சோகை எனும் சோகம்

தாய் - சேய் நலம் பேணுவதில் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுபவை தமிழகமும், கேரளமும். குறிப்பாக, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிராமப்புற செவிலியர்களின் தன்னலமற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடும், பிரசவ கால மரணங்கள்,
Updated on
2 min read

தாய் - சேய் நலம் பேணுவதில் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் என்று குறிப்பிடப்படுபவை தமிழகமும், கேரளமும். குறிப்பாக, தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், கிராமப்புற செவிலியர்களின் தன்னலமற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடும், பிரசவ கால மரணங்கள், சிசு மரணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதற்குக் காரணமாகி இருக்கின்றன. ஆனாலும்கூட, மகளிர் நலம் பேணுவதிலும், குழந்தைகள் நலம் பேணுவதிலும் நாம் முழுமையான வெற்றியை அடைந்துவிடவில்லை என்பதுதான் உண்மை நிலைமை.
 ஓர் ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கையின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. இத்தனை சிறப்பாகச் செயல்பட்டும்கூட, தமிழகம் தாய் - சேய் நலம் பேணுவதில் வெற்றி காணவில்லை என்பதைத்தான் இந்த அறிக்கை வெளிச்சம் போடுகிறது.
 கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை மத்திய சுகாதாரத் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழகத்திலுள்ள மகளிரில் 49% பேர் ரத்த சோகை உடையவர்கள் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தமிழகத்திலேயே இந்த நிலைமை என்றால், தாய் - சேய் நலம் முறையாகப் பேணப்படாத பல இந்திய மாநிலங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதுதான் மத்திய சுகாதாரத் துறையின் அதிர்ச்சிக்குக் காரணம்.
 மகளிர் நலம் என்பது இந்தியக் குடும்பங்களைப் பொருத்தவரை எப்போதுமே முதன்மை வகிப்பதில்லை. இந்தப் பின்னணியில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட மகளிரின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது, சுகாதாரமான தேசத்தின் அடையாளமாக இருக்க முடியாது. சுகாதாரத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்தும்கூட இந்த நிலைமை நீடிப்பது அல்லது ஏற்பட்டிருப்பது என்பது, நமது சுகாதாரத் திட்டங்களில் இருக்கும் குறைபாட்டை வெளிச்சம் போடுகிறது.
 ரத்த சோகை உடைய மகளிருக்குப் பிறக்கும் குழந்தைகள், பல்வேறு குறைபாடுகளுக்கு ஆளாகின்றன என்பதுடன், குணப்படுத்தவே முடியாத சில குறைகளுக்கும் கருவிலேயே ஆளாகிவிடுகின்றன. பொதுவாக, தமிழகத்தில் 49% பெண்களுக்கு ரத்த சோகை காணப்படுகிறது என்றால், கர்ப்பமுற்றிருக்கும் பெண்களில் 56% பேரும், ஆறு மாதம் முதல் மூன்று வயதான குழந்தைகளில் 60% பேரும் ரத்த சோகை உடையவர்களாக இருப்பதாக அந்த அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 வேடிக்கை என்னவென்றால், இந்தியாவைவிட வறுமையான பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ரத்த சோகை உடைய மகளிரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதுதான். ஐக்கிய நாடுகளின் "யுனிசெப்' நிறுவனம் ரத்த சோகைக்கு எதிராக முனைப்புடன் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை ஏற்படுகிறது என்பது தெரிந்தும்கூட, இதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஏன் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சர்வதேசத் தன்னார்வ சுகாதார அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
 "யுனிசெப்' நிறுவனத்தின் அறிக்கைப்படி, ரத்த சோகை காரணமாக, ஆண்டுதோறும் குறைந்தது 1,000 தாய்மார்கள் மகப்பேறின்போது மரணிக்கிறார்கள். அதேபோல, பிரசவத்துக்குப் பிறகு முதல் 1,000 நாள்களில் தாயின் ரத்த சோகை காரணமாகப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முழுமையான உடல் நலம் பெற இயலாது. வறுமை, பட்டினி ஆகியவற்றுடன் போராடும் தாய்மார்கள் பலருக்கும், தாங்கள் ரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருப்பதோ, இந்த நிலையில் கருத்தரிப்பதால் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றியோ எதுவும் தெரியாது என்பதுதான் எல்லாவற்றையும்விடப் பரிதாபகரமான ஒன்று.
 ரத்த சோகை என்பது ஒன்றும் எதிர்கொள்ள முடியாத பிரச்னை அல்ல. நமது பண்டைய உணவுப் பழக்கங்களில் அதிக அளவில் முருங்கை இலையைப் பயன்படுத்துவது ரத்தத்தை அதிகரிப்பதற்காகத்தான். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள, சுலபமான வழிமுறைகள் இருந்தும்கூட, நாம் நமது மகளிரை ரத்த சோகையுடன் தொடர அனுமதிக்கிறோம் என்பது, மகளிர் பற்றிய நமது பார்வையின், மனோபாவத்தின் கோளாறு என்பதுதான் உண்மை.
 மகளிருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இரும்புச் சத்துக்கான மாத்திரைகளை விநியோகம் செய்வது; இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை மகளிருக்கு உணர்த்துவது; ஆண்டுக்கு இருமுறை மகளிரின் ரத்தத்தைப் பரிசோதித்து சிவப்பு அணுக்களின் அளவு (ஹீமோகுளாபின்) அளவு சரியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வலியுறுத்துவது ஆகிய நடவடிக்கைகளைச் செய்தாலே போதும், ரத்த சோகை என்கிற பிரச்னைக்கு விடை கொடுத்துவிட முடியும்.
 உணவுப் பொருள்களில், குறிப்பாக, "மேகி நூடுல்ஸ்' போன்றவற்றில் அதிக அளவு காரீயம் இருப்பது எந்த அளவுக்கு ஆரோக்கியக் கேடோ, அதே போன்றதுதான் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் உணவு இருப்பதும். ரத்த சோகை ஒன்றும் எய்ட்úஸô, புற்றுநோயோ அல்ல, மிகவும் தீவிரமான சிகிச்சை தேவைப்படுவதற்கு. அப்படி இருந்தும், ரத்த சோகையைக்கூட நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது நமது அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. அரசும் சுறுசுறுப்பாக வேண்டும். மக்களும், குறிப்பாக, மகளிரும் விழித்துக் கொண்டாக வேண்டும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com