மாற்றம் ஏற்படுத்தும் மாற்றம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கைவாழ் மக்கள் செய்து காட்டிய ஜனநாயகப் புரட்சியின் தாக்கம் குறைந்துவிடவில்லை என்பதைத்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
Updated on
2 min read

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கைவாழ் மக்கள் செய்து காட்டிய ஜனநாயகப் புரட்சியின் தாக்கம் குறைந்துவிடவில்லை என்பதைத்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏனைய 29 உறுப்பினர்கள், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விகிதப்படி நியமிக்கப்படுகிறார்கள். இந்தத் தேர்தல் முடிவுகளின்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனிப் பெரும்பான்மையான 113 இடங்களுக்கு 7 இடங்கள் குறைவாக 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் 40 இடங்கள் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணங்களைப் பொருத்தவரை, மூன்று மாகாணங்களிலும் தமிழ் தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளிலும் வெற்றியடைந்திருக்கிறார்கள். ராஜபட்ச திரும்பவும் வந்துவிடக்கூடாது என்பதிலும், தமிழர்களின் ஒற்றுமை உணர்த்தப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருந்ததன் வெளிப்பாடுதான் தமிழ் தேசியக் கூட்டணியின் இந்த வெற்றி!
 அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறீசேனா இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, தங்கள் கட்சியில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், பெரும்பான்மை இல்லாத நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவைத் தனது பிரதமராக நியமித்தது, அவரது கட்சியினரிடையேகூட அதிருப்தியை உருவாக்கி இருந்தது. இலங்கை சுதந்திரக் கட்சியிலுள்ள அதிபர் சிறீசேனாவின் ஆதரவாளர்களுடைய உதவியுடன்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியில் தொடர முடிந்தது. அதனால், இலங்கை சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, அதிபர் சிறீசேனாவோ எந்தவித முடிவுகளையும் எடுத்துவிடாமல் தடுத்து வந்தார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச.
 அதிபர் சிறீசேனாவுக்கும் தர்மசங்கடம். முன்னாள் அதிபர் ராஜபட்ச அவரது கட்சியைச் சேர்ந்தவர். ராஜபட்சவும், அவரது குடும்பத்தாரும் நடத்திய ஊழலையும் முறைகேடுகளையும் வெளிக்கொணர அவர் நடவடிக்கை எடுத்தால், அது வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியையே பாதிக்கக் கூடும் என்பதுதான் அது. தனது இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜபட்ச மீண்டும் அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்கிற அதிபர் சிறீசேனாவின் கவலைக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நல்ல விடையை அளித்திருக்கின்றன.
 தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு அதிபர் சிறீசேனா வாக்கெடுப்புக்கு முன்னால், முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதம் ஒரு முக்கியமான காரணம். மகிந்த ராஜபட்சவும் அவரது குடும்பமும் செய்த தவறுகளையும், இழைத்த கொடுமைகளையும், தொடர்புடைய ஊழல், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி இருந்ததுடன், இலங்கை சுதந்திரக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றாலும்கூட, தனது அரசியல் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மகிந்த ராஜபட்ச பிரதமராவதற்குத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்பதை அந்தக் கடிதத்தில் தெளிவுபடுத்தி இருந்தார் அதிபர் சிறீசேனா.
 சிறீசேனா அதிபரானவுடன், நூறு நாள்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலை ஒரு வருடம் முன்பாகவே இப்போது நடத்தியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில், பிரதமர் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணநாயக ஆகிய இருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ராஜபட்ச ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களது எண்ணத்தை முறியடிக்கவும், ராஜபட்ச மீண்டும் பிரதமராவதைத் தடுக்கவும், மைத்ரிபால சிறீசேனாவும், ரணில் விக்ரமசிங்கவும் எடுத்த ராஜதந்திர முடிவுதான் தேர்தலை அறிவித்தது.
 தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும்கூட, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி நிபந்தனை ஆதரவு வழங்கி இருப்பதால், நிலையான ஆட்சியை உறுதிப்படுத்துவார் என்று நம்பலாம். மைத்ரிபால சிறீசேனா அறிவித்திருக்கும் 20-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, அதிபர் ஆட்சி முறையிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இலங்கை விரைவிலேயே திரும்பும் என்று நம்பலாம். அதேபோல, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவும் குடும்பத்தினரும் செய்த முறைகேடுகள் விசாரணைக்கு உள்படுத்தப்படலாம். எல்லாத் தரப்பினரும் இணைந்து செயல்படும் சுமுகமான சூழலை, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன.
 இந்தியாவைப் போலவே, பெüத்தம், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினரைக் கொண்ட பன்முகக் கலாசார தேசமான இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தால் மட்டுமே அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளும், உரிமைகளும் பாதுகாக்கப்படும். பிரதமராகப் பதவி ஏற்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தமிழினத்தின் சார்பாக வாழ்த்துகள்!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com