முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பருத்திச் சண்டை பஞ்சாய் பறப்பது ஏன்?

இந்தியாவில் நாட்டுநலன் கருதி எப்போதாவது அபூர்வமாக எடுக்கப்படும் சில நல்ல முடிவுகள்கூட மத்திய அமைச்சர்களின் குடுமிப்பிடி சண்டையாக மாறிவிடுகிறது. நமது பிரதமர் இந்தியாவை மௌனமாக அமெரிக்காவுக்கு விற்று வரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:45 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்தியாவில் நாட்டுநலன் கருதி எப்போதாவது அபூர்வமாக எடுக்கப்படும் சில நல்ல முடிவுகள்கூட மத்திய அமைச்சர்களின் குடுமிப்பிடி சண்டையாக மாறிவிடுகிறது. நமது பிரதமர் இந்தியாவை மௌனமாக அமெரிக்காவுக்கு விற்று வருவது பற்றாமல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பவார், தன் பங்குக்கு நோயுற்ற பருத்தி ஆலைத் தொழிலை சீனாவுக்கு விற்பதில் முனைப்பாக இருப்பதால் இவருடைய கவனத்துக்கு வராமலேயே வர்த்தக அமைச்சரகம் பஞ்சு ஏற்றுமதியைச் சிறிது காலத்துக்குத் தடைசெய்துவிட்டதால், பற்றி எரிகிறார் பவார்.

வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் (தயாநிதி மாறனிடமிருந்து பறிக்கப்பட்ட துறை)ஆனந்த் சர்மாவுக்கும் பவாருக்கும் நிகழ்ந்து வரும் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் நிதியமைச்சரைப் பஞ்சாயத்து செய்யப் பணித்துள்ளார். இந்த நாடகம் மார்ச் 5, 6-ம் தேதிகளில் நிகழ்ந்துள்ளதை நாடறியும்.

பருத்தி சாகுபடி செய்து நஷ்டமாகி ஆயிரக்கணக்கான விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமான பவார் - பிரதமர் கூட்டணி இன்று ஜவுளித் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரையும் தற்கொலைக்குத் தூண்டும் விதத்தில் பஞ்சு ஏற்றுமதித் தடையை மறுபரிசீலனை செய்யும்படி கூறியுள்ளது. பஞ்சு ஏற்றுமதியால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிட்டும் என்ற பொய்யைக் கூறித் தன்னை விவசாயிகளின் பாதுகாவலராகவும் காட்டிக்கொள்ள அவர் தயங்கவில்லை.

விவசாயிகளிடமிருந்து கொள்முதலாவது விதை நீக்கப்படாத கபாஸ் பருத்தியே தவிர, விதை நீக்கப்பட்ட பஞ்சு அல்ல. விதை நீக்கம் செய்த பஞ்சு, அதாவது பல மாதங்களுக்கு முன்பு மலிவு விலையில் விவசாயிகளிடமிருந்து விதையுடன் கூடிய சுத்தம் செய்யப்படாத பருத்தியை ஜின்னிங் ஆலைகள் வாங்கி, சுத்தம் செய்து 175 கிலோ பேல்களாக பேக் செய்து பஞ்சு வடிவில் ஏற்றுமதி செய்கிறது அல்லது உள்ளூர் நூற்பு ஆலைகளுக்கு வழங்குகிறது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் சமயத்தில் பஞ்சு ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது உண்டு. விவசாயிகளிடம் சரக்குத் தீர்ந்ததும் ஏற்றுமதித் தடை நீக்கப்படும். மலிவு விலையில் வாங்கிய கபாஸ் பருத்தியைப் பஞ்சாக மாற்றி ஏற்றுமதி செய்வோரும் ஊக வணிகம் செய்வோரும் லாபம் பெறுவது மரபு. இம்முறை பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை சரியான நேரத்தில்தான் விதிக்கப்பட்டுள்ளது.

""விவசாயிகளுக்கு நஷ்டம்'' ""விலை கிடைக்காது'' என்ற பேச்சுக்குப் பொருள் இல்லை. ஏனெனில், இனி செப்டம்பர் - அக்டோபரில்தான் புதிய பருத்தி சீசன். இப்போது விவசாயிகளிடம் பருத்தி இருக்க வாய்ப்பு இல்லை. எனினும், இன்று விதிக்கப்பட்ட தடைக்கும் பிப்ரவரியில் வெளிவந்த ஒரு செய்திக்கும் தொடர்பு உண்டா என்று பகுத்தறிவது நன்று.

சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி. சிங், இந்தியாவிலிருந்து ஸ்விஸ் வங்கிக்குச் சென்று பதுக்கி வைக்கப்பட்ட பணம் 24.50 லட்சம் கோடி என்பதாகவும், சுரங்க ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் கல்மாடி ஊழல், 2ஜி-யின் ராஜ ஊழல் ஆகியவை மூலம் பெறப்பட்ட கருப்புப் பணம் எப்படியெல்லாம் பயணம் செய்து சுவிட்சர்லாந்து செல்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

ஹவாலா வடிவில் துபாய் செல்கிறது. பின்னர் சிங்கப்பூர். சிங்கப்பூரிலிருந்து மூடிக்கம்பெனிகள் அதாவகு செல்கம்பெனி மூலம் வரியில்லா உலகமான மோரீஷஸ், கேமேன் தீவு, விர்ஜின் தீவு வந்து, ஸ்விஸ் வங்கிக்குப் போவதாக ஒரு பேச்சு உள்ளது.

2010-11 ஆண்டுக்கான பஞ்சு ஏற்றுமதி 84 லட்சம் பேல் (1 பேல் - 170 கிலோ) என்று அன்னிய வர்த்தகத் துறை அதிகபட்ச நிர்ணயம் செய்துள்ளதை மீறி 94 லட்சம் பேல் ஏற்றுமதியாகிவிட்டது. இப்படி குறி இலக்கை மீறிய 10 லட்சம் பேல் ஹாங்காங்கில் பதுக்கப்பட்டுள்ளது. 2 பேல் கொண்ட 1 கேண்டி பஞ்சுவிலை ரூ. 4,000 என்று கொள்வோமானால், பதுக்கப்பட்ட பஞ்சு மதிப்பு 10,00,000 ஷ் 2000 ஆகும். இப்படிப் பதுக்கியவர்கள் சீன ஏஜண்டா? இந்திய ஏஜண்டா?

கடந்த ஆண்டு ஒரு கேண்டி பஞ்சு ரூ. 5,000 விற்றது. இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி உற்பத்தி கூடியதால் ரூ. 4,000-க்குக் குறைந்துள்ளது. என்ன விலை விற்றாலும் சீனாவின் தாகத்தைத் தீர்க்க முடியாது. விலை ஏறிய பின்பு சீனாவுக்கு விற்றுவிடும் திட்டம் உண்டு. இப்படிப் பதுக்கல் நிறுவனத்துக்குப் பஞ்சு விற்றதில் யாருக்கு எவ்வளவு பங்கு ஸ்விஸ் வங்கியில் வரவானதோ தெரியவில்லை. ஹாங்காங்கில் இந்தியப் பஞ்சு பதுக்கப்பட்ட விஷயமறிந்த பின்னரே இந்தத் திடீர் தடை. இந்தத் தடையை 5-3-2012 அன்று விதித்தவர் அன்னிய வர்த்தகத் துறை டைரக்டர் ஜெனரல் ஆவார்.

பஞ்சு ஏற்றுமதியில் உள்ளூர்த் தேவை புறக்கணிக்கப்பட்டு ஏற்றுமதிக்கு மட்டுமே வழங்கப்படும் அதிக முக்கியத்துவம் இந்தியாவின் ஜவுளித்தொழிலை நசுக்கிவிடும்போல் தெரிகிறது. பருத்தி உற்பத்தியில் தொடங்கி பருத்தி பஞ்சாகிப் பின் நூலாகி, நூல் துணியாகி, துணி உடையாகி ஏற்றுமதியாகும்வரை எண்ணிப் பார்த்து இப்படி எண்ணிப் பார்த்ததை சீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நெஞ்சம் புண்ணாகிறது. தேசத்தின் மரியாதையைக் குறிக்கும் இந்திய ஜவுளித்தொழிலின் அலங்கோலம் தேசிய அவமானமாக மாறிவிட்டதும் புலனாகும்.

இந்திய விடுதலைக்கு ஆதார சுருதியாக விளங்கிய மகாத்மா காந்திக்கு ""கைராட்டினமே கதர் பூட்டினோமே'' என்று பாரதியார் கவிபாடி மாலை போட்டார். மகாத்மா காந்திக்கு வெற்றி தேடித்தந்த போராட்டம், ""சுதேசி கதர் இயக்கம்'' ஆகும். கிளாஸ்கோ, லங்காஷைர் மில் துணிகளை வீதிகளில் கொளுத்தி வளர்ந்தது சுதேசி கதர் இயக்கம். கதர் துணி மட்டுமல்ல, கைத்தறி நெசவு, பவர்லூம், நூற்பு ஆலை, ஜவுளி ஆலை எல்லாமே இந்தியாவின் மரியாதைகள். இந்த மரியாதைகளை நினைத்துத்தான் மகாத்மா காந்தி பஞ்சு ஏற்றுமதியை அனுமதிக்க மறுத்தார். அவ்வாறு அன்று பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்தான் மும்பையும் கோவையும் ஜவுளித்தொழிலால் செழித்தது.

கச்சாப் பொருள் பிரச்னையாகும் என்று எண்ணித்தான் பிரிட்டிஷ் நிறுவனங்களால் சென்னையில் பின்னி மில், மதுரையில் ஹார்வி மில் உருவாயிற்று. இங்கிலாந்துக்குப் பஞ்சு ஏற்றுமதியை காந்தி தடை செய்தார். இன்று நம்மை ஆள்பவர், சீனாவுக்குப் பஞ்சு ஏற்றுமதியை அனுமதிக்கிறார்.

கடந்த மூன்றாண்டுகளில் சராசரிப்படி உலக உற்பத்தி பருத்தி கபாஸ் (விதையுடன்) வடிவில் 22 கோடி டன்களாகும். மொத்த உலக உற்பத்தியில் சீனாவின் பங்கு 30 சதவிகிதம். இந்தியாவின் பங்கு 25 சதவிகிதம். பின்னர் அமெரிக்கா 10 சதவிகிதம். பாகிஸ்தான் 10 சதவிகிதம். இவற்றில் சீனாவின் நுகர்வு 10.1 கோடி டன்கள். இந்தியாவின் நுகர்வு 7.7 கோடி டன்கள்.

இரண்டு நாடுகளுமே நுகர்வு அடிப்படையில் பற்றாக்குறை நாடுகள். சொந்த உற்பத்திக்கு மேல் உபரி இருப்பு மற்றும் இறக்குமதி செய்துதான் தொழில் தேவை நிறைவு செய்தாக வேண்டும். ஒருகாலத்தில் ஜவுளித் தொழிலில் முதல் நிலை வகித்த இந்தியா இன்று இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. முதலிடத்தில் உள்ள சீனா இந்தியாவால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டது. பஞ்சை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று கூறிய காந்தியை நாம் மறந்துவிட்டதால் வந்த வினை இது.

பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சீனா பஞ்சை ஏற்றுமதி செய்யாமல் உலகச் சந்தையில் எவ்வளவு விலை விற்றாலும் பஞ்சை இறக்குமதி செய்தவண்ணம் உள்ளது. ஆனால், இந்தியாவோ கதர், கைத்தறி, நூற்புத் தொழில்களை நசித்தவண்ணம் உள்ளது. ஒவ்வோராண்டும் நூற்பு ஆலைகளும் ஜவுளி ஆலைகளும் திவாலாகி மூடும் நிலையில் உள்ளன. சாராய வியாபாரியான விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு அரசு உதவ முன்வருகிறது. ஆனால், நோயுற்ற ஜவுளித் தொழிலைப் பற்றிய அக்கறையில்லாத இந்திய அரசு பஞ்சாக ஏற்றுமதி செய்து சீனாவை வாழ்விக்கத் தயாராக உள்ளது. இந்திய ஜவுளித்தொழில் சரிந்து வருவதால், சீனா நிமிர்ந்து நிற்கிறது.

பருத்தியை - அதாவது கபாûஸக் கொட்டை நீக்கிச் சுத்தம் செய்து பஞ்சாக்கிப் பின் நூலாக்கித் துணியாக்கிப் பின்னலாடைகளாக்கி இந்தியாவும் ஏற்றுமதி செய்கிறது. சீனாவும் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 200 பில்லியன் டாலர் என்றால் சீன ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 12 ட்ரில்லியன் யு.எஸ். டாலர். இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகம். இந்தியாவிடம் பஞ்சு வாங்கி நூற்று ஆடையாக்கி பன்மடங்கு மதிப்புக் கூட்டி விற்கும் சீனா புத்திசாலியா? இந்தியா புத்திசாலியா?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வித்தியாசம் எதுவெனில், சீனாவுக்கு வணிகம் அத்துப்படி. சீன வணிகத்தில் தேசநலம் உள்ளது. இந்தியாவுக்கு வணிகம் தெரியாதது அல்ல. தேசநலம் புறந்தள்ளப்பட்டு சுயநலமும் சுயலாபமும் முந்தி நிற்பதைக் கவனிக்கலாம்.

பஞ்சு ஏற்றுமதிக்குத் தடைவிதித்து இந்தியாவில் உள்ள நூற்பு ஆலைகளையும், ஜவுளி ஆலைகளையும் நல்ல லாபத்தில் இயங்க வைத்து மதிப்புக்கூட்டிய உடைகளாக ஏற்றுமதி செய்து பெறும் லாபத்தில், பருத்தி சாகுபடியாளர்களுக்கும் வழங்கிப் பருத்திக் கொள்முதல் விலையை உயர்த்துவதுதான் நல்ல தேசத்தொண்டு.

பஞ்சு ஏற்றுமதியில் ஊகவணிகத்துக்கும் பதுக்கலுக்கும் வழிவிடும் அளவில் அமைச்சர்கள் வாய்ச்சண்டை போடுவது நாட்டுக்கு அழகல்ல. குஜராத், மகாராஷ்டிரம் மாநில அரசுகளும் சரத் பவாருடன் சேர்ந்துகொண்டு பஞ்சு ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டுமென்று கோருவதால் பஞ்சு ஏற்றுமதி தொடரும். எனினும், பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய உத்தரவிட்ட அன்னிய வர்த்தகத்துறை டைரக்டர் ஜெனரலும், ஆனந்த் சர்மாவும் தங்கள் முயற்சியில் பெற்ற தோல்வி அவர்களுக்கல்ல. இது பாரத நாட்டின் தோல்வி, இந்திய ஜவுளித்தொழில்பெற்ற தோல்வியும்கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.