குளம் - ஏரிகளுக்குச் செல்ல வழிசெய்ய வேண்டும்.

 மேற்கூறிய வழிகளில் மழையை வரவேற்க வேண்டும். இவ்வாறு வரவேற்றால் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். வறண்ட பகுதிகள் வளமாகும். நதி, கால்வாய் உற்பத்தி இடங்களிலும் வனப்பகுதிகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் வளம் பெறும். கடற்கரைச் சூழல் வளம் பெறும். நதிக்கரைகளில் சட்டத்துக்குப் புறம்பாகச் சுரங்கம் தோண்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மழை வெள்ளமோ - நதி வெள்ளமோ - பேய் வெள்ளமோ எவையாயினும் தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. இந்தியாவில் நீரியல் நிபுணர்களுக்கும் பொறியாளர்களுக்கும் பஞ்சமா என்ன?

 1954-ல் இந்திய நதிகளில் வெள்ளம் ஏற்பட்டபோது நேரு அமைச்சரவையில் பல கமிட்டிகளை நிறுவிப் பல பிரச்னைகளை விவாதித்துப் பல நடவடிக்கைகள் ஆமைவேகத்தில் எடுக்கப்பட்டன.

 1957-ல் வெள்ள நிர்வாகத்துக்கு ஒரு மேல்நிலைக் கமிட்டி நிறுவப்பட்டது. 1964-ல் வெள்ளத்தடுப்பு அமைச்சரவைக் கமிட்டி நிறுவப்பட்டது. 1972-ல் வெள்ளத்தடுப்புடன் நிவாரணக் கமிட்டி நிறுவப்பட்டது. ஐந்தாண்டுத் திட்டங்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைக்குழு 1978-ல் நிறுவப்பட்டது. "ராஷ்ட்ரீய பாஹ் ஆயோக்' 1980-ல் உருவானது. தேசிய நீர்க்கொள்கை 1987-ல் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீராதார வளர்ச்சித்திட்ட தேசியக்கமிஷன் 1996-ல் அறிவிக்கப்பட்டது.

 இவ்வளவு திட்டங்கள் - நீர் நிர்வாக அமைப்புகள் இருந்தும் இன்னமும் இந்தியா கடலில் கலக்கும் முன்பே மழைவெள்ளம் மாசாவதையும், வீணாவதையும் தடுக்க முடியவில்லை. அதிக மழையால் நீர்த்தேக்கங்கள் தூர்படிந்து அதிக அளவில் மாசும் சேர்ந்து அதிக அளவு நீர் கடலில் கலந்து அதிக அளவில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதுதான் கண்ட பலன்.

 இந்த நாட்டின் தேசிய நீர்க்கொள்கை காகிதத்திட்டமாக ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்கப்பட்டாலும் நீரில் எழுதப்பட்ட எழுத்துகளாக உள்ளன. விவசாயிகளுக்கும் பாமரக் குடிமக்களுக்கும் எஞ்சியுள்ள தண்ணீர் அவர்கள் விடும் கண்ணீர்தான்.

 ஆட்சியாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களில் நகரக்குடிநீர் வழங்கலில் உள்ள முறைகேடுகள் களையப்பட வேண்டும். சுகாதாரமான குடிநீர், சமச்சீர் விநியோகம், கழிவுநீர் கலக்காத தடுப்பு நடவடிக்கை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 வெள்ளம் இல்லாத காலங்களில் ஜீவநதிகளிலும் சரி, ஜீவனில்லாத காட்டாறுகளிலும் சரி, தொழில்துறைக் கசிவுகள் - தோல், சாயப்பட்டறை - சுரங்கம் - ரசாயன உற்பத்தித் தொழில் வழங்குபவை கலந்து மண்படுகை விஷத்தால் உறைந்த நிலையில் வெள்ளம் வந்தகாலத்தில் கீழே இறங்கும் நீர் மாசாகி, அம் மாசுநீர் ஊற்று நீராக உள்ளே சேமிக்கப்பட்டு, அதுவே குடிநீராக மாறுகிறது. அதுவே விவசாயத்துக்கும் பயனாகிறது. நதிகளில் மாசு கலப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 மேல்நிலைக் கிணறுகளிலும், ஏரி, குளங்களிலும் நீர் நிரம்பினால்தான் அடிநிலை ஊற்றுக்கும் "ரிசார்ஜ்' கிட்டும். இன்று விவசாயம், குடிநீர் எல்லாமே நிலத்தடி நீர்மட்டத்திலிருந்து ஆழ்துளைக் குழாய் மூலமே வழங்கப்படுவதால் பூமியில் விழும் மழைநீர் பூமிக்குள் இறங்கும் அளவில் அடர்ந்த புல்வெளி, மரங்கள் ஒவ்வோர் ஊரிலும் உருவாக வேண்டும்.

 இந்தியாவின் நீர்த்தேவைக் கணக்கு நம்மைத் தலைசுற்றவைக்கும். வரவு இல்லாமல் செலவாகும் பொருளாகி வருவது தண்ணீர். மழைநீர்தான் வரவு. இதைப் பற்றிக்கொண்டு பற்றில் வைக்காமல் ஆழ்துளைக் கிணறு தோண்டி நீரைச் செலவழிக்கிறோம்.

 நீரின் தேவை குடிநீர் மற்றும் விவசாயம் மட்டுமே என்பது தப்புக்கணக்கு.

 இந்தியாவின் முதல் முக்கிய ஆறு தொழில்களான இரும்பு எஃகு, சிமெண்ட், காகிதம், மின்உற்பத்தி, யூரியா, அலுமினியம் ஆகியவற்றின் ஆண்டுத்தேவை 41,538 மில்லியன் கியூபிக் மீட்டர். இந்த அளவு நீர் 11 கோடி மக்களின் குடிநீர்த் தேவைக்கு நிகரானது.

 இவைதவிர, நூற்பு ஆலை, சாயத்தொழில், தோல், மருந்து உற்பத்தி போன்ற இதர தொழில்களின் நீர்த்தேவை எத்தனை மில்லியன் கியூபிக் மீட்டர்களோ! நதி வெள்ளத்தைக் கடலில் இறக்கவிட்டு விட்டு ஆழ்துளைக் கிணறுகளைக் கொண்டு எவ்வளவு காலம் ஓட்டுவார்கள்?

 மேட்டூர் அணை நிரம்பாதபோது கர்நாடகத்தைக் குறை கூறுவோம். மேட்டூர் அணை நிரம்பிய பின்னர் காவிரியில் வெள்ளம். காவிரியின் எல்லாக் கிளை நதிகளும் நிரம்பி ஓடிக் கடலில் விழும்போது கர்நாடகத்தைக் குறை கூற முடியுமா? காட்டன்துரை மேட்டூர் அணையைக் கட்டாத காலத்தில் சோழநாடு சோறுடைத்து என்ற பெருமையை எப்படிப் பெற்றது?

 மேட்டூர் அணை கட்டப்படாத காலத்தில் கல்லணை வழியே திருப்பிவிடப்பட்ட காவிரியின் கிளை நதிகளும் வெண்ணாற்றின் கிளை நதிகளும் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களுக்குச் சென்றடையுமாறு ஏராளமான கால்வாய்கள் வெட்டப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டது.

 ஏரி, குளங்களைக் குப்பைக் கிடங்காகவும், புதிய நகர்களாகவும், சமத்துவபுரங்களாகவும் மாற்றியது யார் குற்றம்?

 மேட்டுப் பகுதியான கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மக்கள் என்ன செய்வார்கள்? இங்கு பெய்யும் மழையும் சுற்றிவளைத்துக் காவிரி கழிமுகப் பகுதிக்குத்தான் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 தமிழ்நாட்டின் மேட்டுப்பகுதி தக்காணப் பீடபூமியின் தென்பகுதி. இதே தக்காணப் பீடபூமியின் தொடக்கமான மராட்டிய மாநிலத்தில் அகமத் நகர் மாவட்டக் கிராமங்களில் சராசரி மழைப்பொழிவு தென்பகுதியைவிடக் குறைவு என்றாலும் வனத்துறை - பொதுப்பணித்துறை - பஞ்சாயத்து ஒருங்கிணைந்து செயல்பட்டு மழைநீரை மண்ணுக்குள் இறக்கி வளம் பெறுகின்றனர்.

 அண்ணா ஹசாரே உருவாக்கிய ராலிகான்சித்தி கிராமத்தை உலகமே வியந்து நோக்குகிறது. இது பழைய கதை.

 ராலிகான்சித்தியை உதாரணமாக வைத்து உள்ளூர் மக்கள் ஹிவரே பாசார் என்ற வறண்ட கிராமத்தை வளமாக்கியுள்ளனர். மழைநீர் சேமிப்பில் மராட்டிய மாநிலத்தில் மாபெரும் புரட்சி நிகழ்ந்து வருகிறது. குறைந்தபட்சம் தமிழக அரசு ஒரு குழு அமைத்து ராலிகான்சித்தி, ஹிவரே பாசார் சென்று அவற்றைப்போல் ஒன்றை முயற்சிக்க வேண்டும். நீர் சேமிப்பு செய்ய வேண்டிய பூமியில் மனைக்கட்டுகளும், மானாவாரி பூமிகளை ஆக்கிரமித்து ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா என்றெல்லாம் கூறி ஏமாற்ற வேண்டாம்.

 இப்படி வழங்குவதைவிட கிராம ஏழைகளுக்குப் பல அடுக்கு மாடி மாளிகைகள் கட்டி ஃப்ளாட் வழங்கினால் பூமி மிச்சமாகுமே. தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால் நீர்க்கொள்கையைத் தண்ணீரில் எழுதிக் கடலுக்கு அனுப்பாமல் ராலிகான்சித்தி, ஹிவரே பாசார்போல் நீர்க்கொள்கையை மண்ணில் எழுதி பூமிக்குள் மழைநீரைச் சேமிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.