தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செய்ய வேண்டியது அதிகம்...

உலக வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தொழிலை சிக்கல் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் மொத்தம் உள்ள 189 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2014, 7:47 pm

ம. விஸ்வநாதன்

உலக வங்கி கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், தொழிலை சிக்கல் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் மொத்தம் உள்ள 189 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 158-ஆவது இடத்திலும், கட்டுமான அனுமதி வழங்கும் விவகாரத்தில் 184-ஆவது இடத்திலும், ஒப்பந்தங்களை அமலாக்கம் செய்வதில் 186-ஆவது இடத்திலும், மின்சார விநியோகத்தில் 137-ஆவது இடத்திலும், சொத்துகளைப் பதிவு செய்வதில் 121-ஆவது இடத்திலும், கடன்களைப் பெறுவதில் 36-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் மின்சாரத்தை மக்கள் பெறுவதில் 137-ஆவது இடத்தில் உள்ளோம் என்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாகும். மின்சாரம் பெறுவதற்கு சராசரியாக 106 நாள்கள் ஆவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஒரே ஒரு விஷயத்தில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலன்களைக் காப்பதில் இந்தியா கடந்த ஆண்டு 21-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 14 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தொழிலைச் சிக்கல் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் நமது அண்டைநாடுகளான சீனா 90-ஆவது இடத்திலும், இலங்கை 99-ஆவது இடத்திலும், நேபாளம் 108ஆவது இடத்திலும், பூடான் 125-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 128-ஆவது இடத்திலும் உள்ளன.

நமது அண்டை நாடுகளில் வங்கதேசமும் (173), ஆப்கானிஸ்தானும் (183) மட்டுமே நம்மை விடப் பின்தங்கியுள்ளன. ஜனநாயகம் வேரூன்றி தழைத்தோங்கும் இந்தியாவோ கடந்த ஆண்டை விட 2 இடங்கள் பின்தங்கி 142-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 9 ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்துவருகிறது. நியூஸிலாந்து, ஹாங்காங், டென்மார்க், தென் கொரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

இதில், சீனாவில் ஜனநாயகமே கிடையாது. நேபாளம் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையோ உள்நாட்டுப் போரில் பல ஆண்டுகள் ஈடுபட்டிருந்தது.

பாகிஸ்தானை "தோல்வியுற்ற நாடு' என்றே சொல்லலாம். இந்த நாடுகள் எல்லாம் நம்மை விட, தொழில் நடத்த உகந்த நாடுகளாக உள்ளன என்று உலக வங்கியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஜனநாயக நாடு என்பதால் முடிவெடுப்பதில் உள்ள சிரமம், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மெத்தனமாக செயல்படும் அரசு நிர்வாகம், எல்லா நிலைகளிலும் புரையோடிப் போயிருக்கும் ஊழல், எந்தவொரு பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாடுதல், அதன் காரணமாக செயலாக்கத்தில் ஏற்படும் தொய்வு போன்றவற்றால் இந்த நிலை இருப்பதாகக் கருதப்படுகிறது.

இப்போது பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகவே அறிவித்திருக்கிறார். இப்போது எல்லாமே கணினிமயமாகிவிட்ட நிலையில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதில் சிக்கல் அதிகம் இல்லை.

எந்தவொரு விஷயமானாலும் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். அரசு ஊழியர்களும் அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என்பது ஓரளவு நடைமுறைக்கு வந்துள்ளது.

இவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு ஊழலை ஓரளவுக் கட்டுக்குள் கொண்டுவருவதால் மட்டுமே இந்தியாவில் தொழில் முனைவோருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.

அத்தகைய ஒரு நிலை தோன்றினால், உலகில் உள்ள 189 நாடுகளின் பட்டியலில், பல்வேறு விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா முன்னேற வாய்ப்பு உள்ளது.

அப்படியொரு திருப்பம் ஏற்படும்போதுதான் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடை போடுவதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.