ராமதாஸ் பாமகவின் கூட்டணி வாய்ப்புதான் என்ன?

பாமக தலைவர் அன்புமணி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் யாருடன் அணி சேருவார் என்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
ராமதாஸ் பாமகவின் கூட்டணி வாய்ப்புதான் என்ன?
Updated on
2 min read

பாமக தலைவர் அன்புமணி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் யாருடன் அணி சேருவார் என்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

ராமதாஸ் - அன்புமணி இடையே பனிப்போர் தொடங்கிய காலத்தில், குடும்பச் சண்டை தேர்தல் காலத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியது, அவர் மீதான சிபிஐ வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது ஆகியவற்றைப் பார்க்கும்போது இருவரும் தற்போதைக்கு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியது.

இதற்கிடையே, அதிமுக - பாஜக கூட்டணியில் திடீரென அன்புமணி சேர்ந்தது, அன்புமணி தலைமையிலான பாமகவை தேசிய ஜனநாயக கூட்டணி அங்கீகரித்துள்ளது வெளிப்படையாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர் மக்களவைத் தொகுதிகளில் அதிமுக 35 சதவீதத்தை தாண்டி (மாநில சராசரி 23 சதவீதம்) பெற்றது.

பாமகவைவிட, எடப்பாடி பழனிசாமி மீது வன்னியர்கள் பற்றுதலாக உள்ளனர் என்பதை 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மேலும், கட்சி நிர்வாகிகளிடமும், வன்னியர்களிடமும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கே அதிக செல்வாக்கு இருக்கிறது என அதிமுக உறுதியாக நம்பியதால் வட தமிழகம், கொங்கு மற்றும் டெல்டாவில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பதால் அன்புமணியை அரவணைத்துள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக் கூடாது என்ற முதன்மை நிபந்தனையுடன் அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் அன்புமணி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இப்போது ராமதாஸுக்கான கூட்டணி வாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ராமதாஸைப் பொருத்தவரை, அன்புமணியைவிட கூடுதல் எம்எல்ஏக்கள் பெறுவது, அன்புமணி தரப்புக்கு எம்எல்ஏக்கள் வரவிடாமல் தடுப்பது என்ற வியூகத்தையே பிரதானமாக வகுத்து கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

யார் அதிக எம்எல்ஏக்களை பெறப் போகிறார்களோ அவர்கள் கட்டுப்பாட்டில் தேர்தலுக்குப் பின்னர் பாமக வரக்கூடும். எனவே, ராமதாஸ் - அன்புமணி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் அதிக எம்எல்ஏக்களை பெற்றுவிட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இப்போதைய சூழலில் ராமதாஸுக்கு 4 வாய்ப்புகள் உள்ளன. அதாவது, திமுக கூட்டணியில் விசிகவுக்கு இணையான தொகுதிகளைப் பெற்று அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக களமாடி வெற்றி பெறுவது, தவெக கூட்டணியில் இணைந்து அன்புமணியைவிட கூடுதல் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவது, வன்னியர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி 60 தொகுதிகளில் தனித்துக் களம் இறங்கி அன்புமணி தரப்பினரின் வெற்றியைத் தடுப்பது, கடைசி நேரத்தில் அன்புமணியை அதிமுக சமாதானப்படுத்தினால், அதிமுக அணியில் ஒற்றை இலக்கத் தொகுதிகளைப் பெறுவது என்பனதான் அவை.

அதிமுகவுடன் அன்புமணி சேர்ந்துள்ளதால் வன்னியர்கள் அடர்த்தியாகவுள்ள பென்னாகரம், தருமபுரி, மேட்டூர், சேலம் மேற்கு என 4 தொகுதிகளில் அன்புமணிக்கு எம்எல்ஏக்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்த 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது குதிரைக்கொம்பான விஷயம். இதனால், விசிகவுக்கு இணையான தொகுதிகளை ராமதாஸுக்கு ஒதுக்கி மேற்கண்ட 4 தொகுதிகள் உள்பட அன்புமணி வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் வேட்பாளர்களை திமுக களம் இறக்கலாம்.

திமுக ஆதரவு வாக்குகளுடன், பாமக ஆதரவு வன்னியர் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்துடன் ராமதாஸால் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதேநேரத்தில், பெரும்பான்மை வன்னியர்கள், திமுகவுக்கு எதிரான மனப்பான்மையுடன் உள்ளதால், பிற தொகுதிகளில் பாமக ஆதரவு வாக்குகளை திமுகவுக்கு, ராமதாஸால் பரிமாற்றம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

மேலும், ராமதாஸை கூட்டணிக்குள் சேர்த்தால் ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் சமூக வாக்குகள் குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிருப்தியாகி தவெகவுக்குத் திரும்பக்கூடும்.

4 தொகுதிகளின் வெற்றிக்காக 40 தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கியில் சேதாரம் ஆகக்கூடும் என்பதால் ராமதாஸை சேர்க்கக் கூடாது என திமுக தலைமையிடம் திமுகவுக்கு வியூகம் வகுக்கும் நிறுவனங்களும் ஆலோசனை வழங்கியுள்ளன.

அதேபோல, விஜய்யை பொருத்தவரை இதுவரை கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வரவில்லை. 234 தொகுதிகளில் பலமான வேட்பாளர்களை விஜய் நிறுத்துவது சிரமம். எனவே, கூட்டணிக்கு வேறு கட்சிகள் வராத நிலையில் ராமதாஸை சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், ராமதாஸை சேர்த்தால், ஆதிதிராவிடர்கள், பிற்பட்டோர் சமூகங்களில் தனக்கு இருக்கும் ஆதரவு வாக்குகள் குறைந்து விடுமோ என்ற சந்தேகம் விஜய்க்கு உள்ளது.

வன்னியர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தனித்துக் களம் இறங்கினால் 60 தொகுதிகளில் ராமதாஸுக்கு வேட்பாளர்கள் கிடைப்பது சிரமம். ஒருவேளை தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவானால் திமுக, தவெகவில் ராமதாஸுக்கான பேர வலிமை அதிகரிக்கும்.

தருமபுரி, சேலம் மற்றும் வட தமிழகத்தில் வன்னியர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தங்களது அணிக்கு கொண்டுவரும் வகையில் கடைசி நேரத்தில் அன்புமணியைச் சமாதானப்படுத்தி, ஒற்றை இலக்க எண்ணிக்கையில் ராமதாஸுக்கு தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வரக்கூடும். திமுக, அதிமுக அணிகள் இறுதி வடிவம் பெறும் வரை காத்திருப்போர் பட்டியலில் ராமதாஸ் வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம். தேர்தல் தேதிக்கு நெருக்கத்தில் அல்லது அறிவிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகுதான் ராமதாஸுக்கான கூட்டணி கதவுகள் திறக்கப்படும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com