நவீன யுகத்தில் சமூக வலைதளங்கள் அவசர, அவசிய தேவையாகிவிட்டாலும், வளரிளம் பருவத்தினர் தங்களது உயிரனைய நேரத்தை வீணாக சமூக வலைதளங்களில் கழிக்கின்றனர். சிலர் சமூக வலைதளங்களின் மூலம் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு, மனம், உடல் சார்ந்த நோய்களால் அவதிப்படுகின்றனர். இதனால், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு, உலகில் பல நாடுகள் தடை அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
மனிதர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, மாயையில் மனமிழந்து, மனநிம்மதியையும் மாய்த்து உடலும், உள்ளமும் பாதிப்படைந்து நோய்வாய்ப்பட்டு மடிந்து போகிறார்கள். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உலகெங்கும் வாழும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் சிகரெட் உள்பட அனைத்து வகையான புகையிலைப் பழக்கத்தை நிறுத்த விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இலங்கை, நியூஸிலாந்து நாடுகள் இதில் தீவீரம் காட்டி வருகின்றன. சிகரெட் தயாரிப்பதற்கான புகையிலை, இதில் உள்ள நச்சுத்துகள்கள், வேதிப்பொருள்கள், புகைப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். விலங்குகளையும், தாவரங்களையும்கூட பாதித்து, சுற்றுச்சூழல் கெடும்.
புகையிலையில் பலவகை வேதிப்பொருள்கள் உள்ளன. அவற்றில் 70-க்கும் மேற்பட்டவை உயிர்க்கொல்லியாக உள்ளன. புகைபிடிப்பதால், புற்றுநோய், ரத்தநாளக் கோளாறுகள், காசநோய், சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்புண், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற உயிருக்கு ஆபத்தான பல பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியில் திடீரென உயிரிழப்பும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆரம்பித்து, பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே இந்தப் புகையிலைப் பிரச்னையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், புகையிலை பயன்படுத்தும் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் பேர் இறப்பதாகவும், அதில் 13 லட்சம் பேர் இந்தியாவில் மட்டுமே இறப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தால், ஒருவர் தனது வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழந்து விடுவதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
சர்வதேச சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதப் பங்கை சீனா பெற்று முதலிடத்தில் உள்ளது. "சீனா உலகின் மிகப் பெரிய சிகரெட் சந்தையாக உள்ளது. அரசுக்கு பெரும் வருமானம் தருவதால், உறுதியான புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா எடுக்கவில்லை. கடந்த 2003 முதல் 2023 வரை சீனாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 39% அதிகரித்துள்ளது' என "நியூயார்க் டைம்ஸ்' அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அங்கு ஆண்டுக்கு 2.44 லட்சம் கோடி சிகரெட்டுகள் விற்பனையாகின்றன. கடந்த 2025-இல் சீன அரசின் புகையிலை நிறுவனம் அரசுக்கு ரூ. 21 லட்சம் கோடி லாபம் மற்றும் வரி வருவாயை அளித்துள்ளது. இது அரசின் மொத்த வருவாயில் ஏழு சதவீதம். ராணுவத்துக்கு சீனா செலவிடும் நிதிக்கும், இந்த தொகையும் சமம் என "நியூயார்க் டைம்ஸ்' மேலும் தெரிவிக்கிறது.
பிரிட்டனில் வயது வந்தோரில் 10% பேர் புகைபிடிப்பதால், அங்கு ஆண்டுக்கு 64,000 பேர் இறக்கின்றனர். மேலும், பிரிட்டனில் தற்போது புகைபிடிப்பவர்களில் 75% பேர் தாங்கள் ஏன் நாம் இந்தத் தீயப்பழக்கத்துக்கு அடிமையானோம் என வருந்துவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் முதலாம் ஸ்டூவர்ட் மன்னர் என்றழைக்கப்பட்ட முதலாம் ஜேம்ஸ் புகையிலைக்குத் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். இவர் 1604-இல் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் "புகையிலைக்கு ஒரு தாக்குதல்' என்ற நூலை வெளியிட்டார். அவர் அந்த நூலில், ஒருவர் புகைபிடித்தலை வெறுக்கும் வகையில், "கண்ணுக்கு அருவருப்பானது. மூக்குக்கு வெறுப்பான, மூளைக்குத் தீங்கு விளைவிப்பது; நுரையீரலுக்கு ஆபத்தானது' என்றார். மக்களிடையே புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புகையிலை மீது 4,000% வரி உயர்வை அமல்படுத்தினார்.
மேலும், அவர், புகைபிடித்தல் என்பது நாகரிகமற்ற கலாசாரத்திலிருந்து வந்த "ஓர் அசுத்தமான புதுமை' என்று வர்ணித்ததுடன், அது உடல்நலத்தைக் கெடுத்து, ஒழுக்கத்தையும் சீர்குலைப்பதுடன், வீண்செலவையும் ஏற்படுத்தி, சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்றார். முதலாம் ஜேம்ஸ் மன்னரின் 422 ஆண்டு காலக் கனவு இப்போதுதான் பிரிட்டனில் நனவாகியுள்ளது.
பிரிட்டனில் 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 01.01.2009 முதல் பிறந்த யாருக்கும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது என்பது சட்டப்படி குற்றம். 17 வயது மற்றும் அதற்குள்பட்ட சிறுவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் சட்டபூர்வமாக சிகரெட் வாங்க முடியாத வகையில், புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க "புகையிலை மற்றும் மின்சிகரெட் மசோதா - 2026' நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த 29.04.2026 அன்று ஒப்புதல் அளித்தார். புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடை செய்வதன் மூலம், புகையிலை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.
இதனால், தற்போது 17 வயது அல்லது அதற்கு உட்பட்டோர் தங்கள் வாழ்நாளில் சிகரெட் எப்போதும் வாங்க முடியாது. அவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் சிகரெட் வாங்கும் சட்டபூர்வ உரிமையைப் பெற மாட்டார்கள். சிகரெட் மட்டுமின்றி, "வேப்பிங்' எனப்படும் மின் சிகரெட் மீதான பிடியும் இறுகியுள்ளது. பள்ளிகள், கார்களுக்குள், மருத்துவமனைகளுக்கு வெளியே, விளையாட்டு மைதானங்களில் "வேப்பிங்' செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தம் பல உயிர்களைக் காப்பதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்று பிரிட்டன் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்டிரீடிங் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் பல லட்சம் பேர் புகைபிடித்தல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உடல்நிலை பாதிப்பு ஒரு பக்கம் என்றால், இவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆகும் செலவு, பிரிட்டனுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. எனவே, அதையும் கூட இந்தச் சட்டம் பெருமளவில் குறைக்கும் எனத் தெரிகிறது.
இது குறித்து, பிரிட்டனில் செயல்படும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சாரா ஸ்வ்வீட் கூறுகையில், "இது பொது சுகாதாரத்தில் ஒரு மிகப் பெரிய மைல்கல். புகையிலை நிறுவனங்கள் தாங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடாகக் கூடுதல் வரி செலுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில், பிரிட்டனில் வயது வந்தோரில் புகைபிடிப்பவர்கள்- புகைபிடிக்காதவர்கள் என இரு வகையினர் இருப்பர். இந்த நிலை, வயது வந்தோர் நிலை மற்றும் வயது நிர்ணயம் குறித்து மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் ஒரு சட்டம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றினால் என்னவாகும் என்ற கேள்வி அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.
அதே நேரம் இந்தச் சட்டம் சில்லறை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், இந்தச் சட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்குப் பதிலாக இளைஞர்களை புகைபிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துவதற்கு முறையான கல்வி முறையே சிறந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதிக வரிகளும், கடுமையான விளம்பர உத்திகளும் அந்தப் பழக்கத்தை இன்னும் வேகமாக முறியடிக்கும்.
பிரிட்டனில் 1565-ஆம் ஆண்டிலிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் அரசியல்வாதியான வால்டர் ராலே புகைபிடிப்பதை முதன்முதலில் கண்ட அவரது பணியாள், அவர் மீது தீப்பற்றியுள்ளது என நினைத்து, வாளித் தண்ணீரை அவர் மீது ஊற்றினார் என்ற கதையும் பிரிட்டனில் அவ்வப்போது வலம் வருவதுண்டு.
பிரிட்டனின் இந்த அதிரடி முடிவு உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது. குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதித்துவரும் நிலையில், அடுத்த தலைமுறையை முழுமையாக புகையிலையிலிருந்து விலக்கி வைப்பதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.
"ஒரு மனிதன் தன்னையே மாற்றிக்கொண்டால் உலகமே மாறிவிடும். நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களை உருவாக்கும், நல்ல செயல்கள் நல்ல வாழ்க்கையைத் தரும்' என்றார் சுவாமி விவேகானந்தர்.
இளைய தலைமுறையைத் தவறான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாக்கும் அறிவுக் கவசமாக கல்வி உள்ளது. கல்வியுடன் நல்லொழுக்கமும் அவசியம். அங்குசத்தால் பாகன் யானையை அடக்குவதுபோல், தீய பழக்கங்களை நல்ல எண்ணங்களால் அடக்கப் பழக வேண்டும். இக்கால இளைஞர்களிடையே அறிவுத் தேடல், சமூக அக்கறை, உழைப்பு, ஒற்றுமை, இலக்கு, தளராத தன்னம்பிக்கை, மனத்துணிவு ஆகியவை விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவர்களிடம் ஒட்டிக்கொள்ளும் சிறு தீய பழக்கம், அவர்களின் வாழ்க்கையையே அழித்து விடுகிறது. ஒருவரின் உடல்நலன்தான் அவரின் மிகப் பெரிய செல்வம். நாம் எந்தத் தீய பழக்கத்தைக் கைக்கொள்கிறோமோ, அதற்கு அடிமையாகிறோம். "சிறந்து விளங்குவது என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம்' என்றார் அரிஸ்டாட்டில்.
விருப்பம் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தரும் செயல்களைச் செய்யவே கூடாது. முதலில் வெளி அடக்கம் உண்டானால்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளடக்கம் சிந்திக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







