Enable Javscript for better performance
‘இம்மானுவேல் சேகரன் குருபூஜையை ஒட்டி 144 தடை உத்தரவு’ யார் இந்த இம்மானுவேல் சேகரன்?- Dinamani

சுடச்சுட

  

  ‘இம்மானுவேல் சேகரன் குருபூஜையை ஒட்டி 144 தடை உத்தரவு’ யார் இந்த இம்மானுவேல் சேகரன்?

  By வழக்கறிஞர் சி.பி.சரவணன்  |   Published on : 11th September 2019 06:06 PM  |   அ+அ அ-   |    |  

  immanuval

   

  இமானுவேல் சேகரனின் 62 வது நினைவுநாள் குருபூஜை கொண்டாடப்படவிருக்கிறது,  அதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டும் வழக்கம் போல் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  யார் இந்த இமானுவேல் சேகரன்?

  ஹிட்லர் மீசை மிக புகழ் பெற்ற ஒன்று. அவருக்கு பின் சார்லி சாப்ளினும், இம்மானுவேல் சேகரனும் இந்த மீசைக்கு புகழ் பெற்றவர்கள்.

  இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

  இதையும் தெரிஞ்சுக்குங்க.. ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

  இம்மானுவேல் சேகரன் அவர்கள் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினர். அதற்கு ஒரு சான்றாக  1942 ஆம் ஆண்டில் அவருடைய 18 வது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  அதன்பின், இதம்பாடல் கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமர்தம் கிரேஸ் என்பவரை மனந்தார். இவருக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி எனும் நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். 

  நாட்டின் மீது கொண்ட பற்றினால் இம்மானுவேல் சேகரன் 1945 ல் இராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.

  தேக்கம்பட்டி பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், அம்பேத்கர், பெருமாள் பீட்டரோடு ராணுவ வீரரான இம்மானுவேல் சேகரனும் கலந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இராணுவத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. இம்மானுவேல் சேகரன், இராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை 1952 ல் துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

  அப்போது நடந்து கொண்டிருந்த பொதுத் தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் கவனிக்கத்தக்கது. இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்வகள் எல்லாம் களத்தில் அன்றைய இளம் வேட்பாளர்கள். காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த இராஜாஜி குல‌க்கல்வியைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தியவர் திரு. இம்மானுவேல் சேகரன். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என சாக்கு சொல்லி, அதனை ஈடுகட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என இராஜாஜி எடுத்த முடிவை மிக வன்மையாகக் கண்டித்தார். கிறித்துவ பள்ளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி பிடித்த போது ஒடுக்கப்பட்ட சமுகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் வட்டாரங்களில் பிரச்சாரம் செய்தார். 

  கிறித்துவ திருச்சபைகளுக்கு சொந்தமான பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற‌ளவும் இயங்க முடிகிறதென்றால் அன்றைக்கு இம்மானுவேல் சேகரன் முழங்கிய போர் முரசே காரணம். 1952 ல் நிகழ்ந்த பொதுத்தேர்தலின் போது இம்மானுவேல் சேகரன் கிறித்துவத்திலிருந்து வெளியேறி இம்மானுவேல் என்ற பெயரை இம்மானுவேல் சேகரன் என மாற்றினார். அந்த தேர்தலில் களத்தில் போட்டியிட்டார்.

  1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதில் நாடார், பறையர், அருந்ததியர், வண்ணார், போன்ற சமூக அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மருமணம், ஆகிய 7 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.

  மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்தார். தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு சென்று, எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். வழக்குப் போட்டார். தீண்டாமைக்கு எதிராக பெட்ரோமாக்ஸ் லைட் ஏந்தி ஊர்கள் தோறும் தனது ஆதரவாளர்களைத் திரட்டிச் சென்று கூத்துகள், நாடகங்கள் நடத்தி பரப்புரை செய்தார்.

  26.5.1954 அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார். 2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில் முன்னெடுத்தார். 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். ஒடுக்கப் பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கினார்.

  பூவைசிய இந்திரகுல சங்கத்தை நடத்திக்கொண்டிருந்த பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து சமூக பணிகளை செய்தார். இளைஞரான இமானுவேல் சேகரனின் துடிப்பான வீரத்தையும், சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டதின் தீவிரத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவர்களான காமராஜரும், கக்கனும் அவரை மிகுந்த ஆதூரத்துடன் அரவணைக்கவே அவர்களது  ஆதரவுடன் தன்னை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துக் கொண்டார் .

  ஒடுக்கப்பட்ட வகுப்பார் இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளராகி, ஒடுக்குமுறை தொடருமேயானால் எம் மக்கள் இஸ்லாமைத் தழுவ நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.பல நேரங்களில் இம்மானுவேல் சேகரன் அவர்களுடன் வேலுச்சாமி நாடார் அவர்கள் உறுதுணையாக இருந்தார். எனவே  அருப்புகோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.ஆறுமுகத்துக்கு எழுதிய கடிதத்தில், "வேலுச்சாமி நாடாரை நாம் மறந்தோமானால் நாம் நன்றி கெட்டவர்களாகிவிடுவோம்" என குறிப்பிடுகிறார் இம்மானுவேல் சேகரன். (இது மண்ணுரிமை என்னும் இதழிலும் வெளியாகியுள்ளது)

  1957 நாடாளுமன்றத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியை எதிர்த்து பேசவே துணிச்சல் இல்லாத தலைவர்கள் மத்தியில் இம்மானுவேல் சேகரன் பார்வட் பிளாக் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

  இம்மானுவேல் சேகரனின் விடுதலைக்கான போர்க்குணத்தை பலர் வரவேற்றனர். இன்றைய தினகரன் நாளிதழை தோற்றுவித்த அதன் ஆசிரியரான தினகரன் தேவர், இம்மானுவேல் சேகரனுக்கு ஆதரவாகத் தனது தினகரன் பத்திரிக்கையில் எழுதினார்.

  1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் பிரதான பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனும் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். இந்த பிரச்சனையை இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் வரைக்கும் இம்மானுவேல் சேகரன் கொண்டு சென்றார். அதனால் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டு மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கு எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. 

  அதன் விளைவாக 5-9-57 ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் நடக்கிறது.  இம்மோதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

  மாவட்ட ஆட்சித்தலைவர் பணிக்கர் இந்த கலவரத்தை தடுக்க 1957 செப்டம்பர் 09 ஆம் தேதி அனைத்து சமூக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார். 10ம் தேதி நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் பெருமாள் பீட்டர் மற்றும் இம்மானுவேல் சேகரனும்  நாடார்கள் சார்பில் வேலுச்சாமி, கமுதி சவுந்தர பாண்டிய நாடாரும் கலந்து கொண்டனர். 

  தேவர்களின் சார்பில் முத்துராமலிங்கதேவர் கலந்துக்கொண்டார்.

  இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பரான வேலுச்சாமி நாடார் அவர்களின் வீட்டில் இரவு தங்கினார். காலையில் பள்ளியில் இருந்து பாரதியார் விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது எனவும் அதற்குத் தான் செல்லவிருப்பதாகவும் இம்மானுவேல் சேகரன் கூறினார். வேலுசாமி நாடார் அவர்கள்  "இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை" என்று தடுத்தும் இமானுவேல் சேகரன் கேட்காமல் புறப்பட்டார். காலையில் பரக்குடி பள்ளியில் நடந்த பாரதியார்  நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்டு இரவு 9 மணி அளவில் வீட்டிக்குச் சென்றார். 

  அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்புகிறது.

  12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57 ல் ராமநாதபுர மாவட்டத்தின் சட்டம் ஓழுங்கைச் சீர்குலைத்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.

  பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்க தேவரின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு  முத்துராமலிங்க தேவர் 14 நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டார். பார்வர்டு பிளாக், காங்கிரஸ் கட்சி மோதலையே பின்னாளில் தேவர் தேவேந்திர குல மோதலாக அரசியல் ஆதாயத்திற்காக சில கட்சிகள் மாற்றினர் என்றால் அது மிகையாகாது.

  33 வயதேயான தியாகி இம்மானுவேல் சேகரனின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும் மக்களின் இணையற்ற தலைவராக இருக்க காரணமாக அமைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai