தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்மொழியைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருப்பூரில் 83 வயது தமிழறிஞர் இயற்கை வாழ்வகம் க.இரா.முத்துசாமி கடந்த 4 ஆண்டுகளாக பேசாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர் கருவம்பாளையத்தில் ராமசாமி, முத்தம்மாள் தம்பதியரின் மகனாக கடந்த 1939 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தவர் க.இரா.முத்துசாமி(83). இவர் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்த நிலையில் குடும்பச் சூழ்நிலையால் 14 வயதிலேயே பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியைத் தொடங்கினார்.
தனது விடாமுயற்சியால் பின்னலாடைத் தொழில்களின் நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்ததுடன், கடிகாரத்தின் பெயரில் 'டிட்டோனி' என்ற பின்னலாடை நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். 35 ஆண்டுகளாக இயற்கை வாழ்வகம் நடத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகில் தன்னுடைய 8 ஏக்கர் நிலத்தில் அன்னைப் பொழில் என்கிற பெயரில் மூலிகைப் பெருந்தோட்டத்தை அமைத்திருந்தார். இதன்பிறகு கடன் சுமை காரணமாக அன்னைப் பொழில் கைமாறியதைத் தொடர்ந்து கருவம்பாளையத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வாழ்வகத்தை நடத்தி வருகிறார்.
இதன் மூலமாக மருந்தில்லாமல் உணவு மூலமாகவே அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
செம்மொழிப் போராளி விருது: திருப்பூர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் என அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். தமிழ் வழிக்கல்வியை வலியுறுத்தி நா.அருணாசலம் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பில் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய 102 தமிழ் அறிஞர்களின் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் முதல் போராளியாகப் மொழிப்போர் மறவர் விருதைப் பெற்றுள்ளார்.
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி புலவர் த.சுந்தரராசன் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் தில்லி நாடாளுமன்றத்தின் முன்பாக 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்று செம்மொழிப் போராளி விருதையும் பெற்றுள்ளார்.
பொதுவுடமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். திருப்பூரில் முதியோர் தடகளப் போட்டிக்கான குழுவை நிறுவியுள்ளார்.

திருப்பூரில் 4 ஆண்டுகளாக பேசாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழறிஞர் க.இரா.முத்துசாமி, உடன் அவரது மனைவி மு.சுப்புலட்சுமி.
4 ஆண்டுகளாக பேசாநோன்பில்: இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ பின்னடைவுகளை சந்தித்தபோதும், தாய்த்தமிழையும், இயற்கைச் சூழல் பாதுகாப்பையும் தனது இரு கண்களாகக் கொண்டு இன்றளவும் வாழ்ந்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கக்கோரி திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி திருமடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தனது 80 ஆவது அகவை தொடக்கவிழாவில் பேசாநோன்பைத் தொடங்கினார். இவர் நோன்பைத் தொடங்கி ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போதும் தொடர்ந்து வருகிறார்.
இந்த பேசாநோன்பு போராட்டம் தொடர்பான கேள்விகளுக்கு க.இரா.முத்துசாமி எழுதிக் கொடுத்த பதில்கள்.
கேள்வி: தங்களின் போராட்டத்துக்கு தூண்டுகோலாக அமைந்த விஷயம் எது?
பதில்: தாய்மொழிக் கல்வியால் நடக்கும் மோசடிகளும், தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகள் திணிக்கப்படுவதுமாகும். மேலும், ரயில்வே, பொதுத்துறை, வங்கிப் பணிகளில் மற்ற மொழிகள் பயின்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு கொடுக்கப்படாததுமாகும்.
கே: எந்த மொழிக்கும் பேச்சு, எழுத்து, படிப்பு என்ற 3 வடிவங்கள் உள்ள நிலையில் தாய் மொழியான தமிழைப் பேசவில்லை என்ற வருத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
ப: தாய்மொழிக் கல்வி இல்லாமல் தமிழினம் அடிமையாக்கப்பட்டுள்ளது. நீட் போன்ற தேர்வுகள் திணிக்கப்படும் நிலையில் நான் தாய் மொழியைப் பேசவில்லை என்ற வருத்தம் ஒருபோதும் இல்லை. ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்று கிடைக்கும் என்பது உலக நியதி.
கே: இயற்கையான வாழ்வு முறையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன?
ப: நான் இயற்கையான முறையில் உணவை உட்கொண்டு வருவதால் 83 வயதிலும் நோய் நொடி இல்லாமல் இருக்கிறேன். மருத்துவர்கள் என்னை கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர். நான் பசி எடுக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்கிறேன். உதாரணமாக இரு நாள்கள் பசி எடுக்கவில்லை என்றாலும் நான் உணவை உட்கொள்வதில்லை. அதேநேரத்தில், அசைவ உணவை நிறுத்தி 40 ஆண்டுகள் ஆகிறது. காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் உண்டவர்கள் தள்ளாத வயதிலும் கோல் ஊன்றாமல் நடக்கலாம்.
கே: இளைய தலைமுறைக்கு தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை எவ்வாறு உணர்த்துவது?
ப: நாம் ஒவ்வொருவரும் தாயிடம் இருந்து கற்பதுதான் உண்மையான தாய்த்தமிழ் மொழிக் கல்வி. இந்த உலகில் படிக்காமல் தாய் மூலமாகவே கல்வி கற்ற ஞானிகள் பலர் உள்ளனர்.
கே: இயற்கை விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த நம்மாழ்வாருடன் பழகிய அனுபவங்கள்?
ப: சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பவர்கள் நாங்கள் இருவரும். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் கொடைக்கானலில் இயற்கை வேளாண்மை நிறுவனத்தைத் தொடங்கினோம். அவர் வேறு, நான் வேறு கிடையாது. குறிப்பாக தமிழ் தொடர்பான போராட்டங்களில் நம்மாழ்வாரும் பங்கேற்பார்.
கே: இந்தப் போராட்டத்துக்கு தங்களது மனைவி உள்பட குடும்பத்தினரின் ஆதரவும், தமிழ்ப் பற்றாளர்களின் ஆதரவும் எப்படி உள்ளது?
ப: ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் என் குடும்பத்தினர் மற்றும் என்னைச் சார்ந்தவர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கிறது. எனது ஒவ்வொரு முயற்சியிலும் எனது மனைவி மு.சுப்புலட்சுமி மிகவும் ஆதரவாகவும், ஊக்கம் அளிப்பவராகவும் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே எனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறேன்.
கே: பேசாநோன்புப் போராட்டம் தமிழகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? இந்தப் போராட்டம் வெற்றியடைவதற்கான வழிகள் என்ன?
ப: தாய்மொழி மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் எனது போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க எனது இறுதி மூச்சு இருக்கும் வரையில் எனது போராட்டத்தைத் தொடர்வேன். இந்தப் போராட்டத்துக்கு என்னைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவும் உள்ளதால் விரைவில் வெற்றியடையும் என்கிறார் நம்பிக்கையுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

இரு மொழிக் கொள்கையை உயிரைக் கொடுத்து காப்போம்: திருச்சி சிவா

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


