கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கோல் இந்தியா "கோல்-கேட்' ஆகலாமா?

கடந்த பல ஆண்டுகளாகவே "கோல் இந்தியா' நிலக்கரி ஊழல் பேசப்பட்டாலும் இந்த ஆண்டு ஆகஸ்டு 15, 66-வது சுதந்திர தின விழா கொண்டாடிய சூட்டோடு கோல் இந்தியா "கோல்-கேட்'டாகி 1.86 லட்சம் கோடி ரூபாய் "லபக்'கை ஆடிட்டர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:23 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

கடந்த பல ஆண்டுகளாகவே "கோல் இந்தியா' நிலக்கரி ஊழல் பேசப்பட்டாலும் இந்த ஆண்டு ஆகஸ்டு 15, 66-வது சுதந்திர தின விழா கொண்டாடிய சூட்டோடு கோல் இந்தியா "கோல்-கேட்'டாகி 1.86 லட்சம் கோடி ரூபாய் "லபக்'கை ஆடிட்டர் ஜெனரல் வினோத்ராய் (சி.ஏ.ஜி.) இந்தியப் பிரதமருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

2005-2009 காலகட்டத்தில் கேள்விக்குரிய தனியார் நிறுவனங்களுக்குக் "கோல் இந்தியா' (மத்திய அரசின் அரசுத்துறை நிறுவனம்) வகுத்தளித்துள்ள நிலக்கரி வயல்கள் (கோல் பிளாக்) மூலம் 1.85 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தில்லி நாடாளுமன்றமே இந்த அறிக்கையின் விளைவால் போர்க்களமாகிவிட்டது.

""கோல் என்றால் நிலக்கரி. கேட் என்றால் வாட்டர்கேட் போன்ற ஊழல். கோல்கேட் என்றால் நிலக்கரி ஊழல். பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 2 லட்சம் ஹெக்டேருக்கு கோல் இந்தியாவின் நிலக்கரி வயல்கள் பரந்து கிடக்கின்றன.

இந்த நிலக்கரி வயல்களிலிருந்து ஒழுங்கான முறையில் நிலக்கரியை வெட்டி அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு சென்றிருந்தால் "பவர்-கட்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மின் உற்பத்தி உயர்ந்திருக்கும். "கோல் இந்தியா'வின் நிலக்கரிச் சொத்து 64 பில்லியன் டன்கள். ஆண்டு உற்பத்தியோ 500 மில்லியன் டன்கள் மட்டுமே.

கோல் இந்தியாவின் செயல்பாடு ஆமைவேகம் என்று கூறித் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலக்கரிச் சுரங்க வயல்களைக் கூறுபோட்டு வழங்கியுள்ளது. கோல் இந்தியா ஒதுக்கிய 86 நிறுவனங்களின் ஊழல் முன் மதிப்பீட்டைத்தான் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் மற்றொரு தகவல் அடிப்படையில் 2004-09 காலகட்டத்தில் மொத்தம் 215 கோல் இந்தியாவின் சுரங்கவயல்களில் 150 வயல்களை மத்திய அரசின் நிலக்கரித் துறைச் செயலர் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

மேலும் 64 நிறுவனங்களின் கொள்ளை மதிப்பீட்டையும் சேர்த்தால் ஊழல் மதிப்பு 2 லட்சம் கோடியைத் தாண்டலாம்.

கோல் இந்தியா அரசு ஏகபோகம் உடைக்கப்பட்டு ""கேப்டிவ் செக்டார்'' உருவாக்கப்பட்டதாம். உலகமயம், தனியார்மயம் என்ற போர்வையில் கேப்டிவ் செக்டார் உருவானது. பப்ளிக் செக்டார், பிரைவேட் செக்டார் என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டோம். மூன்றாவதாக இன்று புழங்கப்பட்டுவரும் ""கேப்டிவ் செக்டார்'' என்ற சொல்லின் பொருள், ""அமைச்சர் + அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தின்கீழ் போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுப் (அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள்) பெறப்பட்ட நிலக்கரி உரிமத்தைப் பின்னர் நல்ல விலைக்கு விற்பதுதான்'' என்று புரிந்துகொள்ள முடிகிறது.

2005 - 2009 காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் - ஏலமுறை எதுவுமே பின்பற்றாமல் அள்ளப்படும் நிலக்கரியின் மதிப்பு 1.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை சுட்டிக்காட்டிய ஊழல் பணமதிப்பில் இல்லை. எந்தச் சட்டத்தில் எப்படிப்பட்ட நபர்களுக்கு எப்படி இந்த சுரங்க வயல்களில் அள்ளும் உரிமை வழங்கப்பட்டது என்பதில்தான் ஊழல்.

இந்த முறைகேட்டை பாரதிய ஜனதா கூட்டணி விவாதத்துக்கு விடாமல் அமளியில் ஈடுபடுவதன் நோக்கம் தேசிய முற்போக்குக் கூட்டணி இந்த முறைகேட்டை நியாயப்படுத்தி சட்டம் இயற்றி விடலாம் என்று அஞ்சுவதால்தான். இது இயல்பே.

லோக்பால் சட்டம் நீர்த்துப் போனதை நாடறியும். வழக்கப்படி முதலில் மன்மோகன் வாய் திறக்கவில்லை. எனினும், அவர் சார்பில் பேசிய நாராயணசாமி, ""ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் எல்லை மீறிவிட்டார் என்றும், அப்படியெல்லாம் ஊழலை மதிப்பிடக்கூடாது'' என்றும் கூறினார். ""பணியே நடக்காதபோது நஷ்டம் எப்படி வரும்?'' என்று சிதம்பரம் நவின்றபோது அவரின் பூசணிக்காய் ரகசியம் வெளிப்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல், இரண்டு நாள் கழித்து முழுப்பூசணிக்காயைச் சோற்றிலிருந்து வெளியே எடுத்து, ""ஐயய்யோ நான் அப்படிச் சொல்லவே இல்லை'' என்று கூறியது நல்ல நகைச்சுவை.

கோல்கேட் தொடர்பாக ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலின் கூற்று சற்றுப் பரவாயில்லை. சற்று அடக்கியே வாசித்துள்ளார். ஆடிட்டர் ஜெனரல் கண்டுபிடிப்பைப் பொதுக்கணக்குக் கமிட்டி பரிசீலித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்வரை பேச வேண்டாம் என்று கூறியவர், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள், ஏலம்விட்டு நிலக்கரி நில ஒதுக்கீட்டை வழங்கும் யோசனையை எதிர்த்ததால் ஏலம் இல்லாமல் அள்ளும் உரிமை வழங்கப்பட்டதாகக் கூறியவர், ""நல்லவேளை நான் அப்போது நிலக்கரி அமைச்சராகப் பதவி வகிக்கவில்லை'' என்று கூறியதும் நல்ல நகைச்சுவை.

பின்னர் ஒருவழியாக மன்மோகன் திருவாய் மலர்ந்தருளினார். ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை விவாதத்துக்குரியது என்றும், விஷயம் விவாதத்துக்கு வரும்போது பதிலடி கொடுப்பதாகவும், அரசின் நிலக்கரிக் கொள்கையில் ஒரு தவறும் இல்லை என்று கூறியது சரியே. பிரதமர் கொள்கையில் தவறு இல்லை என்றுதான் கூறினார். கொள்ளையில் தவறு இல்லை என்றால்தானே குற்றம்! எனினும் ஆடிட்டர் ஜெனரலைக் குற்றம்சாட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், ஊழலுக்குப் பொறுப்பேற்றுப் பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ், ஜேட்லி குரல் தூக்கினர்.

கோல்கேட்டில் காங்கிரஸ் மானம் கப்பலேறியது என்றாலும் யாரும் பதவி விலகப் போவதில்லை. மானம், மரியாதை என்று பார்த்தால் எந்த அமைச்சராலும் பதவியில் நீடிக்க முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆடிட்டர் ஜெனரல் வினோத்ராயின் நிலைப்பாட்டை அறிவது அவசியம். வினோத்ராய் எல்லை மீறிவிட்டதாகவும், ஊழல் முன்மதிப்பீடு செய்வதற்கெல்லாம் அவருக்கு உரிமை இல்லை என்றும் குற்றம் சுமத்தும் உரிமை நாராயணசாமிக்கும் இல்லை, பிரதமருக்கும் இல்லை. கன்ட்ரோலர் ஆஃப் ஆடிட்டர் ஜெனரல் (கடமைகள், அதிகாரம், பணி நிபந்தனை) சட்டம் 1971 ஷரத்துப்படி மத்திய அரசை எச்சரிப்பது அவர் கடமை. எரிசக்தி - மின்சக்தி பற்றிய தொழில்நுட்பங்களுடன் தொடர்பே இல்லாத போலி (பினாமி) நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் 1.86 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று எடுத்துக்காட்டியதற்கு அவரைப் பாராட்ட வேண்டும்.

மத்திய அமைச்சர்களுக்கு வால்பிடிக்கவா அவர் சம்பளம் வாங்குகிறார்? அரசு வருவாய் இழப்பைச் சுட்டிக்காட்டி அரசுக்கு அபாய அறிவிப்பைச் செய்யவே அவருக்கு அரசு சம்பளம் தருகிறது. ஆடிட்டர் ஜெனரல் பிரேதப் பரிசோதனையைச் செய்யும் டாக்டர் போன்றவர். ஒரு நபர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற கேள்வி வந்தால் தடயவியல் நிபுணத்துவம்பெற்ற அந்த டாக்டரால்தான் ருசுப்படுத்த முடியும். பழைய கணக்கு வழக்குகளைப் பார்வையிட்டு டிக்கடிக்கும் வேலைதான் அவர் உரிமை என்று கொள்ளையடிக்கும் அமைச்சர்கள் ஆடிட்டர் ஜெனரலை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டனர்.

அரசு அனல்மின் நிலையங்களுக்கு வரவேண்டிய நிலக்கரி வந்து சேராதது ஏன்? அப்படி எதுவும் தனியார் துறை மின் உற்பத்திக்குப் பயன்பட்டிருந்தால் அதுபற்றிய மின்சக்தி உடன்பாடு பற்றிய விவரம் என்ன? கடத்தப்படும் நிலக்கரி ஏற்றுமதியானதா? நிலக்கரியை அள்ள அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு மின் சக்தி உற்பத்தித் தொழில்நுட்பம் உள்ளனவா? இப்படிப் பலவாறாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ள வினோத்ராய்க்கு அப்படிக் கேள்வி கேட்கும் உரிமை உண்டு.

ஆடிட்டர் ஜெனரல் வினோத்ராய்க்கு ஆதரவாக நிலக்கரிச் சுரங்க நாட்டுடமைச் சட்டம் மட்டுமல்ல. சுரங்கம் மற்றும் சுரங்கப் பொருள் (ஒழுக்க விதிகள் மற்றும் வளர்ச்சி) என்ற சட்டமும் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குப்படி கோல் இந்தியா நிலக்கரியை உற்பத்தி செய்யாததால் கொள்ளைக்கு உதவிய கொள்கை நிபுணர்கள், அவசரப் பிரகடனம் என்ற பெயரில் நிலக்கரி உற்பத்தியைப் பெருக்குவதாகச் சொல்லி கோல் இந்தியாவின் சொத்துகளைக் களவாட அனுமதித்துவிட்டனர். இதன் மூலம் கோல் இந்தியாவைக் கோல்கேட்டாக்கி விட்டார்கள். ""கேப்டிவ் செக்டார்'' என்று பெயர் சூட்டி அவசரப் பிரகடனத்தின் மூலம் நிலக்கரி வயல்கள் தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டன.

2004-ம் ஆண்டிலேயே இப்படிச் செய்தும்கூட நிலக்கரி உற்பத்தி உயரவில்லையே, அது ஏன், ஏன், ஏன் என்று வினோத் ராய் கேட்பது தவறாகுமா? நிலக்கரி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ள மாஃபியா நிறுவனங்களை மாநில அரசுகளே தேர்ந்தெடுத்துள்ளன. மத்திய அரசு முறைகேடான நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை மாநில சட்டசபைகளின் அதிகார வரம்புக்குள் திணித்ததால் நிலக்கரி உரிமையாளரான கோல் இந்தியாவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி வயல்களின் பயனாளிகளிடமிருந்து சட்டப்படி நிலக்கரிக்குரிய விலையைப் பெற முடியாது என்பது கறுப்பான உண்மை.

விலையில்லாமல் நிலக்கரியை அள்ளி அனல் மின் நிலையங்களுக்கு விற்கலாம் என்றால் ஒதுக்கீடு ஏன்? திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்க டோக்கன் வழங்கி தர்ம தரிசனம் காட்டுவதுபோல் கோல் இந்தியா உண்டியலில் காசு போட்டுவிட்டு யார் வேண்டுமானாலும் அள்ளலாம் என்று விருப்பம் உள்ள அனைவருக்கும் டோக்கன் கொடுத்து வரிசைப்படி எல்லோரையுமே அள்ள வைக்கலாம். அப்படிச் செய்தால் மட்டுமே நிலக்கரி உற்பத்தி உயரும். அப்படிச் செய்யாமல் முதலில் வந்து முந்திக்கொண்ட நூறு பேருக்கு மட்டுமே உரிமம் என்பது என்ன நியாயம்?

மத்திய - மாநில அமைச்சர்களின் "பவரி'னால் நிலக்கரி மாஃபியாவுக்கு "வெளிச்சம்'. மக்கள் பெறுவது "இருள்'. தமிழ்நாட்டில் மாஃபியாக்கள் ஆற்றுமணல் அள்ளலாம். மதுரைக் கும்பல் "டாமினுக்கு'ச் சொந்தமான கருங்கல்லை வெட்டி ஜப்பானுக்கு அனுப்புகிறது. இவர்கள் வடக்கே சென்றால் நிலக்கரியை அள்ளலாம். மதிய உணவு இலவசம். தாலித்தங்கம் இலவசம். டி.வி., மடிக்கணினி இலவசம். அரிசி, மணல், கருங்கல், நிலக்கரி இலவசம். எல்லாமே நமது வரிப்பணம்!

காலையில் எழுந்ததும் பாத்ரூம் கண்ணாடிமுன் நின்று பற்கள் 32-ம் தெரியுமாறு "ஈ'யென்று இளியுங்கள். ஏமாளியாகக் காட்சி தருவீர்கள். பற்களைத் தேயுங்கள். உங்களது கோல்கேட் பற்பசை இலவசம் இல்லை. வாழ்க பாரதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.