/

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம்

அமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:37 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

அமெரிக்க ஏகபோகத்தின் கைப்பாவைகளாகத் திகழும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை தங்களின் பிழைப்புக்காக வடக்கு நாடுகளின் தேக்கநிலையையும், தெற்கு நாடுகளின் வளரும் போக்கையும் காரணமாகக் காட்டி நம்மையெல்லாம் மகிழ்ச்சியுறச் செய்ய சில புதிய சொற்களைக்கொண்டு இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சீனா, இந்தியா, இந்தோனேசியா, பிரேசில் போன்ற மக்கள்தொகையும் உள்நாட்டுச் சந்தையும் மிகுந்த நாடுகளை "வளரும் வல்லரசுகள்' என்றும் "தெற்கின் எழுச்சி' என்றும் மகுடம் சூட்டிவிட்டனர்.

 இச்சொற்கள் இன்று தமிழ்நாட்டின் பட்டிமன்றப் பேச்சாகிப் பட்டிதொட்டிகளிலும் பாரதப் பெருமை பேசப்படுவதுண்டு. இது எந்த அளவுக்கு உண்மை? இப்படிப்பட்ட அடைமொழிகளுக்கு வலுவான காரணங்கள் உள்ளனவா? ஏன் இவ்வாறு பேசுகிறார்கள்? இப்படிப்பட்ட வளர்ச்சியை நம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலுமா? இது நீடிக்குமா ஆகிய கேள்விகளுக்கு விடைகளைத் தேடுவது இந்தியக் குடிமகனின் கடமையும்கூட.

 ஏழை நாடுகள் - பணக்கார நாடுகள், வளர்ச்சியுற்ற நாடுகள் - வளரும் நாடுகள், வடக்கு நாடுகள் - தெற்கு நாடுகள் என்று வேற்றுமை பாராட்டிப் பேசுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் பொருளாதார நிலையில் வேலை, வேலையின்மை, சம்பளம், தனிநபர் வருமானம், தொழில் வளர்ச்சி, மூலதனம், முதலீடு வேற்றுமைகளுடன் ஏற்றுமதி - இறக்குமதி, அந்நியச் செலாவணி, நிதிபலம், தங்கத்தின் இருப்பு, கடன் மதிப்பு போன்ற பல்வேறு நிலைமைகளையும் வைத்து தெற்கு - வடக்கு, ஏழை - பணக்காரர் என்று வேற்றுமைகள் பாராட்டப்படுகின்றன.

 தெற்கு நாடுகள் - வளரும் நாடுகள் அல்லது ஏழை நாடுகள் என்ற பிரிவில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிரேசில், வியத்நாம், தென்கொரியா, எண்ணெய் வளமுள்ள வளைகுடா நாடுகள் எல்லாமே தங்களை வல்லரசுகளாக எண்ணிக் கொள்வதுண்டு. எண்ணெய் வளமே இல்லாத அரேபிய - ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் திக்கற்ற ஏழை நாடுகள்.

 தம்மை வளரும் வல்லரசுகளாக எண்ணியுள்ள இந்தியா போன்ற நாடுகள் வளர்ந்த பின்னணி எப்படியென்று கேட்டால், எப்போதெல்லாம் வடக்கு நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டு நோய் முற்றும்போது தெற்கு நாடுகளுக்கும் நோய் ஏற்படும். பணம் வீங்கும். பொதுக்கடன் குறையும். தெற்கு நாடுகளுக்கு நோய் ஏற்பட்டால் வடக்கு நாடுகள் நிவாரணம் பெற்றுவிடும். இதை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் புரியும். இதைப் பின்னர் யோசிப்பதற்கு முன்னர், தெற்கு நாடுகளின் வளர்ச்சியை ஒப்பிடுவோம்.

 வளர்ச்சியின் எடுத்துக்காட்டு அல்லது அலகு எது? என்று கேட்டால் தனிநபர் வருமானம் என்று பதில் வரும். இந்த அலகை அடிப்படையாக வைத்துக் கவனித்தால் சஹாரா ஆப்பிரிக்காவில்கூட கடந்த 30 ஆண்டுகளாக வளர்ச்சிவீதம், வடக்கு நாடுகளைவிட அதிகம்.

 இன்னும் ஆழ்ந்து கவனித்தால் வளரும் நாடுகள் ஐந்தில் நான்கு நாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் வருமான வளர்ச்சி வீதம் அமெரிக்க அளவைவிட அதிகம். 1960-லிருந்து 2000 வரை கவனித்தால் மூன்றில் ஒரு தெற்கு நாட்டில் தனிநபர் வருமான வளர்ச்சி வீதம் அமெரிக்க அளவைவிட அதிகம். அதேசமயம் ஏற்றத்தாழ்வு வடக்கு நாடுகளைவிடத் தெற்கு நாடுகளில் இன்னமும் அதிகம்.

 "இன்போஸிஸ்' போன்ற மென்பொருள் நிறுவனத்தின் ஓர் இயக்குநரின் மாதச் சம்பளம் ரூ. 1,50,000-லிருந்து ரூ. 2,00,000-மாக உயர்ந்தாலும் சரி, சூப்பர் மார்க்கெட் விற்பனையாளரின் சம்பளம் ரூ. 2,000-லிருந்து ரூ. 2,100-ஆக உயர்ந்தாலும் வளர்ச்சிதான்.

 தனிநபர் வருமான வளர்ச்சி வீதம் என்ற அலகில் ஏழை பணக்காரர் என்ற பேதம் இல்லை. அமெரிக்காவில் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? இந்தியாவில் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு என்றெல்லாம் குதர்க்கமாகக் கேள்வி கேட்கக்கூடாது. வடக்கு தேய்ந்துவிட்டது. தெற்கு வளர்ந்துவிட்டது, எப்படி?

 உலகமயமாதல் என்ற அதிசய மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிட்டது. வடக்கும் தெற்கும் பேதமில்லாமல் சங்கமமாகிவிட்டதால் உலகமயமாதலை வரவேற்க வேண்டும். இந்த மாதிரி சிந்திக்கும் இந்திய நிபுணர்களை சிந்துபாடி வரவேற்பதா? புரையோடித் திரையிட்ட கண்களுக்கு மருந்தைத் தேடுவதா?

 1960-களில் வியத்நாம் படையெடுப்பு - போர் வடக்கு நாடுகளில் நிதி நெருக்கடி. 1980-களில் எண்ணெய் விலை உயர்வால் பிரேசில் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நியச் செலாவணி இருப்பு பூஜ்ஜிய நிலைக்கு வந்தபோது வடக்கு நாடுகளின் நெருக்கடி முடிவுக்கு வந்தது.

 1990-களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி கிழக்காசிய நாடுகளில் தோன்றிய உள்நாட்டுப் போர் அமெரிக்கத் தலையீட்டுக்குப் பின் சரியானது.

 2000-ல் மத்திய ஆசிய நாடுகளின் உள்நாட்டுப் போர், ஆப்கன் போர் - அல்குவைதா, இராக்கில் சதாம் உசேன் காரணமாக ராணுவச்செலவு எல்லாம் எண்ணெய் விலையில் தம் ஆதிக்கம், ஆயுத விற்பனை காரணமாக அமெரிக்கா மீண்டது. 2008-ல் லெஹ்மன் சகோதரர்கள் வீழ்ச்சி உடனேயே சீரானது. 2009-ல் வளர்ச்சி. 2011-ல் புவல் மூடி இன்வஸ்டர்ஸ் ஏஏ+ இப்படிப்பட்ட பல்வேறு நெருக்கடிகள் வந்தபோதெல்லாம் அமெரிக்காவின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும்?

 வளர்ச்சியின் உச்சம் "பூம்' என்பர். அப்போது புழக்கத்தில் ட்ரில்லியன் - பில்லியன் என்று டாலர் நோட்டுகள் பறக்கும். வட்டியைக் குறைப்பார்கள். டாலர் மதிப்பிழக்கும். பூம் பூம் முடிந்து "பஸ்ட்' ஏற்படும். அதாவது திவாலா. ஏஏ+ என்று மதிப்பீடு வரும். உடனே வட்டி உயர்த்தப்படும். பணப்புழக்கம் குறையும். டாலர் வாங்கும் தெற்கு நாடுகளில் அந்நிய மூலதன வரவால் நாலுபடி ஏறினாலும் ஐந்துபடி சறுக்கும். இன்று இந்தியாவில் வட்டி உயர்ந்துள்ளதால் ரூபாய் மூலதனத்தைவிட "டாலர் மூலதனம்' வரவேற்கப்படும். இந்த நிலையையும் தொடர்பு செய்துதான் வளர்ச்சிப் பாதையைச் செப்பனிட வேண்டும்.

 பொதுவாக தெற்கு நாடுகளில் ஏற்படும் வளர்ச்சி வடக்கு நாடுகளில் மாறி மாறித் தோன்றும் பூம் - பஸ்ட் - பூம் - பஸ்ட் விளைவு.

 எனினும் ஐ.நா. வளர்ச்சி - வர்த்தக அமைப்பு நிபுணர்களின் கருத்துப்படி ஓரளவுக்கு கிழக்காசிய நாடுகளிலும், எண்ணெய் வளமுள்ள வளைகுடா நாடுகளிலும் மட்டுமே வளர்ச்சி நீடித்த பண்பில் உள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.

 அதேசமயம் வடக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பூம் - பஸ்ட் "பீனாபிஸ்' ஆட்டத்தைப் பயன்படுத்தியும் உலகமயமாதல் உறவைப் பயன்படுத்தியும் ""வளர்ந்து வரும் வல்லரசு நாடுகள்'' தங்கள் வளர்ச்சியைத் தக்கவைக்கும் மருந்தாக வர்த்தக உறவுகளை வடக்கு நாடுகளுடன் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. வர்த்தக வளர்ச்சி அமைப்பு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஆனால், உலக வர்த்தகத்தில் சுமார் 50 சதவிகிதம் மட்டுமே தெற்கு நாடுகளில் நடப்பதாகவும், வர்த்தக மதிப்பு அடிப்படையில் தெற்கு நாடுகளின் உடனுறவு 50 சதவீதத்தைவிடக் குறைவாயுள்ளது.

 அடுத்த சிக்கல் "ஃபாரின் டைரக்ட் இன்வஸ்ட்மெண்ட்' என்ற நேரடி அந்நிய முதலீடு. மொத்த அந்நிய முதலீடுகளில் தெற்கின் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவு. மீதி 90 சதவீதத்துக்கு மேல் அந்நிய மூலதன வரவு வடக்கிலிருந்து பாய்கிறது.

 இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஏற்றுமதியை உயர்த்த ரூபாய் மதிப்பைக் குறைக்கும்போது தோன்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. மீண்டும் ரூபாய் மதிப்பைத் தக்கவைக்க வட்டி உயர்த்தப்பட்டால் ரூபாய் முதலீடு குறைந்து டாலர் முதலீடு உயரும். டாலர் நாடுகள் தம் நாட்டில் வட்டியை உயர்த்தினாலும் அந்நிய முதலீடுகளில் குறைந்த வட்டி வழங்குகின்றனர். வட்டி குறைந்த அந்நிய மூலதனத்தைக் கொண்டு இந்தியாவில் சக்கை போடு போடுவதெல்லாம் பன்னாட்டுக் கழுகுகளே.

 ரூபாய் மதிப்பை உயர்த்தும்போது பணவீக்கம் தணிந்தாலும் செலாவணிச் சிக்கலில் ஏற்றுமதி லாபம் குறையும். ரூபாய் மூலதனத்தை நம்பியுள்ள உள்ளூர்த் தொழில் நஷ்டத்தில் உழலும். டாலர் மூலதனம் லாபத்தில் கொழிக்கும். வடக்கு நாடுகள் தங்கள் நாட்டில் முதலீடு செய்வதைவிட உலகமயமாதல் புண்ணியத்தைக் கொண்டு இந்தியா போன்ற வளரும் வல்லரசுகளையே தளமாகக் கொண்டு வடக்கு நாடுகள் தங்கள் தாய்நாட்டுக்கு நன்மை செய்கின்றன.

 இந்தியாவை மேம்படுத்தும் திட்டம் வடக்கு நாடுகளுக்கு இல்லை. கடந்த ஆண்டில் மட்டும் பன்னாட்டுக் கழுகுகள் சுமார் 3,000 கோடி டாலர் மதிப்புக்கு சுமார் 300 வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளதன் மூலம் இந்திய நிறுவனங்களை அந்நியக் கழுகுகள் கையகப்படுத்தி விட்டன.

 வடக்கு நாடுகளின் மலிவு டாலர் மூலதனமே தெற்கு நாடுகளின் வளர்ச்சியை உயர்த்தும் என்று பொருளியல் மேதைகள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். "எக்ஸ்சேஞ்ச் ஆக்சிலேட்டர்கள்' வடக்கிடம் உள்ளதால் அம்மலிவு டாலர் மூலதனமே இந்தியாவைக் கொல்லும் ஆலவட்டம் என்பதைப் புரிந்துகொண்டால் நன்மை உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.