இந்தியா இன்று தனது 69-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது எழுகின்ற சிந்தனை இதுதான். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்திய சுதந்திரம் பற்றி அன்றைய தினத்தில் வாழ்ந்த மக்கள் கண்ட கனவு நனவாகி இருக்கிறதா, இல்லையா, சொல்லத் தெரியவில்லையா? கனவு நனவாகி விட்டது அல்லது நனவாகி வருகிறது என்றும் சொல்ல முடியவில்லை, கனவு பொய்த்துப் போய்விட்டது என்றும் ஒரேயடியாகத் தள்ளிவிடவும் முடியவில்லை. அதனால், "சொல்லத் தெரியவில்லை' என்பதுதான் பதிலாக இருக்கிறது.
நம்முடன் சுதந்திரம் அடைந்த அத்தனை நாடுகளுமே, ஏதாவது ஒரு கட்டத்தில் தடம் புரண்டு, மக்களாட்சி முறை மாற்றம் கண்டு, சில நாடுகளில் முற்றிலுமாக சுதந்திரம் பறிக்கப்பட்ட சர்வாதிகார ராணுவ ஆட்சிக்கு மாறியபோதும்கூட இந்தியா தொடர்ந்து சுதந்திர ஜனநாயக நாடாகத் தொடர்கிறது என்பது நிச்சயமாகப் பெருமைப்படக் கூடிய ஒன்று. ஏறத்தாழ 127 கோடி மக்கள். அதில், ஏறத்தாழ 20% பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். 30% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே அன்றாட வருவாய் ரூ.100கூட இல்லாதவர்கள். தெருவோரங்களிலும், குடிசைகளிலும் வாழ்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25%. இப்படியெல்லாம் இருந்தும் இந்தியா தொடர்ந்து மக்களாட்சி முறையைப் பின்பற்றுகிறது என்பதே வியப்பான செயல்பாடு.
ஒருபுறம் ஊழலும் முறைகேடுகளும் நடந்தாலும், இன்னொரு புறம் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படுவதும், ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதும் நடைபெறத்தான் செய்கிறது. ஊழல் ஆட்சியாளர்கள், வாக்குகளுக்குப் பணம் கொடுத்துப் பார்த்தும்கூடத் தேர்தலின் மூலம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட சம்பவங்கள் மத்தியிலும், மாநிலங்களிலும் நடைபெற்ற வண்ணம்தான் இருக்கின்றன. இதை சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்வதுதானே சரி?
ஜனநாயகம் என்பது வெறும் தேர்தலோ, அவ்வப்போது ஊழலும் முறைகேடுகளும் அம்பலப்படுத்தப்படுவதோ மட்டும் அல்ல. குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, முறையான விவாதங்கள் நடைபெறாத நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் இருக்குமேயானால், என்னதான் தேர்தல் நடத்தப்பட்டாலும், முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட்டாலும், அதை மக்களாட்சி முறை என்று கொள்ளுதல் இயலாது. மக்களாட்சி முறையின் அடிப்படை தேர்தல்களல்ல, விவாதக் கலாசாரம்!
நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரில் 12 மசோதாக்கள் நிறைவேற்றுவதற்கும், 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவும் காத்திருந்தன. ஒரே ஒரு மசோதாதான் இரு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15 ஆண்டுகளில் மிக அதிகமான மசோதாக்களை நிறைவேற்றியது என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவான மசோதாக்களை நிறைவேற்றிய இழிவு 2015 மழைக் காலக் கூட்டத் தொடருக்கு ஏற்பட்டிருக்கிறது.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், கட்சியின் மற்ற 42 உறுப்பினர்களும் மக்களவையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷமிடுவதையும், அவையைச் செயல்பட விடாமல் தடுப்பதையும், இந்திய ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பண்டித ஜவஹர்லால் நேரு பார்த்திருந்தால், "காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்' என்கிற காந்தியடிகளின் வேண்டுகோளை நாம் வழிமொழியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டிருப்பார். ஜனநாயக நடைமுறைகளுக்கு முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டிய இந்தியாவின் முதுபெரும் கட்சியின் செயல்பாடு பாராட்டும்படியாக இருக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கடமை கூச்சல் போட்டும் குழப்பம் விளைவித்தும் அவை நடவடிக்கைகளை முடக்குவதோ, போராட்டங்கள் நடத்தி, சட்டம் - ஒழுங்கைக் குலைத்து ஆட்சியை அகற்றுவதோ அல்ல. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மூலம், ஆளும் கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்தி, அதன் செல்வாக்குக்கு மக்கள் மன்றத்தில் சரிவை ஏற்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை.
காங்கிரஸ் கட்சியின் நிலைபாட்டையும், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதையும் பார்த்து சகிக்காமல் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சியும், பிஜு ஜனதா தளமும் நாடாளுமன்றத்தை முடக்கும் செயல்பாடுகளில் காங்கிரஸ் அணியிலிருந்து விலகி விட்டிருப்பதிலிருந்தாவது அவர்கள் பாடம் படிக்க வேண்டாமா? விவாதத்தின் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும் லலித் மோடியுடன் இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்துவது முக்கியமா இல்லை, அவர்களைப் பதவி விலகக் கோருவதன் மூலம் நாடாளுமன்றத்தை முடக்குவது முக்கியமா?
ஓர் அரசின் நான்காவது, ஐந்தாவது ஆண்டுகளில் இதுபோன்ற செயல்பாடுகள், அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால், மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த இரண்டாவது ஆண்டில் நாடாளுமன்றத்தை முடக்கி அரசை செயல்பட விடாமல் தடுப்பது பொதுமக்களின் வெறுப்பைத்தான் சம்பாதிக்க உதவும். ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் பதவி வெறியால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக 56% பேர் தெரிவித்திருக்கிறார்கள்.
பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து விட்டிருக்கும் நிலைமை. கெüரவம் பார்க்காமல் ஆளும் கட்சியும், பிடிவாதம் பிடிக்காமல் எதிர்க்கட்சிகளும் முறையான வாதங்களின் மூலம் ஜனநாயகம் செயல்பட அனுமதிப்பதுதான் இந்த 69-ஆவது சுதந்திர தினத்தில் அவர்கள் பாரதத் தாய்க்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப்பிரிவுகள்! சென்னை ஐஐடி-யில் அறிமுகம்

2 மணி நேர விடியோ துண்டிப்பு... சிசிடிவி கேமராவில் தவறான நேரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு!
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்

ரூ. 56,900 சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

