விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காலம் காலமாக மறைவாக நடக்கும் குற்றங்களுக்கு தண்டனைகள் தீவிரமாவது எப்போது?

2005-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு செங்கற்சூளை முதலாளியால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு,

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 7:02 am

தினமணி

2005-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு செங்கற்சூளை முதலாளியால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு, அது குறித்து தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அங்கு பாதிப்புக்குள்ளான 20 நபர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் சார்ந்த துன்புறுத்தல்களையும், வாய்மொழியில் வசை மொழிகளை தாங்கியதும், இவற்றுக்கும் மேலாக பாலியல் ரீதியிலான சித்திரவதைகளையும் பற்றி பகிர்ந்தனர். அவர்கள் கூறியவற்றை கேட்டால் கல் நெஞ்சும் கரையும்.

வயது வந்த நபர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இக்கொத்தடிமை தொழிலாளர்களுள் பலர் இக்குற்றச்செயலை துணிந்து செய்த அந்த முதலாளியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய தவறிய போதெல்லாம் தடிகளாலும் கைகளாலும் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். சொல்லொண்ணா துயர் தாங்கி மனித இயந்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.

ஒரு செங்கலை தவறுதலாக கீழே போட்டார் என்று அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் 12 வயதே நிரம்பிய மீனா என்ற ஒரு குழந்தை தொழிலாளி. அவள் இதை என்னிடம் கூறும் போதும் அச்சத்தால் அவள் உடல் நடுங்கியது. பல்வேறு சமயங்களில் , சிறிய தவறுகளுக்காக தங்களை பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அங்கிருந்த பெண் கொத்தடிமைத் தொழிலாளர்களுள் பலர் என்னிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். பாதிப்புக்குள்ளான பெண்களுள் ஒருவரான சரிதா குளியலறைக்கு ஒருவன் பின்தொடர்ந்து வந்ததாக மனம் நொந்து கூறினார். அப்பெண் அந்த நபரை இதற்காக கடிந்து கொண்ட போது அவன் அவளது கையை பிடித்து இழுத்திருக்கிறான். விவேகமான அப்பெண் ஆபத்திற்குள்ளாவதற்கு முன்பே எப்படியோ அங்கிருந்து தப்பி பிழைத்திருக்கிறாள்.இன்னொரு நபர் பெண்கள் தங்குகிற பகுதிக்குள் இரவில் அத்துமீறி நுழைய முயற்சித்திருக்கிறான்.

Story image

கொத்தடிமை முறை நடைமுறையிலிருந்த இந்த செங்கற்சூளையிலிருந்து காவல்துறை உதவி ஆணையர் வெளியேறியவுடன், அங்கிருந்து விடுவிக்கப்பட்ட 29 தொழிலாளர்களோடு சேர்ந்து, நானும் மற்றும் எனது சக பணியாளர்களும் வெளியேற தயாராகிக் கொண்டிருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபரால் திரட்டி அழைத்து வரப்பட்டனர் ஒரு கும்பல். கோபமும் ஆக்ரோஷமும் கொண்ட அந்த கும்பல் எங்களைச் சுற்றி வளைத்தது. என்னுடன் வந்திருந்த எனது சக ஆண் பணியாளர்கள் அக்கும்பலால் தாக்கப்பட்டனர். காரை நோக்கி நாங்கள் தப்பி ஓடி, அதில் ஏறிக் கொண்டபோது அந்த வெறிபிடித்த கும்பல் எங்கள் காரின் கண்ணாடிகளை உடைக்க முற்பட்டது. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் உறைந்து போனோம்.

எங்களோடு பாதுகாப்பு பணிக்கு உடன் வந்திருந்த சில காவலர்களால் அந்த சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. இதனால் சூழ்நிலை இன்னும் தீவிரமானது.  அநாகரிகமான வார்த்தைகளால் வசைகள் மற்றும் அடி உதைகளுக்கு நாங்கள் ஆளானதற்குப் பிறகு,  அங்கு வந்த கூடுதல் காவலர்கள் படையின் உதவியால், பாதுகாப்பாக நாங்கள் அழைத்து வரப்பட்டோம். எமது வாகனங்கள் செங்கற்சூளை பகுதியை விட்டு வெளியேறியபோது குற்றம்சாட்டப்பட்டவரின் அடியாட்களை உள்ளடக்கிய கும்பலானது எங்களை துரத்தி ஓடி வந்து வாகனத்தின் மீது ஓங்கி தட்டியதோடு செங்கற்களையும் கற்களையும் வீசியது. அத்துடன் எங்களை மேலே செல்லவிடாதவாறு சாலைகளில் தடைகளையும் ஏற்படுத்தியது. எனது. பணிசார்ந்த வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத கடும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களுள் இது ஒன்று.

அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் குழுவானது. காவல்துறையினர் அங்கிருந்த போதிலும்கூட, சிறிதும் அச்சமின்றி இப்படி காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த வெறிக்கும்பல் நடந்து கொண்டதெனில், அவர்களிடம் சிக்கிய மனிதர்களை அவர்கள் என்னவெல்லாம் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பார்கள் என நினைக்கையில் நெஞ்சம் பதறுகின்றது. தினசரி அடிப்படையில் இந்த கொத்தடிமை தொழிலாளர்கள் அனுபவித்திருக்கக்கூடிய வலியையும் துயரையும் ஒருவரால் நிச்சயமாக கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. மனமும் உடலும் மரத்துப் போய் உயிர் மட்டுமே எஞ்சியிருக்கும் அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை என்பது முற்றிலும் மறக்கடிக்கப்பட்ட ஒன்று. கடந்த 13 ஆண்டுகளாக கொத்தடிமை தொழில்முறைக்கு எதிரான எனது போராட்டத்தில் நான் உணர்ந்தது என்னவெனில், முதலாளி எனப்படும் பணம் படைத்த மனிதன், எந்த ஒரு சிறு காரணம் கிடைத்தாலும் கூட போதும்,  தன்னிடம் கொத்தடிமையாக வேலை பார்க்கும் தொழிலாளர்களை துன்புறுத்தி மகிழ்கின்றனர் என்பதை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். மனிதம் என்ற சொல்லுக்கான பொருளை இந்த காட்டுமிராண்டிகளிடம் எப்படி எதிர்ப்பார்ப்பது? பலரின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளான அவர்களை தண்டிக்க சமகால புதிய சட்டங்களை யார் இயற்றுவது?

Story image

முதலாவதாக, தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என அவர்கள் நினைத்து தனக்கு கீழாக வேலை பார்க்கும் அப்பாவித் தொழிலாளர்களை பலவகையிலும் துன்புறுத்தி வருகின்றனர். கொத்தடிமை தொழில்முறை செயல்படுத்தப்படுவதை கண்டறிவது என்பது மிகவும் கடினமானது. ஒரு தொழிலாளரை பார்ப்பதன் மூலம் அவர் அல்லது அவள் கொத்தடிமையாக இருக்கிறார் என்று கூறுவது சிரமமானது. ஆகவே கொத்தடிமைத்தனம் என்ற இக்கொடிய குற்றமானது புகாராக தெரிவிக்கப்பட வழியின்றி, அநேக நேரங்களில் மறைவாகவே செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சம் இத்தகைய குற்றவாளிகளுக்கு இருப்பதே இல்லை.

இரண்டாவதாக, குற்றம் இழைத்தால் கடும் தண்டனை கிடைக்கும் என்ற உணர்வும் அச்சமும் இல்லாதது. இக்குற்றத்தை இழைப்பவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் சிறிய அபராதங்களோ அல்லது மிக எளிய தண்டனைகளோ மட்டுமே விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் இல்லாமல் அல்லது மிகக் குறைந்த பாதிப்புடன் இந்த குற்றத்தை செய்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியம் இவர்களுக்கு இருக்கிறது.

மூன்றாவதாக, குற்றமிழைப்பவர்களின் மனங்களில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் சாதி அமைப்பு முறையானது ஆழமாக ஊடுருவிப் போயிருக்கிறது. இதனால் இத்தொழிலாளர்கள் சமமான குடிமகன்களாக இவர்கள் கருதுவதோ நடத்துவதோ இல்லை. தாங்கள் சொந்தமாக வாங்கி பயன்படுத்தக்கூடிய ஜடப்பொருட்களாகவே இத்தொழிலாளர்கள் கருதப்படுகின்றனர்.

Story image

கடந்த சில ஆண்டுகளில் இக்கொடிய குற்றத்தை எதிர்த்து போரிடுவதில் தமிழ்நாடு அரசு முன்னணியில் இருந்து வருவதை காண்பது ஆறுதல் அளிக்கிறது. இந்தியாவில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர். கொத்தடிமை தொழிலாளர்களின் விடுவிப்பு அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கொத்தடிமை தொழில்முறை வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தி குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு மாநில அளவிலான ஒரு அதிகாரியை நியமனம் செய்திருக்கிறது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மாநில அளவிலான ஒரு திட்டம் இதற்காக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இக்குற்றத்தை நிகழாமல் தடுப்பதற்கும் மற்றும் இதனை எப்படி சரியாக கையாள்வது என்பது குறித்த அறிவுறுத்தல்களையும் இது தெளிவாக வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டதற்கு பிறகு மீண்டெழுந்து இதில் இன்னும் சிக்கியிருக்கும் பிறரை விடுவிக்கின்ற பொறுப்பை விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் சங்கம் குழுக்கள் வழியாக கையிலெடுத்திருப்பதை காண்பது இன்னும் அதிக ஊக்கமளிப்பதாக இருக்கிறது. கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஆதரவாக மத்திய அரசும் மனமுவந்து முன்வந்திருக்கிறது. கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட செயல்திட்டமானது (2016) மறுவாழ்வு தொகையை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. ஆண் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ. 100000 பெண்கள் மற்றும் குழந்தை கொத்தடிமை தொழிலாளர்களுக்கும் ரூ. 200000 மற்றும் கொத்தடிமை அல்லது கட்டாய வேலை நேர்வுகளில் மிக தீவிரமான உரிமை இழப்புகளை சந்தித்திருக்கிற பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 300000 என்ற மறுவாழ்வு தொகையானது. இப்போது வழங்கப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் கொத்தடிமை தொழில்முறையை ஒழிப்பதற்கான செயல்பாட்டில் காணப்படும் உத்வேகமும் முனைப்பு நடவடிக்கைகளும் எனக்கு அதிக நம்பிக்கையை தருகிறது. மிக விரைவிலேயே தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழில்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை நான் காண்பேன் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

- கிளாடிஸ் பின்னி, சமூக சேவகி, ஐஜேஎம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.