பற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக் குறைவு... ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. மனித ஆரோக்கியத்திலும், முன்னேற்றத்திலும் ஊட்டச்சத்தின்மை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது உற்பத்தி இழப்பையும் பொருளாதார ரீதியிலான பின்னடைவையும் உண்டாக்குகிறது. ஆரோக்கியமான குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். போதுமான ஊட்டச்சத்து கொண்டவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள். மாறாக ஊட்டச்சத்தின்மை நோய்த்தடுப்பாற்றலை குறைத்து நோய் தாக்கத்திற்கு ஆளாக்கி, உடல், மன வளர்ச்சியை தடுத்து ஆக்க சக்தியையும் குறைக்கிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துக்களையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும் (சரிவிகித உணவு) இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும். ஒரு சமநிலை உணவு ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் கலோரிகளையும் புரதத்திலிருந்து பத்திலிருந்து பதினைந்து சதவிகிதத்தையும், கொழுப்பிலிருந்து 20 முதல் 30 சதவீதத்தையும் வழங்க வேண்டும், உணவில் புரதம், மாவு, கொழுப்பு, உயிர்ச்சத்து, தாது, நீர் ஆகிய ஆறு வகை சத்துக்,கள் அடங்கியுள்ளன. உயிர்வாழ்க்கை, வளர்ச்சி, உடலியக்கம், திசு சீரமைப்பு இவை அனைத்திற்குமே ஊட்டச்சத்து தேவையானது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது.