முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உழைக்காமல் பெறும் ஊதியம்!

உழைப்பின் பொருளை அறிய காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற பைபிளைப் படித்தல் நலம். காரல் மார்க்ஸ், "உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்த

News image
Updated On :27 மே 2016, 8:16 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

உழைப்பின் பொருளை அறிய காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற பைபிளைப் படித்தல் நலம். காரல் மார்க்ஸ், "உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்த செயல்பாடு என்றும் இச்செயல்பாட்டில் மனிதனின் சுயவிருப்பம் தோன்றுகிறது, ஒழுங்குபடுகிறது. அதாவது, மனிதன் இயற்கைமீது செயல்படும்போது தானும் மாறுகிறான். இயற்கையை மாற்றியமைக்கிறான். இயற்கையை மாற்றியமைக்கும் போது மனித சுபாவம் விழிப்புற்றுத் தன் தேவைக்கு ஏற்ப இயற்கையை ஆட்கொள்கிறான்", என்கிறார்.
 உழைப்பின் செயல்பாட்டில் - பயன், இலக்கு, உற்பத்திக் கருவிகள் மூன்றும் அர்த்தமாகின்றன. உற்பத்திக் கருவிகளைக்கொண்டு இலக்கை நோக்கிச் செயல்படுவது உழைப்பு. இலக்கு என்பது மனிதனின் வாழ்நிலை. இந்த வாழ்நிலைக்கு உழைப்பு வழிகாட்டுகிறது. சொல்லப்போனால் உழைப்பு தான் மனிதனை உருவாக்குகிறது.
 மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்தும் உழைப்புக்கு மனிதன் நன்றி செலுத்தவேண்டும். விலங்குகள் இயற்கையை மாற்றாமல் இயற்கை வழங்குவதை அப்படியே உண்கின்றன. மனிதனோ இயற்கையை மாற்றித் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான்.
 வரலாற்றில் சமூக உறவுகளின் மாற்றங்களைப் பொருத்து உழைப்பின் முறைகள் தோன்றுகின்றன. உதாரணமாக, உற்பத்தி சாதனங்கள் பொதுவாக உள்ளபோது உழைப்பின் முறையும் பொது. வரலாற்றுக்கு முற்பட்ட கூட்டு சமுதாய உற்பத்தி உறவுகளில் உழைப்பு பொது. அதாவது, எல்லோரும் உழைத்து உழைப்பின் பலன் பங்கிடப்பட்டது. இதில் சுரண்டல் இல்லை.
 கூட்டு சமுதாய உற்பத்தி முறை மாறி அடிமை சமூகம் உருவானபோது அடிமை உழைப்பில் சுரண்டல் ஏற்பட்டது. இது நிலப்பிரபுத்துவ மன்னர் நியதியானது. பின்னர் முதலாளித்துவம் தோன்றிய போதும் உழைப்பின் சுரண்டல் நீடித்தது. சோஷலிசப் புரட்சியால் மட்டுமே உழைப்பின் சுரண்டலை நிறுத்தமுடியும். சோஷலிசப் புரட்சி மலர்விக்கும் கம்யூனிச சமுதாயத்தில் உழைப்பின் சுரண்டல் முற்றிலும் நீக்கப்படுகிறது.
 காரல் மார்க்ஸ் (1818-83) ஒரு ஜெர்மானியர். 1867-இல் "மூலதனம்' முதல் தொகுதி வெளிவந்தது. அவர் மறைவுக்குப் பின் 1885-இல் இரண்டாவது தொகுதியும் 1894-இல் மூன்றாவது தொகுதியும் வெளிவந்தன. மூலநூல் ஜெர்மனியில் எழுதப்பட்டதை பிரஞ்சு, ரஷிய, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது தமிழிலும் உண்டு.
 இப்படிப் பல மொழிதாண்டி வரும்போது மொழிச்சிக்கல்களால் புரிதல் கடினமாயிருக்கலாம். ஆகவே, சாமானியனுக்கு மட்டுமல்ல, சற்று படித்தவனும் சிரமப்படலாம்.÷"மூலதனம்' அறிவுஜீவிகளின் பெட்டகமாக இருந்து வருகிறது. மனிதன் - இயற்கை இணைந்த செயல்பாடு, இயற்கையை மாற்றியமைத்தல், பொருள் முதல்விளைவு. ஏதாவது புரிகிறதா? இயற்கை என்றால் அது மரம், செடி, கொடி, பசுமை, பறவை என்று மார்க்ஸ் பொருள் கொள்ளவில்லை. இயற்கை என்றால் நிலக்கரிச் சுரங்கம் என்று பொருள் கொள்ளலாம்.
 மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் தொழில்புரட்சிக்கு நிலக்கரி அன்று அடிப்படை. நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரி எடுத்து எரிசக்தி உருவாக்கி ரயில் எஞ்சின் ஓட்டுவது மனிதன்-இயற்கை செயல்பாடு, பொருள் முதல்விளைவு அர்த்தமாகிறது. இதில் தொழிலாளர் பங்கு-நிலக்கரி விற்பனையில் 100 சதவீதம். சுரங்க முதலாளி பங்கு பூஜ்யம். மார்க்ஸின் உபரி மதிப்பு தத்துவம் இதை விளக்கும். இப்படி விளக்கம் செய்தால் குழப்பம் ஏற்படலாம். ஆற்றுமணல் இயற்கை. மனிதன் இந்த இயற்கையை அள்ளி வீடாக மாற்றியமைக்கிறான். ஆகவே, ஆற்றுமணல் அள்ளுவது மார்ச்சியம்.
 திருவாரூர் தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில் கம்யூனிச-மார்க்சிய தத்துவங்களைத் தங்கள் கடந்தகால ஆட்சி செயல்படுத்தியதாகப் பெருமிதம் கொண்டார். கருணாநிதியின் விளக்கத்தில் தெளிவு உண்டு. வணிகக் கூட்டாண்மை காலம் இது. மல்லையா கிங்க்ஃபிஷர் என்றால், பேரன் மாறன் ஸ்பைஸ்ஜெட். வணிகக் கூட்டாண்மை லாபம், பங்குகள், டிவிடென்ட், வட்டி பற்றியெல்லாம் கருணாநிதியிடம் கம்யூனிச விளக்கம் பெறலாம்.
 உழைப்பின் பொருள் கம்யூனிசம் என்பது தத்துவம். கம்யூனிச தத்துவம் நிலை பெற்றதா? 1917}இல் ரஷியாவில் கம்யூனிஸ்டுப் புரட்சி ஏற்பட்டது. 1949-இல் சீனாவிலும் கம்யூனிஸ்டுப் புரட்சி ஏற்பட்டது. தனி உடைமைக் கொடுமை மாறிப் பொது உடைமை மலர்ந்தது. ஆனால், இவை நீடித்தனவா? பொது உடமை நீடிக்க வேண்டுமானால், உழைப்பின் மதிப்பு காப்பாற்றப்பட வேண்டும். அதிகார வர்க்கத்தின் ஊழலாலும் தொழிலாளர்களின் சோம்பேறித்தனத்தாலும் கம்யூனிச நாடுகளில் பொதுத் துறை நலிவுற்றது.
 1980-களில் உலகமயமாதல் தத்துவம் வந்தது. உலகமே ஒன்று என்றால் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் வியாபாரம் செய்யலாம். இந்திய நிறுவனம் சக்தியிருந்தால் அமெரிக்காவில் தொழில் தொடங்கலாம். கம்யூனிச சோஷலிச நாடுகளை உலகமயமாதல் கவர்ந்திழுத்த வேளையில், 1985-இல் மைக்கேல் கோர்பசேவ், லெனின்,ஸ்டாலின் காலத்து கம்யூனிச சர்வாதிகாரக் கொடுமைகள், கொலைகள் பற்றிய ஆவணங்களை வெளியிட்டு ஜனநாயகத்தை மலரச் செய்தார்.
 ரஷியாவைத் தொடர்ந்து சீனாவும் கம்யூனிசத்தைக் கைவிட்டு அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தது. இன்று உலகம் முழுவதும் கம்யூனிசம் வரலாறாகிவிட்ட சூழ்நிலையில் உலகமயமாதல் என்ற லோகாதாயத்தில் பொருளியல் அளவுகோல் ஜி.டி.ப்பி என்று சொல்லப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி. சேவை, ஏற்றுமதி மதிப்பு நாட்டு வளர்ச்சியை கணிக்கிறது. இதன் இலக்கு முழுவேலைவாய்ப்பு.
 தனிநபர் வருமானம் என்ற அளவுகோல் மூலம் வறுமை கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வேற்றுமையில் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. வளரும் பொருளாதாரத்தில் வறுமையும் ஏற்றத்தாழ்வும் அதிகம். திட்டமிட்ட தொழில் வளர்ச்சி, கார்ப்பரேட் வளர்ச்சி, ஏற்றுமதி ஆகியவற்றின் பலன் ஏழைகளை அடையத் தாமதமாகிறது.
 2006 தேர்தலில் தி.மு.க.வின் இலவச டி.வி. வெற்றிக்கு உதவியது. இலவசம் என்று அறிவிக்கும் போது எதிர்காலத்தை எண்ணும் தீர்க்க தரிசனம் கருணாநிதியிடம் இருந்தது. இலவசம் டி.வி. மட்டுமே. அப்போது கேபிள் இணைப்பு தனியார் ஆதிக்கத்திலிருந்தது. குறிப்பாக, சன் குழமம் கருணாநிதிக்கு நெருங்கிய உறவு. அரசுச் செலவில் டி.வி.யை வழங்கிவிட்டு அதனால் பெறக்கூடிய கூடுதல் கேபிள் கட்டணம் சன் குழமத்திற்குச் சென்றதை நாடறியும்.
 2011 தேர்தலில் அ.தி.மு.க. விழித்துக் கொண்டது. அரசு கேபிள் நிறுவனத்தைப் பொதுத் துறையில் நிறுவி கேபிள் கட்டணச் செலவை மலிவாக்கியது. மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், ஆடு, பசுமாடு என்று ஏகப்பட்ட இலவசங்களை வழங்கி 2011 தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது.
 2016 தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கைபேசி இலவசம் என்றாலும் கைபேசி இல்லாத மக்களே தமிழ்நாட்டில் இல்லை. எனினும், இலவசங்களோடு 100 நாள் வேலைத்திட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதை 150 நாள்களுக்கு உயர்த்துவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
 உற்பத்தித்திறன் இல்லாத 100 நாள் வேலைத்திட்டம் ரத்தாகுமானால் அது விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும். இது 150 நாள்களுக்கு நீடிக்குமானால் விவசாயத்திற்கும் வீட்டுவேலைக்கும் ஆள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.
 ஏனெனில், வேலையே செய்யாமல் தினமும் ரூ.200 கிடைக்கிறது. டி.வி., கணினி, மிக்ஸி என்ற இலவச செலவு 1 முறைதான். 100 நாள்களும் இலவசமாக 200 ரூ. என்பது தான் பெரிய தண்டச் செலவு. உழைக்காமல் பெறும் ஊதியம் இதுவே.
 உதாரணத்திற்கு என் வீட்டு மாடியிலிருந்து தினமும் நான் காணும் ஒரு காட்சி இதைப் பற்றியதே. என் வீட்டு மாடியிலிருந்து தென்கிழக்கே ஒரு குட்டை உள்ளது. ஓரமாக ஒரு புளியமரம். காலை சுமார் 10 மணி அளவில் சுமார் 100 பெண்கள் கூடுவார்கள்.
 பெயர்ப் பதிவுக்குப்பின் சுமார் 30 நிமிஷம் வரிசையில் நின்று படுகை மண்ணை அள்ளிக் கரையில் கொட்டுவார்கள். பின்னர், புளியமர நிழலில் கலந்துரையாடல். பின்னர் காணாமல் போய்விடுவார்கள். பின் மாலை 3 மணி அளவில் கூட்டம் சேரும். ஒரு மணிநேரம் கலந்துரையாடல் (ஊர்வம்பு பேசுதல்) பெயர்ப் பதிவுடன் வீடுதிரும்புதல்.
 மழைபெய்தவுடன் மேலே கொட்டிய மண் படுகைக்கு வந்துவிடும். மண் மீண்டும் அள்ளவே கொட்டிய மண் படு கைக்கு வரும். கடந்த 10 ஆண்டுகளில் குட்டையின் படுகையில் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது.
 இந்தப் பெண்கள் 10 ஆண்டு செய்த வேலையை ஒரு ஜே.சி.பி.யை விட்டால் 5 மணி நேரத்தில் மிக நேர்த்தியாக 3 அடி ஆழப்படுத்திவிடும். ஆகும் செலவு ரூ.3,000. இந்தப் பெண்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணம் ரூ.4,00,000. எனினும் குட்டையோ நிரம்பியபாடில்லை.
 பெருமழை பெய்தால் 1 வாரம் தண்ணீர் தெரியும். வடக்கே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட குளத்து வேலைத் திட்டத்தில் சில தொண்டு நிறுவனங்களும் வனத் துறையும் இணைந்து செயலாற்றுகின்றன. குளத்தில் அடிக்குழாய் இறக்கி நீர்பிடித்துக் கரையில் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றுவார்கள்.
 நீர்வரத்துப் பகுதியிலும் மரக்கன்று நட்டு 5 ஆண்டுகளில் சோலையாக்கி விடுவார்கள். மரங்கள் காரணமாக நீர் ஆவியாகாமல் குளங்களில் நீர் வற்றுவதில்லை. கரைகளில் மண் அரிப்பும் ஏற்படுவதில்லை. இவ்வாறு செய்தால் 100 நாள் வேலைத்திட்டம் உற்பத்தித் திறனுள்ளாதாக மாறும்.
 தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற கட்சி இதை யோசிப்பது நன்று. தேர்தல் வெற்றிக்காகப் பொருள் வடிவில் வழங்கும் இலவசங்களை மன்னிக்கலாம். குளத்து வேலைத் திட்டம் என்ற பெயரில் 100 நாள் இலவசத்தை 150 நாள் இலவசமாக்குவதை மக்கள் ஏற்கவில்லை என்பதைத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது. உழைக்காமல் பெறும் ஊதியம் மார்க்சிய உழைப்பு சிந்தனை அல்ல.
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.