கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காண்டீபம் நழுவவிட்டாய்...

மீண்டும் பகவத் கீதை நாடகமா? அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஒரு பார்த்தசாரதியாகப் போர்க்களத்தில் இருந்து பகவான் கர்ஜித்தான்: ""மன்னனும் நானே, மக்களும் நானே, சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன், துண

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:48 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

மீண்டும் பகவத் கீதை நாடகமா? அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஒரு பார்த்தசாரதியாகப் போர்க்களத்தில் இருந்து பகவான் கர்ஜித்தான்: ""மன்னனும் நானே, மக்களும் நானே, சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன், துணிந்து நில் தர்மம் வாழ; புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அப்புண்ணியம் கண்ணனுக்கே, போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே; கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான்; காண்டீபம் எழுக - கைவண்ணம் எழுக, இக் களமெல்லாம் சிவக்க - வாழ்க''.

 "நாமிருவர்' சினிமா வருவதற்கு முன்பே 1944-1945 காலகட்டத்தில் "கர்ணன்' வெளிவந்து அதில் கண்ணதாசனின் மேற்படிப் பாடலும் ஹிட்டாகியிருந்தால் தேசபக்திப் பாடல்களில் பாரதியாரை, "கவிஞர்' மிஞ்சியிருக்கலாம். அப்போது அவர் வாழ்ந்தது "வனவாசம்'. இந்திய விடுதலை நாளைத் துக்கநாளாக எண்ணிக் கண்ணீர் சிந்தச் சொன்ன "கண்ணீர்த்துளி'க் கட்சியில் இருந்தார். பரவாயில்லை. பிற்காலத்தில் அவர் தேசிய நீரோட்டத்தில் கலந்ததை நாடறியும். நமது போராட்டமும் ஓய்ந்தபாடில்லை.

 தேசப்பிதா காந்தி ""இது அரசியல் விடுதலைதான், பொருளியல் விடுதலை இனிமேல்தான்'' என்று கூறியதைத் தொடர்ந்து வறுமைக்கு எதிராகவும் ஏற்றத் தாழ்வுக்கு எதிராகவும் 65 ஆண்டுகளாக அரசாங்கம் போராடி வருவதைத்தான் பார்க்கிறோமே! வறுமையும் ஏற்றத்தாழ்வும் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று முரண்டுபிடிக்கும் ஊழல் அமைச்சர்கள், ஊழல் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கறைபடிந்த மாபெரும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், வருமான வரியை ஏமாற்றி வாழும் கறுப்புப் பண முதலைகள், சட்டத்துக்குப் புறம்பான சுரங்க முதலாளிகள், ஆதர்சம், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கிரிக்கெட் சூதாட்ட ஊழல் என்று பணம் படைத்தவர்கள் "கௌரவம்' இழந்த கௌரவர்களாகிவிட்டபோது சாரதி இல்லாத பார்த்தன் எவ்வாறு காண்டீபத்தைக் கையிலெடுப்பான்?

 இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் விரட்டும் வளர்ச்சித் தேரோட்டத்தில் பார்த்தனாக விளங்குபவன் ரிசர்வ் வங்கி கவர்னர் என்றால், சாரதியாக இருப்பவர் சாட்சாத் நிதியமைச்சர் பதவியை வகித்த பிரதமர் மன்மோகன் சிங். "மன்மோகன்' என்றால் கிருஷ்ணர் என்று பொருள். குறைந்தபட்சம் பணவீக்கத்தையாவது குறைப்போம் என்று நடவடிக்கை ஏதும் எடுக்க சுப்பாராவ் வில்லை எடுத்தால் ""ஐயோ என் சகாக்களைக் கொல்லாதே'' என்று கலியுகக் கிருஷ்ணன் கதறுவதால், கௌரவர்களுடன் சமரசம் என்று பாரதக்கதையே திருத்தப்படுகிறது. கிருஷ்ணர்களும் மாறியவண்ணம் உள்ளனர்.

 நேற்றைய கிருஷ்ணர் பிரணாப் முகர்ஜி, இன்று மாமன்னர் திருதராஷ்டிரராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இனி அவரால் எதையும் "பார்க்க முடியாது'. சுப்பாராவ் காலாண்டுக்குரிய பணம் - வட்டிக்கொள்கையை அறிவிக்கும்வரை மன்மோகன் நிதியமைச்சராயிருந்தார். இனி எல்லாம் "சிதம்பர ரகசியமே'. நடந்ததையும் இனி நடப்பவை பற்றியும் கவனிப்போம்.

 அமெரிக்காவுக்கு அடிபணிந்து போவதில் முகர்ஜியைவிட சிதம்பரம் எவ்விதத் தயக்கமும் காட்டமாட்டார் என்ற முழு நம்பிக்கை பிரதமருக்கும், பிரதமரைவிட உயர்வான சோனியாவுக்கும் உண்டு. நிதியமைச்சரோடு, "பண அமைச்சரான' சுப்பாராவ் ஒத்துப்போவதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை. விலைவாசியும் பணவீக்கமும் தலைவிரித்து ஆடினாலும் "ரெப்போ' வட்டி உயரவில்லை.

 ஆகஸ்ட் 1-ம் தேதி வெளிவந்த வட்டிக் கொள்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்க இருப்பிலும் (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) மாற்றம் இல்லை. அரசாங்கம் மேலும் பொதுக்கடன் வாங்க உதவும் பொருட்டு ரொக்கவிடுப்பு ரேஷியோ (ஸ்டாச்சூட்டரி லிக்விடிட்டி ரேஷியோ) 23 சதவிகிதமாகக் குறைப்பதன் மூலம், 4 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், வங்கிகள் வழங்கும் தனியார் கடன்களுக்கு ரொக்க விடுப்பு இல்லை.

 பணவீக்கக் கரு எப்போதும் ஜி.டி.பி.யில் 4.8 சதவிகிதம் உயராமல் தடுக்கும் முயற்சி என்று இன்றைய வட்டிக்கொள்கை பேசப்பட்டாலும், தொழில் வளர்ச்சி பற்றியோ உணவு விலை ஏற்றம் பற்றியோ எதுவும் பேச்சு மூச்சு இல்லை. பணம் - வட்டிக் கொள்கையை வகுக்கும் சுப்பாராவ் ஊடகங்களால் போற்றப்படுவதைக் கவனித்தால், கூடிய விரைவில் அவர் உலக வங்கித் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது.

 மன்மோகனோடு ஒத்துப்போய்விட்டால் ஒபாமாவுடன் ஒத்துப்போவதாக அர்த்தகமாகலாம். ஒபாமா ஒப்புக்கொண்டால் அவருக்குப் பதவி உயர்வு உறுதியாகிவிடும்.

 டாலர் மதிப்பு உயர நமது பணக்கொள்கை உதவியுள்ளதை வங்கிகளின் நாணய மாற்று ஊக வணிகம் வெளிப்படுத்தும். உதாரணமாக, வரும் ஆண்டுகளில் டாலர் விலை ரூ. 61.10, ரூ. 63.41, ரூ. 67.45, ரூ. 70.10. ஒவ்வோராண்டும் ஏறும் போக்குக்கு வங்கிகள் உத்தரவாதம் வழங்கி டாலர் டெபாசிட் கோருகிறது.

 170 கிராம் எடையுள்ள கோல்டன் நெஸ்கஃபே கொரிய இறக்குமதி சென்னையில் ரூ. 600-க்குக் கிட்டும். 1 கிலோ காபிப்பொடி ரூ. 3,530 கொடுத்து வாங்குவார் இந்தியாவில் உண்டு. பாசமலரை - அதாவது சகோதர பாசத்தை நினைவுபடுத்தும் ரக்ஷôபந்தன் விழா வட மாநிலங்களில் பிரபலம். சகோதரி சகோதரர்களுக்குச் சுட்டும் அழகான பட்டுக்கயிறுகள் கூட சீனாவிலிருந்து இறக்குமதியாகின்றனவாம்!

 இந்தியர்களின் இறக்குமதிப் பொருள் மோகம் தணியாமல் உள்ளதால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி கவர்னரோ, நிதியமைச்சரோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

 டாலர் மதிப்பை உயர்த்தும் பொருட்டு அன்னிய முதலீடுகளின் இருப்பையும் குறைப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அன்னியக் கடன்களுக்கு ஏற்பத் தேவையான ரிசர்வுகளை ரிசர்வ் வங்கி இழந்து வருகிறது. 2008-ல் அன்னியக் கடன்களில் 138 சதவிகிதம் ரிசர்வ் இருந்தது. 2011-ல் 99.6 சதவிகிதம் என்பது 2012-ல் 85.1 சதவிகிதமே. பங்குச் சந்தை அங்காடிக்குள் நுழையும் டாலர் பணத்தையும், நுழைந்த பணம் மாயமாய் மறையும் போக்கையும் குறித்து சுப்பாராவ் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 இந்தியாவில் யாராலும் கட்டுப்படுத்த இயலாத மும்பை பங்குச் சந்தை ஒவ்வொரு நாளும் "ஷேர் விளையாட்டின்' விளைவால் ஒரு லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் "மாறுகோ மாறுகோ மாறுகையாகிறதே' தவிர அப் பணம் உற்பத்தித் தன்மையுள்ள தொழில் வளர்ச்சிச் செலவுகளுக்குப் பயனாவதில்லை. கடந்த செப்டம்பரில் "லிக்விடிட்டி என்ஹேன்ஸ்மென்ட்' என்ற பெயரில் "பணத்தைத் தண்ணீராகப் பெருக்கும்' திட்டம் ஒன்றை வெளியிட்டனர்.

 இந்த திட்டத்தில் தரகர்களின் ஊக்கத்தொகை உயர்ந்தது. முதலீட்டாளர்களின் வட்டிப்பணம் தரகர்களால் விளையாடப்பட்டு தினம் பங்குச் சந்தை வருமானம் உயர்ந்தது. தரகர்கள் யாவரும் பங்குச் சந்தை உறுப்பினர்களே. பங்குச்சந்தை என்பது மிகவும் நியாயமான வழியில் பங்குகளை விற்க வேண்டிய கூடம். அப்படி இயங்குவதற்கு மாறாகத் தங்களுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து பணம் சுருட்டும் நூதன உத்தியாக "லிக்விடிட்டி என்ஹேன்ஸ்மெண்ட்' செயல்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க ரிசர்வ் வங்கி தலையிடுமா? எவ்வளவோ ஊழல்களில் பங்குச்சந்தை ஊழலும் உண்டு. பணம்படுத்தும்பாடு எவ்வளவோ இருக்கலாம்.

 உற்பத்தித்தன்மையற்ற ஊதாரிச் செலவுகளுக்கு அரசுத்துறையுடன் தனியார் துறையும் சளைத்தது இல்லை. நீராகப் பெருக்கெடுத்து ஓடும் பணச் சந்தையும், இறக்குமதிப் பொருள்களும் இந்தியப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளுவதையெல்லாம் பார்த்தன் மட்டும் கவனித்துப் பயன் என்ன? புதிய சாரதி கடிவாளத்தைப் பிடிக்கிறார். ஒரு பக்கம் பார்த்தால் கிருஷ்ணன் வேஷத்தில் சிதம்பரம்போல் தெரிந்தாலும், முழுமையாகப் பார்த்தால் ஒபாமா போலவும் உள்ளது. "ஏற்றுமதி ஏன்? வால்மார்ட்டையே பரிசு தருகிறேன், டாலர் மழை பொழியட்டும்' என்று குரல் வருகிறது.

 பார்த்தன் கேட்கிறான், "உலக வங்கி தருவாயா?'

 கண்ணனே துரியாதனன், கண்ணனே துச்சாதனன், கண்ணனே சகுனி, கண்ணனே உலக வங்கி. இனி பார்த்தனுக்கு வேலையில்லை. காண்டீபம் நழுவவிட்டான். வாழ்க பாரதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.