மாநில விவசாய பட்ஜெட்டின் தேவை
பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட அணுகுமுறை தொடர்பான அறிக்கையில் இன்றைய வேளாண்மையில் உள்ள இக்கட்டுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, மொத்த ஜி.டி.பி. அல்லது தேச மொத்த வருமான மதிப்பில் விவசாயத்தின் பங்கு ஆண்


பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட அணுகுமுறை தொடர்பான அறிக்கையில் இன்றைய வேளாண்மையில் உள்ள இக்கட்டுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, மொத்த ஜி.டி.பி. அல்லது தேச மொத்த வருமான மதிப்பில் விவசாயத்தின் பங்கு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
1950-51-ல் ஜி.டி.பி.யில் விவசாய உற்பத்தி வருமான மதிப்பு 55.3% என்ற நிலை 2000-01-ல் 23.9 % ஆக மாறி 2009-10-ல் 14.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதைத்தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்பார்கள்.
பழையபடி கட்டெறும்பை மீண்டும் கழுதையாக்க என்ன செய்யலாம் என்று மண்டையை உருட்டிய சில மாநில அரசுகளின் திட்ட வல்லுநர்கள், விவசாயம் மாநில அதிகாரத்தின் கீழ் வருவதால் மாநிலமே தனியாக விவசாய பட்ஜெட்டைத் தயாரிக்க வேண்டுமென்று முன்மொழிந்ததுடன் அவ்வாறே வழங்கியும் காட்டியுள்ளனர்.
கருணாநிதி மாநில முதல்வராயிருந்தபோது, மாநில விவசாய பட்ஜெட் என்ற பேச்சே வரவில்லை. இன்றைய முதல்வர் என்ன செய்வாரோ தெரியவில்லை. பிப்ரவரி 2011-ல் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக அரசு விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட்டை வழங்கியது.
கர்நாடகத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் பின்னர் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் 2011-ல் மாநில விவசாய பட்ஜெட்டுகளை வழங்கியுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்களில் அப்படி ஒரு யோசனை இருப்பதாகத் தெரியவில்லை.
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஜி.டி.பி. வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்ற இலக்கைத் தொட வேண்டுமானால், விவசாய வளர்ச்சி 4 சதவிகிதமாவது வளர வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
10-வது திட்டக்காலத்தில் 2.2 சதவிகித விவசாய வளர்ச்சி 11-வது திட்டக்காலத்தில் 3.3 சதவிகிதமாக உயர்ந்தாலும் இது போதுமானது அல்ல என்று கூறப்படுகிறது. இலக்குகளை நிர்ணயிக்கும்போது விவசாய வளர்ச்சியைத் திட்டமிடும் விவசாயமே தெரியாத வல்லுநர்களின் கஞ்சத்தனம் புலனாகியுள்ளது.
ஜி.டி.பி. வளர்ச்சியில் விவசாயத்தின் பங்களிப்பை உயர்த்த வேண்டுமென்றால் அல்லது குறைந்தபட்சம் 1990 - 91 நிலையை எட்ட வேண்டுமானால், விவசாயத்தில் 4 சதவிகித வளர்ச்சி போதுமானதல்ல. ஜி.டி.பி. வளர்ச்சிக்கு மட்டும் 9 சதவிகிதம் என்று திட்டமிடுவோர், விவசாயத்தையும் 9 சதவிகித வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இப்படிப்பட்ட நம்பிக்கையை முன்வைக்காதபோது விவசாயம் எப்படி வளரும்? இன்றைய உலக வீழ்ச்சிப் பின்னணியில் நாம் செல்லும் அதே பாதையில் தொடர்வோமானால் ஜி.டி.பி. வளர்ச்சி 9 சதவிகிதம் எவ்வாறு எட்ட முடியாத கனவோ, அவ்வாறே விவசாயத்தில் 4 சதவிகித வளர்ச்சி என்ற குறைந்த இலக்கும் கனவுதான்.
கடந்த ஆகஸ்டில் வெளிவந்த 12-வது திட்ட அணுகுமுறை அறிக்கையில் விவசாயத்தில் மாநில அளவில் தனி பட்ஜெட் பற்றிய குறிப்பு எதுவுமில்லை.
ஆனால், மத்திய அரசின் விவசாய அமைச்சர் விவசாய அமைச்சரகம், ரயில்வே பட்ஜெட்டைப்போல் தனியாக விவசாய பட்ஜெட் வழங்கும் கருத்து உள்ளதாகப் பத்திரிகைக் கூட்டத்தில் பேசியதற்கு எதுவும் பொருள் உள்ளதாகத் தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது.
மைய அளவிலும் மாநில அளவிலும் தனியாக விவசாய பட்ஜெட்டின் தேவை எழுந்துவிட்டாலும்கூட அதை எப்படி உருவாக்குவது என்ற கேள்வியில் நிபுணர்களிடையே முரண்பாடுகள் உள்ளன.
அப்படி எதுவும் ஒரு விவசாய பட்ஜெட் அரங்கேற்றம் ஆகும்போது எவற்றையெல்லாம் இதில் அடக்க வேண்டும் என்ற கேள்வி வரும். அதன் பதிலாக விவசாயத்துடன், கால்நடை, பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு, வனவளம், நீர்ப்பாசனம், விவசாய மின்சாரம், உரம் ஆகியவற்றையும் உடன் இணைத்து வரவு செலவுத் திட்டம் வேண்டும் என்று ஒருசாரார் கருத்திசைந்துள்ளனர்.
மற்றொருசாரார் விவசாயம் என்றால் விவசாய உற்பத்தியை மட்டுமே அலகாகக் கொண்டு வளர்ச்சித் திட்ட பட்ஜெட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்றனர்.
அதாவது ஆண்டுதோறும் உணவுதானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கரும்பு காய்கறி - பழங்கள், பருத்தி போன்ற வணிகப் பயிர்களின் நிலப்பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறன் பற்றிய ஆண்டறிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு வளர்ச்சி விகிதத்தைக் கண்காணித்துத் தொய்வுகளைச் சரிசெய்ய வேண்டும் என்கின்றனர்.
மூன்றாவதாக, ஒருசாரார் கால்நடை - பால் உற்பத்திக்கு மட்டும் ஒரு தனித்துறை வேண்டுமென்றும், இன்று விவசாயத்தைவிட பால் உற்பத்தி வளர்ச்சியின் பங்கு ஜி.டி.பி.யில் கூடுதலாயுள்ளதாலும், கிராமத்தில் பால் உற்பத்தி மட்டுமே கணிசமான வருமானத்தை வழங்குவதைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தவிரவும் முட்டைக்கோழி வளர்ப்பு, இறைச்சிக் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டங்களும் சேர்ந்து கால்நடை வளர்ப்பு பட்ஜெட்டை விவசாயத்திலிருந்து பிரித்து வளர்ச்சியைக் கணக்கிட்டுத் தொய்வைச் சீர்செய்ய வேண்டுமென்று ஒருசாரார் கூறுகின்றனர்.
ஒரு நாட்டின் விவசாயக் கொள்கையை மத்திய அரசு வகுத்து மாநிலங்களுக்கு வழங்குகிறது. இது ஒரே அளவுள்ள ஃபிரீ சைஸ் சட்டையை வாங்கி 25 நபர்களுக்கும் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்டதுபோல் இருக்கும்.
மாநிலத்துக்கு மாநிலம் திட்டமிடுவதில் வேற்றுமை உண்டு. அசாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் பன்றிகளைப் பசுமாடு போல் வளர்ப்பார்கள். ராஜஸ்தானில் ஒட்டகம், ஆடு முக்கியம். தில்லியில் எருமை. தென்மாநிலங்களில் "கோமாதா எங்கள் குலமாதா' என்பார்கள். கேரள மாநிலத்தில் விவசாயிகள் 7 சதவிகிதம். ஹிமாசலப் பிரதேசத்தில் 65.5 சதவிகிதம்.
மின்சாரம், உர உபயோகம், பாசன நிலப்பரப்பு, பயிர் வகை, பயிர் உற்பத்தி என்று ஒவ்வொரு கூறுகளிலும் மாநில வேற்றுமைகள் உண்டு.
ஆகவே, விவசாயக் கொள்கை / கால்நடைக் கொள்கை எல்லாம் மாநிலம் தயாரித்து அதை மத்திய அரசு பரிசீலித்து தேவைப்படி ஒழுங்கான முறையில் நிதி உதவி செய்வதுடன், மத்திய அரசின் விவசாயம் / கால்நடைக் கொள்கை மாநிலத் தேவைப்படி வழங்க வேண்டும்.
ஆகவே, ஒவ்வொரு மாநிலமும் தத்தம் தேவைகளைச் சரியானபடி பகுத்தறிந்து மாநில அளவில் விவசாயம் / கால்நடை - பால் உற்பத்தி தொடர்பான ஆண்டறிக்கை, பட்ஜெட் தயாரித்து மாநில அவைகளில் விவாதித்து ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பலாம்.
விவசாய பட்ஜெட்டை ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்குமுன் ஏப்ரல் - மே மாதங்களில் விவாதிப்பது நன்று. அதற்கான நடைமுறை சாத்தியம் இல்லாதபோது, ரயில்வே பட்ஜெட்டைத் தொடர்ந்து மத்திய அரசு விவசாய பட்ஜெட்டைச் சமர்ப்பித்துவிட்டுப் பொது பட்ஜெட்டை விவாதிக்கலாம்.
மாநில அளவில் விவசாயம் / கால்நடை ஆண்டறிக்கை / பட்ஜெட் தயாரிக்கும் முன்னர் கிராமிய அளவில் திட்டங்கள் தயாரித்து மாவட்ட பட்ஜெட்டையும் தயாரிப்பது நன்று.
உதாரணமாகத் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேச மாநிலங்களை எடுத்துக்கொண்டால் புஞ்சைத் தரிசு நிறைய உள்ளது. இப்படிப்பட்ட புஞ்சைத்தரிசுகளை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதில் பெரிய சிக்கல் எதுவுமில்லை.
குளத்து வேலைத்திட்டத்தையும் புஞ்சை சாகுபடியில் கால்நடை தீவனப்புல் சாகுபடியுடன் தீவன மரங்களைப் பயிரிடுதலை மேற்கொள்ளலாம். மழைப்பொழிவு குறைவான ராலேகான்சித்தி - ஹவாரே பஜார் கிராமங்களில் எவ்வாறு கிராமிய அளவில் விவசாய மேம்பாட்டுக்குத் திட்டமிடப்பட்டதோ அவ்வாறே தமிழ்நாடு - ஆந்திர கிராமங்களில் திட்டமிடுவது கடினமல்ல.
தனியார் துறையில் பால்வளம் பெருகுவதைத் தடுத்து நிறுத்தி ஆவின் வளர்ச்சிக்கு உழைத்துப் பால் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழியைக் கவனிப்பது அவசியம். கால்நடை வளர்ப்போரின் தீவனத் தேவையை நிறைவேற்ற வேண்டும். எல்லாம் பேசுவதற்கு இனிப்பாகத்தான் உள்ளது. புஞ்சைத் தரிசுகளின் ஆக்கிரமிப்புகளையும் ஏரி, குள ஆக்கிரமிப்புகளையும் தடுப்பது எப்படி? குறைந்தபட்சம் வருவாய்த்துறை ஆவணங்களில் ஏரி, குளம் என்று பதிவாகியுள்ள புஞ்சை நிலங்களைப் பட்டா நிலங்களாக மாற்றும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஏரி, குளம் அல்லது நீர்வரத்து வழிகளில் திடீர் நகர்கள் - மனைப்பட்டா - விற்பனைகளைக் கண்டறிந்து தடை செய்யும் துணிச்சல் மாநில அரசுகளுக்கு வேண்டுமே!
மனைக்கட்டுகளாக மாறும் புஞ்சைத் தரிசுகள் எல்லாம் நஞ்சையாகி நாடு செழிக்க மாநில விவசாய பட்ஜெட், மாநிலக் கால்நடை - பால் உற்பத்தி பட்ஜெட் ஆகியவை மட்டும் போதுமானது அல்ல.
குத்துக்கத்தி, வீச்சறுவாள் எடுக்கும் கைகளில் மண்வெட்டி, கலப்பை, கடப்பாரை எடுத்து புஞ்சைத் தரிசுகளில் பாடுபடும் நாள் வரும்போது, விவசாயத்தில் வளர்ச்சி காண முடியும். அந்த நாள் வரும்போது ஜி.டி.பி.யில் வேளாண்மை வருமானம் 50 சதவிகிதம் கிடைத்து பொருளாதாரத் தொய்விலிருந்து நாடும் மீட்சி பெற்று எழுந்து நிற்குமல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...