உணவு ஏற்றுமதியில் லாபம் உள்ளதா?
மந்தியப் பொருளாதார வரலாற்றை இருபதாண்டுக்கு முன்புள்ள சூழ்நிலையுடன் தொடர்பு செய்து கவனித்தோமானால், நமது நெருக்கடி - அமெரிக்கா கூறுவதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலை, வெளிச்சமாகும்.


மந்தியப் பொருளாதார வரலாற்றை இருபதாண்டுக்கு முன்புள்ள சூழ்நிலையுடன் தொடர்பு செய்து கவனித்தோமானால், நமது நெருக்கடி - அமெரிக்கா கூறுவதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலை, வெளிச்சமாகும். 1990-களில் நரசிம்ம ராவ் பிரதமராயிருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சர், சிதம்பரம் துணை நிதியமைச்சர், இன்று திட்டக்கமிஷன் தலைவராயுள்ள சர்தார்ஜி அலுவாலியா அன்று நிதித்துறைச் செயலர். அப்போதுதான் உலகமயமாதல் உருவானது. தனியார்மயம், பொதுத்துறைப் புறக்கணிப்பு எல்லாம் ஏற்பட்டது.
டங்கல் திட்டம், காப்புரிமைச் சட்டம், உலக வர்த்தக அமைப்பு, ஏற்றுமதி - இறக்குமதி வரிக்குறைப்பு எல்லாம் ஏற்கப்பட்டன. இன்று 2ஜி ஊழலில் சிதம்பர ரகசியம் அம்பலமானாலும் அதை இருட்டடிப்புச் செய்வதில் மன்மோகன் காட்டும் அக்கறை பழைய விசுவாசத்தினாலோ என்னவோ - அது போகட்டும்.
உலகமயமாதலில் அதிக ஆதாயம் வடக்கு நாடுகளுக்குத்தான் என்பது இதுநாள்வரை வடக்கு பெற்ற வளர்ச்சியுடன் நமது நிலையை ஒப்பிட்டால் புலனாகும். அவர்கள் எட்டிப்பிடித்த இடத்துக்கெல்லாம் நாம் போக முடியும் என்று தோன்றவில்லை. வடக்கு நாடுகளில் தோன்றியுள்ள பொதுக்கடன் பிரச்னைகளைத் தெற்கு நாடுகளின் அங்காடிகள் தீர்த்துவிடும். வடக்கு நாடுகளின் வளர்ச்சி உலகமயமாதல் விளைவால் 60 மதிப்பெண்ணிலிருந்து நூறைத் தொட்டுப் பின்னர் 90-க்கு இறங்கியிருக்கலாம். தெற்கு நாடுகள் வளர்ச்சியில் பெயில் மார்க் வாங்கியவர்கள். அப்போது 25 மதிப்பெண் என்றால் இப்போது 30 மதிப்பெண்கள் - என்ற அளவில் வளர்ச்சி. பெயில் மார்க்கில் முன்னேற்றம் உண்டு. வளர்ச்சியில் பயனடைந்தோர் இந்தியாவில் நிறைய உண்டு.
உலக வங்கிப் பணத்தைச் சுருட்டியவர்கள் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். உலக வங்கிக் கடனுக்கு அரசு வட்டி செலுத்த, முதலை விழுங்கிய முதலைகள் பட்டினியில் வாடும் பழங்குடிக்குக் கண்ணீர் வடிக்கலாம். இப்படி சுவிஸ் வங்கியில் டெபாசிட்டான சுமார் 65 லட்சம் கோடி இந்திய ரூபாய் ஜி.டி.பி. கணக்கில் வரவில்லை. இப்படிக் கணக்குக் காட்டாமல் சுவிட்சர்லாந்துக்கு ரூபாய் ஏற்றுமதி போதாதா? யூரோ நாடுகளுடன் தடையில்லா உணவு வர்த்தக ஒப்பந்தத்துக்கும் இந்தியா கையெழுத்துப் போட்டுள்ளது. உணவு ஏற்றுமதியைவிட இந்தியாவின் உணவு இறக்குமதி அதிகம். கோதுமை இறக்குமதியும் உண்டு. சமையல் எண்ணெய், பருப்பு இறக்குமதியும் உண்டு.
உள்நாட்டில் கோதுமைத் தேவை இருந்தாலும்கூட, கொள்முதல் செய்த கோதுமையைக் கொட்டிவைக்க இடமில்லாமல் 20 லட்சம் டன்வரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு வாங்குவோர் சந்தை இல்லையென்பதாகவும், சந்தைவிலை குறைவதாகவும் பேசப்படுகிறது. எப்போதுமே சர்வதேசச் சந்தையில் விலை குறையும்போது நாம் ஏற்றுமதி செய்வது புதிய விஷயம் இல்லை.
உலகமயமாதலில் தொடங்கினோம். உணவு ஏற்றுமதிக்கும் உலகமயமாதலுக்கும் உறவு உண்டு. உலக உணவு வர்த்தகத்தில் உலக வர்த்தக அமைப்பு ஏராளமான விதி ஒழுங்குமுறைகளை வரையறுத்துள்ளது. அவை இந்தியாவுக்கு நன்மை தராமல் நஷ்டமேற்படுத்துகின்றன.
இந்திய விவசாயத்தையும் உணவு ஏற்றுமதியையும் கொல்வதற்காகவே காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒருபக்கம் இந்தியா - யு.எஸ். வேளாண் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை மான்செண்டோவுக்கு அடிமைப்படுத்திய கதை ஒருபக்கம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையில் யூரோவின் உணவுக் கொள்ளையைக் கவனிப்போம். ஐரோப்பிய நாட்டுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தம் உணவு ஏற்றுமதி - இறக்குமதி பற்றியதும்கூட. இதுபற்றி யோசிக்கும்போது ஒரு நெருடல். பசியும் பஞ்சமும் மலிந்த நாட்டில் உணவு ஏற்றுமதி பற்றிப் பேசும் அதேநேரத்தில், உணவுக்கு உத்தரவாதச் சட்ட மசோதா நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்குச் சென்றுள்ளதை ஊடகங்கள் தெரிவிப்பதும், அதைப் பற்றி நிபுணர்கள் பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதும் நல்ல நகைச்சுவை.
""தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்'' என்று பாரதி இயற்றிய உணவு உத்தரவாதச் சட்டத்தைவிட அரசுச் சட்டம் உயர்வானதா என்ன? இந்த அரசுச் சட்டம் வெளிவந்த பின்னர் ஓர் ஏழைப் பழங்குடி பசியால் உயிர்துறந்துவிட்டால் உணவு அமைச்சர் பதவி விலகுவாரா? இல்லை, இந்தச் சட்டம் வெளிவந்த பின்னர், ஒவ்வொரு குடிமகனுக்கும் சத்தான சமச்சீர் உணவு கிட்டுமா? இது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடன் நாம் செய்துகொண்டுள்ள தடையில்லா உணவு வர்த்தக ஒப்பந்தம் என்னாவது?
இன்று யூரோ நாடுகளுடன் நாம் கொண்டுள்ள தடையில்லா உணவு ஏற்றுமதி வர்த்தகத்தில் நமது கச்சாப் பொருள் ஏற்றுமதி 5 சதவீத நிலை - 2020-ல் 17 சதவீதமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தானிய வகை ஏற்றுமதியை 24 சதவீதமாக உயர்த்தவும், இறைச்சி - பால் பொருள் ஏற்றுமதியை 10 சதவீதமாகவும் - அக்ரோஃபுட் வரிசையில் 6 சதவீதம் உயர்த்தவும் திட்டம் உள்ளது.
யூரோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பல பொருள்களுடன் வேளாண் விளைபொருள் உணவு வகையைக் கணக்கில்கொண்டால் நமது ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாயுள்ளதால் யூரோ நாட்டு உணவு வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக சுமார் 50 மில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும் என்பது நிபுணர்களின் கருத்து.
இந்த ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விளைபொருள்களிலிருந்து பக்குவம் செய்த உணவு உற்பத்தியாளர்களும் - குறிப்பாக பால்பொருள், இறைச்சி, கோதுமை, சர்க்கரை, இனிப்புப்பண்டத் தொழில், எண்ணெய்வித்து, காபி - தேயிலை - மீன் ஏற்றுமதி நஷ்டமாகும்.
இன்றைய நிலையில் நமது வேளாண் ஏற்றுமதி ஐரோப்பிய இறக்குமதிப் பொருள்களில் 3 சதவீதமே. இதற்குக் காரணமாகக் கூறப்படுவது ஏற்றுமதி வரிகள் - பொருளைப் பொருத்து 32 சதவீதத்திலிருந்து 115 சதவீதம்வரை சுமத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய அங்காடிகளுக்கு என்றால் 14 சதவீதம். பழங்கள், காய்கறிகளுக்கு மட்டுமே வரிவிலக்கு உள்ளது என்றாலும் 22 சதவீதம் வரை வசூல் உண்டு. சமையல் எண்ணெய்க்கு 73 சதம் வரி. ஆனால், ஐரோப்பிய உணவு ஏற்றுமதித் தடையில்லா ஒப்பந்தத்தில் ஏற்றுமதி வரி வருமானத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது. இவைதவிர, தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகளும் உண்டு.
அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி வரிகள் குறைவு என்றாலும் விவசாயப் பொருள் உற்பத்திக்கான மானியம் மிக அதிகம். ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளைக் காப்பாற்ற எடுக்கப்படும் பல நடவடிக்கைகளில் உள்ளூர் அங்காடி வரத்தும் - ஏற்றுமதி அங்காடி வரத்தும் வளம்பெற நிறையச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் டாட்டாவுக்கும் அம்பானிக்கும் வேறு பல பன்னாட்டு நிறுவனக் கோட்டீஸ்வரர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகள் விவசாயிகளுக்கு இல்லை. தொழில் முதலைகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளால் உருவாகும் கறுப்புப்பணம் ஐரோப்பாவுக்கே (சுவிஸ் வங்கி) ஏற்றுமதியாகும்போது உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய வெள்ளைப்பணம் கிட்டுவதே சிக்கலாகியுள்ளது. இப்படி விவசாயிகளின் வயிற்றிலடித்து வாங்கப்படும் பொருளை ஏற்றுமதி செய்தும் நாட்டுக்கு ஏதும் லாபம் உண்டா? அந்த வழியிலும் வெற்றி இல்லை. நமது வருமானத்தை ஐரோப்பாவுக்கு அடகு வைத்துவிட்டு நாம் பெறப்போவது சீமைச் சாராயம். அருமையான ஸ்காட்ச் விஸ்கி, சீமை ஓயின், சீமை பிராந்திக்கு அதிக விலை கொடுத்து வாங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
காந்தி பிறந்த நாட்டில் உள்ளூரிலேயே கள்ளச்சாராயமும் டாஸ்மாக் சாராயமும் கடலென ஓடும்போது- கறுப்புப்பண வேந்தர்களுக்கு வசதியாக சீமைச் சாராயம் வழங்கவா நாம் தேச விடுதலை பெற்றோம்?
யூரோ தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பொதுவான விவசாயக் கொள்கைகள், ஏற்றுமதி வரி நீக்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கவனித்தால் தெற்கு நாடுகளின் தொடர் வளர்ச்சி என்ற போலியான பேச்சுள்ள யூரோ ஒப்பந்தம் இந்தியாவைப் படுகுழியில் தள்ளும்.
இன்னமும் இந்தியாவில் உணவு நெருக்கடி தீர்ந்தபாடில்லை. உணவு விலைப் பணவீக்கம் தணியவில்லை. ஒரே சீரான விநியோகம் இல்லை. கோதுமைக்கு உள்ளூர்த் தேவை உள்ளது. ரேஷனில் 5 கிலோவுக்கு மேல் வழங்குவது இல்லை. விநியோகக் குறைபாட்டால் சரக்குத் தேக்கமே தவிர ஏற்றுமதிக்குரிய உபரி என்பது கிடையாது. உணவு ஏற்றுமதியை நஷ்டத்திற்குச் செய்வதைவிட இலவச விநியோகம் தேவலாம். திடீரென்று ஓராண்டு நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் வருமானால் ஐரோப்பா தடைகளைக் கொண்டுவந்து கொள்ளை லாபம் அடிக்கும் என்பது கடந்த கால அனுபவம். இந்தியாவில் ஏற்றுமதி- இறக்குமதி கொள்கை வகுப்போர்க்கும் விவசாயக் கொள்கை வகுப்போர்க்கும் அல்லது விவசாய சங்கத் தலைவர்கள் அல்லது மக்கள் நலன் விரும்பும் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், மாநில அரசுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே தான்தோன்றி முடிவுகளும் வர்த்தகப் பிரதிநிதி கைக்குலுக்கல்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
உலகமயமாதல் விளைவால் உலக ஏற்றுமதியில் பங்கேற்றுள்ள இந்தியா வேளாண் ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய குறைவான அன்னியச் செலாவணி கொண்டு அதிக விலையில் நமக்குத் தேவையானவற்றை இறக்குமதி செய்யலாம். விவசாய உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் இல்லை. சமீபத்தில் ஊடகச் செய்தி எதுவெனில், இந்தியத் தேங்காய் ஏற்றுமதி பற்றியது. இலங்கை, பிலிப்பின்ஸ் நாடுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்துவிட்டதாகவும் தமிழ்நாட்டுத் தென்னை சாகுபடியாளருக்கு நல்ல லாபம் என்றும் கூறப்பட்டது. சில்லறை விலையில் ஒரு தேங்காய் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பதற்குக் காரணம் கேட்டால், ஏற்றுமதி என்று பதில் வந்தது. ஆனால் தோப்பில் வாங்கப்படும் மட்டை உரிபடாத தேங்காய்க்கு 4 அல்லது நாலரை ரூபாய்க்கு மேல் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. உரிமட்டையும் உபரி லாபம். மரம் ஏறுபவர்களுக்கு லாபம் உண்டு. கூடை சுமப்பவர்களுக்கும் லாபம் உண்டு. தோப்பில் மலிவாக வாங்கப்பட்டு உரித்து விற்கும் கமிஷன் மண்டிக்கு லாபம் உண்டு. ஏற்றுமதி செய்பவருக்கு லாபம் உண்டு. மரத்தை நட்டு வளர்த்தவன் மேலே அண்ணாந்து பார்த்துக் குலை குலையாகத் தேங்காய் தொங்குவதைப் பார்த்து- உழைப்புக்கு ஏற்ற விலை இல்லையே என்று ஏங்கிப் பெருமூச்சு விடுவதைத் தவிர அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?
ஏற்றுமதி பற்றி ஒரு புதிய செய்தி- உலகக் கடன்- நிதி நெருக்கடி காரணமாக ஜூலையிலிருந்து ஆகஸ்டு 2011 ஒரே மாதத்தில் 44 சதவீதம் குறைந்து நமது வர்த்தகப் பற்றாக்குறை 14 பில்லியன் டாலருக்கு உயர்ந்துவிட்டதால்- எவ்வளவு நஷ்டம் என்றாலும் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்ய மதிப்புள்ள உணவை நஷ்டத்திற்கு ஏற்றுமதி செய்துதானே ஆக வேண்டும்! இதுதான் உலகமயமாதல் தோற்றுவித்துள்ள அரசு விதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...