எங்கள் உரையாடலின் இடையே அழகு கொஞ்சும் ஹவாய்த் தீவில் ஹவாய் பூர்வகுடி மக்களோடு அமெரிக்கர்களும் ஜப்பானிய, பிலிப்பைன் மக்களும் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வரும் பாங்கைப் பாராட்டினேன். இஃது இன ஒருமைக்கோர் எடுத்துக்காட்டு எனக் கூறினேன். உடனே ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்மணி இங்கு மூன்று நாட்டு இன மக்கள் ஒருங்கிணைந்து வாழ்வதைப் பாராட்டுகிறீர்கள். இது உங்கள் இந்தியப் பண்பாட்டைக் காட்டுகிறது. ஆனால், நான் இந்தியச் சுற்றுலாவின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தபோது எங்குமே காணமுடியாத மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் கண்டு அதிசயித்தேன். எத்தனை வகையான இன மக்கள்; எத்தனை வகையான மொழிகள்; நடையுடை, பாவனைகள்; தங்களது சமயச்சார்புடைய கலை, பண்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்த கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாரங்கள், புத்த விஹார்கள், ஜைனக்கோயில்; இத்தனை இனங்களும் மதங்களும் மொழிகளும் கலைகளும் பண்பாடுகளும் ஒன்றாக இணைந்து இயங்குவதைக் கண்டு அதிசயித்தேன். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது ஆன்மீக உணர்வு எனும் ஆழமான வேரை இந்தியா கொண்டிருப்பதுதான் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. இந்த வகையில் சின்னஞ்சிறு நாடான ஹவாய்த் தீவு அல்ல, இந்தியாவே உலகத்துக்கு வழிகாட்டி நாடாக விளங்கி வருகிறது. பல் சமய, இன, மொழி, பண்பாட்டு ஒருங்கிணைவு எப்படியமைய வேண்டும் என்பதற்கு இந்தியாவே உலகத்துக்கு உத்வேக மூட்டி வருகிறது,” என உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். இந்தியாவைப் பற்றி அப்பெண்மணி கொண்டிருந்த கருத்தும் உணர்வும் என் நெஞ்சத்தைத் தொட்டது. இந்தியாவைப் பற்றி அந்நிய நாட்டுப் பெண்மணி மனந்திறந்து கூறிய பாராட்டுரையால் நெகிழ்ந்துபோன என் துணைவியாரின் கண்கள் பனித்து விட்டன. இந்தியா பற்றி ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி கொண்டிருந்த எண்ணம் இந்தியாவைப் பற்றி உலகம் கொண்டுள்ள உணர்வையே முழுமையாகப் பிரதிபலித்தது என்பதில் ஐயமில்லை.