புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி
2011-12 விவசாய ஆண்டு 2010-11ஐப் போலவே உணவு உற்பத்தியில் நல்ல சாதனை என்று வேளாண்மைச் செயலர் பி.கே. பாசு அனைத்திந்திய உணவு உற்பத்திப் புள்ளிவிவர மதிப்பீடுகளை 3-2-2012 அன்று வெளியிட்டுப் பேசியுள்ளார். ஒட


2011-12 விவசாய ஆண்டு 2010-11ஐப் போலவே உணவு உற்பத்தியில் நல்ல சாதனை என்று வேளாண்மைச் செயலர் பி.கே. பாசு அனைத்திந்திய உணவு உற்பத்திப் புள்ளிவிவர மதிப்பீடுகளை 3-2-2012 அன்று வெளியிட்டுப் பேசியுள்ளார். ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 2010-11-ல் 24.48 கோடி டன்கள் என்ற நிலை 2011-12-ல் 25.04 கோடி டன்களாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த உணவு உற்பத்தி வளர்ச்சி 56 லட்சம் டன்கள் மட்டுமே. அரிசி உற்பத்தி கடந்த ஆண்டைவிட, 60 லட்சம் டன் அதிகம் விளைந்து 10.8 கோடி டன்களாக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கோதுமையும் 64 லட்சம் டன் அதிகம் விளைந்து 8.83 கோடி டன்கள் என்ற நிலையைத் தொட்டுள்ளது.
அரிசியும் கோதுமையும் சேர்ந்து 1.24 கோடி டன்கள் அதிகம் விளைந்தாலும் மொத்த உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி 56 லட்சம் டன் மட்டுமே. இது ஏன்? பருப்பு உற்பத்தியில் 1.82 கோடி டன் என்ற நிலை இந்த ஆண்டு 1.72 கோடி டன்களே விளைந்து சுமார் 10 லட்சம் டன்கள் குறைந்துவிட்டது. இதர தானியங்களில் மக்காச்சோள உற்பத்தியைத் தவிர வெள்ளைச்சோளம், கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்களான வரகு, சாமை, தினை போன்றவை சுமார் 50 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி குறைந்துவிட்டது.
நிலக்கடலை, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 3.24 கோடி டன்னிலிருந்து 3.03 கோடி டன்னாகக் குறைந்துவிட்டது.
கடந்த இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வருணபகவான் அருளிய கொடையை வைத்துச் சேற்றுநில உழவுப் பயிர்களான நெல்லையும் கோதுமையையும் வளர்க்க முடிந்த அளவுக்கு மேட்டுநிலப் பயிர்களான பருப்பு வகைகளையும், புஞ்சைத் தானியங்களையும், எண்ணெய் வித்துப் பயிர்களையும் வளர்க்க முடியாமல் போனது ஏன்?
பொது விநியோகத் தேவையை முன்னிட்டு உணவு தானியங்களில் நெல், கோதுமை உற்பத்திக்கு வழங்கப்படும் கவனம் பருப்புவகைப் பயிர்களுக்கோ, எண்ணெய் வித்துப் பயிர்களுக்கோ, புஞ்சை தானியப் பயிர்களுக்கோ வழங்கப்படாத காரணத்தால் ஏழை மக்களின் புரதச்சத்துத் தேவையும் புறக்கணிப்புக்குள்ளாகிறது. அதேபோல் தாது உப்புகள் நிறைந்த சிறுதானியங்கள் அழிந்து வருகின்றன.
புஞ்சைப் பயிரில் பெருந்தானியம் என்று கூறப்படும் சோளம், கம்பு, கேழ்வரகு உற்பத்தி குறைவதால் நஷ்டம் மனிதனுக்கு மட்டுமல்ல. கறவைப் பசுக்களின் தீவனத் தட்டுப்பாட்டுக்கும் காரணமாகிறது. எண்ணெய் வித்துப் பயிர் விளைச்சல் குறைவதால் மனிதனுக்குப் புரதத் தேவையுடன் கொழுப்புப் பற்றாக்குறை ஏற்படுகிறது. கால்நடை (கறவைப்பசுக்கள்)களுக்கும் புரதம் வழங்கும் பிண்ணாக்குப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு கூடுகிறது. பிண்ணாக்கு ஏற்றுமதியாவது ஒருபக்கம். கறவைப் பசுக்கள் நோயின்றி வாழ்ந்து பால் உற்பத்தி பெருக மற்ற தீவனங்களுடன் குறைந்தபட்சம் 1 பசுவுக்கு 400 கிராம் பிண்ணாக்கு வேண்டும். அப்போதுதான் 5 லிட்டர் பாலாவது கறக்கலாம். குறிப்பாக, நிலக்கடலைப் பிண்ணாக்கு மட்டுமே கறவைப் பசுக்களுக்கு வழங்கப்படுகிறது. மனிதனுக்கு மட்டுமல்ல. கறவைப் பசுக்களின் நலனை எண்ணி நிலக்கடலை உற்பத்தியை உயர்த்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால், அந்தக் கடமை புறந்தள்ளப்படுவதால் நிலக்கடலை விவசாயிகளும் இன்று விலையில்லாத காரணத்தால் நிலக்கடலை சாகுபடி செய்வதையே நிறுத்தி வருகின்றனர்.
நல்ல மழை இருந்தும் நாடு முழுவதும் நிலக்கடலை உற்பத்தி குறையும் காரணம் எதுவெனில் புரதச்சத்து மிகுந்த நிலக்கடலை சாகுபடி செய்தவன் தனது புரதத்தை இழந்து பருத்தி விவசாயிகளைப்போல் தற்கொலை செய்துகொள்ளும் அளவில் தள்ளப்பட்டு விட்டான். இப்படிப் புரதம் இழந்தவன் நிலக்கடலை விவசாயிகள் மட்டுமல்ல. துவரை போட்ட புரத விவசாயியும் செத்துக் கொண்டிருக்கிறான். உளுந்து, பயறு போட்டவனும் மடிந்து வருகிறான். நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி உயர்ந்துள்ளது என்று குதிக்கும் கிரிக்கெட் விவசாய அமைச்சர், குறைந்துபோன புரதப்பயிர் உற்பத்திக்குப் பதில் சொல்லாவிட்டால், புரதச்சத்து இல்லாமல் நாள்தோறும் இறந்துவரும் பல்லாயிரக்கணக்கான சிறார்களின் உயிர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
கடந்த மாதம் ""ஹங்காமா'' என்ற அறிக்கையை (ஹங்கர் - மால்நியூட்ரிஷன்) நந்தி அறக்கட்டளை இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை வழங்கியுள்ள தகவல்படி இந்தியக் குழந்தைகளில் (5 வயதுக்குள்பட்டோர்) 42 சதவிகிதம் புரதம், தாதுப்பு போன்ற போஷாக்கு இல்லாமல் எடை குறைந்தும், போதிய உயரம் இன்றியும், அதிகமான நோய்க் குறிகளுடனும் வளர்வதாகக் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் படித்த பாரதப் பிரதமர் ""வெட்கப்பட வேண்டிய விஷயம்'' என்று வாய்திறந்து பேசியுள்ளார்.
சிறார் இறப்பு விகிதம் நைஜீரியா, சோமாலியா போன்ற ஏழை நாடுகளுக்கு இணையாக உள்ள இந்தியாவை எவ்வாறு வளரும் பொருளாதார நாடு என்று கூற முடியும்?
இந்தியத் தாய்மார்களுக்கு ரத்தசோகை, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் எல்லாம் என்னவோ ஜலதோஷம், ஜூரம் என்று சொல்வதுபோல் சாதாரணமாகப் பேசப்படும் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.
இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ள இந்தியப் பெரும்பான்மைக்கு இயற்கையும் விவசாயமும் தரக்கூடிய மருந்தை மறந்துவிட்ட பொருளாதார நிபுணர்கள் விவசாயத்தைப்பற்றி எழுதும்போது கூறப்படும் கருத்துகள் இதைவிடக் குரூரமானவை.
""விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்கத் தரத்தில் இல்லை என்பதால் அதற்கு ஏற்ப துண்டு நில விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் பெரிய பெரிய பண்ணைகள் உருவாகி பயோடெக் என்ற போர்வையில் பி.ட்டி விதைகள் அறிமுகமாக வேண்டும். சிறு - குறு விவசாயிகளை நகரத்துச் சேரிகளுக்குத் துரத்தி அனுப்பிவிட வேண்டும்''.
மற்றுமொரு அறிஞர், ""அரிசி, கோதுமை உற்பத்தி போதும். சுற்றுச்சூழலுக்கு மாசு நிகழாதபடி ஏற்றுமதிப் பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளைப் பிடிக்க வேண்டுமென்கிறார். அப்போதுதான் ஜி.டி.ப்பியில் விவசாய வருமானத்தின் பங்கு உயரும்'' என்கிறார். எந்த ஓர் அறிஞரும் இந்திய யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு எழுதுவதாகத் தெரியவில்லை. சற்று யோசித்துப் பார்ப்போம்.
நெல், கோதுமை, கரும்பு, மக்காச்சோளம் ஆகிய உணவுப்பயிர்களில் மட்டுமே உற்பத்தியில் வளர்ச்சி உள்ளது. புஞ்சைத் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளது. நெல் போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு அரசு தலையீடு காரணம். அங்காடி வீழ்ச்சியுறுவதல்ல.
ரூ. 1,000 கொடுத்து குவிண்டால் நெல் வாங்கி, மேலும் ரூ. 1,000 செலவழித்து அரிசியாக்கி மக்களுக்கு கிலோ ரூ. 20 மதிப்புள்ள அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கரும்புக்கு ஆண்டுதோறும் அரசு விலை நிர்ணயித்து வழங்கப்படுகிறது. மக்காச் சோளத்தை மான்செண்டோ கவனிக்கிறது. அங்காடிக்கு உத்தரவாதம் உள்ளது. ரூ. 20 மதிப்புள்ள அரிசி 20 கிலோ என்றால் குடும்பத்துக்கு ரூ. 400 மானியம் உள்ளது. இதற்குப் பதிலாக இதே ரூ. 400-க்குள் அடக்கமாகும்படி 15 கிலோ அரிசி வழங்கி மீதி 5 கிலோ துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சுண்டக்கடலை, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு 1 கிலோ வீதம் வழங்கலாம்.
எவ்வாறு நெல் கொள்முதலாகிறதோ அவ்வாறே பருப்புகளையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். நுகர்வோர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டாம். கிலோ ரூ. 30 என்று விநியோகிக்கலாம். இதில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய 5 கிலோ அரிசியைக் குறைத்துக்கொண்டு அரிசிக்கு வழங்கப்படும் அதே 20 ரூபாய் மானியம் வழங்கலாம்.
புஞ்சைத் தானியங்கள் கால்நடை உணவு என்பதால் ரேஷன் கடைகளில் விலை போகாது. நிலக்கடலைப் பருப்பு, எள் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து வெளி அங்காடிக்கு வழங்கலாம். எவ்வாறு கொள்முதலாகும் கோதுமையை உணவுக் கார்ப்பரேஷன் வெளி அங்காடிக்கு விற்கிறதோ அவ்வாறே புஞ்சைத் தானியங்களையும் நிலக்கடலைப் பருப்பு, எள் ஆகியவற்றை நேரிடையாக வெளி அங்காடிக்கு விற்கலாம். இப்படிச் செய்தால்தான் புரத உணவு சாகுபடி ஊக்கம் பெறும்.
இரண்டாவதாக, புஞ்சைத் தானியங்களிலும், எள், நிலக்கடலை போன்ற பயிர்களும் நல்ல விளைச்சல் பெற நுண்ணீர்ப்பாசனம் கட்டாயப்படுத்தலாம். நுண்ணீர்ப்பாசனம் செய்யப் பெரிய பண்ணை தேவையில்லை. மேற்படிப் பயிர்கள் எல்லாம் மேட்டு நிலங்களில் வறட்சிப் பயிர்களாக சாகுபடியாகின்றன.
என்னதான் வறட்சிப்பயிர் என்றாலும் முழுக்கவும் மானாவாரி என்ற நிலை மாறி நுண்ணீர்ப்பாசனம் என்பது நீர்சிக்கன நடவடிக்கை. வாய்க்கால் மூலமோ, குழாய்வழியோ இல்லாமல் பயிர்களின் வேர்களுக்கு மட்டும் நீர் கிட்டுமாறு "ஸ்ப்ரிங்ளர்' அமைத்தல். முதலமைச்சரின் பல்வேறு இலவசத் திட்டங்களில் நுண்ணீர்ப்பாசனமும் ஒன்று. அவற்றை வறண்ட பயிர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட வேண்டும். இன்று நுண்ணீர்ப்பாசனம் பழ சாகுபடி மற்றும் மலர் சாகுபடிக்கு மட்டும் பயனாகிறது. இவையெல்லாம் லாபம் கருதி அமைந்தவை. ஆனால், வறண்ட பயிர்களுக்கு வெகு சிலரே நுண்ணீர்ப்பாசனத்தை மேற்கொள்கின்றனர்.
முடிவாக கவனிக்கும்போது, ஏற்றுமதிப் பயிர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை வறட்சியான புஞ்சைப்பயிர்கள் - குறிப்பாக துவரை, உளுந்து, பாசிப்பயறு, சுண்டல்கடலை, நிலக்கடலை, எள், கடுகு ஆகிய புரதப்பயிர்களின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழங்க வேண்டும்.
எல்லோருக்கும் உணவு என்ற உணவுக்கு உத்தரவாதச் சட்டம் அரிசி, கோதுமை போன்ற மாவுப்பொருள்களில் மட்டும் அடக்கமாகாது. போஷாக்கு நிரம்பிய புரத உணவுக்கும் உத்தரவாதச் சட்டம் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...