பலிபீடங்களாகும் கரும்பு வயல்கள்
இது நாள்வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்குப் பருத்தி காரணமாயிருந்தது. விளைந்தும் விலையில்லாத காரணத்தால் பருத்தி பயிரிட்ட விதர்பா விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு வட்டிகட்ட முடியாமல் தற்கொலை செய்துகொ


இது நாள்வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்குப் பருத்தி காரணமாயிருந்தது. விளைந்தும் விலையில்லாத காரணத்தால் பருத்தி பயிரிட்ட விதர்பா விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு வட்டிகட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவரங்களை செய்தித்தாள்கள் வெளியிட்டதைப் பலரும் படித்திருக்கலாம்.
பருத்தி வயல்கள் பலிபீடங்களான கதைகள் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், இன்றைய செய்தி கரும்பு வயலில் தற்கொலை செய்துகொண்ட மாப்படுகை முருகையன் பற்றியது; ஏக்கருக்கு 40 டன் கரும்பு விளைந்தும்கூட நாகை மாவட்ட கூட்டுறவுச் சர்க்கரை ஆலையினால் ஏற்கெனவே அனுப்பப்பட்ட கரும்புக்கும் பணம் வரவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாகக் கரும்பாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் முருகையனின் தற்கொலைக்கு ஒரு காரணமானதாகச் சொல்லப்படுகிறது. கரும்பு நட்ட பத்தாவது மாதத்தில் ஆலைக்கு அனுப்பப்பட்டால்தான் நிர்ணயிக்கப்பட்ட விலை கிட்டும். தாமதமாகத் தாமதமாக வெட்டப்பட்ட கரும்பு காய்ந்து நீர்ச்சத்து ஆவியாகும்.
மூன்று, நான்கு மாதங்கள் கடந்துவிட்டால் 40 டன்கள் விளைச்சல் 20 டன்களாக எடை குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தும். வாங்கிய கடன்களுக்கு வட்டி ஏறும். வட்டி வழங்காவிட்டால் மானம் பறிபோகும். கரும்புப் பயிருக்கு அடிப்பதற்காக வாங்கி வந்த எண்டோசல்ஃபான் - சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டது என்றாலும்கூட - கால் லிட்டர் மேற்படி பூச்சிமருந்தைப் பழரசத்தில் கலந்து குடித்தாராம் முருகையன்; தற்கொலை முயற்சிக்குமுன் முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், நாகை கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அலுவலருக்கும் தனது தற்கொலைக்குரிய காரணங்களை விளக்கியிருக்கிறார்.
கரும்பு வெட்ட உரிய காலத்தில் "கட்டிங் ஆர்டர்' வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகியவற்றால் தன் கடன் சுமையைத் தீர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முருகையனின் தற்கொலைக்குரிய காரணம் தமிழ்நாட்டிலுள்ள எல்லா கரும்பு விவசாயிகளுக்கும் பொதுவானது. முதல் பலிபீடமான மாப்படுகைக் கரும்பு வயல் நிகழ்ச்சி இன்னும் சில கிராமங்களிலும் ஏற்படாது என்று உறுதியுடன் கூற இயலாது. கடன் சுமை தாளாமல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். முருகையனைப் பின்பற்றாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியும், வட்டிக்குமேல் கடனை மேலும் மேலும் வாங்கி இறுதியில் நிலத்தையே விற்றுவிடும் அவலநிலையும் ஒரு பக்கம் நீடித்துக்கொண்டே போகிறது.
கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலை தென்னை விவசாயிகளுக்கும் ஏற்படலாம்.
சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு இவ்வளவு டன்கள் மட்டுமே என்று ஓர் அளவைக் குறிப்பிட்டு அறுவடை உத்தரவை வழங்குவதற்குத்தான் கட்டிங் ஆர்டர் என்று பெயர்.
கரும்பு விளைச்சல் அதிகமாவதால் சர்க்கரை உற்பத்தி அதிகமானால் லாபகரமான விலைக்கு விற்க முடியாத நிலை சர்க்கரை ஆலைகளுக்கும் பெரு வியாபாரிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் கட்டிங் ஆர்டரை முடிவு செய்வதிலும் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவது உண்டு.
தென்னை விஷயம் இதற்கு எதிர்மறையானது. தாராளமான பாமாயில் இறக்குமதியால் தேங்காய், நிலக்கடலையில் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாத நிலையுடன் இந்த ஆண்டு மே மாத நிலையை ஒப்பிட்டால் 35 சதவிகித உயர்வு, 6.64 லட்சம் டன்னிலிருந்து 8.96 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மீளமுடியாத வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா சிக்கித் தவிப்பதை ரிசர்வ் வங்கி அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. ஜூலை முதல் நாள் விவரப்படி நமது ஏற்றுமதிப் பற்றாக்குறை 22 பில்லியன் டாலருக்கு உயர்ந்துவிட்டதாம்.
கடந்த 20 ஆண்டுகளில் இப்படிப்பட்ட சரிவு இப்போதுதான். பொதுக்கடனிலும் உயர்வு உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில் இறக்குமதியைத் தவிர்த்து ஏற்றுமதிகளை உயர்த்த வேண்டும். சர்க்கரை ஆலைகளில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சர்க்கரை கொட்ட இடமில்லாமல் குவிந்து கிடக்கிறது.
கோதுமை நிலை இன்னமும் மோசம். உபரி கையிருப்பு 32 மில்லியன் டன்கள் போதுமான நிலை. உபரி கையிருப்புக்குமேல் கோரிக்கையற்று இருப்பது மேலும் 30 மில்லியன் டன்கள்.
சர்க்கரை ஏற்றுமதியிலும் கோதுமை ஏற்றுமதியிலும் இல்லாத சுறுசுறுப்பை பாமாயில் இறக்குமதியில் காண்பித்துத் தென்னை விவசாயிகளையும் கடலை விவசாயிகளையும் அழிக்கும் போக்கை அரசுகள் கடைப்பிடிப்பது சரிதானா? ஏற்றுமதி செய்யாமல் கரும்பு விவசாயிகளையும் கோதுமை விவசாயிகளையும் கொல்வதுபோல், பாமாயில் இறக்குமதிசெய்து தேங்காய் - கடலை விலைகளை வீழ்த்தித் தென்னை - கடலை விவசாயிகளைக் கொல்வது ஏன்?
ஆண்டுக்கு ஆண்டு விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிவரத்தை வழங்கிவரும் பிரபலப் பத்திரிகையாளர் பி. சாய்நாத் வழங்கிய சமீபத்திய தகவலின்படி 1995-லிருந்து 2011 வரை தற்கொலை செய்துகொண்டவர்கள் 2.7 லட்சம் விவசாயிகளாவர். 2011-ல் மட்டும் 14,027 பேர். விவசாயிகளின் தற்கொலைகளில் முன்னணி மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது.
2011-ல் மகாராஷ்டிரத்தில் மட்டும் 3,337 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலை மீட்புத்திட்டமாக அதிலும் குறிப்பாக கரும்பு விவசாயிகள் கரும்பு வயல்களைத் தங்கள் பலிபீடமாக மாற்றிக்கொள்ளாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்துக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றியுள்ள மகாராஷ்டிர முறையைப் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்.
நல்ல பருவமழை காரணமாக 2010-11, 2011-12 கடந்த இரண்டாண்டுகளாக விவசாய உற்பத்தி உயர்ந்துள்ளதில் வியப்பேதும் இல்லை. சர்க்கரை உற்பத்தி மிகவும் உயர்ந்து விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுச் சர்க்கரை ஆலைகள் கரும்பு வாங்குவதில் தயக்கம் காட்டலாம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, கரும்பு விளையும் மாவட்டங்களில் கால்நடை முகாம்களை நடத்தி ஆறு மாதம் விளைந்த கரும்பைப் பசுந்தீவனமாக விற்கும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகள் இளம் கரும்புப் பயிர்களைப் பசுந்தீவனமாக விற்று லாபம் கண்டுள்ளனர்.
பத்து மாதத்துக்கு மேல் காத்திருந்து அதைச் சர்க்கரை ஆலைக்கு விற்றுக் காசாக்குவதைவிடப் பசுந்தீவனமாக இளம்பயிரை வெட்டி விற்பது நல்ல லாபமாயுள்ளது. பத்து மாதம் பயிர் முற்றிய கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் விலை 1 டன்னுக்கு ரூ. 2,000 என்றால் ஐந்து மாதக் கரும்பை பசுந்தீவனமாக விற்றால் 1 டன்னுக்கு ரூ. 2,500 முதல் 2,900 வரை கிடைக்கிறது. இவ்வாறு கரும்பை முற்றவிடாமல் பசுந்தீவனமாக விற்பதால் பால் உற்பத்தி உயரும், விவசாயிகளுக்கும் லாபம்.
2012-13-ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி கணிசமாகக் குறையும் வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் அல்ல, மகாராஷ்டிர மாநிலத்தில்.
அத்தகைய சூழ்நிலை வரும்போது சர்க்கரை ஆலைகள் கரும்பு கிட்டாமல் பறப்பார்கள். கரும்பின் தேவை உயர்ந்து கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.
குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைவுதான். இதற்கு முக்கியக் காரணம் மேய்ச்சல் நிலமும் இல்லை. பசுந்தீவனமும் போதிய அளவுக்கு இல்லை. மகாராஷ்டிர மாநிலத்தைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் அத்தகைய கால்நடை முகாம்களை நடத்திக் கரும்பைப் பசுந்தீவனமாக விற்கக்கூடிய சந்தர்ப்பத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
காலாகாலத்தில் கரும்புக்கு நல்ல விலை விவசாயிகளுக்கு வரவேண்டும். கரும்புக்கு ரூ. 2,500 என்று விலையை நிர்ணயித்தால் மட்டும் போதாது. கரும்பு முற்றிய பத்தாம் மாதத்தில் நல்ல எடையில் விற்கப்பட வேண்டும். ஒன்றுக்குப் பாதியாக கரும்புக்கு எடை குறைவதால் சர்க்கரை நீர்ச்சத்து ஆவியாகிறது. குறைந்தபட்சம் பசுந்தீவனமாக, பசுமாட்டுக்காவது தரலாம் அல்லவா?
தமிழ்நாட்டில் ஒவ்வோராண்டிலும் விளைவித்த கரும்பை சர்க்கரை ஆலைகள் வாங்குவதில் தாமதம் செய்து நாள்களைக் கடத்தும் தந்திரம் தொடருமானால், மாப்படுகை முருகையன் கதையும் தொடர்ந்து, கரும்பு வயல்கள் எல்லாம் பலிபீடங்களாகி, விவசாயிகளின் தற்கொலைப் பட்டியலில் தமிழ்நாடும் முன்னணி மாநிலமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...