முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கருப்புப் பணம்

கருப்பில் உள்ள இரண்டாவது எழுத்தை எழுதும்போது அது வல்லினமா, இடையினமா என்ற சந்தேகம் வருவதுண்டு. அந்தக்காலத்தில் நான் படித்தபோது இடையினத்தில்தான் எழுதினேன். தமிழாசிரியர் திருத்தியது இல்லை. தமிழண்ணல் என்ன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:14 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

கருப்பில் உள்ள இரண்டாவது எழுத்தை எழுதும்போது அது வல்லினமா, இடையினமா என்ற சந்தேகம் வருவதுண்டு. அந்தக்காலத்தில் நான் படித்தபோது இடையினத்தில்தான் எழுதினேன். தமிழாசிரியர் திருத்தியது இல்லை. தமிழண்ணல் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. மற்றோர் அறிஞரைக் கேட்டேன். ""அண்டங்காக்காவின் நிறம் என்றால் வல்லினம் போடலாம். சாதாரணக் காக்காவின் நிறம் கருப்புதான், இடையினம் போடலாம்'' என்றார்.

 இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் கருப்புப்பணம் வெளிநாட்டில் சேமித்து வெள்ளைப்பணமாக மாறுவதாகப் பதஞ்சலி யோகம் செய்யும் சாமியார் ராம்தேவ் கூறுகிறார். மிகுந்த ஆதாரங்களுடன் அதையே முற்போக்குப் பத்திரிகையாளர் சாய்நாத்தும் கூறுகிறார்.

 இதையெல்லாம் பார்த்தால் கவிஞர் கண்ணதாசன் நடித்த "கருப்புப்பணம்' என்ற சினிமா நினைவுக்கு வருகிறது. ""கருப்புப்பணம்'' படத்தில் நம் நினைவுக்கு வருவது சீர்காழியின் கணீர்க்குரல்தான். என்னபாட்டுத் தெரியுமா?

 ""எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும். வல்லான் பொருள்குவிக்கும் தனிஉடைமை - நீங்கி, வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை''

 ""இருட்டில் மறைந்துகொள்ள விளக்கணைப்பார் - சிலர் கிணற்றில் இருந்துகொண்டு உலகளப்பார்; நெருப்பை மடியில் வைத்து மறைந்திருப்பார் - அந்த நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்?''

 ""பாலென அழுவோர்க்குப் பால்தருவோம் - பசுங் கூழெனத் துடிப்போர்க்குச் சோறிடுவோம்; தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் தமக்கென நினைப்போரைச் சிறையிலிடுவோம்!''

 கண்ணதாசனின் கருப்புப்பணம் என்ற சினிமாவின் மையக்கருத்தை இப்பாடல் விளக்குகிறது. நாட்டில் நிகழும் ஊழல், அநியாயங்கள், வன்முறை ஆகியவற்றைக் கண்டு பதறிய கவிஞரின் நெஞ்சம் பொதுவுடைமை மூலம் தீர்வை நாடுகிறது. கம்யூனிசம் என்ற கற்பனை நிஜமாகிறதோ இல்லையோ - குறைந்தபட்சம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பல லட்சங்கோடி இந்தியக் கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில், மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

 கவிஞர் முதல் பாராவில் கம்யூனிசம் பேசுகிறார். இரண்டாவது பாராவில் திஹார் சிறையில் தண்டனை அனுபவிப்போரைப் பேசிவிட்டு, மூன்றாவது பாராவில் அப்படி மீட்ட பணத்தைக்கொண்டு மக்கள் பசியில்லாமல் வாழக்கூடிய திட்டம், அதாவது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவிருக்கும் "ஃபுட் செக்யூரிட்டி பில்' பற்றியும் தீர்க்கதரிசனத்துடன் கவிஞர் பாடிவிட்டதையும் பாராட்டலாம்.

 கருப்புப்பணம் சினிமா வெளிவந்து அநேகமாக 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில், கருப்புப்பணம் இந்தியாவைவிட்டு ஐரோப்பிய வங்கிகளில் அதிகபட்சம் ஸ்விஸ் வங்கியில் அடைக்கலமாகிவிட்டது.

 இவ்வாறு அந்நிய வங்கிகளில் போடப்பட்டுள்ள கருப்புப்பணம் 2005-06-லிருந்து 2010-11 வரை கணக்கிட்டால் 2,12,50,23,00,00,000 ரூபாய்களாகும். 21.25 மில்லியன் கோடி. இவற்றையெல்லாம் மீட்டுக்கொண்டு வந்து இந்தியாவை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் ஒரு சாமியார் தொடையைத் தட்டிக்கொண்டும், அந்தர்பல்ட்டி அடித்துக்கொண்டும், ஊர்ஊராகச் சிலம்பம் சுற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; பாரதிய ஜனதாவும் அவரைப் பார்த்து நடுங்குகிறதாம்!

 ஒரே சமயத்தில் ஈ.வெ.ரா. பெரியாரையும் விவேகானந்தரையும் நினைவுபடுத்தக்கூடிய பதஞ்சலி யோகரிஷி சுவாமி ராம்தேவ் மகராஜ் இன்று நடத்தும் மக்கள் இயக்கத்தின் பெயரே ""பாரத சுயமரியாதைப் பயணம்''. ஹிந்தியில் ""பாரத் ஸ்வாபிமான் யாத்ரா''.

 இந்தச் சாமியார் பதஞ்சலி யோகத்தில் வல்லவர். ஹரித்வாரில் இவருக்கு யோகாஸ்ரமமும் (பதஞ்சலி யோக ஆய்வு நிறுவனம்) பதஞ்சலி மருந்தகமும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இவர் கூட்டிய உலக யோக மாநாடு பலர் கவனத்தையும் கவர்வதாயிருந்தது. தொலைக்காட்சிகளில் இவரைப் பார்க்கும்போதெல்லாம் மேடையில் இவர் யோகாசனம் செய்யும்போது மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடவே யோகாசனம் செய்வார்கள். சரியாகச் சுவாசம் செய்யும் முறையான பிராணாயாமங்களின் மூலம் பல நோய்களை எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் செய்து காட்டுவார்.

 ஒருமுறை இவர் இந்தியாவின் கருப்புப்பணம் பற்றிச் சில புள்ளிவிவரங்களை வழங்கி இவற்றை இந்தியாவுக்குள் கொண்டுவந்தால் வறுமையை ஒழித்து விடலாம் என்று பேசியதற்குக் காங்கிரஸ் பிரமுகர் திக்விஜய் சிங், இவரிடம் கருப்புப்பணம் உள்ளதாகக் கூறப் பொங்கி எழுந்துவிட்டார் ராம்தேவ்.

 "என்னுடைய பக்தர்கள் எனக்குத்தரும் ஒவ்வொரு பைசாவுக்கும் என்னிடம் கணக்கு உள்ளது. வருமான வரித் துறையை அனுப்பி ரெய்டு செய்து பாருங்கள்...'' என்று திரும்பி ஒரு சவால்விட்டதுடன் ""கருப்புப்பணத்தை அந்நிய தேசத்தில் முடக்கி வைப்பது தேசத்துரோகம். இந்திய சுயமரியாதைக்குப் பங்கம். அதை இந்தியாவுக்குத் திரும்பிப் பெறுவதே எனது வாழ்வின் லட்சியம்...'' என்று கூறி பாரத சுயமரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. பாணியில் தோற்றுவித்தார். அதற்காகப் பயணத் திட்டத்தையும் செயல்படுத்தி அசாம், மணிப்பூர், சத்தீஸ்கர் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நிரம்பியுள்ள ஊர்களிலும் பிரசாரத்தை நடத்தி வருகிறார்.

 இப்போது ஒரிசாவில் பிரசாரம். ஒரிசாவை முடித்துவிட்டு ஆந்திரப்பிரதேசம் பின்னர் மார்ச் கடைசியில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு என்று தென்னகத்திலும் பிரசாரத்தைத் தொடரவுள்ளார். இவரது பேச்சில் பற்றாக்குறை பட்ஜெட், விலைவாசி உயர்வதற்கான அசல் காரணம், ரிசர்வ் வங்கி அறிக்கை, கருப்புப்பணம் பற்றிய புள்ளிவிவரங்களும் உள்ளன. அரசியலுடன் யோகமும் பயிற்றுவிக்கப்படுகிறது.

 சுயேச்சையாக இயங்கும் ராம்ஜேட் மலானி, சுப்பிரமணியன் சுவாமி போன்ற பல தரப்பட்ட அரசியல் பிரபலங்கள் ராம்தேவின் சுயமரியாதை யாத்திரைக்கு வரவேற்பை வழங்கிப் பங்கேற்பதையும் பார்க்கலாம்.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பி. சாய்நாத் இந்தியாவை விட்டு வெளியேறும் இந்திய மூலதனம் எவ்வாறு கருப்பு வடிவம் பெற்று ஐரோப்பிய வங்கிகளில் போடப்பட்டு இந்தியாவை இந்தியக் கார்ப்பரேட்டுகள் சுரண்டிவரும் கொடுமைகளைப் பச்சையாகவே ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் பூதாகரமான 2ஜி பூதக்கண்ணாடியைக் கவனிக்கலாம். இந்தியக் கார்ப்பரேட்டுகள் வருமான வரியை மட்டுமல்ல, எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் டூட்டியையும் கட்டாமல் கருப்புப்பணம் உற்பத்தி செய்கின்றன. எந்த அளவில் இந்தியக் கார்ப்பரேட்டுகள் தொழில் வளர்க்கிறதோ அந்த அளவில் கருப்புப்பணத்தை உற்பத்தி செய்து வளர்க்கின்றன.

 என்.ஆர்.ஐ. முதலீடு என்று கூறி இங்கு அந்நிய மூலதனத்தை ஒரு பங்கு செலவிட்டுப் பெற்ற லாபத்தைக் கருப்புப்பண வடிவில் பத்துமடங்காக மாற்றி இந்திய நாட்டிலிருந்து இந்திய மூலதனம் கடத்தப்படுகிறது. இதன் பெயர்தான் ""கார்ப்பரேட் சோஷலிசம்''. இந்தக் கார்ப்பரேட் சோஷலிசம் கருப்பாக மாற்றும் புள்ளிவிவரத்தை பி. சாய்நாத் பட்ஜெட் அறிக்கைகளிலிருந்தே அளவிட்டுள்ளார்.

 இந்திய விடுதலைக்குப்பின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹர்லால் நேரு, கலப்புப் பொருளாதாரத்தை மையமிட்டு, இந்தியாவை சோஷலிச நாடாக அறிவித்தபோது கார்ப்பரேட்டுக்கு இந்திய மூலதனத்தில் 10 சதவீதம் பங்குடனும், 90 சதவீதப் பொதுத்துறை நிறுவன மூலதனத்துடனும் வளர்ந்த நிலைமாறி, கலப்படமான கலப்புப் பொருளாதாரத்தால் இன்று 90 சதவீத மூலதனம் கார்ப்பரேட்டுகள் கையில். நமது மதிப்புக்குரிய நிதி அமைச்சரின் ஜி.டி.பி. கோட்பாட்டில் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சியாம். இந்தியாவில் நிஜமாக நிகழ்வது கார்ப்பரேட் சோஷலிசமே. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் கருப்புப்பண வளர்ச்சியில் 101 சதம் கண்டுள்ளோம். டெண்டுல்கர் சாதனையைவிட இதுவே போற்றத்தக்கதாயுள்ளது. வாழ்க பாரதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.