முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பயோடைவர்சிட்டி துறையில் ஒரு மகா கொள்ளை!

கடந்து சென்ற 2010 வருத்தப்பட வேண்டிய ஆண்டு. நல்லவை எதுவுமே நினைவுக்கு வரவில்லை. பொய், பித்தலாட்டம், சூது-வாது, பகல் கொள்ளை, இரவுக்கொள்ளை, ஆபாச விடியோ, பலாத்காரம், ஏமாளிகளை ஏய்த்துப் பறிக்கும் காவல் நி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:04 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

கடந்து சென்ற 2010 வருத்தப்பட வேண்டிய ஆண்டு. நல்லவை எதுவுமே நினைவுக்கு வரவில்லை. பொய், பித்தலாட்டம், சூது-வாது, பகல் கொள்ளை, இரவுக்கொள்ளை, ஆபாச விடியோ, பலாத்காரம், ஏமாளிகளை ஏய்த்துப் பறிக்கும் காவல் நிலையம், கட்டைப்பஞ்சாயத்து, தீ, வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு, இலங்கையில் தமிழர் படுகொலை போன்றவை ஒருபக்கம். கிரிமினல்களும், கிரிமினல்களைக் கட்டியாளும் அரசியல்வாதிகளும், ஆளும் இந்திய ஜனநாயக ராஜ்ஜியத்தில் நாம் என்னதான் எதிர்பார்க்க முடியும்?

நம்மை ஆட்சிசெய்யும் அமைச்சர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன. ஊழல்களில் உயர்ந்துவிட்டனர். வன்முறையற்ற ஊழல், ரத்தம் சிந்தாத ஊழல் எல்லாமே ரத்தம் சிந்திய தியாகிகள் வாங்கித்தந்த சுதந்திர இந்தியாவுக்குக் கிட்டிய பரிசு. 2ஜி அலைக்கற்றை ஊழல், தொலைபேசிப் பேச்சுகள் மூலமே வெளிச்சத்துக்கு வந்தது. குற்றம்புரிந்தும் தண்டனை பெறாத கிரிமினல்களாக வாழும் அமைச்சர்களின் காலமிது. இது ஊழல் சீசன்.

ஊழல்களுக்கெல்லாம் ராஜாவாகத் திகழும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒன்றைப்போட்டுப் பின் எழுபத்திஆறைப் போட்டு பதின்மூன்று பூஜ்ஜியங்களைப் போட்டு அத்தனை ரூபாய்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று பொதுக்கணக்குத் தணிக்கை மேலதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதைப்போலவே பெரிய ஊழல் பயோடைவர்சிட்டி ஊழல். கண்ட்ரோலர் மற்றும்ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா இந்த ஊழலை அம்பலப்படுத்தினாலும் நஷ்டத்தை மதிப்பிடுவதில் சிரமம் உள்ளது.

 இன்று உலகில் லட்சங்கோடிகளாகப் பணம் புரளும் வியாபாரத்தில் ஒன்று தகவல் தொழில்நுட்பம். உலகளாவிய ஒலிபரப்பு - ஒளிபரப்பு, சின்ன கைப்பேசி, கம்ப்யூட்டர், டி.வி. எல்லாம் இதில் அடக்கம்.

ஒரு விவசாயிக்கு ரூ. 1,000 மானியம் வழங்க யோசிக்கிறது அரசு. ஆனால், 2ஜி விஷயத்தில் கைப்பேசி வியாபாரம் செய்யும் ரத்தன் டாட்டாவுக்கும் அம்பானிகளுக்கும் கோடி கோடியாக மானியம், நடுவில் கமிஷன், எல்லாம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இவ்வாறே லட்சங்கோடிகள் புரளும் வியாபாரம் பயோடெக்னாலஜி. இது முழுக்க முழுக்க அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்களின் ஏகபோகம். இத்தொழில் நுட்பத்துக்குரிய மூலப்பொருள் இந்தியாவிலிருந்து செல்கிறது. ""சட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொள்கையா?'' 2009-ம் ஆண்டிலேயே ஆடிட்டர் ஜெனரல் தேசிய பயோடைவர்சிட்டி அத்தாரிட்டியைத் தட்டிக் கேட்டுள்ளார். நீரா ராடியா, ஆடியோ சி.டி. மாதிரி கவனத்தைக் கவர்வதுபோல எதுவும் இல்லாததால் இச்செய்தி பத்தோடு பதினொன்று என்று மறைக்கப்பட்டுவிட்டது.

பயோடைவர்சிட்டி என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பி.எல். கவுதம் என்பவர். நேஷனல் பயோடைவர்சிட்டி அத்தாரிட்டியின் தலைவர்.

ஐ.நா. பயோடைவர்சிட்டி கன்வென்ஷன் 29-12-1993-ல் கையெழுத்தாகி நமது உயிரியல் செல்வங்கள் பாதுகாக்கப்பட உறுதி எடுத்தாலும்கூட 2003-ல்தான் தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் - அதாவது நேஷனல் பயோடைவர்சிட்டி அத்தாரிட்டி உருவானது.

இது உருவாகி ஆறு ஆண்டு கழிந்தாலும் நமது பல்லுயிர்ப் பெருக்கத்தை யாரும் சேதப்படுத்தாமல் அல்லது கொண்டுசெல்லாமல் தடுக்கும் விதிமுறைகளே உருவாக்கப்படவில்லை என்றும், பயோடைவர்சிட்டி ஆராய்ச்சி முடிவுகளோ, அறிவுசார்ந்த சொத்துரிமைப் பாதுகாப்புக் காப்புரிமை பற்றியோ எதுவும் அறிவிக்கப்படாதது ஏன் என்று ஆடிட்டர் ஜெனரல் கேட்டுள்ளார். குறைந்தபட்சம் கட்டுப்பாடு விதிமுறைகள்கூட வகுக்கப்படாமல் இயற்கைச் செல்வம் கொள்ளை போவதைக் கன்னத்தில் பளார் என்று அறைந்ததுபோல் கூறியுள்ள சி.ஏ.ஜி. தணிக்கை ஆணையம், இன்னமும் அழியும் நிலையில் உள்ள தாவரங்களின் குறிப்பாக அரிய மூலிகை விவரங்களின் பட்டியலைக்கூட முழுமையாக வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களிலிருந்து மட்டுமே விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதைவிட வெட்கக்கேடு, மக்கள் பல்லுயிர்ப் பெருக்கப் பதிவேடு என்று ஒப்புக்குக்கூட இல்லை.

பல்லுயிர்ப் பெருக்க வளம் அதாவது பயோலாஜிகல் ரிúஸôர்ஸ் புள்ளிவிவரங்களே இல்லை. இது என்ன அநியாயம்? சும்மா உட்கார்ந்து சம்பளமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களிடமிருந்து கிம்பளமும், கமிஷனும் வாங்க ஓர் ஆணையமா? சி.ஏ.ஜி. அறிக்கையைப் படித்தால் இப்படித்தான் ஒருவர் எண்ணுவார்.

பயோடைவர்சிட்டி, பயோடெக்னாலஜி என்றால் பி.ட்டி கத்தரிக்காய் மட்டுமே என்று எண்ணும் விவசாய விஞ்ஞானியை பயோ ஆணையத்தின் தலைவராக நியமித்தால் அவர் என்ன செய்வார்? மான்செண்டோ நிறுவனத்தை வளர்க்கும் அதே விவசாய விஞ்ஞானிகளே இந்தியாவின் அரிய மூலிகைகளையும், விலைமதிப்பற்ற நுண்ணுயிரிகளையும் (இங்கு ஆராயாமல்) ""அள்ளிக்கொண்டு போ'' என்று வழங்கி பன்னாட்டு பயோ, மருத்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழி அமைத்துக் கொடுத்துள்ளனர். இதற்காக தேசிய பயோடைவர்சிட்டி ஆணையத்தை சி.ஏ.ஜி. கண்டித்துள்ளார்.

நம்முடைய அறிவார்ந்த சொத்துரிமைகளை அந்நியர்களுக்கு வழங்குவது சட்டத்தை மீறிய செயல். இவ்வாறு சட்டமும் மீறப்பட்டுள்ளது. அப்படியே அந்நிய நாட்டில் காப்புரிமை செய்ய இங்கிருந்து கொண்டு செல்லப்படும் இயற்கை விளைபொருள்களைப் பரம்பரை பரம்பரையாகப் போற்றி வளர்த்த பழங்குடியினர்களுக்குச் சேரவேண்டிய பங்கை வழங்க அனைத்துலகக் காப்புரிமைச் சட்டம் வழிவகுத்திருந்தாலும்கூட இன்றுவரை எந்த விவசாயியோ, பழங்குடியோ பங்குபெற்றதாக எதுவும் கணக்கு இல்லையாம்!

இவர்கள் கணக்கு வழங்காவிட்டாலும் கொள்ளையடிக்கப்பட்ட இயற்கைச் செல்வங்களைஇந்திய மூலிகை ஏற்றுமதிக் கணக்கிலிருந்து அறிய முடியும்.

சொல்லப்போனால், பயோடைவர்சிட்டி போன்ற ஒரு சிக்கலான விஞ்ஞானத்தைக் கணிதம் பயின்ற தணிக்கைக்குழு கோடிட்டுக் காட்டியுள்ளது குறைவுதான் என்றும், பல்லுயிர்ப் பெருக்க பயோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சி.ஏ.ஜி.யைப் பொருத்தவரை அவர்கள் அறிந்தவற்றை மட்டுமே வெளியிட்டுள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்பவிருஷம் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த காஞ்சி கோஹ்லியும் மஷ்குரா பரீதியும் அவர்களுடன் கிரைன் அமைப்பைச் சேர்ந்த ஷாலினிபூட்டானியும் ஒருங்கிணைந்து, இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்க - உயிர்வளங்களைக் கையாள்வதில் உள்ள முறைகேடுகளைப் பற்றி ""ஆறு ஆண்டு பல்லுயிர்ப் பெருக்கச் சட்டம்'' என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் பல்லுயிர்க் கொள்ளை புட்டுப்புட்டு வைக்கப்பட்டுள்ளது.

தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்திடமிருந்து தகவல்களைப் பெறவே ஓராண்டுக்காலம் போராடிப் பின்னர் மையத் தகவல் கமிஷனுக்கு முறையிட்டுத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய முறைகேடுகளாவன:

""செப்டம்பர் 2008வரை பல்லுயிர்ப் பெருக்க பயோ வளத்தை எடுத்துச் செல்ல 315 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் எதையும் ஆற அமரச் சிந்திக்காமல் ஒரேநாள் கூட்டத்தில் 161 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவார்ந்த சொத்துரிமை அனுமதி 246 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அறிவார்ந்த சொத்துரிமை அனுமதி என்றால் தோற்ற மையத்தில் உள்ள பழங்குடி/ விவசாயிகளின் விவரம், பங்கு பற்றிய குறிப்பு பதிவாக வேண்டும். அப்படி எதுவுமே பதிவாகவில்லை...''

அறிவார்ந்த சொத்துரிமையில் பங்கு என்பதற்கு ஓர் உதாரணம் வருமாறு: தமிழ்நாட்டிலிருந்து சர்ப்பகந்தா, நித்தியகல்யாணி என்ற மூலிகைகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதியாகிறது.

ஜெர்மனியில் மேற்படி மூலிகைகளிலிருந்து இதய நோய் மருந்து தயாராகிறது. அந்த மருந்தைப் பிரித்தெடுக்கும் செய்முறைக்குக் காப்புரிமை அறிவார்ந்த சொத்துரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும்போது மூலப்பொருளை வளர்த்தவர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்பது பயோ கன்வென்ஷன் சட்டமாகும்.

அறிவார்ந்த சொத்துரிமை அனுமதியை 246 நிறுவனங்களுக்கு நமது பயோடைவர்சிட்டி அத்தாரிட்டி வழங்கியதில் உள்ள முறைகேடுகளை சி.ஏ.ஜி.யும் கற்பகவிருக்ஷமும் சுட்டிக்காட்டியுள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளைக் கொள்ளையடித்து பயோநுட்ப உதவியால் மில்லியன் -ட்ரில்லியன் டாலர் என்று பணம் சம்பாதிக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் சில லட்சம் டாலர்களைத் தோற்றமைய விவசாயிகளுக்கு வழங்க சட்டத்தில் இடம் உண்டு.

ஒரு நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை 1992-ல் ரியோவில் கூடிய பூமி மகாநாட்டில்தான் முதலில் பேசப்பட்டது. வளரும் நாடுகளில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கங்களின் பண மதிப்புப் பற்றிய விவரங்களைப் பல நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

இன்னமும் நமது உயிர்ச் செல்வங்கள் கொள்ளை போவதைத் தடுக்க முடியவில்லையே! இப்படிக் கொள்ளைபோவதில் யாருக்கு என்ன பங்கு? என்ற தேடுதலில் - இக் கொள்ளையின் மதிப்பீடு 2ஜி ஸ்பெக்ட்ரம் அளவுக்கு மதிப்பிடலாம் என்பது இத்துறை சார்ந்த வல்லுநர் கருத்து. தோற்ற மையம் பெற வேண்டிய இந்தியப் பங்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அநியாயங்களுக்கு ஆண்டவன் கூலி கொடுப்பான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.