புரிந்துகொண்டால் சரி..!
மறைந்த சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் மது லிமாயேவை நினைவுகூர்வதற்காக ஒரு கூட்டம் மே 1-ஆம் தேதி தில்லியில் நடந்தது.


மறைந்த சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் மது லிமாயேவை நினைவுகூர்வதற்காக ஒரு கூட்டம் மே 1-ஆம் தேதி தில்லியில் நடந்தது. நினைவுகூர்வதற்காக நடந்தது என்பதைவிட, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எல்லா கட்சிகளையும் ஒரே மேடையில் கொண்டுவருவதற்காகக் கூட்டம் நடத்தப்பட்டது என்பதுதான் சரியாக இருக்கும். காங்கிரஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராடிய, ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மது லிமாயேவின் நினைவு நாள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது என்பதே ஒரு நகைமுரண்!
காங்கிரஸில் தொடங்கி இடதுசாரிக் கட்சிகள் வரை, பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மது லிமாயேவை நினைவுகூர்ந்ததைவிட, பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் எப்படி எதிர்க்க வேண்டும் என்பதைக் குறித்துத்தான் பெரும்பாலான பேச்சாளர்களும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. அடைந்திருக்கும் வெற்றி, இனிமேல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தி இருப்பதுதான், இந்த திடீர் ஒற்றுமைக்குக் காரணம்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆளும் கட்சியை எதிர்க்க முற்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 1957-லும், 1962-லும் காங்கிரஸை எதிர்கொள்ள சோஷலிச இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்தன. ராம் மனோகர் லோகியா சோஷலிஸ்டுகளையும், ராஜாஜி தான் தொடங்கிய சுதந்திரா கட்சியுடன் பல மாநிலக் கட்சிகளை கூட்டணி என்கிற பெயரில் இணைத்தும் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸை எதிர்கொள்ள எத்தனித்தனர். 1962-இல் வெற்றி பெறாத இந்த முயற்சி, 1967-இல் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இந்தியாவின் 9 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் ஆட்சியைக் கைப்பற்றின. அந்த வெற்றி அதிக நாள் நீடிக்கவில்லை. தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் எல்லாம் இந்திரா காந்தியின் தலைமையில் புதுப்பொலிவு பெற்ற காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, மறுபடியும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.
அவசர நிலைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற 1977 பொதுத் தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து காங்கிரஸை எதிர்கொண்டன. எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்படுத்திய ஜனதா கட்சி ஆட்சியையும் பிடித்தது. ஆனால், அடுத்த இரண்டே ஆண்டுகளில் அந்த இணைப்பு தாக்குப் பிடிக்க முடியாமல் சிதறுண்டது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் இணைந்து 1989-இல் தேசிய முன்னணி என்கிற பெயரிலும், 1996-இல் ஐக்கிய முன்னணி என்கிற பெயரிலும் ஆட்சி அமைத்தன என்றாலும் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
1999-இல் பா.ஜ.க. தலைமையில் அமைந்த காங்கிரஸுக்கு எதிரான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐந்தாண்டுகள் பதவியில் இருந்தது. 2004-இல் காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க.வுக்கு எதிராக அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அடுத்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. பெரிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன என்பதைத்தான் இவை எடுத்துக்காட்டுகின்றன.
இன்றைய நிலையில், பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வலிமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியுமே இல்லை என்பதுதான் உண்மைநிலை. மாநில அளவில் சில கட்சிகள் இருந்தாலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வும் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றனர். முன்பு இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் இணைத்ததுபோல, இப்போது நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க.வை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைப்பது என்கிற முயற்சி வெற்றி அடைவது சந்தேகம்தான்.
பா.ஜ.க.வுக்கு எதிராக, கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளமும், தமிழகத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது போல, ஒடிஸாவில் பிஜு ஜனதா தளமும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும் அந்தக் கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலேயேகூட, சமாஜவாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடருமா என்பதும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் இப்படியொரு கூட்டணியை ஆதரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.
பா.ஜ.க.வுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி தங்களது தலைமையில்தான் செயல்பட வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும்
இப்போதே திட்டமிடத் தொடங்கி விட்டனர். இடதுசாரிகள் அந்தக் கூட்டணியில் இருந்தால் திரிணமூல் காங்கிரஸ் இருக்க முடியாது. சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இரண்டில் ஒன்று
தான் அதில் இடம்பெற முடியும். இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே.
காங்கிரஸும், சோனியா காந்தியும் ஒன்றைப் புரிந்து கொண்டு விட்டார்கள். ராகுல் காந்திக்கு இதுபோன்ற அரசியல் வியூகங்களை வகுக்கத் தெரியாது என்பதைத் தெரிந்துதான், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சோனியா காந்தியே மீண்டும் களமிறங்கி இருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...