கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அச்சுறுத்தலாகும் தொழில்நுட்பம்

தொழில்நுட்பங்கள் மனிதகுலத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாகவும் அதே சமயம் ஆபத்தானதாகவும் இருக்கிறதோ, அதே நிலையில்தான் ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உள்ளது.

Updated On :

தொழில்நுட்பங்கள் மனிதகுலத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாகவும் அதே சமயம் ஆபத்தானதாகவும் இருக்கிறதோ, அதே நிலையில்தான் ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் உள்ளது. அண்மைக்காலமாக, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்களே, இதன் பேராபத்து குறித்து எச்சரித்து இந்தத் துறையில் இருந்து வெளியேறியது உலக அளவில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

ஏ.ஐ. என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு, மனிதகுல வரலாற்றுப் பாதையை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்ப புரட்சியாக உருவாகியுள்ளது. மருத்துவம், கல்வி, வணிகம் என அனைத்துத் தளங்களிலும் இதன் தாக்கம் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. அதேவேளையில், இதன் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடற்ற வேகம் குறித்து உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஏ.ஐ. துறையின் பிதாமகர்களே பெரும் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் மணிக்கணக்கில் செய்யும் தரவுப் பகுப்பாய்வு மற்றும் கணக்கீடுகளை ஏ.ஐ. தொழில்நுட்பம் சில விநாடிகளில் துல்லியமாகச் செய்து முடிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிகளில் புதிய கண்டுபிடிப்புகளிலும் முக்கியப் பங்காற்றுகிறது என அதன் தேவை, வளர்ச்சியை அடுக்கிக்கொண்ட போகலாம்.

அதேவேளையில், இந்த அசுர வளர்ச்சியால் தரவுப் பதிவு, வாடிக்கையாளர் சேவை, மொழிபெயர்ப்பு, அடிப்படை மென்பொருள் உருவாக்கம் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த பணிகளைக்கூட ஏ.ஐ. கையாள்வதால், உலக அளவில் பல மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து நிலவுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், தகவல் திருட்டு மற்றும் தனியுரிமை மீறல், அசல் மனிதர்களைப் போலவே பேசும், இயங்கும் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதனால், மனிதன் தன் சொந்த பகுத்தறிவு மற்றும் சிந்தனைத் திறனைப் பயன்படுத்தாமல், அனைத்துக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எதிர்நோக்கும் சிந்தனைக்கு மாறி, அவனது படைப்பாற்றலையும் மூளைச் செயல்பாட்டையும் மழுங்கடையச் செய்யும் ஆபத்தும் ஏற்படக்கூடும்.

"ஏஐ}யின் பிதாமகன்' என்று அழைக்கப்படும் கூகுளின் முன்னாள் ஏ.ஐ. துறை நிர்வாகி ஜெஃப்ரி ஹிண்டன், இது எதிர்காலத்தில் மனிதகுலக் கட்டுப்பாட்டை மீறி பேராபத்தை விளைவிக்கக்கூடும் என்று எச்சரித்து அந்நிறுவனத்திலிருந்து 2023-ஆம் ஆண்டில் வெளியேறினார்.

ஜெஃப்ரி ஹிண்டனுடன் இணைந்து பணியாற்றிய யோஷுவா பெஞ்சியோ உள்ளிட்ட உலகின் முன்னணி ஏ.ஐ. ஆய்வாளர்களும், மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு சர்வதேசக் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உலக அளவில் எலான் மஸ்க் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் மனிதக் கட்டுப்பாட்டை மீறும் சக்தி வாய்ந்த ஏ.ஐ. அமைப்புகளின் உருவாக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இதன் ஆபத்து அணுஆயுதப் போருக்கு இணையானது என்றும் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

தவிர, மனித தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக இலக்குகளைத் தாக்கும் ஏ.ஐ. அணுஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தவறான கரங்களில் கிடைத்தால் பேரழிவை ஏற்படுத்தும். "சூப்பர் இன்டலிஜென்ஸ்' எனப்படும் மனிதனைவிட அதிக அறிவுத் திறனுடைய ஏ.ஐ. உருவாகும்போது, மனிதன் அதன் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய ஆபத்துக்கும் வாய்ப்பு உள்ளது. போலித் தகவல்கள் மூலம் ஜனநாயக அமைப்புகளை மற்றும் தேர்தல் முறைகளைச் சீர்குலைப்பது மிகவும் எளிதாகிவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒன்று, ஏ.ஐ. தொழில்நுட்ப மாடல்களைப் பயிற்றுவிக்கவும், தரவு மையங்களை இயக்கவும் மிகப் பெரிய அளவில் மின்சாரமும் குடிநீரும் (குளிர்விப்பதற்காக) தேவைப்படுகின்றன. அதனால் ஏ.ஐ. தொழிற்கூடங்கள் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வு மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்.

இரண்டு, ஓவியங்கள், புத்தகங்கள், செய்திகள் மற்றும் கட்டுரைகளை படைப்பாளர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தி பதிப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மூன்று, மெட்டா போன்ற நிறுவனங்கள் ஏ.ஐ. மாடல்களை திறந்த வாய்ப்புகளாக வெளியிடும்போது, ஓபன் ஏ.ஐ., கூகுள் போன்றவை அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் மூடிய வாய்ப்புகளாக வைப்பதனால், ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒருசில பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்குவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் இந்தியன் ஏ.ஐ. கொள்கை மூலம் ஏ.ஐ. நெறிமுறைகளுக்கு எடுத்துவரும் முயற்சிகள் எந்தத் திசையை நோக்கி செல்லும், முயற்சியின் நோக்கம் நிறைவேறுமா என்பதையும் எல்லாம் தற்போதைக்கு தெளிவாகச் சொல்ல முடியாத நிலைதான் காணப்படுகிறது.

தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியைக் காட்டிலும், அதை முறைப்படுத்தும் சர்வதேசச் சட்டங்களும், நெறிமுறைகளும் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும். உலகில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு எதிரான சட்டங்களை இயற்றியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அபாயங்களை உலக அளவில் கண்காணிக்கவும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உயர்நிலை ஆலோசனை அமைப்பை அமைத்துள்ளது.

மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு ஏ.ஐ. பயன்பட வேண்டுமே தவிர, மனிதகுலத்துக்கே அது அச்சுறுத்தலாக மாறாமல் தடுப்பது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும். நாளை என்ன நடக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.