/

விவசாயி நல்வாழ்வுக்கு ஓர் ஆணையம்

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்... கூடவே 70,000 விவசாயிகளின் உயிர்களும் போகும்.

News image
Updated On :16 மார்ச் 2018, 10:16 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்... கூடவே 70,000 விவசாயிகளின் உயிர்களும் போகும். ஒரு மணி நேரத்திலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஒரு விவசாயி தூக்கில் தொங்கலாம். பாலிடால் குடித்து வயல்காட்டில் மடிந்து கிடக்கலாம். விவசாயிகளின் தற்கொலைகள் பற்றிய செய்திகள் நம்மைத் துணுக்குறச் செய்கிறது.
விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தி வரும்போது, சாலை விபத்து செய்தியைப் படிப்பது போல் எந்தச் சலனமும் இல்லாமல் நாமும் அன்றாடம் நாளிதழ்களைப் புரட்டி நாளை ஓட்டுகிறேம்.
விவசாயிகளின் தற்கொலை என்பது ஏறத்தாழ தேசப் பகைவர்களுடன் போராடி வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் உயிர் பலிக்கு ஒப்பானது. விவசாயிகளின் தற்கொலை ஒரு தியாக மரணம் என்று நாம் அஞ்சலி செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
விவசாயம் செய்து நஷ்டப்பட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் பிள்ளைகள்... பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்ட கிராமம் ஒன்றில் அவதார் சிங் பத்தாண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 2017-இல் அவர் புதல்வர்கள் 40 வயதான ரூப்சிங்கும் 32 வயதான பசந்த் சிங்கும் தற்கொலை செய்து கொண்டனர். 1 ஹெக்டேர் சொந்த நிலத்துடன் 10 ஹெக்டேர் குத்தகைக்கு எடுத்துச் செய்த தீவிர விவசாயம் லாபம் தரவில்லை. மேலும் கடன், மேலும் கடன் என்று கடன் தொடர்ந்து தொகை பெருகியது. முதல் கடனைக் கூட தீர்க்க முடியாத சூழ்நிலையில் இரு இளம் விவசாயிகளை பாரதம் பறி கொடுத்தது. 
கடந்த 21 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,20,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவு உற்பத்தி செய்து மக்கள் பசியைப் போக்கும் விவசாயிகளில் பலர் இரவில் உண்ணச் சோறில்லாமல் உறங்கச் செல்வதைக் கேள்விப்பட்டு வேதனைப்படுவதைவிட வேறு என்ன செய்வது?
உணவு தரும் விவசாயிகளை வாழ வைக்க வழங்கப்படும் ஆதரவு விலைகள் நிராதரவு ஆகிவிட்டன. 2009-ஆம் ஆண்டிலிருந்து 2013 வரை குறைந்தபட்ச ஆதரவு விலை சராசரியாக 19.3 சதவீதம் ஆண்டுதோறும் உயர்ந்த நிலையில், 2014-இலிருந்து 2017 வரை அதன் சராசரி உயர்வு 3.6 சதவீதம் மட்டுமே. அதே சமயம், அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூட்டித் தரப்படும் சம்பளப்படி விவசாயிகளுக்கு ஏற்றித் தரப்படும் கொள்முதல் விலையைவிட பன்மடங்கு உயர்வாக உள்ளது. 
உதாரணத்திற்கு, ஒரு பள்ளி ஆசிரியர் சம்பளத்தை எடுத்துக் கொள்வோம். 1970-இல் சராசரி ரூ.100-மாதச் சம்பளம். 2015 புள்ளிவிவரப்படி அவர் சம்பளம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் சம்பளம் 150 மடங்கும் கல்லூரிப் பேராசிரியர் சம்பளம் 200 மடங்கும் உயர்ந்துவிட்டது. ஆனால் அரிசி, கோதுமை கொள்முதல் விலை 20 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. 
கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் விவசாயச் செலவு மற்றும் விவசாய விலைக் கமிஷன் வழங்கும் கணக்குப்படி, மகாராஷ்டிரத்தில் நெல் விளைச்சல் மூலம் ரூ. 966- லாபம் - சரி. இந்த லாபத்தை மாத சம்பளமாக கணக்கிட்டால் விவசாயியின் சம்பளம் ரூ. 300 தான் வரும். பருத்தியில் ரூ. 2949 ரூ லாபம். மாதச் சம்பளமாக கணக்கிட்டால் வருவது ஹெக்டேருக்கு ரூ. 700. அதே சமயம் போட்ட முதலுக்கு நஷ்டம் என்ற கணக்குப்படி, கேழ்வரகு போட்டதில் ரூ.10,674 நஷ்டம்; பாசிப் பயறு போட்டதில் ரூ. 5873 நஷ்டம்; உளுந்து போட்டதில் ரூ. 6613 நஷ்டம். 
மேற்படி சாகுபடிக் கணக்கு மூலம் நாம் அறியும் செய்தி - நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, மக்காச் சோளம் வழங்கும் லாபம் ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது. அதே சமயம், மானாவாரி அல்லது புஞ்சை நிலப் பயிர்கள் - கம்பு, கேப்பை, வரகு, தினை போன்ற தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி முழு நஷ்டக் கணக்கில் செயல்படுகிறது.
இவ்வாறு விவசாயம் நஷ்டமாவது தொடர்கதையாக உள்ளதை நினைத்தால், இது நாள் வரை நிகழ்ந்த கடன் உதவிகளோ தொழில் நுட்ப உதவிகளோ விவசாயிகளைக் கரையேற்றியதாகத் தெரியவில்லை. மேலும் விவசாயக் கடன், கடன் என்று ஒரு சராசரி விவசாயிக்கு சுமையைக் கூட்டி வருகிறோம்.
"கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே மடிவது' விவசாயிக்குரிய இலக்கணமாகிவிட்டது. "கடனிலேயே உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என்று திருக்குறளைத் திருத்த வேண்டுமோ?
ஒரு விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்குச் செலவழித்த தொகைக்கு மேல் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு வாழ்வை நடத்திச் செல்வது அறம். ஆனால் விவசாயத்தில் அவன் செலவழித்த தொகையைப் பெறும் அளவில்கூட விலை உத்தரவாதம் இல்லை. பணவீக்கம் பாடாய்ப் படுத்துகிறது.
ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளை மொத்த விலையில் மலிவாக விற்கிறான். தான் வாங்கும் பொருளை சில்லறை விலையில் கிராக்கியாக வாங்குகிறான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகநாடுகள் அனைத்திலும் விவசாயம் லாபகரமான தொழிலாக இருப்பதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வழங்கப்படும் விவசாய மானியம் ரொக்கமாக விவசாயிகள் நேரிடையாகப் பெறுகிறார்கள். இந்திய விவசாயிகள் பெறும் மானியங்கள் எல்லாம் மறைமுகங்கள். உர உற்பத்தியாளர்கள், விவசாயக் கருவிகள் உற்பத்தியாளர்கள், டிராக்டர் உற்பத்தியாளர்கள் போன்றோர் பெறும் மானியங்கள் நேரிடையானவை. ஒரு விவசாயி பெறும் விலை குறைக்கப்படுகிறது. நுகர்வோர் பெறும் உணவு மானியம் மறைமுகமாக விவசாயிகள் பெறும் நஷ்டத்தைக் கொண்டு ஈடு செய்யப்படுகிறது. சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு விவசாயி தலையில்தான் உணவு மானியச் செலவு கட்டப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, விவசாய விலைக் கொள்கை என்பது விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டத்தை உருவாக்கி விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றுவதுதான். இதைத்தான் உலக வங்கியும் போதிக்கிறது.
1996-இல் உலக வங்கி ஒரு கெடு வைத்தது. 2015-ஆம் ஆண்டை நெருங்கும்போது 2 கோடி இந்திய விவசாயிகள் கிராமத்தைவிட்டு வெளியேறி வேறு தொழில் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. உலக வங்கியிலிருந்து இந்தியா கடன் வாங்கும்போது ஒவ்வொரு முறையும் விதிக்கும் நூற்றுக்கணக்கான நிபந்தனைகளில் விவசாயிகளின் வெளியேற்றம் நினைவூட்டப்படுகிறது. விவசாயிகளின் வெளியேற்றத்திற்கு முகவுரை எழுதியவர் மன்மோகன் சிங். அவர் பிரதமராயிருந்த காலகட்டத்தில் அணிந்துரை எழுதிய ரகுராம் ராஜனும் கிராமங்களிலிருந்து 70 சதவீத விவசாயிகள் நகரங்களுக்குச் சென்று வேறு பிழைப்பு நடத்தினால்தான் விவசாயத்தை லாபத்தில் இயங்க வைக்கலாம் என்ற தத்துவத்தை போதித்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கைவிட விவசாயம் சாராத அடித்தளக் உள்கட்டமைப்பு அதாவது "இன்ஃப்ராஸ்டரக்சர்' பங்கு உயர வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. விவசாயம் வழங்கும் வருமானத்தைவிட, உலக வங்கி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், பொதுப் பணித் துறை கட்டுமானத் திட்டம் என்று விவசாயிகள் புலம் பெயர்ந்து சென்றும் கூட விவசாயப் பிரச்னைகள் அடங்கவில்லை.
2016-இல் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அடிப்படையில், 17 மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 20,000 ரூபாயைவிடக் குறைவு என்றும் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் மாதம் வெறும் ரூ. 2000-த்தை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதாகவும் தெரிவிக்கின்றது. இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு பசு மாட்டைக் கூட நிர்வகிக்க முடியாது.
நல்ல முறையில் நீர்ப்பாசனமும் உற்பத்தித் திறனும் இருந்து சிறப்பாக விளைந்தால் விவசாயிகளின் பிரச்னை தீர சரியாகவிடும் என்பது "நிபுணத்துவமான' கருத்து. நிஜமாகப் பார்த்தால், விவசாயம் உருப்படலாம், விவசாயிகள் உருப்பட முடியாது என்பதற்கு பஞ்சாப் நல்ல உதாரணம். பஞ்சாபில் 98 சதவீதம் பாசன வசதி. ஹெக்கேடருக்கு 6000 கிலோ அரிசியும் 4500 கிலோ கோதுமையும் விளைகிறது. உலக அளவில் உணவு உற்பத்தித் திறனில் பஞ்சாப் முதல் இடம் பெற்றாலும் பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே? விவசாயிகள் வாழ்ந்தால்தான் விவசாயம் வாழும். விவசாயிகள் வாழ்வதற்கு விடிவு தரும் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிர்ணயமாகும் ஆதார விலைகளில் சில ஆதாரச் செலவுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஆதார விலைகளை நிர்ணயிக்கும் போது சாகுபடிச் செலவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் வாழ்க்கைச் செலவு கணக்கில் வருவதில்லை. சாகுபடிச் செலவுக்கு மேல் 1: வீட்டுப்படி, 2: கல்விப்படி, 3: மருத்துவப்படி, 4: போக்குவரத்துப்படி ஆகியவற்றை வழங்க வேண்டும். என்ன, சிரிப்பாயிருக்கிறதா? சற்று யோசியுங்கள். மக்கள் வரிப் பணத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கும் படிகள் 108 உள்ளன. நாலு படிகள் விவசாயிகளுக்கு வழங்க முடியாதா?
தற்போது வழங்கப்பட்டுவரும் கொள்முதல் அல்லது ஆதார விலைகள் மூலம் 50 சதவீதம் லாபம் பெறுவோர் 6 சதவீத விவசாயிகளே. மீதி 94 சதவீத விவசாயிகள் கடனில் உழல்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டுமானால், விவசாய சாகுபடிச் செலவு விலை நிர்ணய ஆணையத்தைக் கலைத்துவிட்டு, விவசாயிகளின் வருமான நலவாழ்வு ஆணையம் என்ற பெயரில் ஒரு புதிய குழு நியமனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விவசாயிக்கும் மாதம் ரூ.18,000-குடும்ப வருமானமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பொன்னாளை நோக்கி மோடி அரசு அடி வைத்து நடக்குமானால் விவசாயிகளின் தற்கொலைகள் தலைகாட்டாது. பாரதம் தலை நிமிரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.