அமெடி போலி, ஜோசப் போசக், வால்டர் ஹான்காக், கார்ல் பென்ஸ், ருடால்ப் டீசல் ஆகிய பெயர்கள் நம்மில் பலருக்கும் இன்று தெரியாமல் இருக்கலாம். அதிகபட்சம் போனால் சிலருக்கு ஹென்றி ஃபோர்டு என்கிற பெயரும், அவரது சாதனைகளும் தெரிந்திருக்கக் கூடும். இவர்கள் எல்லோரும் மகிழுந்து (கார்) வாகனத் தயாரிப்பின் முன்னோடிகள். பல லட்சம் மகிழுந்துகளைத் தயாரித்து, உலகம் முழுவதும் துடைப்பம் விற்பதுபோல விற்று வீதிகளில் வலம்வரச் செய்தவர்கள்.
உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் தயாரிப்புச் செலவைக் குறைத்துப் பெருமளவில் மகிழுந்துகளை உருவாக்கி உலகம் முழுவதும் விற்பனை செய்தன ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள். இவர்களுக்குப் போட்டியாக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கொரியா போன்ற நாடுகளும் மோட்டார் வாகனத் தயாரிப்பில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
உலகச் சந்தையிலுள்ள எல்லா மகிழுந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்திக்கான தொழிற்சாலைகளை இந்தியாவிலும் நிறுவ முற்பட்டிருக்கின்றன. ஃபோர்டு, பென்ஸ், டோயோட்டோ உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வெளிக்கொணர்கின்றன. வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்குகின்றன. நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கு மகிழுந்து வைத்திருப்பது என்பது கெüரவப் பிரச்னையாகவும், வளமையின் அடையாளமாகவும் மாறிவிட்டிருக்கிறது.
ஃபோர்டு மோட்டார்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஆலன் முலாலி தெரிவித்திருக்கும் கருத்து, ஹென்றி ஃபோர்டு உயிருடன் இருந்திருந்தால் அவரைத் திகைக்க வைத்திருக்கும். ஆனால், ஆலன் முலாலி தெரிவித்திருக்கும் கருத்து, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும் என்பதுதான் உண்மை.
அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் ஆலன் முலாலி?
மகிழுந்துகளின் காலம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும், வர வேண்டும் என்றும், மக்கள் இனிமேல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை வழக்கமாக்க வேண்டும் என்பதுதான் அவர் தெரிவித்திருக்கும் கருத்து. இந்தியாவைப் பொருத்தவரை அவரது கருத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதிகமான தனியார் வாகனங்களால் ஏற்படும் பாதிப்பு ஒன்றோ இரண்டோ அல்ல. முதலில், இதுபோன்ற தனியார் வாகனங்களால் நகர்ப்புறங்களிலுள்ள எல்லா சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. அடுத்தபடியாக, அவற்றிலிருந்து வெளியாகும் புகைமாசு சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன், நுரையீரல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு வழிகோலுகிறது.
மூன்றாவதாக, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் கால விரயம். நான்காவதாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் கெüரவத்துக்காகக் கடனில் வாகனங்களை வாங்கித் தவிக்கும் அவலம்.
ஐந்தாவதாக, இந்த வாகனங்களுக்குத் தேவைப்படும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அன்னியச் செலாவணித் தேவை. எல்லாவற்றையும்விட முக்கியமானது அதிகரித்துவரும் சாலை விபத்துகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
மகிழுந்துத் தயாரிப்பாளர்களின் கூக்குரலுக்கு செவி சாய்த்து, அந்த நிறுவனங்களின் லாபகரமான செயல்பாட்டில்தான் இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியே இருப்பது போன்று அரசே கருதுகிறது. அதனால், மகிழுந்துகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் வங்கிக் கடன் வழங்குவதை ஊக்குவித்து அந்த நிறுவனங்களைக் காப்பாற்ற முற்படுகிறது.
புது தில்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படுவதால், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறதா என்றால் இல்லை. மோட்டார் வாகன உற்பத்தி என்பது, ஆலன் முலாலி கூறுவதைப்போல, மகிழுந்து தயாரிப்பது மட்டுமல்ல. தரமும், வசதியும், எண்ணிக்கையில் அதிகமாகவும் உள்ள பொதுப் பேருந்துப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களையும் பாதுகாக்க முடியும். மக்கள் பரவலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்க முடியும்.
இந்தியாவைப் பொருத்தவரை, பேருந்துகள் என்றால் சுமார் நாற்பது பேர் உட்கார, எண்பது பேர் விலங்கினங்கள் போல நின்றுகொண்டு பயணிப்பது என்கிற நிலைமைதான் காணப்படுகிறது. உலகம் முழுவதிலும் இந்த நிலைமை மாறிவிட்டது. ஃபோர்டு, வால்வோ போன்ற நிறுவனங்கள் எட்டு பேர், 10 பேர், 20 பேர் பயணிக்கும் சொகுசுச் சிற்றுந்துகளைத் தயாரிக்கின்றன. இதுபோன்ற சொகுசுப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை நாம் கணிசமாகக் குறைக்க முடியும்.
நியாயமான கட்டணத்தில், காத்திருக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சொகுசுச் சிற்றுந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவது மட்டும்தான் இந்தியா எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். நகரத்துக்குள் தனியார் மகிழுந்துகளில் பயணிப்பவர்களிடம் சிங்கப்பூரில் உள்ளதுபோல், சாலைச் சுங்கத்தில் பணம் வசூலித்தாலும் தவறில்லை. அதிகக் கட்டணத்தில் தனியார் சொகுசுச் சிற்றுந்துகளை அனுமதிப்பதிலும் கூடத் தவறில்லை. ஆனால், சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை நாம் கட்டுப்படுத்தியே தீர வேண்டும்.
வரட்டு கெüரவம் பார்க்காமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த நாமும் பழக வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சியும் கிடையாது, விடிவும் கிடையாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

