ஜனநாயகத்தின் மீதான வன்முறை!

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை அளித்து, நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வழிகோலியதற்கு இரண்டு காரணங்கள்.
Published on

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை அளித்து, நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வழிகோலியதற்கு இரண்டு காரணங்கள். ஊழலும் முறைகேடுகளும் மலிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அகற்றுவது முதல் காரணம் என்றால், அமளியும், வெளிநடப்பும், அவை முடக்கமுமாக நாடாளுமன்றம் தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியது இரண்டாவது காரணம். தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி அரசு அமைத்த பிறகும், நாடாளுமன்றம் முறையான விவாதங்களுடன் செயல்படாமல் முடக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. அதை ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் வன்முறை என்று சொன்னாலும் தவறில்லை.
 சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்து மக்களவைகளிலும் பல முக்கியமான பிரச்னைகள் எழுந்தன. நாடாளுமன்றம் அப்போதெல்லாம் விவாதங்களுக்கான அரங்கமாகத் திகழ்ந்ததே தவிர, ஒருபோதும் கூச்சல் குழப்பத்துக்கும், அவை முடக்கங்களுக்கும் உள்படுத்தப்படவே இல்லை. 1969-இல் காங்கிரஸ் கட்சியின் பிளவுக்குப் பிறகு, இந்திரா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸýக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும்கூட, அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருந்த ராம் சுபாக் சிங் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸýம், ஏனைய எதிர்க்கட்சிகளும் விவாதங்களால் ஆளும் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தனவே தவிர, அவை நடவடிக்கைகளை முடக்கவோ, சட்டம் இயற்றுவதைத் தடுக்கவோ முற்படவே இல்லை.
 விவாதங்களுக்கு வழியே வகுக்காமல் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்குவது, அவையில் அமளி ஏற்படுத்துவது போன்ற நடைமுறைகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது 1977-இல் ஜனதா ஆட்சியின் போதுதான். சஞ்சய் காந்தியின் தூண்டுதலின்பேரில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்புவதும், அமளி ஏற்படுத்துவதும், அவை நடவடிக்கைகளை முடக்க முயற்சிப்பதுமாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இந்திய ஜனநாயகத்துக்கு அறிமுகப்படுத்திய "கருப்பு தினம்' அப்போதுதான் தொடங்கியது.
 மூத்த சோஷலிசத் தலைவர் ஆச்சார்ய கிருபளானி அன்று தெரிவித்த கருத்து இப்போதும்கூடப் பொருத்தமானதாகவே இருக்கிறது - "32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்ட காங்கிரஸ்காரர்களால் 32 வாரங்கள்கூடப் பதவி சுகமில்லாமல் இருக்க முடியவில்லை என்பதைத்தான் இப்படிக் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்க முற்படுவது வெளிப்படுத்துகிறது. தாங்கள்தான் இந்தியாவை ஆளப் பிறந்தவர்கள் என்கிற காங்கிரஸ் கட்சியின் ஆணவம்தான் இதற்குக் காரணம்.'
 ஆச்சார்ய கிருபளானி சாதாரணத் தலைவரல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். சோஷலிச சித்தாந்தத்தின் முன்னோடிகளில் ஒருவர். பிரதமராக யார் வர வேண்டும் என்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சர்தார் வல்லபபாய் படேலுக்கு அடுத்தபடியாக அகில இந்திய அளவில் அதிகமான காங்கிரஸ் நிர்வாகிகளின் வாக்குகளைப் பெற்றவர். பிறகு மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்தார் வல்லபபாய் படேலைப் போலவே இவரும் ஜவாஹர்லால் நேரு பிரதமராவதற்கு வழிவிட்டவர்.
 சஞ்சய் காந்தியின் அறிவுரைப்படி 1977-இல் தொடங்கப்பட்ட, நாடாளுமன்றத்தில் கூச்சலும், அமளியும் ஏற்படுத்தி நடவடிக்கைகளை முடக்க முற்படும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு, இப்போது தரம் தாழ்ந்த நிலைமைக்குப் போயிருக்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தத்தம் நிலைமையிலிருந்து விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத, விவாதங்களுக்கு வழிகோலாத நிலைமை ஏற்படுமேயானால், நாடாளுமன்றம் என்கிற ஓர் அமைப்புக்கே அவசியமில்லை. தேர்தலில் வெற்றி பெறும் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒப்படைத்து விட்டால், மக்கள் வரிப் பணம் கணிசமாக மிச்சமாகிவிடும்.
 அவை நடவடிக்கைகளைத் தொடர்வது, விவாதித்துப் புதிய பல சட்டங்களை நிறைவேற்ற ஆளும் கட்சியை அனுமதித்து தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வது என்கிற பொறுப்புணர்வு அரசியல் கட்சித் தலைமைகளுக்கும் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை. அவையை முடக்குவதால், அரசு புதிய சட்டங்களை இயற்ற முடியாதே தவிர, அன்றாட நிர்வாகத்தை நடத்துவதைத் தடுத்து விடவோ, ஆட்சியிலிருந்து அகற்றி விடவோ முடியாது. விவாதத்துக்குத் தயார் என்று அரசு தெரிவிக்கும்போது, பிரச்னையை விவாதித்து அரசின் பலவீனத்தை வெளிப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அவையை நடத்த விடாமல் செய்வதோ, புறக்கணிப்பதோ அல்ல.
 அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், 25 காங்கிரஸ் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சற்றுக் கடுமையானது என்பது உண்மை. ஆனால், இப்படியே அவை முடக்கம் செய்வதைத் தொடர விடுவது என்பதில் என்ன லாபம் இருக்க முடியும்? இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். அதைக் கேள்வி கேட்க அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லை. இதனால் யாருக்கு லாபம்?
 அவையில் விவாதம் நடக்காத நாள்களுக்கு உறுப்பினர்களுக்குப் படி அனுமதிக்கப்படாமல் இருப்பதும், குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு நாள்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு ஓய்வு ஊதியம் மறுக்கப்படுவதும் இந்தப் பிரச்னைக்கு, ஒருவேளை தீர்வாக இருக்கக் கூடும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com