டாடா எதிர்கொள்ளும் சோதனை!| டாடா குழுமத்தின் தலைவராக மீண்டும் சைரஸ் மிஸ்திரியை நியமித்தது குறித்த தலையங்கம்


டாடா குழுமத்திற்கு எதிராக என்.சி.எல்.ஏ.டி. எனப்படும் தேசிய தொழில் நிறுவனங்கள் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் அதிர்வலைகள் பங்குச் சந்தையிலும் எதிரொலித்திருக்கின்றன. 111 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி) வருவாய் உள்ள நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக மீண்டும் சைரஸ் மிஸ்திரியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான 82 வயது ரத்தன் டாடாவுக்கும், அந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என்.சி.எல்.ஏ.டி.-யின் தீர்ப்பு, ஏனைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய எச்சரிக்கையாக அமைகிறது. 2016 அக்டோபர் 24-ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி அகற்றப்பட்டது மட்டுமல்ல, அவருக்குப் பதிலாக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதையும் நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாய ரத்து செய்திருக்கிறார்.
பொதுத் தொழில் நிறுவனமாக பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தை, பதிவு செய்யப்பட்ட தனியார் தொழில் நிறுவனமாக மாற்றிய முடிவையும் ரத்து செய்திருக்கிறது தீர்ப்பாயம். டாடா குழுமத்தின் அத்தனை நிறுவனங்களுக்கும் தலைவராகக் கருதப்படுபவர், டாடா சன்ஸ் தொழில் நிறுவனத்தின் தலைவர் என்பதால் இந்தத் தீர்ப்பு அந்தக் குழுமத்தின் ஆணிவேரையே அசைத்திருக்கிறது.
ரத்தன் டாடாவால் தலைவராக அறிவிக்கப்பட்டவர்தான் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குகள் மிஸ்திரியின் குழும நிறுவனமான ஷாபூர்ஜி பாலோன்ஜி குழுமத்திடம் இருக்கிறது. ரத்தன் டாடாவின் தன்னிச்சையான முடிவுகள் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களைப் பாதிக்கின்றன என்றும், தனது செயல்பாட்டில் ரத்தன் டாடா தலையிடுவதாகவும் சைரஸ் மிஸ்திரி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து மோதல் வெடித்தது.
சைரஸ் மிஸ்திரியின் போராட்டம் மூன்று ஆண்டுகளாகத் தொடர்கிறது. 2016 அக்டோபர் 10-ஆம் தேதி டாடா சன்ஸ் நிர்வாகக் குழு அதன் தலைவரான சைரஸ் மிஸ்திரியை பதவியிலிருந்து அகற்றியது. அந்த முடிவை எதிர்த்து மிஸ்திரியின் குழும நிறுவனங்களான சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் மும்பையிலுள்ள என்.சி.எல்.டி. என்கிற தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தன. சிறுபான்மை பங்குதாரர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் இருப்பதாகவும் கூறி, மிஸ்திரி அகற்றப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
2017, பிப்ரவரி 6-ஆம் தேதி டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவின் இயக்குநர் பதவியிலிருந்தும் மிஸ்திரி அகற்றப்பட்டார். பிப்ரவரி 20-ஆம் தேதி டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான என்.சந்திரசேகரன், டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவால் நியமிக்கப்பட்டார்.
மும்பையில் தனக்கு பாரபட்சமில்லாத தீர்ப்பு கிடைக்காது என்று கூறி, தனது வழக்கை தில்லியிலுள்ள முதன்மை என்.சி.எல்.டி. அமர்வுக்கு மாற்றக் கோரினார் அவர். அந்த அமர்வு அவரது வழக்கை நிராகரித்தது மட்டுமல்லாமல், ரூ.10 லட்சம் அபராதம் செலுத்துமாறும் உத்தவிட்டது.
அதைத் தொடர்ந்து மும்பை என்.சி.எல்.டி.யிடம் வழக்கு மீண்டும் வந்தபோது, சைரஸ் மிஸ்திரியின் முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. தனது முயற்சியில் சற்றும் தளராத சைரஸ் மிஸ்திரி, 2018 ஆகஸ்ட் மாதம் என்.சி.எல்.ஏ.டி. என்கிற தேசிய தொழில் நிறுவனங்கள் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகினார். அந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புதான் இப்போது டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரிக்குப் புத்தாண்டுப் பரிசாக அமைந்திருக்கிறது.
மேல் முறையீட்டு ஆணையம் என். சந்திரசேகரனை அகற்றி, சைரஸ் மிஸ்திரியை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமிப்பதற்கு நான்கு வார அவகாசம் வழங்கியிருக்கிறது. அதனால் டாடா சன்ஸின் மூன்று குழும நிறுவனங்களின் இயக்குநராக மீண்டும் நியமிக்கப்படுகிறார் சைரஸ் மிஸ்திரி. டாடா குழுமத்தையும், டாடா அறக்கட்டளைகளையும் தனது தீர்ப்பில் மும்பை என்.சி.எல்.டி. புகழ்ந்திருந்தது, பாரபட்சமான தீர்ப்பு என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியதால் அது சைரஸ் மிஸ்திரிக்கு மேல் முறையீட்டில் சாதகமாகத் திரும்பியிருக்கக்கூடும்.
டாடா நிறுவனம் தன்னைப் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமாக மாற்றிக்கொண்டதும்கூட மேல்முறையீட்டில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் முடிவு தெரியும்வரை டாடா சன்ஸ் நிர்வாகம் முடங்கும் என்பதும், அதன் பங்குகள் சரியும் என்பதும் வரவேற்புக்குரியவை அல்ல.
கார்ப்பரேட் நிர்வாகத்தில் சிறுபான்மை பங்குதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், கூட்டுத் தலைமை முறையாகச் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது சைரஸ் மிஸ்திரி வழக்கு. சத்யம் குழுமம், இன்ஃபோஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா சன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவனங்களில் நடக்கும் நிர்வாகக் குழு பிரச்னைகள், ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுவிழக்கச் செய்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...