மேகி நூடுல்ஸ் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும், மக்கள் நலன் கருதி, மேகி தனது ஒவ்வோர் உணவு ரகத்திலும் 5 மாதிரிகளை மொஹாலி (பஞ்சாப்), ஹைதராபாத் (தெலங்கானா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் சோதனை நடத்தி, அதன் முடிவை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
தடையை நீக்கியதற்கு நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் மூன்று: காரீயம் (லெட்) அளவுக்கு அதிகமாக உள்ளதா என்பதை அறிவதற்காக சோதிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்கள், காரீயம் தொடர்பான சோதனை செய்ய உரிய அங்கீகாரம் பெற்றவை அல்ல. இரண்டாவதாக, சோதனைகள் முறைப்படி நடத்தப்படவில்லை. மூன்றாவதாக, மேகி நூடுல்ஸ் அனைத்தையும் திரும்பப் பெறுகிறோம் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் அறிவிக்கை செய்த பின்னரும் தடை விதிக்கப்பட்டிருப்பது இயல்பான நியாயத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
இப்பிரச்னையில் நெஸ்லே மிகவும் நிதானமான போக்கையே கவனமாகக் கடைப்பிடித்தது. தங்கள் நிறுவனத்தை முடக்க அரசு சதி செய்வதாகப் புகார் தெரிவித்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. எங்கள் உணவுப் பொருளில் காரீயம் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்று மட்டும் சொன்னார்கள். அதன்பிறகு, அளவு அதிகமாக இருந்தால் அது மண்ணுக்குள்ளிருந்து விளைச்சலின்போது வந்திருக்கலாம் என்றார்கள். இதே நூடுல்ஸ் மற்ற நாடுகளில் தடை செய்யப்படவில்லை என்றும், அங்கே தயாரிக்கும் அதே நடைமுறைகள்தான் இங்கேயும் கையாளப்படுகின்றன என்றும் சொன்னார்கள்.
இந்த வாதங்கள் எதுவுமே எடுபடாமல் தடை விதிக்கப்பட்ட பிறகு, எல்லா மாநிலங்களும் தடை விதிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கின. சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாகவே காரீயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வந்தபோதிலும்கூட அந்த மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களும் தடை செய்யும்போது நாம் மட்டும் தடை செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகள் இதைப் பிரச்னையாக்கும் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்.
ஆய்வுக் கூடங்களில் சோதனை நடைமுறைகள் முறையாகக் கையாளப்படவில்லை என்று நெஸ்லே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நூடுல்ஸ் 2 நிமிட கொதிநீரில் இருக்கும்போது அதில் மசாலாவைக் கலந்து, முழுமையான உணவாக இருக்கும் நிலையில் சோதிக்க வேண்டும். மசாலாவை மட்டுமே சோதித்து முடிவுக்கு வரக் கூடாது என்று நெஸ்லே கூறியது. மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது. இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட்ட பரபரப்பும், மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதும் அவசரகதியில் நடத்தி முடிக்கப்பட்ட அலங்கோலம்தானா? ஏன் இந்த அவசரம்? ஒரே வாரத்தில் 25,000 டன் மேகி நூடுல்ஸ் திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்பட்டன, உலைக் கூடங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன, குப்பையில் கொட்டப்பட்டன. இவை அனைத்தும் வெறும் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட தீனியா? இந்திய உணவுப் பாதுகாப்பு, தர ஆணையம் விதித்த தடைகள் எதன் அடிப்படையிலானவை? மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் கேலிக்குரியதாக்குகின்றன.
அசோசேம் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசிய மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்றும், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடமான மத்திய உணவுத் தொழில்நுட்ப நிலையத்தின் ஆய்வு முடிவுகள் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு என்றும் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். இப்போது நீதிமன்றத் தீர்ப்பும் நெஸ்லேவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
"மேகி நூடுல்ஸ் விவகாரத்தால், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் தயங்குகின்றன. இருப்பினும், நுகர்வோர் நலனுக்கே முன்னுரிமை கொடுப்போம்' என்று அமைச்சர் பாஸ்வான் தெரிவித்தபோதிலும், இத்தகைய ஆய்வுகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில், அதற்கான உரிய நடைமுறைப்படி ஏன் முதலிலேயே செய்யவில்லை என்றோ, அவ்வாறு செய்திருக்காத நிலையில் ஏன் தடை விதித்தீர்கள் என்றோ யாரும் அவரிடம் கேட்கவுமில்லை, அவர் விளக்கம் தரவுமில்லை.
அஜினமோட்டோ (எம்.எஸ்.ஜி.) உப்பு கலக்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டிய, அத்தகைய உணவுப் பொருள்களை எல்லா நிலைகளிலும் தடை செய்ய வேண்டிய அரசு, இவ்வாறாக மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் தோற்று நிற்பது இந்தியாவை சர்வதேச அரங்கில் தலைகுனியச் செய்துவிடும். மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல, கோக கோலா, இறக்குமதி செய்யப்படும் மரபீனி மாற்றப்பட்ட பழம், காய்கறிகள், மது வகைகள், சில ஊட்டச்சத்து உணவுகள் எல்லாவற்றிலும் இந்திய அரசினால் முழுமையான ஆய்வு முடிவுகளை வைத்து தடை செய்ய முடிந்ததில்லை என்பதுதான் உண்மை.
நெஸ்லே கொடுக்கப் போகும் மாதிரிகள் அனைத்திலும் காரீயம் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்தான் நிச்சயமாக இருக்கும். ஆகவே, அடுத்த 6 வாரங்களில் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு, விற்பனை தொடங்கிவிடும்.
மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்பாடுகளில்கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வதால் என்ன பயன்? நெஸ்லே இதுவரை சந்தித்த நட்டத்தை அடுத்த இரு மாதங்களில் ஈடுகட்டிவிடும். ஆனால், மக்களின் உடல் நலத்தில் அரசு அக்கறை காட்டவில்லை என்ற களங்கத்தை யார் துடைப்பது? அரசு எப்படி ஈடுகட்டப் போகிறது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.