இந்தியாவில் தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கி சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தனியார் நிறுவனங்கள் புதிதாக வங்கி, சிறு வங்கி, பணப் பட்டுவாடா வங்கிச் சேவை (பேமென்ட் பேங்க்) ஆகியவற்றைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கி அண்மையில் வரவேற்றது. அதன்படி தற்போது முதல் கட்டமாக 11 "பணப் பட்டுவாடா வங்கிச் சேவை'களுக்கு ரிசர்வ் வங்கி இரு நாள்களுக்கு முன்பு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் குறிப்பிடுகையில், "இது தற்போது நடைமுறையில், வங்கிகள் வழங்கும் சேவையுடன் கூடுதல் சேவை வழங்கும்; இவை வழக்கமான வங்கிகளுடன் போட்டி போடாது. முழுமையான வங்கிகளைப் போல அனைத்துச் சேவைகளையும் வழங்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பணப் பட்டுவாடா வங்கிச் சேவை என்பது தற்போது நாம் ஒரு பொருளை எவ்வாறு ஏ.டி.எம். பண அட்டையைப் பயன்படுத்தி, கடைகளில் வாங்கும் பொருளுக்குப் பணம் வழங்குகிறோமோ, அந்தச் சேவையை செல்லிடப்பேசியில் நடத்த முடியும். இதன்மூலம், இன்னொரு நபரின் கணக்கில் பணம் போட முடியும். அவர்களும் இந்தப் பணத்தை செல்லிடப்பேசியைக் கொண்டு செலவிடவும் முடியும்.
தற்போது செல்லிடப்பேசி வங்கிச் சேவையை வழங்கும் அரசுடைமை வங்கிகள் சிலவும், தனியார் வங்கிகளும் இதைத்தானே செய்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அரசு, தனியார் வங்கிகள் அனைத்தும் இதேச் சேவையை வழங்க முடியும் என்கிறபோது, எதற்காக பணப் பட்டுவாடா வங்கிச் சேவை? தற்போதுள்ள வங்கிகளே இந்தச் சேவையைப் பரவலாக்கும் கட்டாயத்தை உருவாக்கியிருக்கலாமே!
இத்தகைய வங்கிச் சேவை கென்யாவில் 2006-இல் தொடங்கப்பட்டது. அங்கே 70% பேர் வங்கிக் கணக்கு இல்லாதவர்களாக இருந்த காரணத்தால் அங்கே இத்தகைய வங்கி முறை வெற்றிகரமாக அமைந்தது. ஆனால், இந்தியாவில் கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகள் அதிகமாக இல்லை என்றாலும்கூட, கிராமத்தினர் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்திருப்போராகவும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஊதியத்தைக்கூட நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கும் நடைமுறையும், சமையல் எரிவாயு மானியங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதும் பரவலாகியுள்ளன. "ஜன்தன்' திட்டம் பெருவாரியான கிராமத்தினரை வங்கிச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் இத்தகைய பணப் பட்டுவாடா வங்கிச் சேவை எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கிராமப்புறக் கிளைகளை மூடிவிட்டன. ஆகவே, அந்த இடைவெளியை பணப் பட்டுவாடா வங்கிச் சேவை இட்டு நிரப்பும் என்று சொல்லப்படுகிறது. கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டது உண்மையே. ஆனால், மே 2014-இல் 1,64,491-ஆக இருந்த ஏ.டி.எம். எண்ணிக்கை, மே 2015-இல் 1,83,887-ஆக உயர்ந்துள்ளது. இனியும் தொடர்ந்து அதிகரிக்கும். நகர்ப்புறத்தில் சம்பாதிக்கும் குடும்பத் தலைவர் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணத்தை எடுத்துச் செலவழிக்கும் கிராமத்தினருக்கு ஒரு ஏ.டி.எம். போதுமானது. கிராமத்தில் ஒரு வங்கிக் கிளையின் நிர்வாகச் செலவு மிகமிக அதிகம். அதே சேவையை ஒரு ஏ.டி.எம். மூலம் தர முடியும். இதன் நிர்வாகச் செலவு மிகவும் குறைவு.
பணப் பட்டுவாடா வங்கிச் சேவையில் ஒரு நுகர்வோர் தனது செல்லிடப்பேசிக்கு ரீசார்ஜ், டாப்அப் செய்வதைப்போல, ரூ.50,000 வரை தனது சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். இது செல்லிடப்பேசியுடன் இணைந்த கணக்கு. இதை மொபைல் வாலட் (செல்லிடப் பணப்பை) என்கிறார்கள். ரீசார்ஜ் அல்லது டாப்அப் செய்வதைப் போல யார் வேண்டுமானாலும் ஒரு நபரின் பணப் பட்டுவாடா வங்கிச் சேவை கணக்கில் சர்வ சாதாரணமாகப் பணத்தைப் போட முடியும் என்றால், அது சில ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றாலும்கூட, கருப்புப் பண நடமாட்டம், லஞ்சப் பணம் எவ்வாறு கட்டுப்படும்?
யார் வேண்டுமானாலும் யாருடைய கணக்கிலும் பணம் செலுத்துவதைத் தடுக்கும் நடைமுறைகளை வங்கிகள் மெல்ல உருவாக்கி வருகின்றன. அந்த வங்கிக் கிளையில் கணக்கு உள்ளவர்கள் அல்லது அந்த வங்கியில் உள்ள கணக்குத் தொடர்பான பரிவர்த்தனை மட்டுமே செய்யப்படும் என்று வங்கிகள் தங்கள் சேவையை வரையறை செய்யத் தொடங்கியுள்ளன. வங்கியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நபரைத் தவிர்க்க இந்த நடைமுறை.
தொடர்பே இல்லாதவர் ரொக்கமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால், அதற்காக ஒவ்வொரு நகரிலும் சில கிளைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதற்குக் காரணம், கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான்.
பணப் பட்டுவாடா வங்கிச் சேவையில் ஒவ்வொரு சேவைக்கும் சேவை வரி உண்டு. மேலும், குறைந்தபட்சம் ரூ.100 கோடிக்கும் அதிகமான சேமிப்பை ஒவ்வொரு பணப் பட்டுவாடா வங்கிச் சேவையும் நுகர்வோரிடம் பெறுவது உறுதி. இதில் 75% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்கிற ரிசர்வ் வங்கி விதிமுறை இருந்தாலும், இவர்கள் பெரும் பகுதியை தங்கள் நிறுவனத்துக்கான சுழல் நிதியாகப் பயன்படுத்தவே முனைவார்கள்.
ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பணப் பட்டுவாடா வங்கிச் சேவை அனுமதியைப் பெற்றுள்ளன. இவர்களிடம் உள்ள செல்லிடப்பேசி சந்தாதாரர்களை அப்படியே உறுப்பினர் ஆக்கினாலும் பல லட்சம் கோடி சேமிப்புத் தொகை கிடைக்கும்!
இது நல்லதா, கெடுதலா? எதையும் உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை என்றாலும், இதைத் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமே மேலிடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 மணி நேர விடியோ துண்டிப்பு... சிசிடிவி கேமராவில் தவறான நேரம்! ஆட்சியர் நேரில் ஆய்வு!
திமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்

ரூ. 56,900 சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

