/

அறிவியல் ஆயிரம்: வானவியலில் முதல் நோபல் பரிசு பெற்ற பெண் ஆண்ட்ரியா மியா கெஸ்!

வானவியலில் முதல் நோபல் பரிசு பெற்ற வானவியல் அறிஞர் ஆண்ட்ரியா மியா கெஸ் பற்றி....

News image

ஆண்ட்ரியா மியா கெஸ் - University of Chicago

Updated On :20 ஜூன் 2026, 4:33 pm IST

வானவியலில் முதல் நோபல் பரிசு பெற்ற பெண் ஆண்ட்ரியா மியா கெஸ். நோபல் பரிசே பெண்களுக்கு இல்லாமல் போனது, பெண் என்பதால் கொடுக்காமல் இருந்தது ஒரு காலம். டிஎன்ஏவைக் கண்டுபிடித்த ரோசலின்ட் பிராங்கிளின், அணுப்பிளவைக் கண்டுபிடித்த லைஸ் மைட்னர், துடிக்கும் வானொலி மூலமான பல்சரைக் கண்டுபிடித்த ஜோஸ்லின் பெல் பர்னால் போன்றவர்களை நோபல் குழு புறக்கணித்தது. இந்த பெண்கள் தாங்களே கண்டுபிடிப்பு செய்தாலும், அந்த கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் நோபல் பரிசு பெறாமல், அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு வேறொரு ஆண் விஞ்ஞானி பரிசுகள் பெற்றது என்பது மிகவும் அநியாயம், சமூக நீதி கிழித்து எறியப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது. நேர்மை என்பது மிக உயர்ந்த மேல் தளமான அறிவியல் தளத்திலும் இல்லை. பெண்ணை இரண்டாம் தரமாகவே பார்த்தனர்.

பிரபஞ்சப் பார்வையை மாற்றி அமைத்த பெண்

மனித வரலாற்றில் சிலர் தங்கள் காலத்தை மட்டும் அல்ல, எதிர்கால தலைமுறைகளின் சிந்தனையையும் மாற்றி அமைக்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகள் ஓர் அறிவியல் உண்மையை வெளிப்படுத்துவதோடு நிற்காமல், மனித குலத்தின் பிரபஞ்சப் பார்வையையே மாற்றுகின்றன. அத்தகைய அரிய மனிதர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரியா மியா கெஸ் என்ற பெண் வானவியலாளர்.

வானில் ஒரு கருந்துளை?

இன்று நாம் இரவு வானத்தை நோக்கிப் பார்க்கும்போது, பால்வெளி அண்டத்தின் மையத்தில் ஒரு மாபெரும் கருந்துளை இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்யமுடியுமா? இருக்கிறது என்பதைஉறுதியாக நிரூபித்துக் காட்டியவர் ஆண்ட்ரியா கெஸ். அதுவரை, சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு கருதுகோளாக மட்டுமே இருந்தது. அந்தக் கருதுகோளை அறிவியல் சான்றுகளால் நிரூபித்து, பிரபஞ்சத்தின் ஆழ்ந்த இருளுக்குள் மனித அறிவின் ஒளியைச் செலுத்தியவர் ஆண்ட்ரியா கெஸ்.

கருந்துளைக்காக... நோபல் பரிசு!

2020 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற அவர், உலகின் மிகச் சிறந்த வானியலாளர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அறிவியலில் பெண்களின் முன்னேற்றத்திற்கான வலுவான குரலாகவும் திகழ்கிறார்.

விண்ணை நோக்கிய பயணம் – ஆண்ட்ரியா மியா கெஸின் தொடக்க கால வாழ்க்கை

"விண்ணின் விதையாய் வந்த விண்மீன்"

1965 – அமெரிக்காவின் பொற்காலம். வியட்நாம் போரின் சாயல் மெல்ல மெல்ல மங்கத்துவங்கி இருந்தது. மார்ட்டின் லூதர் கிங் 'எனக்கு ஒரு கனவு இருக்கிறது' (I Have a Dream) என்று முழங்க, மனிதன் சந்திரனை எட்டிப் பிடிக்கும் கனவில் – அமெரிக்கா மூழ்கியிருந்த காலம். நியூயார்க் நகரம், அது ஒரு கனவுகளின் சந்தை! பிராட்வேயின் திரைகளில் ஆயிரம் கதைகள் அழகாகாகவே வந்தன. அங்கே வால்ஸ்ட்ரீட்டில் மூலதனத்தின் பாரம் தாங்கும் கட்டடங்கள் நிறைய நிரம்பிக் கிடந்தன. அது மட்டுமல்ல. ஹார்லெமில் ஜாஸ் இசையும், கிரீன்விச் கிராமத்தில் கவிஞர்களும் கூடியிருந்தனர்.

ஆண்ட்ரியா மியா கெஸ் - பிறப்பு

அந்த அற்புதமான கால கட்டத்தில் அவதரித்தவர்தான் ஆண்ட்ரியா மியா கெஸ் என்னும் அழகிய சித்திரம். இந்த நகரின் ஒரு மூலையில், ஒரு கலாசாரச் சந்திப்பில் ஜூன் 16ம் தேதி விடை கொடுக்கும் வசந்தத்தின் கடைசி நாட்களில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவள்தான் ஆண்ட்ரியா மியா கெஸ். யாரும் அப்போது அவளைப் பற்றி கற்பனை கூட செய்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. எவரும் அறிந்திருக்கவில்லை, எதிர்காலத்தில் இவள்தான் விண்ணின் இருளை வெளிப்படுத்தப் போகிறவள் என்று.

குடும்ப வேர்கள் – ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வரை

அவரது குடும்ப வேர்கள், பல இடங்களிலிருந்து ஒன்றிணைந்து வருகை தந்து இருந்தன. ஆண்ட்ரியாவின் தந்தை கில்பர்ட் கெஸ், ரோம் நகரில் பிறந்தவர். ஆனால் அவரது வேர்கள், துனிசியா வழியே ஊடாடி, பிராங்ஃபர்ட் வழி பயணித்து வந்த யூதப் பாரம்பரியம் கொண்ட ஒரு நாடோடிக் குடும்பம். இரண்டாம் உலகப் போரின் காயங்கள்கூட மாறாத சூழலில் அந்த ஐரோப்பாவில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிய ஒரு பொருளாதார மேதை அவர்.

ஆண்ட்ரியாவின் தாய் 'சூசான் கெய்டன்', வட அட்டில்போரோவின் மண்ணில் பிறந்தவர். அவர் முழுக்க முழுக்க மாசசூசெட்ஸின் பழமையான அயர்லாந்து கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஓவியம்தான் அவர்களின் வாழ்க்கை என்பதே மிகப் பொருத்தமான அழகோவியம். ஓவியத்தின் மூலம் உலகைப் புரிந்து கொண்ட ஒரு கலைஞர். பின்னர் தன் எழுத்தின் மூலம் அறிவைப் பரப்பி, உலகை ஆண்ட ஓர் எழுத்தாளர்.

இரு கலாசாரங்களின் சங்கமம்!

ஒருபுறம் தொழுதே எழும் யூதப் புத்திக்கூர்மை; மறுபுறம் கற்பனையில் மிதக்கும் செல்டிக் மாயம். இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு குடும்ப வேர்கள், அவர்களின் ஆத்மாக்கள், இவர்கள் நியூயார்க்கில் சந்தித்தனர், இணைந்தனர். இவர்களுக்கு இடையே ஓர் அற்புதமான் ஓர் அழகோவியம் ஒரு பெண்ணாகப் பிறந்தது. இருவரும் இணைந்து அழகே வடிவெடுத்த, பிறந்ததோ என எண்ணம் தோன்ற ஓர் அற்புதப் பெண்ணைப் பெற்றெடுத்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி

1960களில் அமெரிக்கா பலவித பதற்றமான சூழ்நிலைகளைச் சந்தித்தது. ஒரு பதற்றமான, ஆனால் எழுச்சிமிக்க நாடாக இருந்தது. அப்போதுதான் அமெரிக்க அதிபர், ஜான் எப் கென்னடி படுகொலை செய்யபட்டார். வியட்நாம் எதிர்ப்புப் போராட்டங்கள் அமெரிக்காவை அலைக்கழித்தன. இப்படிப்பட்டஇருண்ட நிகழ்வுகளுக்கு மத்தியிலும் ஒரு பிரகாசமமான ஒளிக்கீற்று அமெரிக்க அறிவியல் உலகில் வேகமாகவே வீசியது. அதுவே அமெரிக்க விண்வெளித் திட்டம்.

அப்பல்லோ விண்வெளித்திட்டம் - கென்னடியின் கனவு

அமெரிக்காவின்அப்பல்லோ விண்வெளித் திட்டம் என்பது ஜான் எப் கென்னடியின் ஆத்மார்த்த கனவு. அவரே இல்லாமல் போனாலும், விண்வெளித் திட்டம் விதை போடப்பட்டு, முளைவிட்டு எழுந்தது. அவர்கள், '1960களின் முடிவிற்குள் மனிதனை நிலவில் இறக்குவோம்' என்ற உறுதியான சவால்கள் மிகுந்த எண்ணத்துடன் அறிவியலைப் பின் தொடர்ந்தனர். இது ஓர் அறிவியல் சாதனை மட்டுமல்ல, இது அமெரிக்காவின் முக்கியமான ஒரு தேசிய கனவும்கூட. அனைத்து அமெரிக்கர்களின் இதயத்திலும் வேர்விட்டு எழுந்து பதிந்த ஒரு நம்பிக்கையின் தூண்.

அந்தக் காலகட்டத்தில்தான் நம் நாயகி, ஆண்ட்ரியா மியா கெஸ் பிறந்தாள். 1965ல் ஆண்ட்ரியா பிறந்தபோது அப்பல்லோ திட்டம் அதன் உச்சத்தில் இருந்தது. ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தையும் இரவு வானத்தை நிமிர்ந்து பார்த்தது. ஆண்ட்ரியாவும் வானை நோக்கி அன்னையின் ஆதரவோடு கண்ணை விண்ணை நோக்கி செலுத்தினார். கனவுகளுடன்கூட கற்பனைகளோடும் மிதந்தனர். அவர்கள் மனதுள் எப்போது விண்வெளிக்குச் சென்று சந்திரனைத் தொடுவது? என்ற கேள்வியும் மனது ஆழமாகச் சுமந்தது.

ஒரு தாயின் கைதொலைநோக்கி – ஆர்வத்தின் முதல் விதை

ஆண்ட்ரியாவுக்கு அப்போது வயது நான்கு. அப்போதிருந்தே அவள் வானை தன், சிறு குறு கண்களால் ஆராயத் துவங்கிவிட்டாள். முதல் 4-7 வயதுவரை அவள் தாயுடன் சேர்ந்து வானத்தைப் பார்ப்பதே, தாய் - மகள் இருவருக்கும் பொழுதுபோக்கு ஆனது. அப்போது அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலங்கள் ஒவ்வொன்றாக நிலவைத் தொட்டன. சிறுமி ஆண்ட்ரியா, தொலைக்காட்சித் திரையில் அந்தக் காட்சியைக் கண்டு குதூகலித்தாள். அவற்றை கற்பனை சிறகடிக்கும் விரிந்த கண்களுடன் பார்த்தாள், வாய் திறந்தபடி. நானும் பெரிய பெண்ணானதும் வான்வெளிக்குப் பறப்பேன் என மனதுக்குள் சபதம் பூண்டாள் அந்த சிறு வயதிலேயே.

சின்ன ஆண்ட்ரியாவின் பெரிய ஆசை; பரிசு அன்னையால்!

"அம்மா, நானும் நிலவுக்குப் போக வேண்டும் "என்று தன் தாயைப் பார்த்து சிணுங்கியது அந்த சின்ன நிலவு. விண்வெளி, விண்வெளி. பனித்துளி, பனித்துளி, இதுதான் அவள் முதல் விண்வெளிக் கனவு. தாய் சூசன், மனதிலும் செயலிலும் அழகு நிறைந்த ஓர் ஓவியராக இருந்தாலும், அறிவியலின் மீது மாறாக் காதலும் பற்றும் கொண்டவள். எனவே, மகளின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என மனதிற்குள் சபதம் பூண்டார் ஆண்ட்ரியாவின் அன்னை சூசன். சூசன், மகளைப் பார்த்து, அவளின் ஆசையைப் பார்த்து, அதனைப் புரிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே, 'மகளே உன் ஆசையை நான் பூரணமாக்குவேன்' என்று கூறி, ஆண்ட்ரியாவுக்கு, ஒரு சிறிய தொலைநோக்கியைப் பரிசாகக் கொடுத்தாள். மகள் ஆண்ட்ரியாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. றெக்கை கட்டிப் பறந்தார்.

நிலவைப் பார்த்து வானம் சொன்னது

"இதோ, நிலாவைப் பார். உன் ஆதர்சப் பயணம் இங்கேயே இன்றிலிருந்து தொடங்கிவிட்டது” என தாய் வாக்குறுதி அளித்தாள்.

"தாய் சொல்லிய அந்த நாளிலிருந்து, ஆண்ட்ரியாவின் வாழ்க்கை மாறத் தொடங்கியது! அன்றே ஆண்ட்ரியாவின் ஒரு சிறு தொலைநோக்கி, ஒரு பெரிய பிரபஞ்சத்திற்கான கதவைத் திறந்துவிட்டது. தாய் வாங்கித் தந்த தொலைநோக்கி - அவள் முதல் விண்வெளித் தோழியானது.

1969 – அமெரிக்காவின் விண்வெளி ஓடங்களும் நிலவின் தரை இறங்கலும்

அமெரிக்க விண்வெளி ஓடம் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் இருவரையும் சுமந்து நிலவுக்குப் பாய்ந்தது. மனிதர்கள் முதன்முதலில் நிலவில் காலடி பதித்த நாள் ஜூலை 20, 1969. அமெரிக்காவின் 'அப்போலோ 11' (Apollo 11) விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) இருவரும் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர். இதில் நீல் ஆம்ஸ்ட்ராங்தான் நிலவின் பரப்பில் கால் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்த மனிதர்கள் அனைவருமே அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி வீரர்கள். 1969 முதல் 1972 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்துள்ளனர்.

அவர்கள் விவரம்:

1. நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong): நிலவில் காலடி பதித்த முதல் மனிதர். (Apollo 11, 1969)

2. பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin): நிலவில் நடந்த இரண்டாவது மனிதர். (Apollo 11, 1969)

3. பீட் கான்ராட் (Pete Conrad) (Apollo 12, 1969)

4. அலான் பீன் (Alan Bean) (Apollo 12, 1969)

5. அலான் ஷெப்பர்ட் (Alan Shepard): நிலவில் நடந்த வயதானவர். (Apollo 14, 1971)

6.  எட்கர் மிட்செல் (Edgar Mitchell): (Apollo 14, 1971)

7.  டேவிட் ஸ்காட் (David Scott): நிலவில் முதன்முதலில் வாகனத்தை ஓட்டியவர். (Apollo 15, 1971)

8. ஜேம்ஸ் இர்வின் (James Irwin): (Apollo 15, 1971)

9. ஜான் யங் (John Young): (Apollo 16, 1972)

10. சார்லஸ் டியூக் (Charles Duke): நிலவில் நடந்த இளம் வயதுடையவர். (Apollo 16, 1972)

11. யூஜின் செர்னான் (Gene Cernan): நிலவில் நடந்து திரும்பிய கடைசி மனிதர். (Apollo 17, 1972)

ஹாரிசன் ஷ்மிட் (Harrison Schmitt): நிலவுக்குச் சென்ற முதல் ஒரே விஞ்ஞானி. (Apollo 17, 1972)

இவற்றை எல்லாம் உற்சாகமாக ஆண்ட்ரியா பார்த்துக்கொண்டே இருந்தார். எனக்கும் ஒரு காலம் வரும், நானும் விண்வெளிக்குச் செல்வேன் என்ற கற்பனையுடன் இருந்தார்.

சிகாகோ பயணமும் ஆய்வகப் பள்ளியும்

1969 ஆம் ஆண்டு, மனிதன் நிலவில் கால் பதித்த ஆண்டு. அதே ஆண்டு, ஆண்ட்ரியாவின் தந்தை கில்பர்ட் தனது முனைவர் பட்டத்தையும் முடித்தார் (கொலம்பியாவில்). அவருக்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு பதவி கிடைத்தது. குடும்பம் கொலம்பியாவுக்குக் குடிபெயர்ந்தது.

சிகாகோ நகரம் என்பது முழுக்க முழுக்க நியூயார்க்கிலிருந்து முற்றிலும் வேறான ஓர் உலகம். மிச்சிகன் ஏரியின் குளிர்ந்த காற்று, வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், ஆல்கபோனின் காலத்தின் நிழல்கள் என இன்னும் மாறாத ஒரு நகரம், ஆனால் அங்கே ஒரு அற்புதமான பள்ளி இருந்தது. அதுதான், சிகாகோ பல்கலைக்கழக ஆய்வகப் பள்ளி (University of Chicago Laboratory Schools).

"லேப் ஸ்கூல்" என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்தப் பள்ளி, புகழ்பெற்ற ஜான் டூயியின் கல்விக் கொள்கைகளில் கட்டமைக்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் முறையை முழுமையாக ஆதரிக்கும், செயல்படுத்தும் பள்ளி. கற்பனைக்கும், சோதனைக்கும், ஆய்வுக்கும் முக்கியத்துவம் தரும் பள்ளி. ஓர் ஆசிரியரின் மகள் என்பதால், ஆண்ட்ரியாவுக்கு அங்கு எளிதில் கல்வி பயில இடம் கிடைத்தது.

ஆய்வகப் பள்ளியின் சிறப்பும், சவாலும்

சிகாகோ பல்கலைக்கழக, ஆய்வகப் பள்ளி மிகவும் தீவிரமானது, மிகவும் சிறப்பானது என்று அடிக்கடி ஆண்ட்ரியா நினைவு கூர்கிறார். கல்வியின் கடுமை என்பது கல்லூரிக் கல்விக்கு ஒரு முன்னோட்டம் போலவே இருந்தது. அங்குள்ள மாணவர்களின் பின்னணி பலதரப்பட்டது. ஒரு வகுப்பில் வெவ்வேறு கண்டங்களிலிருந்து வந்த குழந்தைகளும்கூட ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றனர். அது மட்டுமன்று. அவர்களின் வாழ்க்கைத்தரமும், பொருளாதாரத் தரமும்கூட வேறாகவே இருந்தன.

ஆண்ட்ரியாவின் சிந்தனை சிறகடிப்பு - ஏளனத்தை ஏற்றமாக்கிய பெண்

இங்குதான் ஆண்ட்ரியாவின் விமர்சனச் சிந்தனை வளர்ந்தது. ஏன்? எப்படி? – என்று கேட்கப் பழகினாள். எப்படி? என்று ஆராயப் பழகினாள். என்ன ஆனால்? என்று கற்பனையை முன் நிறுத்தப் பழகினாள். தொடர்ந்து வினாக்களைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனால் இந்தப் பள்ளியிலும்கூட பாலினப் பாகுபாடு இருந்தது.

சில ஆசிரியர்கள், ஆலோசகர்கள் சொன்னார்கள்:

"நீ பெண், உனக்கு இந்தக் கல்லூரிகள் கடினம், அவை பெண்களை மிகக் குறைவாகவே சேர்க்கின்றன. நீ இங்கே எதுவுமே செய்ய முடியாது. உன் கற்பனை வீண், நீ வேறு எங்காவது சென்று கல்வி பயின்று கொள். அதுதான் உனக்கு உதவிகரமாக இருக்கும் "என்றார்கள்.

இத்தகைய பேச்சுக்களைக் கேட்டுக்கேட்டு, பல பெண்கள் தங்கள் கனவுகளைச் சுருக்கிக் கொண்டார்கள். பள்ளியை விட்டு விலகினார்கள். ஆனால் ஆண்ட்ரியா எதற்கும் அஞ்சியவள் அல்ல; அவர்கள் கூறியதை எல்லாம் துச்சமாக மதித்தாள். அவளின் மனதிற்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. “எப்படியும்இங்கேதான் படிப்பேன், இங்கிருந்து வான்வெளிக்கு சென்றே தீருவேன்” என நெஞ்சுக்குள் கங்கணம் பூண்டாள். அத்துடன்,அவளுக்குள் ஒரு புரட்சி கனன்றது; வெடித்தது.

உயர்நிலை வேதியியல் ஆசிரியை – ஒரு வெளிச்சம்.

அந்த இருண்ட சூழலில், ஒரு வெளிச்சக் கீற்றும் அங்கே தெரிந்தது. அதுதான் .ஆண்ட்ரியாவின் உயர்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியை. அவர் பெயர், ஜூடி கேன். அந்தக் காலத்தில், பெண் வேதியியல் ஆசிரியை என்பதே ஒரு சாதனை. எம்ஐடி-க்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று கூறிய வழிகாட்டி ஆலோசகர்களைப் புறக்கணிக்குமாறு கீன் ஆண்ட்ரியா கெஸ்ஸை ஊக்குவித்தார். மேலும் அவர் "அவர்கள் அதிகபட்சம் என்ன செய்துவிடப் போகிறார்கள்? வேண்டாம் என்று சொல்லிவிடுவதா?" என்று அவர் ஆணித்தரமாகக் கேட்டார். ஆண்ட்ரியா கெஸ்ஸை அங்கேயே கல்வி பயிலுமாறு கூறினார்.

அவர் பெயர் புத்தகங்களில் இல்லை. ஆனால் அந்த ஆசிரியரின் ஆழமான சொல், ஆண்ட்ரியாவின் இதயத்தில் நிலைத்துவிட்டது. ஆலோசகர்கள் "உன்னால் முடியாது" என்று சொன்ன போதெல்லாம் அவள் கேட்டாள்: "What's the worst they can do? Say no? "(மோசமான பதில் 'இல்லை' என்பதுதானே) அதைத் தாண்டு என்றது உள்ளம்.

"உன் மீது நம்பிக்கை வைத்துப் பார், உனக்கு என்ன கிடைக்கிறதென்று..." இந்த ஒரே ஒரு வாக்கியம், ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டது. பெண்களால் முடியும் என்பதற்கு அவளே ஒரு சிறந்த உதாரணமாய் இருந்தாள்.

மரபு: அவர் ஸ்டெம்(STEM) துறையில் பெண் முன்மாதிரிகளின் முக்கியத்துவம் குறித்து அடிக்கடி குரல் எழுப்புவதோடு, அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்காகவும் வாதிட்டார்.

கணிதத்திலிருந்து இயற்பியல் வரை – ஒரு மாற்றம்

கல்லூரிக்குச் செல்லும் போது ஆண்ட்ரியா கணிதத்தை முக்கியப் பாடமாகத் தேர்ந்தெடுத்தாள். கணிதம், தர்க்கத்தின் மொழி, துல்லியத்தின் அடையாளம். ஆனாலும் சிறுமி ஆண்ட்ரியாவுக்குப் புதிர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கணிதப் புதிர்கள் என்றால் அவளுக்கு  லட்டு சாப்பிடுவது மாதிரிதான்.

"ஒரு புதிரைத் தீர்ப்பதில் உள்ள தர்க்கம் – என்னைக் கவர்ந்தது" என்றாள். பின்னர் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன (MIT)த்தில் சேர்ந்து படித்தார்.

ஆனால் விரைவிலேயே, ஆண்ட்ரியாவுக்கு இயற்பியலின் மீது ஈர்ப்பு திரும்பியது. கணிதம் 'எப்படி' என்பதைச் சொல்கிறது, ஆனால் இயற்பியல் 'ஏன்' என்பதை விளக்குகிறது! இயற்பியலே என்னுடன் பேசும் நெருக்கமான நண்பன். மொழி, பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் மொழி என்று உணர்ந்து முடிவெடுத்தாள்.

1987 ஆம் ஆண்டு, எம்ஐடி-யில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனாலும் ஒரு அதற்குள் ஒரு சாதனை – St. Anthony Hall சகோதரத்துவத்தின் உறுப்பினர். அவரின் கீழ் பணிபுரிய வேண்டிய சூழலில். ஆம், ஒரு பெண், அப்போதே ஓர் ஆண் மேலாதிக்க அமைப்பில் இருந்தார்.

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் – புத்திக்கூர்மையின் உச்சம்

1992 – கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம். அங்கு கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் (Caltech) 1992-ல் முனைவர் பட்டம் பெற்ற வானியற்பியலாளர் ஆண்ட்ரியா கெஸ்ஸுக்கு வழிகாட்டியாக இருந்தவர் புகழ்பெற்ற அகச்சிவப்பு கதிர் வானியலாளர் (Infrared Astronomer) ஜெர்ரி நியூகெபாயர் (Gerry Neugebauer) ஆவார்.

கெஸ், தனது முனைவர் பட்ட ஆய்வின்போது ஜெர்ரி நியூகெபாயரின் வழிகாட்டுதலின் கீழ், விண்மீன் பரிணாம வளர்ச்சி, பல விண்மீன் அமைப்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். ஜெரி நியூகெபாயர், ஒரு மாபெரும் வானியலாளர். ஆனால் ஆண்ட்ரியா கெஸ்ஸுக்கு அவருடனான அந்தப் பயணம் எளிதாக இருந்ததா? இல்லவே இல்லை என்பதே உண்மை.

"கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெண்ணையே பார்க்க முடியாது" என்பதை ஆண்ட்ரியா நிதர்சனமாக உணர்ந்தாள், "நான் தவறான விளையாட்டுத் திடலில் நிற்கிறேனோ?" என்றுகூட சமயத்தில் அவர் நினைத்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. "என் தொழிலுக்குத் துணை நிற்பவர்களை வழிகாட்டிகளாகத் தேர்ந்தெடுத்தேன்" என்றாள். அவள் கற்றுக் கொண்ட பாடம், "பெண் என்பதால், உங்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளச் சிறந்த பட்டம் வேண்டும்" என்பதே.

முனைவர் பட்டம் எளிதாக இல்லை

எப்படியோ போராடி, ஆணாதிக்க மேலாண்மையை வெற்றி கொண்டு 1992 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் ஆண்ட்ரியா கெஸ். இந்தக் காலகட்டத்தில் அவர் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் ஒன்று இருந்தது

“புதிய கேள்விகளை எழுப்ப அஞ்சாதே; பெரிய கண்டுபிடிப்புகள் அங்கேயே தொடங்குகின்றன”என்பதுதான் அது. இளம் வயதிலேயே அறிவியலில் ஆழமான பற்றும், கடின உழைப்பும் இவரது சிறப்பியல்புகளாக இருந்தன.

வானியலுக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்

ஆண்ட்ரியா கெஸ்ஸின் ஆரம்ப கால ஆய்வுகள் இரட்டை விண்மீன் அமைப்புகள், விண்மீன் உருவாக்கப் பகுதிகள் குறித்தவையாக இருந்தன. வானத்தைப் பார்க்கும்போது நாம் காணும் ஒளி, பூமியின் வளிமண்டலத்தால் சிதைக்கப்படுகிறது. இதனால் தொலைநோக்கிகளில் பெறப்படும் படங்கள் தெளிவாக இருக்காது. இல்லை. இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில் 'ஸ்பெக்கிள் இமேஜிங்' (Speckle Imaging) பின்னர் 'தகவமைப்பு ஒளியியல்' (Adaptive Optics) எனப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஆண்ட்ரியா தன்னிகரில்லா முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த தொழில்நுட்பங்கள் பின்னாளில் அவரது மிகப்பெரிய கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக அமைந்தன என்றால் மிகையில்லை.

பால்வெளி அண்டத்தின் மையத்தை நோக்கிய தேடல்

நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் என்ன இருக்கிறது?

பல பத்தாண்டுகளாக வானியலாளர்களைத் துரத்திய வினா ஒன்று இருந்தது. அதுதான் அண்டத்தின் மையத்தில் என்ன இருக்கிறது? இப்போதுஅண்டத்தின் மையத்தில் மிகப் பெரிய ஈர்ப்பு விசை செயல்படுவதாகக் கணிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவுமே கிட்டவில்லை. ஆண்ட்ரியா கெஸ் இந்த மர்மத்தைத் தீர்க்க முடிவு செய்தார். ஹவாயில் அமைந்துள்ள கேக் தொலைநோக்கி மையத்தின் உதவியுடன் பால்வெளி மையத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆய்வு செய்தார். அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தி, அங்கு காணப்பட்ட விண்மீன்களின் இயக்கத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்தார் கெஸ்.

சஜிட்டேரியஸ் ஏ* (Saagittarrius A*) மறைந்திருந்த மாபெரும் அரக்கன்

ஆயிரக்கணக்கான படங்களும் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது. அப்போது அங்கே ஓர் அதிசயம் பிரவாகமெடுத்து நின்றது. அதுதான் கருந்துளையோ? ஓர் அற்புதமான வியத்தகு அதிசயம் வெளிப்பட்டது.

பல விண்மீன்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கண்ணுக்கு ஏதும் புலப்படாத நிலைமையில் அவை ஒரு மையப் பொருளைச் சுற்றிச்சுற்றி மிக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.

அவற்றில் எஸ்2 (S2) என்ற விண்மீனின் சுற்றுப்பாதை மிக முக்கியமான சான்றாக அமைந்தது. அதன் இயக்கத்தை ஆய்வு செய்தபோது, அந்த மையப் பொருளின் நிறை சூரியனைவிட சுமார் 41 லட்சம் மடங்கு அதிகம் இருப்பது தெரிந்தது.

அவ்வளவு நிறையை மிகவும் சிறிய இடத்தில் அடக்கக்கூடிய ஒரே பொருள் கருந்துளையாக மட்டுமே இருக்கக் கூடும் என்றும் கணித்தனர். இதன்மூலம் பால்வெளியின் மையத்தில் சஜிட்டேரியஸ் ஏ* (Sagittarius A*) எனப்படும் சூப்பர் மாசிவ் கருந்துளை (Super Massive Blackhole) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது மிக மிக அதிக நிறையுடைய பொருள், தன்னுடைய ஈர்ப்பு விசையால் சுருங்கும்போது உருவாகும் விண்வெளிப் பகுதி. அதன் ஈர்ப்பு விசை அளவுக்கு மீறியதாக இருப்பதால், ஒளிகூட அதிலிருந்து வெளிப்பட முடியாது. அதனால் அந்தக் கருந்துளையை, யாரும் இந்த புறக்கண்ணால் நேரடியாகக் காணவும் முடியாது. அதன் அருகில் உள்ள விண்மீன்கள், வாயு மேகங்களின் இயக்கத்தை ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அதன் இருப்பை, நாம் அறிய முடியும்.

ஆண்டிரியா கெஸ்ஸின் சாதனை

ஆண்ட்ரியா கெஸ்ஸின் மிகப்பெரிய சாதனை என்னவெனில், கருந்துளையை நேரடியாகப் பார்க்காமல் அதன் இருப்பை நிரூபித்ததுதான்.

விண்மீன்களைப் பின்தொடர்ந்த பெண்

1990-களின் தொடக்கத்தில், பல வானியலாளர்கள் ஒரு மர்மக் கேள்வியை ஆராய்ந்து கொண்டிருந்தனர். நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உண்மையில் என்ன இருக்கிறது?

அங்கே ஏதோ ஒன்று இருப்பது தெரிந்தது. ஆனால் அது என்ன? ஒரு விண்மீன்கூட்டமா? அல்லது வேறு ஏதோ விசித்திரமான பொருளா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி ஆண்ட்ரியா கெஸ் தனது வாழ்நாளின் மிக முக்கியமான ஆராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கினார்.

கருந்துளையை நோக்கிய கண்கள்

டபிள்யூ. எம். கெக் ஆய்வகம் (W. M. Keck Observatory) தொலைநோக்கிகளின் உதவியுடன் வளிமண்டலக் குழப்பங்களைச் சரிசெய்யும் ''தகவமைப்பு ஒளியியல்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்ட்ரியா கெஸ் பால்வெளி மையத்தை, அதன் இயக்கங்களை மிகத் தெளிவாகப் பதிவு செய்தார்.

கண்ணுக்குத் தெரியாத தூசிமேகங்களை அகச்சிவப்பு ஒளிக்கதிர் வழியாகத் துளைத்துப் பார்த்தபோது, அவருக்கு ஓர் அற்புதமான காட்சி காணக் கிடைத்தது. விண்மீன்கள் சில, கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாபெரும் பொருளைச் சுற்றி மின்னல் வேகத்தில் சுழன்று கொண்டிருந்தன.

அவை ஒரு ராஜாவைச் சுற்றி வலம் வரும் கோள்களைப்போல இல்லை. மாறாக, ஒரு அதிரடியான ஈர்ப்பு விசையின் கட்டளைக்குள் கட்டுண்ட கைதிகளைப் போலச் சுழன்றன. அந்த மர்மப் பொருளே பின்னர் சஜிட்டேரியஸ் ஏ* (Sagittarius A*) என ஆண்ட்டிரியா கெஸ்ஸால் அடையாளம் கண்டார்.

அவரது இந்தக் கணக்கீடுகள், சூரியனின் நிறையைவிட சுமார் 41 இலட்சம் மடங்கு அதிக நிறையுடைய ஒரு மாபெரும் கருந்துளை பால்வெளியின் மையத்தில் இருப்பதை நிரூபித்தன.

விண்மீன்களால் எழுதப்பட்ட சான்று

1995 முதல் பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட கண்காணிப்புகளில், எஸ்2 என்ற விண்மீனின் முழுச் சுற்றுப்பாதையும் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் S0-102 எனும் இன்னொரு விண்மீனும் கண்டறியப்பட்டது.

இந்த விண்மீன்களின் இயக்கம் ஒரு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மறுக்க முடியாத ஆதாரங்களைப்போல இருந்தன.

"கருந்துளை இருக்கிறது" என்பது இனி ஒரு ஊகமல்ல. அது வானில் எழுதப்பட்ட நிரந்தர உண்மை.

நோபல் பரிசை நோக்கிய பயணம்

2020 ஆம் ஆண்டு, உலக அறிவியல் வரலாற்றில், யாருமே மறக்க முடியாத நாள் ஒன்று உதித்தது. அட அதுதான், ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez), ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (Reinhard Genzel), ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 வழங்கப்பட்டது.

பால்வெளியின் மையத்தில் ஒரு சூப்பர் மாஸிவ் கருந்துளை இருப்பதை நிரூபித்ததற்காக ஆண்ட்ரியா கெஸ், ரெய்ன்ஹார்ட் கென்செல் இருவரும் நோபல் பரிசின் பாதியைப் பகிர்ந்து கொண்டனர். ஆண்ட்ரியா கெஸ் யாருடைய துணையும், உதவியும் இன்றி தானே, சஜிட்டேரியஸ் ஏ* (Sagittarius A*) இருப்பிடத்தைக் கண்டறிந்தவர்.

இந்த வெற்றியுடன், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற நான்காவது பெண்மணியாக ஆண்ட்ரியா கெஸ் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அவருக்கு முன் அந்தப் பெருமையைப் பெற்றவர்கள்:

மேரி க்யூரி -(1903),

மரியா கோஎப்பேர்ட் மேயர் -(1963)

டோனா ஸ்ட்ரிக்லாண்ட் - (2018)

அறிவியலைத் தாண்டிய ஒரு மரபு

ஆண்ட்ரியா கெஸ் வெறும் வானியலாளர் அல்ல.

அவர் ஒரு பரபரப்பான உண்மைச் செய்தி.

அவர் அறிவியலில் மறக்க முடியாத ஒரு சின்னம்.

"பெண்களால் முடியாது" என்று பலமுறை சொல்லப்பட்ட காலத்தில், "ஏன் முடியாது?" என்று எதிர்வினா தொடுத்த துணிச்சல் குரல்.

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளைச் சந்தித்தபோதும், அவற்றை நம்பாமல், தன்னையே நம்பியவர். அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு வழிகாட்டுகின்றன.

"எப்போதும் நல்ல அறிவியலைத் தேடுங்கள்; அதைச் செய்யத் துணியுங்கள்."

ஆண்ட்ரியா கேஸ் குரல் "உங்களுக்கு யார் ஆதரவு தருகிறார்கள், யார் தடை செய்கிறார்கள் என்பதை அடையாளம் காணுங்கள்" "தடைகளைத் தாண்டிப் பழகிக் கொள்ளுங்கள் – ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது இல்லை சொல்வார்கள்"

ஆண்டிரிய கெஸ்ஸின் முக்கிய கண்டுபிடிப்புகள்

1. தகவமைப்பு ஒளியியல் (Adaptive Optics) பயன்பாடு: கெஸ் மற்றும் அவரது குழுவினர், ஹவாயில் உள்ள கெக் தொலைநோக்கி (Keck Telescope) யில் ‘தகவமைப்பு ஒளியியல்’ என்ற புரட்சிகர நுட்பத்தைப் பயன்படுத்தினர். பூமியின் வளிமண்டலத்தால் ஏற்படும் மங்கலை இது சரிசெய்து, மிகத் தெளிவான படங்களைப் பெற உதவியது.

2. விண்மீன்களின் சுற்றுப்பாதையைக் கண்காணித்தல்: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக (1995 முதல் தொடர்ந்து), அவர் எஸ்2 என்ற ஒரு குறிப்பிட்ட விண்மீனின் பாதையைத் துல்லியமாகப் படமாக்கினார். அந்த விண்மீன், ஒரு கண்ணுக்குத் தெரியாத மாபெரும் பொருளைச் சுற்றி, வினாடிக்கு 5,000 கிலோமீட்டர் வேகத்தில் (மணிக்கு 18 மில்லியன் கி.மீ.) சுற்றி வந்ததைக் கண்டுபிடித்தார்.

3. திடமான சான்று: இந்த விண்மீனின் முழுமையான சுற்றுப்பாதையைக் கணக்கிட்டு ஜோஹன்னஸ் கெப்லரின் விதிகளைப் பயன்படுத்தி, மையத்தில் உள்ள பொருளின் நிறை என்பது சுமார் 4 மில்லியன் சூரியன்களின் நிறைக்குச் சமமானது என்பதை நிறுவினார்.

4.  இவ்வளவு பெரும் நிறை ஒரு சிறிய பகுதியில் குவிந்திருப்பதற்கு, கருந்துளை (Black Hole) மட்டுமே ஒரே விளக்கமாக இருந்தது. ‘அது ஒரு கருந்துளைதான்’ என்பதை அனாயாசமாகவும், ஐயமறவும் நிரூபித்த முதல் அறிவியலாளர்களில் இவரும் ஒருவர்.

நோபல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCLA) பேராசிரியராகவும், வானியற்பியல் துறையின் தலைமைப் பொறுப்பிலும் உள்ளார்.

விருதுகள் & சிறப்புகள்

நோபல் பரிசுக்கு முன்னரே, இவரது அறிவியல் பங்களிப்புகளை உலகம் அங்கீகரித்திருந்தது. முக்கியமான விருதுகள் சில:

· மெக் ஆர்தர் ஃபெலோஷிப் (MacArthur Fellowship - 2008): ‘மேதை விருது’ (Genius Grant) என்று பிரபலமான இந்த விருது அவரது அசத்தல் ஆராய்ச்சியைப் பாராட்டியது.

·  கிராஃபோர்டு பரிசு (Crafoord Prize - 2012): வானியலில் இது நோபலுக்கு இணையான மதிப்பு வாய்ந்தது.

· அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் (2004) மற்றும் அமெரிக்க தத்துவ சங்கம் (2012) உறுப்பினர்.

· ராயல் சொசைட்டியின் பேக்கேரியன் பதக்கம் (2015).

·  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கௌரவ அறிவியல் முனைவர் (2019).

·  இயற்பியலுக்கான நோபல் பரிசு (2020).

சொந்த வாழ்க்கை – ஆர்வங்களும் தற்போதைய நிலையும்

ஆண்ட்ரியா கெஸ், தனது கணவர் டாம் லா டுரெட் (புவி இயற்பியலாளர்) இரு மகன்களுடன் லாஸ் ஏஞ்சலஸில் வசித்து வருகிறார். தனது பிள்ளைகளுக்கு ‘உங்களால் முடியும், தடைகளைத் தாண்டுங்கள்’ என்பதை எப்போதும் வலியுறுத்துகிறார்.

ஆண்ட்ரியா கெஸ் பற்றிய ஆச்சரியமான சுவையான தகவல்கள்:

1.      சுறுசுறுப்பான நீச்சல் வீராங்கனை: ஆய்வகத்திலும், வகுப்பறையிலும் மட்டுமல்லாமல், யுசிஎல்ஏ(UCLA) முதுநிலை நீச்சல் கழகத்தில் தினமும் நீந்தி உடலைப் பேணி வருகிறார். ஆராய்ச்சியின் மன அழுத்தத்தை நீச்சல்தான் போக்குவதாகக் கூறுகிறார்.

2.      குழந்தைகளுக்கான புத்தக ஆசிரியர்: ஜூடித் லவ் கோஹென் என்பவருடன் இணைந்து "You Can Be a Woman Astronomer" (நீங்கள் ஒரு பெண் வானியலாளராகலாம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த தலைமுறை பெண்களை அறிவியலுக்குள் வரவைக்கும் நோக்கமே இது.

3.      ஆர்வமூட்டும் பேச்சு: 2009ல் “The Hunt For a Supermassive Black Hole” (மீப்பெருங் கருந்துளை வேட்டை) என்ற தலைப்பில் டிஇடி(TED) மாநாட்டில் உரையை நிகழ்த்தியுள்ளார்.

4.      விமர்சன சிந்தனையின் முக்கியத்துவம்: மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரை: “தரவுகள் உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். அதை ஆராயுங்கள். அதுதான் உண்மையான கண்டுபிடிப்பு.”

தற்போதைய நிலை (2026 தரவுகளின்படி)

இன்றும் (2026) அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தொடர்ந்து, இளம் அறிவியலாளர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

ஜேம்ஸ் வேப் விண்வெளித் தொலைநோக்கியின் (JWST) புதிய தரவுகளைப் பயன்படுத்தி, பால் வழி மையத்தில் உள்ள கருந்துளைக்கும், அதனைச் சுற்றியுள்ள விண்மீன்களுக்கும் இடையிலான தொடர்பை இன்னும் ஆழமாக ஆராய்ந்து வருகிறார்.

ஏழை, எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கான அறிவியல் கல்வி உதவித் தொகைக்கும் நிதி திரட்டி வருகிறார்.

பிபிசி, டிஸ்கவரி, ஹிஸ்டரி சேனல்களின் ஆவணப் படங்களில் 'நோவா பிபிஎஸ்' தொடரில் 2006ல் - “Science Hero” (அறிவியல் ஹீரோ) பட்டம் சூட்டப்பட்டவள்.

விண்ணின் மறைவை வெளிப்படுத்திய விண்மீன் ஆண்ட்ரியா கெஸ் ஒரு சாதாரண வானியலாளர் மட்டுமல்ல; கருந்துளை இருப்பதை நேரடியாக நிரூபித்து, வானியல் வரலாற்றையே மாற்றிய பெண்மணி. ஒரு காலத்தில் கற்பனைக்கு எட்டாத பொருளாக இருந்த கருந்துளை, இன்று அறிவியல் உண்மை என்பதை உலகுக்கு உறுதிபடுத்தியவர். நோபல் பரிசு பெற்ற நான்காவது பெண் என்ற பெருமையைத் தாண்டி, அறிவியலில் பெண்களின் பங்களிப்புக்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவரது கதை,' விடாமுயற்சியும், ஆர்வமுமே பெரும் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம்' என்பதற்கு ஏற்ற சான்றாகும்.

விருதுகள்

ஆனி ஜே. கேனான் (Annie J. Cannon) விருது - 1994ல் முதல் அங்கீகாரம்.

பேக்கார்ட் ஃபெலோஷிப், ஸ்லோன் ஃபெலோஷிப்

நியூட்டன் லேசி பியர்ஸ் (Newton Lacy Pierce) பரிசு - 1998ல் அமெரிக்க வானியல் குழுமம்,

மரியா கோப்பர்ட்-மேயர் (Maria Goeppert-Mayer) விருது - 1999ல் இயற்பியல் குழுமம்

கோல்ட் ஷீல்டு பதக்கம், மார்க் ஆரோன்சன் நினைவு விரிவுரை,

ராயல் சொசைட்டி பேக்கரியன் (Royal Society Bakerian) பதக்கம் - 2015ல் லண்டனின் பெருமை.

2019ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கௌரவ டாக்டர்,

அதே ஆண்டில் ஏபிஎஸ் ஃபெலோ - 2020ல் ஏஏஎஸ் லெகசி ஃபெலோ!

மாணவர்களுக்கு....

“தரவுகள் உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள் - அதை ஆராயுங்கள். அதுதான் உண்மையான கண்டுபிடிப்பு” - அவரது அறிவுரை, விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வித்தை!

பால் வழி மையத்தின் இருண்ட அறையில்,கோடிக்கணக்கான விண்மீன்களின் நடுவில், ஒரு கண்ணுக்குத் தெரியாத மாபெரும் பொருள் - கருந்துளை! அதன் இருப்பைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தார்.

கற்பனைக்கு எட்டாதது இன்று அறிவியல் உண்மை ஆனது, அதற்குக் காரணம் ஆண்ட்ரியா கெஸின் விடாமுயற்சியே!வானியலில் மட்டுமல்ல, மனிதகுல சாதனையின் பட்டியலிலும், அவர் பெயர் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டது என்றென்றும்!

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.